அசோகமித்திரன் எனும் கலைஞன்

அசோகமித்திரனை நான் அறிந்தது அவரது ‘உண்மை வேட்கை’ என்ற சிறுகதைத் தொகுதியின் வாயிலாகத்தான். அதில் இடம்பெற்றிருந்த பல கதைகள் நினைவில் இல்லாதபோதும், நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்லும் ஒருவன் அவனது வீட்டு வாசல் வரை சென்று அவனைப் பார்க்காமலேயே திரும்பிவிடும் ஒரு கதை மட்டும் எப்போதும் நினைவில் இருந்தது. ஏனெனில் அந்தச் சம்பவம் என் வாழ்க்கையிலும் நடந்தது! ஆகவேதான் அந்தக் கதை மனதை விட்டு அழியாதிருந்தது. அதனால்தான் அசோகமித்திரன் பற்றி ‘தி இந்து நாளிதழில்’ எழுதிய ஜெயமோகன், “வேதாந்தச் சிந்தனையில் இதம் என்ற சொல் முக்கியமானது. ‘இங்கே, இப்போது, இவ்வாறு’ என அதற்குப் பொருள். பெருவெளியாக முடிவிலியாக நிறைந்திருக்கும் பேருண்மையைக் கூட இங்கே இப்போது இவ்வாறு அது எப்படி நிகழ்கிறது என்பதில் தொட்டு அறிவதே மெய்ஞானமாகும். தமிழில் ஒவ்வொரு கணமும் ‘ஆம் இது நானறிந்த வாழ்க்கை’ என்றும், மறுகணமே ‘அய்யோ இதை இப்போதுதான் அறிகிறேன்’ என்றும் உணரச்செய்யும் எழுத்து அசோகமித்திரனுடையது” என்கிறார்.

அசோகமித்திரன் சில குறிப்புகள்:

இயற்பெயர்: தியாகராஜன்
பிறந்த இடம் : செகன்றாபாத்
பிறந்த வருடம்: செப்டம்பர் 22, 1931

தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு, 1952 -இல் சென்னைக்கு குடியேறுகிறார். பலவருடங்கள் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றுகிறார். அதற்கு பிறகு பணியை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆகிறார்.

முதல் பரிசுக்கதை: அன்பின் பரிசு
சாதனை: இருநூற்றுக்கும் மேலான சிறுகதைகள், எட்டு நாவல்கள், ஏராளமான கட்டுரைகள். கணையாழியில் ஆசிரியர் பொறுப்பு.

பரிசுகள்: இலக்கிய சிந்தனை விருது 1977, 1984
கே.கே.பிர்லா பெல்லோஷிப் 1973-1974
லில்லி மெமோரியல் அவார்ட் 1992, 1996
ராமகிருஷ்ண டால்மியா விருது 1995 (18-வது அட்சக்கோடு)
சாஹித்ய அகாடமி விருது 1996 (அப்பாவின் சிநேகிதர்)
NTR நேஷனல் லிட்ரேரி அவார்ட் 2012

இந்தியா மட்டுமல்ல உலகறிந்த தமிழ் எழுத்தாளர். இவரது பல நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

சிறுகதைகள்:

நான் இந்த வலைதளத்தை ஆரம்பித்தபோது நாவல்களைப் பற்றி மட்டுமே எழுதுவது என்று நிச்சயித்திருந்தேன். ஆனால் அசோகமித்திரன் கதைகளை மீண்டும் படித்தபோது நாவல்களைக் காட்டிலும் அபாரமான வீச்சும் வலிமையும் கொண்டவை அவருடைய சிறுகதைகள் என்று தோன்றியது. எனவே சிறுகதைகளைப் பற்றி ஏன் எழுதக்கூடாது என்று தோன்றவே அவரது முக்கியமான கதைகளை, வாசித்ததில் எனக்குப் பிடித்த கதைகள் பற்றியும் எழுதினேன்.

அசோகமித்திரன் சிறுகதைகள் நமக்குக் கொடுக்கும் வாசக அனுபவங்கள் அலாதியானவை. வேறு யார் கதைகளிலும் கிடைக்கப்பெறாதவை. எல்லோரின் கதைகளையும் போல் முடிவை நோக்கி நம்மை இழுத்துச்சென்று ஒரு கணம் பரவசத்தைத் தந்துவிட்டு மறைபவை அல்ல அவை. முடிவுக்கும் அப்பால் நம் மனதை விரியச்செய்பவை. அவர் கதையை முடிக்கும் இடத்திலிருந்தே அவர் சொல்ல வந்த உண்மையான கதை தொடங்குகிறது. அவர் கதைகளின் முடிவு என்பது வெறும் பாதையைக் காட்டும் செயல்தான். மேலே பயணி்ப்பதன் மூலமே நாம் சிகரத்தை அடைய முடியும்.

வருகின்ற செப்டம்பர் 22 அன்று அசோகமித்திரனுக்கு 84 வயதாகிறது. அதையொட்டி அவரையும், அவரது கதைகள் பற்றியுமான இப்பதிவை வெளியிடுகிறேன். அசோகமித்திரன் எனும் கலைஞன் என்றென்றும் நிலைத்து நிற்பவன், காலத்தால் அழிக்கப்பட முடியாதவன் என்பதற்கு இந்தக் கதைகள் சான்று.

1. குழந்தைகள்:

அசோகமித்திரனின் குழந்தைகள் கதை என் மனம் கவர்ந்த கதை. அசோமித்திரனின் கதைகளின் சிறப்பு கதை எளிமையாக வேகமாகப் படிக்கும்படி இருக்கும். அதனாலேயே அவர் சொல்லவந்த பல விசயங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அவர் தன் கதைகளில் எதையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. வெறும் கதையைச் சொல்வதோடு அவர் நின்றுவிடுகிறார். கதையிலிருந்து நாம்தான் நம் கற்பனையை வளர்த்தெடுக்க வேண்டும்.

பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு தன் மூத்த பிள்ளை தன்ராஜீடன் செல்லும் வந்தனாவை  அவள் கணவன், இரண்டு மைத்துனர்கள், மற்றும் அவளின் மாமனார் வழியனுப்புகிறார்கள். வந்தனாவிற்கு கால் சற்று ஊனம். அவள் கணவன் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறான். மைத்துனர்கள் அவரது அப்பாவின் வியபாரத்தைக் கவனிக்கிறார்கள். அவள் போட்டுவந்த வெள்ளியும் தங்கமும் வியபாரத்திற்கு பயன்படுகிறது. அந்த வீட்டில் அவளை நொண்டி என்று சொல்லாதது அவள் கணவனும் மாமனாரும்தான். அவர்கள் தனிக்குடித்தனம் சென்ற பிறகு அவர்கள் வீட்டுக்கு ஒரு முறை கூட செல்லாத மாமனார் அவளை வழியனுப்ப வந்தது வந்தனாவுக்கு மகழ்ச்சியாக இருக்கிறது.

ரயில் கிளம்புகிறது. அவர்கள் விடைபெற்றுத் திரும்பிப் போவதுவரை பார்க்கிறாள் வந்தனா. தன்ராஜ் பசிக்கிறது என்கிறான். அவனுக்கு சாப்பாட்டை எடுத்து வைக்கும் அவள் வழக்கமாக, ”இன்று உண்ணப்போகும் உணவு நல்லதையே செய்வதற்கு உதவட்டும்“ என்று பிரார்த்தனை செய்கிறாள். இந்த நல்லது கெட்டது பற்றி அவளுக்கு சமீபமாக சில ஐயப்பாடுகள் தோன்றியிருக்கிறது. ஏதோ ஒரு விரும்பத்தகாத ஒன்று நிகழப்போவதாக அவள் உணர்கிறாள். சாப்பிடும் முன் பிச்சைக்கார பையன் ஒருவனுக்கு பூரியைக் கொடுக்கச் சொல்ல, தன்ராஜ் மறுத்துவிடுகிறான். அவளே அச்சிறுவனை அழைத்துக் கொடுக்கிறாள்.

சாப்பிட்ட பின்பு செஸ் ஆடலாம் என்கிறான் தன்ராஜ். வீட்டிலும் கடந்து ஐந்தாறு மாதமாகத்தான் இந்த செஸ் விளையாட்டு ஆரம்பித்தது. வந்தனா நன்றாக விளையாடுவாள். அவள் கணவனுக்கும் பல நுணுக்கங்களை அவள் சொல்லித் தந்திருக்கிறாள்.

வந்தனாவும் தன்ராஜீம் விளையாடுகிறார்கள். தன்ராஜின் ஆட்டம் மோசமாக இருக்கிறது. அவள் அவனது காய் நகர்த்தலின் விளைவைப் பற்றி சொல்கிறாள். ஆனால் அவனோ அவள் தப்புத் தப்பாக சொல்லித்தந்துவிட்டதாக புகார் செய்கிறான். திடீரென்று அவன் எல்லாக் காய்களையும் கலைத்துவிட்டு அவள் தொடையில் ஓங்கிக் குத்துகிறான். “அம்மா“ என்று கத்துகிறாள் வந்தனா. அவனுக்கு என்ன ஆச்சு என்று புரியாமல் அவனைப் பார்க்கிறாள். தன்ராஜ் வெறுப்புடன் அவளையே பார்க்கிறான். அவன் கண்ணில் தோன்றிய வெறி அவளைப் பயமுறுத்துகிறது. அவளுக்குள் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பற்றியும், எல்லாப் பெண்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தைகள் பற்றியும் நினைவு வருகிறது என்பதாக கதை முடிகிறது.

கதையின் ஆரம்பத்தில் எடுத்தவுடன் வந்தனா ஊனம் என்பதை அசோகமித்திரன் சொல்லவில்லை. ஏதோ ஒரு குறை என்பதாக நமக்குப் புரியவைத்து பிறகுதான் கால் பாதம் சிறியது என்பதாகவும் சொல்கிறார். எனவே அதை வைத்து கதை நகரப்போவதாக நாம் ஊகிக்கிறோம். ஆனால் அப்படி எதுவும் ஆவதில்லை. மாறாக அவள் குடும்பத்தைப் பற்றி சில விசயங்கள் வருகிறது. பிறகு கதை செஸ் விளையாட்டுக்குத் திரும்புகிறது. நம் மனதில் கதை எதை நோக்கிச் செல்கிறது என்று நிச்சயமில்லாத தன்மை நிலவுகிறது. பிறகு எதிர்பாராத விதமாக கதை தன்ராஜின் கோபத்தில் சென்று, வந்தனாவின் குழந்தைகள் பற்றிய ஞாபகத்தில் முடிகிறது.

யாரிடமும் எதற்காகவும் தோற்றுப் போக விரும்பாத குழந்தைகளின் மனோபாவமே வந்தனாவை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்து, எதிர்கால குழந்தைகள் பற்றிய நினைவை அவளுக்குத் தருகிறது. தன்ராஜின் நடவடிக்கையால்,  தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை மூலம் அவளது வலியை உணர்த்தும் அசோகமித்திரன், பிற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நினைவின் வாயிலாக பிறரின் வலியையும், இந்தச் சமூகத்தின் வலியையும் காட்டுகிறார். .

இந்தக் கதைக்கு அவளது கால் ஊனமும் செஸ் ஆட்டமும் ஏன் தேவையாகின்றன? ஒருவரிடம் இருக்கும் ஊனத்தை பரிதாபத்தோடு பார்க்கும் பலர், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதே ஊனத்தின் மீது தன் தாக்குதலையும் தொடுப்பார்கள் என்பதைக் காட்டவே அசோகமித்திரன் வந்தனாவின் கால் ஊனத்தைக் காட்டியுள்ளார். விளையாட்டில்கூட தான் தோன்றுப் போவதை ஏற்றுக் கொள்ளாத மனோபாவம், பிற விசயங்களில் எப்படி வெளிப்படும் என்பதை நாம் உணரச் செய்யவே செஸ் விளையாட்டு கதையில் வருகிறது.

இது சிறுகதைதான் என்றாலும் ஒரு குறுநாவலுக்கான பல விசயங்களை நாவலில் சொல்லியுள்ளார் அசோகமித்திரன். இருந்தும் சிறுகதையில் அதன் வடிவம் கச்சிதமாக அமைந்து நம் மனதை வெகுவாகக் கவர்கிறது.

2. விரல்:

அசோகமித்திரன் அவர்களின் விரல் சிறுகதை நண்பர்களிடையேயான உறவைச் சொல்லும் ஒரு கதை. பள்ளியில், கல்லூரியில் படித்த நண்பர்கள் பலர் இருப்பார்கள். அவர்களின் சிலரின் நட்பு மட்டும் கடைசிவரை தொடர்ந்து வரும். பல பேரின் நட்பு நண்பர்களின் மனைவிகளாலேயே நசுக்கப்படுவதும் உண்டு. நண்பர்களுக்கிடையேயான நட்பு தங்களை அந்நியப்படுத்துவதாகக் கருதியே பல மனைவியர் தங்களின் கணவன்மார்களின் நட்பை விரும்புவதில்லை. அதிலும் நண்பர்கள் குடிகாரர்களாக இருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. ஆரம்பத்தில் தங்களின் நண்பர்களுக்காக வாதாடுபவர்களும்கூட காலப்போக்கில் தங்கள் மனைவியின் எண்ணத்தைப் பிரதிபலிப்பவர்களாக ஆகி விடுகிறார்கள். இத்தகைய சிந்தனையே விரல் கதையைப் படித்ததும் நமக்குள் எழுகிறது. கதையைப் படித்ததும் நாம், நம் நண்பர்களாக எஞ்சியிருப்பவர்களைப் பற்றியும், நண்பர்களாக இருந்து மறந்தவர்களையும் நினைத்துப் பார்ப்பது அவசியமாகிறது.

இந்தக் கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது. இக்கதை தரும் வாசிப்பு அனுபவமும் அலாதியானது. படித்து முடித்ததும் ஏற்பட்ட வியப்பு இன்னும் அடங்கவேயில்லை. வெறும் உரையாடல் மூலமாகவே கதையை அற்புதமாக எழுதியிருக்கிறார் அசோகமித்திரன். உரையாடல்கள் கூட பெரும்பாலும் இரண்டு வரிகளே இருக்கின்றன. அவற்றினூடே எத்தனை எத்தனை விசயங்களை இந்த மனிதர் பொதிந்து வைத்திருக்கிறார் என்று மலைப்புத் தட்டியது.

மனிதன் தான் விரும்பியதைச் செய்யமுடியாத போது கிடைத்ததை தக்கவைத்துக் கொள்வது சிரமமானதாகவே இருக்கிறது. என்னதான் நல்லவனாக இருந்தாலும் குடிப்பவன் மீது சமூகத்தில் ஒரு தப்பான அபிப்ராயமே இருக்கிறது. ஒரு பொருள் எத்தனையோ காரியங்களுக்குப் பயன்பட்டாலும், நாம் நேசிக்கும் ஒன்றுக்கு அது பயன்படும் போதுதான் அதன் இருப்பு முழுமையடைகிறது. போன்ற பலவற்றை இக்கதை நம் கற்பனையிலிருந்து யாசிக்கிறது.

மனிதனின் துக்கம் வெளிப்படும் விதம் அவனது மனோபாவத்துக்கும் இயல்புக்கும் ஒத்தாகவே இருக்கும்.  “இனிமேல் எழுதவே முடியாது” என்று ராமசாமி புலம்புவதிலிருந்து அவன் தன் விரலின் இழப்பை எழுத்தோடு சம்பந்தப்படுத்தி துக்கமடைகிறான். அப்போது ரங்கநாதன் ஆத்திரமாக,
”இனிமே நீ எழுதி என்னாகனும்? பெண்டாட்டி குழந்தைகளை ஊரிலே தவிக்கவிட்டு இங்கே வந்து மத்தவங்க பிராணத்தை எடுக்கறே. யார் யார் கால்ல கையில விழுந்து வேலை வாங்கிக் கொடுத்தா இரண்டு நாள் நிக்கறதில்லே.”
என்று சொல்கிறான். இந்த மூன்று வரி உரையாடலையும் ராமசாமியின் துக்கத்தையும், அவனது குடிப் பழக்கத்தையும் இணைக்கும்போது அவனைப் பற்றிய மொத்த வாழ்க்கையும் நமக்கு புரிந்துவிடுகிறது. பக்கம்பக்கமாக எழுதுவதைவிட, சாதாரணமான வார்த்தைகளையும் வாக்கியங்களையும் கொண்டு கதையைச் சொல்லும் சோகமித்திரனின் ஆற்றல் அசாதாரணமானது. அவரது மேதமைக்கு விரல் கதை ஒரு எடுத்துக்காட்டு. அவரது ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றாக விரல் கதையை மதிப்பிடுகிறேன்.

3. பிரயாணம்:

பிரயாணங்கள் இருவகை. ஒன்று லௌகீக பிரயாணம். மற்றது ஆன்மீகப் பிரயாணம். லௌகீக பிரயாணத்தில் முடிவில் நாம் திரும்ப முடியாது. ஆனால் ஆன்மீகப் பிரயாணத்தில், சம்மந்தப் பட்டவர் விரும்பினால் திரும்ப முடியும். அது யோகத்தினால் சாத்தியமாகிறது. ஞானிகள் போகும் வழியையும் திரும்பும் வழியையும் அறிவார்கள். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு அது ஒரு வியப்பாக மட்டுமே எஞ்சுகிறது. அப்படி திரும்பிய ஒரு குருவின் கதையை நுட்பமாகச் சொல்வதுதான் அசோகமித்திரனின் பிரயாணம். இந்த அடிப்படை புரிதல் இல்லாமல் இந்தக் கதையைப் படிக்கும்போது, அதன் இறுதியில் நாம் திருதிருவென விழிக்கவே நேரும்.

இந்தக் கதையில் உரையாடல்களே இல்லை. அசோகமித்திரன் பெரும்பாலும் தன் கதையை உரையாடல்கள் மூலமே நடத்திச் செல்வார். ஆனால் இந்தக் கதை அவரது வழக்கமான மொழி நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நம்மைக் கனவுலகில் சஞ்சரிப்பதான ஒரு மொழி நடையை இக்கதைக்கு அளித்திருக்கிறார் அவர். நீண்ட நீண்ட பத்திகளும் அடர்த்தியான வாக்கிய அமைப்புகளும் இந்தக் கதையை அவரின் பல கதைகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது.

அடிபட்ட தனது குருவை சிஷ்யன் ஒருவன் மலையின் உச்சியிலிருந்து கீழே கொண்டு வருகிறான். குருதேவர் வழியில் இறந்து போகிறார். அவரை சமவெளியில் அடக்கம் செய்ய, முன்பைவிட எடை கூடிய அவரது உடலை மிகவம் சிரமப்பட்டு கீழே கொண்டுவருகிறான். அப்போது ஓநாய் கூட்டம் ஒன்று தாக்குகிறது. தன்னையும் குருவின் உடலையும் காக்க அவன் போராடுகிறான். ஒரு கட்டதில் அவன் நினைவு தப்பிவிட மயக்கமாகிறான். குருதேவரின் உடலை ஓநாய்கள் பள்ளம் ஒன்றிற்கு இழுத்துச் செல்கிறது. அவன் நினைவு திரும்பி எழுகிறான். குருதேவர் விழுந்த பள்ளத்தை நோக்கி ஓடுகிறான். அங்கே குருதேவர் தலையில்லாமல் கிடக்கிறார். ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, குருதேவரின் வலது கைப்பிடியில் இருப்பதை அவன் பார்க்கிறான்.

மனிதனின் எல்லா ஆசைகளிலும் அவன் உடல் மீதான அவனது ஆசையே பிரதானமானது. சாதாரண மனிதர்களுக்கு மாத்திரமல்ல ஞானிகளுக்கும் அப்படித்தான் என்பதை அசோகமித்திரன் இக்கதையில் சொல்கிறார்.

4. புலிக் கலைஞன்:

நம் வாழ்க்கை பொருளைப் பிரதானமாகக் கொண்டே இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே திருக்குறளில் பொருள் நடுவிலிருக்கிறது. நம் வாழ்வின் காலம் பொருளை ஒட்டியே அமைந்திருக்கிறது. காலத்தைச் செலவழிக்க பொருள் வேண்டும். பொருள் இல்லாமல் நாம் காலத்தைச் செலவழிக்க முடியாது. காலத்தையும் தூரத்தையும் பிரிக்க முடியாதது relativity தத்துவம் என்றால் காலத்தையும் பொருளையும் பிரிக்க முடியாதது reality தத்துவம். பொருள் இல்லாமல் காலம் இல்லை என்பதால், பொருள் இல்லாவிட்டால் நாமும் காலத்திலிருந்து மறைந்துவிடுவோம். காலத்திற்கு போதுமான பொருளை நாம் வழங்காவிட்டால், அதன் கோரப் பசிக்கு நாம் உணவாகிவிடுவோம். அப்படி காலம் விழுங்கிய ஒரு மனிதனின் கதையைச் சொல்வது அசோகமித்திரனின் புலிக் கலைஞன்.

காதர் என்ற புலிவேஷம் போடும் கலைஞன் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வருகிறான். கதை இலாகாவில் ஒரு புள்ளியான சர்மா, புலிவேஷத்துடன் அவன் காட்டும் புலியாட்டத்தைக் கண்டு வியந்து போகிறார். இருந்தும் அவனுக்கு அப்போது வாய்ப்பு இல்லாததால் அவனது முகவரியை வாங்கிக் கொண்டு பிறகு அழைப்பதாகக் கூறுகிறார். அவனுக்காக வாய்ப்பு ஒன்றையும் உருவாக்கி, அவனைத் தேடும்போது அவன் கிடைப்பதில்லை என்பதே கதை.

அசோகமித்திரனின் பாத்திரத் தேர்வுகள் மிகவும் நுட்பமானவை. அவை அந்தக் கதையுடன் பொருந்திப் போகும் அழகு அற்புதத்திலும் அற்புதம். இந்தக் கதையில் காதரை புலி வேஷம் போடும் கலைஞனாக அசோகமித்திரன் காட்டியிருப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது பழமொழி. ஆனால் புலிவேஷம் போடும் கலைஞன் பசிக்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கிறான். அடுத்தவர்களை பயமுறுத்தி, தனக்கு உணவாக்கிக்கொள்ளும் புலி இங்கே தன் அடுத்த நேர உணவுக்காக கையேந்தி நிற்கிறது. வாழ்க்கையின் irony இதன் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தப்படுகிறது.

காலத்தால் செய்த உதவியைச் சிலாகித்துப் பேசும் வள்ளுவர், காலத்தின் முக்கியத்துவத்தையே சொல்கிறார். காலத்தில் கிடைக்காத உதவி பயனற்றது. அதுவும் சினிமாத் துறையில் அதை எதிர்பார்ப்பது முடியாதது. நாம் வாழும் வாழ்க்கைக்கான வழி அதில் உடனடியாகக் கிடைத்து விடுவதில்லை. வழி கிடைக்கும்போது அவர்களி்ன் முகவரி மட்டுமே எஞ்சுகிறது.  அவர்களின் இருப்பு வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட முகவரியாய் இருந்து பின்னர் அதுவும் அழிந்து போகிறது. காலம் அவர்களைத் தொலைத்துவிடுகிறது.

காப்காவின் தீர்ப்பு சிறுகதையில் வரும் சில வரிகள் அந்த கதையின் போக்கைத் தீர்மானிக்கும். ஜார்ஜ் தன் தந்தையைப் படுக்கையில் கிடத்தி போர்த்திவிடுவான். அது தன்னைப் புதைத்து மூடும் செயலாகக் கருதி, அவன் மீது கோபம் கொண்டு அவனைத் திட்டி, கடைசியில்  நீரில் மூழ்கி சாகும்படி தீர்ப்பு வழங்குவார் அவன் தந்தை. அதேபோல் புலிக் கலைஞனில் வரும் இந்த வரிகள் கதையின் போக்கையும் முடிவையும் தீர்மானிக்கிறது:
“…..ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர், வயது, உயரம், விலாசம், எல்லாம் குறித்துவைத்திருந்தேன். அந்தக் குறிப்புகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும். விலாசதாரர் வீடு மாற்றிப் போய்விட்டார் என்று. அப்புறம் எல்லாமே வெள்ளைதான்.”
வாழ்க்கையின் பிரமாண்டத்தையும் அதன் பின்னங்களையும் இவ்வரிகள் மிகச் சிறப்பாகப் படம் பிடிக்கின்றன. இவ்வரிகளின் மூலம் வாழ்க்கை நமக்குக் காட்டும் நிலையாமைத் தத்துவம் அசாதாரணமானது. மனதில் ஏற்படும் வெறுமை நம்மை வெட்டவெளியில் தூக்கி வீசுகிறது. கதையைப் படித்து முடித்ததும் இந்த வரிகளை நாம் நினைவுக்குக் கொண்டுவரும்போதே, நாம் அந்த உணர்வை அடையமுடியும்.

5. முறைப் பெண்:

சில கதைகள் அழவைக்கும். சில கதைகள் சிரிக்கவைக்கும். சில கதைகள் சிந்திக்கவைக்கும். சில கதைகள் எரிச்சல்படுத்தும். பல கதைகள் ஏன் படித்தோம் என்று யோசிக்கவைக்கும். இப்படி கதைகள் பலவிதம். ஆனால் முழுக்கமுழுக்க சிரிக்கவைக்கும் கதைகள் அபூர்வம். அதிலும் வாய்விட்டுக் கடகடவென சிரிக்கவைக்கும் கதைகள் மிகச்சிலவே. இலக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் சீரியஸாக எழுதுபவர்கள்தாம். இருந்தும் தரமான நகைச்சுவை வெளிப்படுவதும் அவர்களிடமே என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி ஒரு தரமான, நம்மை வாய்விட்டு சிரிக்கவைக்கும் கதைதான் அசோகமித்திரனின் முறைப் பெண். இக்கதை முழுக்கமுழுக்க அசோகமித்திரன்  அவர்களின் சொந்த அனுபவம் என்றே எண்ணத்தோன்றுகிறது. என்ன ஒரு ஹாஸ்யம்!. அவரிடம் சீரியஸான கதைகள் மட்டுமே வெளிப்படும் என்று நினைத்திருந்தால் அதைத் தூள்தூள் ஆக்கும் கதை இது. ஒரு கதையைப் படித்து, அப்படியா இப்படியா என்று மூளையைக் கசக்கிப்பிழிந்து சிரமப்பட்டு நாம் அடையும் பரவசத்தைவிட இந்தக் கதையில் கிடைக்கும் சிரிப்புப்பரவசம் மேலானது என்று சொல்லலாம்.

நம் வாழ்க்கையிலும் இத்தகைய சம்பவம் நடந்திருக்கலாம். அதுவும் ஏதாவது அழைப்பிற்குப் போனால் நம் வயிறு படும் பாடு இருக்கிறதே! சொல்லி முடியாது!  தங்கள் உபசரிப்பின் உயர்வைக் காட்டுவதாக நினைத்து நம் வயிற்றை குப்பைத்தொட்டி ஆக்கி நோகடித்துவிட்டுத்தான் மறுகாரியம் அவர்களுக்கு! நம் வயிற்றின் மீதும் பசியின் மீதும் நமக்கில்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்கிறது? ஆனால் இவ்விசயத்தில் நாம் சொல்வதை யாருமே செவிமடுப்பதில்லை. நாளை அவர்கள் நம்வீட்டுக்கு வரும்போது நாம் அவர்களை வஞ்சம் தீர்த்துக்கொள்வது வேறுவிசயம்!

ஏற்கனவே படித்தவர்கள் மீண்டும் படித்து சிரிக்கலாம். படிக்காதவர்கள் அவசியம் படித்து சிரித்து மகிழவேண்டும்.

6. பறவை வேட்டை:

வழக்கமான அசோகமித்திரன் பாணி கதைதான் இதுவும். கடைசி வாக்கியத்தில் நம் மொத்த மனத்தையும் குவிப்பது. கதையை சுமுகமாகப் படித்துவந்த நமக்கு அந்த கடைசி வாக்கியம் குழப்பத்தைத் தருகிறது. அதன் பொருள் என்ன? அதன் மூலம் கதையாசிரியர் நமக்குச் சொல்லவருவது என்ன? மீண்டும் திரும்பப் படித்து அதற்கான பொருளை  அறிய நம் மனம் விழைகிறது.

ஒருவர் மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. நாம் யாரை வெறுக்கிறோமோ அவரை, அவர் நடவடிக்கையை, கண்டுகொள்ளாமல் விடுவது என்பது அதில் ஒன்று. அதாவது புறக்கணிப்பது. நாம் அவரை புறக்கணிக்கிறோம் என்பதை, நாம் வெறுப்பவரை உணரச்செய்வதே நாம் அவருக்குத் தரும் சரியான தண்டனையாக இருக்கும். இந்தக் கதையின் கடைசி வரி அதைத்தான் சொல்கிறது.

தனக்கு பணம் தேவை என்று கடிதம் அனுப்புகிறார் தந்தை. ஆனால் மகன் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். பிறகு ஏதோ சொற்ப பணத்தை அனுப்பிவைக்கிறான். தாமதமாகக் கிடைத்த கடிதம் அவருக்கு கோபத்தைத் தருகிறது. எனவே அதைத் திறக்காமல் விடுகிறார். அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. இருந்தும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் விடுகிறார். தன் தந்தை இறந்த பிறகு மகன் அந்த கடிதம் பிரிக்கப்படாமல் இருப்பதை அறிகிறான்.

அது அவனுள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

தன் தந்தையின் வெறுப்பு என்ற துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட புறக்கணிப்பு என்ற தோட்டா அவனை, அவன் மனதைச் சரியாக அடித்துவிடுகிறது எனும் பொருளையே அந்த வாக்கியம் நமக்கு உணர்த்துகிறது.

பறவைகளை வேட்டையாடத்தான் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் தேவை. மனித மனங்களை இத்தகைய புறக்கணிப்பின் மூலம் காயப்படுத்த முடியும் என்பது நாம் நுட்பமாக அறியவேண்டியது.

7. குகை ஓவியங்கள்:

மனிதனுக்குப் போக்கிடம் அவசியம். இருக்கும் இடத்தைவிட்டு எங்கேயாவது போகவேண்டும். அதற்காக முன்கூட்டியே திட்டமிடுவதும், ஏற்பாடுகள் செய்வதும் பிரமாதமாக இருக்கும். குறிப்பிட்ட இடத்தை அடையும் வரை பரபரப்பும், ஆவலும் இருக்கும். ஏதேதோ கற்பனைகள் மனதில் விரியும். முன்னரே பார்த்தவர்களின் விவரணைகள் நம் ஆவலைத் தூண்டுவதாக இருக்கும்.

பல சிரமங்கள் அடைந்து அந்த இடத்தை அடைவோம். அங்கே ஏற்கவே வந்துசேர்ந்தவர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். நாமும் விறுவிறுப்பாக அந்த இடத்தை அடைவோம். நம்முடன் வந்த ஓட்டுனரோ எல்லோரையும் இறக்கிவிட்டு, வண்டியில் காலை நீட்டி தூங்க ஆரம்பிப்பார். என்னது எப்பேர்ப்பட்ட இடத்தில் இந்த மனிதன் தூங்குகிறான் என்று நினைப்போம். கூட்டத்தை முண்டியடித்து சென்று பார்ப்போம். ஓரிடத்தில் மலை மீதிருந்து சன்னமாக தண்ணீர் வடிந்துகொண்டிருக்கும். அங்கே கடவுள் சிலையோ, மரமோ அல்லது வேறு ஏதாவதோ மஞ்சள் பூசி குங்குமம் தீட்டியிருக்கும். அல்லது வேறு ஏதாகினும் இருக்கலாம்.

நமக்கு சப்பென்றாகிவிடும். பிறகு திரும்பி கொண்டு போயிருந்து மூட்டை முடிச்சை அவிழ்த்து சாப்பிடுவோம். அரட்டை அடிப்போம். மீண்டும் ஊருக்குத் திரும்ப தயாராவோம். நம் எல்லா பிரயாணத்திலும் பெரும்பாலும் நடப்பது இதுவே. சாப்பிடுவதையும், அரட்டை அடிப்பதையும் வீட்டிலேயே செய்திருக்கலாமே என்று தோன்றும். இருந்தும் மறக்காமல் அடுத்த வருடமும் இப்படியான ஒரு பயணத்திற்கு ஏற்பாடு செய்வோம்.

இப்படியாக இரண்டாயிரம் படிகள் மலை மேல் ஏறி குகையிலிருக்கும் ஓவியத்தை பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை குகை ஓவியங்கள் கதையில் சொல்கிறார் அசோகமித்திரன். நம் வாழ்க்கை இப்படியான அர்த்தமற்ற பிரயாணத்தில்தான் கழிகிறது. நமது எல்லா பிரயாணங்களும் நமக்கு உவகையையும் உற்சாகத்தையும் தருவதில்லை என்றாலும் நாம் பிரயாணம் மேற்கொள்வது தவிர்க்க இயலாததாகிறது. சாப்பிடுவது பழக்கமாகி விட்டதுபோல் பிரயாணமும் நமக்கு ஒரு பழக்கம். பிரயாணத்தின் மூலம் நாம் அடையும் இன்பத்தைவிட துன்பங்களே அதிகம் என்றபோதிலும் நாம் பயணத்தைக் கைவிட முடியாது.

8. குடும்ப புத்தி:

அசோகமித்திரனின் குடும்ப புத்தி கதை காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளிடையே எற்படும் சண்டையைச் சொல்கிறது. காதலிக்கும் போது நெருக்கமாக, அந்நியோன்யமாக உணர்ந்த அவர்கள் திருமணத்திற்குப் பின் தங்களிடையே கருத்துவேறுபாடு வந்துவிட்டதாக உணர்கிறார்கள். தன் மனைவி தனக்கு ஏற்றவள் இல்லையோ என்ற சந்தேகம் அவனுள் எழுகிறது. தன் அம்மாவிடம் அது பற்றி கேட்கிறான்.
இரு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பிரபாகரன் அவனுடைய தாய் தந்தையர் ஊருக்குச் சென்றான். அம்மாவைத் தனியாகப் பார்க்க முடிந்தபோது, “அம்மா, இந்தப் பொண்ணு சரிப்பட்டு வராதுன்னு ஏன் நீ சொல்லலே?” என்று கேட்டான்.
“எனக்குத் தோணித்து, ஆனா நீ கேட்டிருப்பாயா?”
அவனது அம்மாவின் மேற்கண்ட பதில் நம்முள் பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. அதன் விளைவாக காதல் திருமணம் குறித்து சில சிந்தனைகளை நாம் ஆராயலாம்.

காதல் திருமணத்தைவிட நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் பிரிவும், விவாகரத்தும் குறைவுதான் என்று சொல்லவேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செய்த காதல் திருமணங்கள் ஏன் இவ்வாறு ஆகவேண்டும்? அதும் திருமணமான நான்கு அல்லது ஐந்து வருடங்களிலேயே இவ்வாறு நேர்ந்துவிடுகிறது. முன்பின் தெரியாத நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் அவ்வளவு விரைவாக இது நிகழ்வதில்லை.

இதற்கான காரணங்களை ஆராயந்தால், சற்றே வித்தியாசமான பதிலை நாம் பெறலாம். காதல் திருமணங்களில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள் என்பது சரிதான். ஆனால் காதலிக்கும் இருவருமே மற்றவரிடத்து தன் தேவையற்ற குணங்களை மறைத்து வைத்துக்கொண்டு தன்னை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் இருவரின் குணாதிசயங்களும் பொருந்திப் போவதான ஒரு போலியான தோற்றம் ஏற்படுகிறது. இவை திருமணத்திற்கு பிறகு சிதறத் தொடங்கிவிடுகின்றன.

அவற்றையெல்லாம்விட முக்கிய காரணம் என்னவென்றால், காதலிக்கும் காலகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்டுவிட்ட புரிதலே, திருமணத்திற்குப் பின் அவர்களிடையெ பிரிவு ஏற்பட காரணமாகிவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படத் தொடங்கும் புரிதலின் காலம் திருமணத்திற்குப் பின் அவர்களுக்குக் கிட்டுவதில்லை. எனவே அடுத்த கட்டமான பிரிவை நோக்கி வேகமாக நகர்ந்துவிடுகிறார்கள்.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதிலேயே காலம் கடந்துவிடுகிறது. அதற்குள் அவர்களின் உடல் மூலமான பிணைப்பு அவர்களைப் பிரிக்க இயலாதவாறு பந்தப்படுத்திவிடுகிறது. எனவே இருவருக்குமிடையே ஏற்படும் வேற்றுமைகளை அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிடுகிறது. ஆக, அவர்களுக்குள் பிரிவு காலம் தாழ்த்தி ஏற்படுகிறது அல்லது ஏற்படாமலேயே போகிறது.

அவனது அம்மாவின் மேற்கண்ட பதிலுடன் கதையை முடித்திருக்கலாம். கதை கச்சிதமாகவே இருந்திருக்கும். ஆனால் அசோகமித்திரன் மேற்கொண்டு மூன்று வாக்கியங்களைச் சேர்த்து கதையை முடிக்கிறார். ஒரு விதத்தில் இது தேவையில்லை என்றாலும், அசோகமித்திரன் அப்படி தேவையில்லாதவற்றை தன் கதையில் சேர்ப்பவரல்ல. அப்படிச் சேர்ப்பதன் மூலம் பொருந்தாத திருமணம் செய்துகொண்டு, குடும்பப் புத்தியை விமர்சித்ததினால் மனதில் ஏற்பட்டுவிட்ட வேதனையை நம் மனதில் பதியுமாறு செய்கிறார்.
பிரபாகரன் அவன் படித்த பள்ளிக்கூடம் இருந்த தெருவுக்குப் போனான். அன்று விடுமுறை. பள்ளிக்கூடம் நிசப்தமாக இருந்தது.
இது அசோகமித்திரனின் முக்கியமான கதையாக இல்லாமலிருக்கலாம். ஆனால் நல்ல கதை. அவர் கதைகளைப்  படிப்பதில் அலாதியான ஒரு இன்பம் இருக்கிறது.

9. மாறுதல்:

சாயனா வீட்டுவேலைகளைச் செய்துவரும் சிறுவன். தன் நண்பர்களின் பேச்சைக்கேட்டு வீட்டிலிருந்து வெள்ளித் தட்டை திருடிவிடுகிறான். போலீஸ் ஸ்டேஷனில் அவனை அடித்து உதைக்கிறார்கள். அங்கிருந்த கைதிகள், ஒரு தடவைதான் கஷ்டமாக இருக்கும் எனவும் பிறகு பழகி, ஆளே மாறிவிடுவாய் என்றும் சொல்கிறார்கள். விடுவிக்கப்பட்ட அவன் மீண்டும் அந்த வீட்டுக்கே வருகிறான். அவன் செய்துவந்த வேலைகளுக்கு இப்போது வேறு ஆள் போட்டிருப்பதை அறிகிறான். ஆனாலும் பல வேலைகள் செய்யாமலிருப்பதையும் பார்க்கிறான். வீட்டில் உள்ளவர்களின் புறக்கணிப்பு அவனை வேதனைப் படுத்துகிறது.

கதையின் கடைசி பாரா இப்படி முடிகிறது:
ஆனால் அந்த கைதிகள் கூறியபடி அவன் முழுக்க மாறிவிடாமல் போனதுதான் அவனுக்கு இன்னும் அதிக வருத்தத்தை ஏற்படுத்தியது.
அவன் தான் மாறவில்லை என்பதை நினைத்து ஏன் வருந்தவேண்டும்? ஏனென்றால் வெளியே இருப்பவர்கள் இப்போது மாறுதல் அடைந்துவிட்டார்கள். கைதிகள் கூறியபடி அவன் கடின மனதினனாகவும், எல்லாவற்றையும் துச்சமாக மதிக்கும் திறனுள்ளவனாகவும் மாற முடியவில்லை. ஆனால் அவன் மீதான பிறரின் பார்வை மாறுதல் அடைந்துவிடுகிறது. அதுதான் அவனை பாதிக்கிறது. எனவே தான் அப்படி மாறியிருந்தால் மற்றவர்களின் உதாசீனத்தை உதறித்தள்ளும் ஆற்றல் வந்திருக்கும் என்பதே அவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மாறுதல் என்பது இங்கே இரண்டு தரப்பிலும் பேசப்படுகிறது.

ஒன்றின் மாறுதலால் பிறிதொன்றின் மாறாமை பாதிப்படைகிறது. இரண்டும் மாறுதல் அடையும்போது அது சமனாகிறது. குற்றம் செய்தவன் மாறாதிருப்பது நல்ல விசயம்தான். ஆனால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாறும்போது அந்த மாறாமையே அர்த்தமற்றதாகிறது.

அசோகமித்திரன்-தி.ஜானகிராமன்:

இலக்கியத்தின் இருபெரும் சாம்ராட்கள் அசோகமித்திரனும் தி.ஜானகிராமனும். இருவருமே சிறுகதையில் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்கள். இருவரின் கதைகளும் வாசிப்பில் நமக்கு மேலான அனுபவத்தையும், நெகிழ்வையும், பரவசத்தையும் தருபவைதான். அசோகமித்திரன் கதைகளிலிருந்து நீங்கள் எதையாவது நீக்க விரும்பினால் அது முடியாது. அவ்வளவு கச்சிதமாக சொற்சிக்கனத்துடன் கதைகள் அமைந்திருக்கும். ஆனால் தி.ஜா. அப்படி அல்ல. அவர் கதைகளிலிருந்து வேண்டியதில்லை என்று சிலவற்றை நாம் தாராளமாக நீக்க முடியும். நீக்க முடியும் என்றால், கழுத்தின் அலங்காரத்துக்கு அதிகப்படியான சுமை அவ்வளவுதான்! தன்னை அன்றாட வாழ்வில் பாதிக்கும் நிகழ்வுகளின் அனுபவத்தின் சாரத்தை தனக்கேயான நடையில் கதையாக்குகிறார் அசோகமித்திரன். ஆனால் தி.ஜா. அவற்றோடு கொஞசம் ஜோடனை, நெளிவு, சுளிவு போன்ற நகாசு வேலைகளைச் செய்கிறார். அதுதான் வித்தியாசம்.

1. யுகதர்மம்-சத்தியமா:

தன் வாழ்க்கையின்  வெற்றி ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறான் இன்றைய மனிதன். எனவே செல்லும் வழி வெற்றியை நோக்கியா இல்லையா என்பதுதான் அவனுக்கு முக்கியமானதே தவிர வழிகளின் சரி தவறு பற்றிய ஆராய்ச்சி இல்லை.  ஒன்றின் வெற்றிக்காக அவன் எத்தகைய கீழான வழியை பின்பற்றவும் தயாராகிறான். வென்றபின் வெற்றி அவனது எல்லாத் தவறுகளையும் மறந்துவிடுகிறது; மறைத்துவிடுகிறது. இதற்கு மாறாக வழியின் சரி தவறுகளைப் பற்றி யோசிப்பவன் வெற்றிபெற முடியுமா? அத்தகைய சரியான வழியைத்தான் நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தருகிறோமா? என்ற கேள்விகள் நாம் யோசிக்கவேண்டிய கேள்விகளாக இருக்கினறன.

இந்தக் கேள்விகளின் பின்புலத்தில் தி.ஜாவின் சத்தியமா கதையும் அசோகமித்திரனின் யுகதர்மம் கதையும் எழுதப்பட்டிருக்கிறது.

பாலு பரிட்சையில் குறைந்த மதிப்பெண் எடுக்கிறான். அவன் அப்பா கேட்கும்போது, “எல்லோரும் பிட் அடித்தார்கள். நான் எனக்குத் தெரிந்ததை எழுதினேன்“ என்கிறான். அவன் அப்பாவோ, ”நீயும் பிட் அடிக்கவேண்டியதுதானே?” என்கிறார்.

அசோகமித்திரன் தன் கதைக்கு யுகதர்மம் என்று தலைப்பிட்டுள்ளார். உண்மையில் இது யுகத்தின் தர்மமா அல்லது மனிதனின் தர்மமா? காலம் எங்கேயாவது மாறுமா என்ன? மனிதர்கள்தான் மாறுகிறார்கள். தங்கள் மாற்றத்தை காலத்தின் மாற்றமாக்கும் வித்தையை மனிதன் மட்டுமே செய்யமுடியும். தான் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் சுலபமாக காலத்தின் மீது பழியைச் சுமத்திவிடுகிறான். ஒருவன் ஒரு தவறை செய்யும்போது அது அவனின் தவறாகிறது. அதுவே எல்லோரும் செய்யும்போது காலத்தின் தவறாகிவிடுகிறது. காலத்தின் போர்வையால் தன் தவறுகளையும் குற்றங்களையும் மறைத்துவிடுகிறான்.

பள்ளி மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலுக்கு நிஜமான பிரதி சான்றிதழ் வாங்குவது பற்றி அசோகமித்திரன் விரிவாக இக்கதையில் பேசுகிறார். அதன் அவசியம் என்ன? நிஜமான பிரதி சான்றிதழ் வாங்கினாலும், அவனது மதிப்பெண்கள் நிஜமானவைதானா? அவன் படித்து வாங்கியவைதானா? நிஜமான சான்றிதழே பொய்யாய் இருக்கும்போது அதன் நகல் எவ்வாறு நிஜமான பிரதி ஆகும்? போன்ற கேள்விகளை இதன் மூலம் எழுப்புகிறார் அவர்.

தி.ஜாவின் சத்தியமா கதை, தான் ஆசை ஆசையாய் வாங்கிய காலண்டரை தன்னோடு படிக்கும் நண்பன் நைச்சியமாக பேசி கவர்ந்துகொள்வதைச் சொல்கிறது. அதைப் பார்க்கும் அவன் தந்தை அதே யுக்தியைக் கையாண்டு காலண்டரைத் திரும்பப் பெறச்சொல்கிறார். ஆனால் அது முடியாமல் அவன் அதற்குப் பதிலாக அழி ரப்பரை வாங்கிவருகிறான். தன் மகனின் அறியாமையை நினைத்து அந்த அப்பா வருந்துகிறார்.

இரண்டு கதைகளிலும் அப்பாக்கள் தங்கள் மகன்களின் அறியாமையை, இயலாமையை நினைத்து வருந்துகிறார்கள். குறுக்கு வழியை உபயோகிப்பதும், அடுத்தவர்களை ஏமாற்றுவதும் தங்கள் மகன்களால் முடியாதிருப்பதையே அவர்களின் அறியாமையாகவும் இயலாமையாகவும் இந்த அப்பாக்கள் பார்க்கிறார்கள். இவர்கள் அப்பா ஆன பின்னால் தங்கள் குழந்தைகளையும் அப்படியே நினைப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது இந்த கதைகளின் வீச்சு நமக்கு விளங்குகிறது.

2. குழந்தைகள்-சிலிர்ப்பு:

அசோகமித்திரனின் குழந்தைகள் கதையும், தி.ஜாவின் சிலிர்ப்பு கதையும் குழந்தைகளின் இருவேறு மனோபாவத்தைக் காட்டுகின்றன. இரண்டு கதைகளுமே ரயிலைக் கதைக் களமாகக் கொண்டுள்ளன. இரண்டிலுமே, கதையின் ஆரம்பத்தில் ரயில் நிலையம் மற்றும் பயணிகள் பற்றிய விவரணைகள் வருகின்றன. அ.மி. கதையில் பையனுடன் பயணிப்பது அவனது அம்மா. தி.ஜாவில் அப்பா. சிலிர்ப்பில் பையனின் அன்பும் பாசமும் வெளிப்படுகிறது. குழந்தைகளில் பையனின் கோபமும் வெறுப்பும் வெளியாகிறது. தி.ஜா. பையனின் அன்பில் இறைவனைக் கண்டு சிலிர்க்கிறார். அ.மி. பையனின் வெறுப்பில் எதிர்காலம் குறித்த பயத்தை வெளிப்படுத்துகிறார்.

ஒரே மனிதனுக்குள் விருப்பும் வெறுப்பும், அன்பும் பகையும் இருக்கும்போது இருவேறு குழந்தைகளுக்குள்ளே இந்த பேதம் இருக்காதா என்ன? இந்த உலகமே அப்படியான இரட்டைகளால் ஆனதுதானே? இருந்தும் அசோகமித்திரனின் குழந்தைகள் நம் மனதில் தரும் வலி அசாதாரணமானது. தி.ஜாவின் சிலிர்ப்பு நம் மனதில் தரும் நெகிழ்ச்சி சாதாரணமானது என்றுதான் சொல்லவேண்டும். சிலிர்ப்பில் கதையைத் தாண்டி நாம் சிந்திக்க ஏதுமில்லை. ஆனால் குழந்தைகளில் கதைக்கு அப்பாலும் நாம் சிந்திக்க பல இருக்கின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...