September 11, 2015

ப.சிங்காரமும் ‘புயலிலே ஒரு தோணி’யும்

முன்னுரை:
ப.சிங்காரம் என்ற பெயரை நான் முதன் முதலாக அறிந்தது 1987ல் வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ என்ற இதழின் வழியாகத்தான். ‘நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்’ எனும் தலைப்பில் சி.மோகன் எழுதியிருந்த கட்டுரையில் இப்பெயரைப் படித்தேன். அந்தப் பெயரே வசீகரம் நிறைந்ததாக இருக்கவே அவர் பால் ஈர்க்கப்பட்டேன். போதாதற்கு நாவலின் தலைப்பு மிக அலாதியான ஓர் உணர்வையும், ஈர்ப்பையும் ஏற்படுத்திற்று. எனவே நாவலைத் தேடும் பணியில் இறங்கினேன். ஆனால் நாவல் சுலபத்தில் கிடைக்கவில்லை. பலவருட தேடலுக்குப் பிறகே கலைஞன் பதிப்பகத்தின் வெளியீடாகக் கிடைத்தது. படிக்க ஆரம்பித்தபோது பல முறை முயன்றும் என்னால் நாவலில் உட்புகவே முடியவில்லை. வெகுநாட்கள் படிக்காமலேயே வைத்திருந்தேன். 1999-ல், தமிழினி வெளியீடாக வந்தது. அதன் அச்சும் அமைப்பும் நேர்த்தியாக இருக்கவே, மறுபடியும் வாங்கினேன். அப்போதே என்னால் முழுமையாக வாசிக்க முடிந்தது. வாசித்து முடித்ததும் என்ன அற்புத நாவல் என்று வியந்துபோனேன். இத்தனை நாளும் இந்த நாவலைப் படிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று தோன்றியது.

வாழ்க்கை:
ப.சிங்காரத்தின் வாழ்க்கை குறிப்புகள் சிலவற்றை அறிவதன் மூலம் அவரது நாவலின் பின்புலத்தையும் படைப்பின் திறத்தையும் நாம் அறியமுடியும். தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், திருபத்தூர் வட்டம், சிங்கம்புணரி என்னும் கிராமத்தில் நாடார் பேட்டையில் 1920ஆம் ஆண்டு ஆகஸ்டு 12ஆம் தேதி ப.சிங்காரம் பிறந்தார். தந்தை மூக்க நாடார் என்ற கு.பழநிவேல் நாடார்; தாயார் பெயர் உண்ணாமலை அம்மாள். இவர்களுக்கு சிங்காரம் மூன்றாவது மகன். அப்போது, சிங்காரத்தின் தந்தை, அண்ணன்கள் ப.சுப்பிரமணியம், ப.பாஸ்கரன் மற்றும் அவரது தாத்தா ப.குமாரசாமி நாடார் ஆகியோர் சேர்ந்து சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

சிங்காரம், சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பின்னர் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பும் பயின்றார். 1938ஆம் ஆண்டு செ.கா.சின்னமுத்துப்பிள்ளை என்கிற சிங்கம்புணரிக்காரர் இந்தோனேஷியாவில் மைடான் என்ற இடத்தில் நடத்தி வந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காக கப்பலில் சென்றார். 1940ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பின்னர் மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கு மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். இச்சமயத்தில் தென்கிழக்காசிய யுத்தம் மூண்டது. யுத்தம் முடிந்ததும் இந்தோனேஷிய இராணுவ அரசின் அனுமதி பெற்று, பினாங்குக்குக் கப்பலில் சரக்குகள் அனுப்பும் வர்த்தகத்தைச் சில தமிழர்களுடன் சேர்ந்து செய்தார்.

யுத்த காலத்தில் இந்தோனேஷியாவை ஜப்பான் துருப்புகள் கைப்பற்றியபோது அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டு, புத்தகங்கள் தெருவில் வாரிக் கொட்டப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்பத்தில் நூலகத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவர் மூலம் சிங்காரத்துக்கு பல ஆங்கில நூல்கள் கிடைத்தன. அப்போது, குறிப்பாக ஆங்கில நாவல் வாசிப்பு சிங்காரத்துக்கு ஏற்பட்டது. அவரை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் ஹெமிங்வே.

இந்தானேஷியாவில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். தலைப்பிரசவத்தின் போது அவரது மனைவியும் பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர்.

1946ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய சிங்காரம் பின்னர் மீண்டும் இந்தோனேஷியா செல்ல திட்டமிட்டார். ஆனால் கடைசிவரை அங்கு செல்லாமல் மதுரையிலேயே தங்கிவிட்டார். 1947ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மதுரைச் செய்திப் பிரிவில் சேர்ந்தார். சொந்த ஊருக்கும், நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்த்து மதுரை ஒய்.எம்.சி.ஏ.வில் தனியாக தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். 1987ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 1997ஆம் ஆண்டு ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் அவரை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியது. பிறகு மதுரை, விளக்குத்தூண் அருகிலுள்ள நாடார் மேன்சனில் வாடகை அறையெடுத்து தங்கியிருந்தார். கடைசி காலத்தில் அவரது வாழ்நாள் சேமிப்பான ரூபாய் ஏழு லட்சத்தை, மதுரை நாடார் மகாஜன சங்கம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகைத் திட்டத்திற்காக வழங்கினார். அப்போது தனது பெயரில் அறக்கட்டளை, புகைப்படம் திறப்பு போன்றன வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டாராம்.

ப. சிங்காரம், வாழ்வின் கடைசி 2 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 1997ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் விடாத வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மதுரை, கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே மருத்துவமனையிலிருந்து ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே சென்ற வழியில் ஆம்புலன்ஸிலேயே அவர் உயிர் பிரிந்தது. மதுரைக்கு அருகில் தத்தநேரி சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர், கடைசியாக தனது இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று கூறியிருந்தாராம்.

புத்தகமாக்க 10 ஆண்டுகள்:
ப.சிங்காரத்தின் இந்த நாவல் எழுதியவுடனேயே புத்தகமாகிவிடல்லை. அதற்காக அவர் பிரம்மப் பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. புயலிலே அகப்பட்ட தோணியாக அவரும் பல்வேறு பதிப்பகங்களுக்கிடையே அகப்பட்டு தத்தளிக்க நேர்ந்தது. புத்தகமாக்கும் பொருட்டு அவர் பட்ட சிரமங்களை தன்னிடம் சொன்னதாகச் சொல்லும் சி.மோகன், இவ்வாறு சொல்கிறார்:

‘புயலிலே ஒரு தோணி’யைப் புத்தகமாக்க அவர் பட்ட பாட்டை ஒருமுறை குறிப்பிட்டார் (தொடர்ந்து அவர் எழுதாமல் போனதற்கு இந்தப் பாடுகளும் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது). ‘புயலிலே ஒரு தோணி’ புத்தக வடிவம் பெற 10 வருடம் கையெழுத்துப் பிரதியாக அல்லாடியிருக்கிறது. சிங்காரம் பல முறை சென்னை சென்று பதிப்பகங்களின் படிகளை ஏறி இறங்கியிருக்கிறார். கடைசியாக, மலர் மன்னன் (14 இதழ் நடத்தியவர்) எடுத்துக்கொண்ட முயற்சிகளின் விளைவாகக் ‘கலைஞன் பதிப்பகம்’ 1972ல் நாவலை வெளியிட்டது. அச்சில் பக்கங்கள் நீண்டுகொண்டு போகவே பதிப்பகத்தார் நாவலின் இறுதியில் சில பகுதிகளை சர்வ அலட்சியமாக நீக்கிவிட்டிருக்கிறார்கள். பாண்டியன் கொரில்லா படையைக் காட்டில் கட்டமைப்பதும், கொரில்லா வீரர்களின் காட்டு வாழ்க்கையுமான பல பக்கங்கள் இந்தக் குரூரத்துக்குப் பலியானவை. தமிழ்ச் சூழலில் ஒரு படைப்பாளி இத்தகைய எவ்வளவோ இம்சைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

‘எல்லாம் யோசிக்கும் வேளையில்...’ எனும் தலைப்பில் ந.முருகேசபாண்டியன் சிங்காரத்துடன் கண்ட நேர்காணலிருந்து சிலவற்றை படிக்கும்போது ஒரு படைப்பாளி எவ்வாறு நிர்த்தாட்சண்யமாக புறக்கணிக்கப்படுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அங்கீகாரமும் ஆதரவும் இல்லாவிட்டால் படைப்பு ஏது? படைப்பாளி ஏது?
‘‘முதல் நாவலை எப்ப எழுதினீங்க?’’
‘‘1950ல் ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினேன். அதைப் பிரசுரம் செய்ய பல பிரசுரகர்த்தர்களைக் கேட்டேன். அதுக்காகவே மதுரைக்கும் சென்னைக்கும் பல தடவைகள் அலைஞ்சேன். யாரும் வெளியிட முன்வரலை. ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினேன். திரும்பி வந்தது. ஆனால் தேர்வுக் குழுவில இருந்த ஒருத்தர் தனிப்பட எனக்குத் கடிதமெழுதி நாவலைப் பாராட்டியிருந்தார். அவர் அந்த நாவலை என்னிடமிருந்து வாங்கி ரெண்டு மூணு வருஷமாப் பிரசுரிக்க முயன்று தோற்றுப் போனார். கடைசீல ‘கலைமகள்’ பரிசுப் போட்டிக்கு அவரே அனுப்பினார். அதுக்கு முதல் பரிசு கிடைச்சுது. நாவலும் 1959ல் பிரசுரமாச்சு.’’
‘‘புயலிலே ஒரு தோணி?’’
‘‘அது மட்டுமென்ன? அது பிரசுரம் ஆனதும் பெரிய கதை. அதை 1962 வாக்கில எழுதினேன். பல பிரசுரகர்த்தர்களிடம் கிடந்தது. ஒண்ணும் ஆகலை. கடைசீல சென்னை நண்பர் ஒருத்தரின் விடாத முயற்சியினால் கலைஞன் பதிப்பகம் 1972ல் வெளியிட்டது. அதுவும் வெட்டிச் சுருக்கி வெளியாச்சு.’’
‘‘நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததுங்களா?’’
‘‘ம்... ஒரு பாத்திரம் தன் மனதுக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றைக் குறிக்குள் போடலைங்கிறதுக்காக ‘கண்ணதாசன்’ பத்திரிகையில ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க என்பதுகூடப் புரியலை... குழப்பமாயிருக்குன்னு எழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு எல்லாத்தியும் வெளிப்படையாப் பெருவெட்டாகச் சொல்லணும். தமிழ்ல dash-க்கும் hypen-க்கும் வித்தியாசமே பலருக்குப் புரியல.’’
காபியை ரெண்டு கிளாஸ்ல ஊத்துங்க என்று அலுவலக உதவியாளரிடம் சொல்லிவிட்டு சற்று நேரம் கண்ணைமூடி யோசித்தவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.
‘‘அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும், எழுத்தாளன் சொல்லக்கூடிய உலகம் ரொம்பப் புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம் வாசிக்கிற யாருக்கும் தெளிவாப் புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர், வெளிநாட்டுச் சூழல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் - தமிழ் ஆளுகளுக்குப் புதுசு என்றாலும் - நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படலை.’’ அவரது குரலில் நம்பிக்கை தொனித்தாலும் முடிவில் வருத்தம் வெளிப்பட்டது.
‘‘குடிங்க’’ காபி கிளாஸை என்னை நோக்கி நகர்த்தினார். பணியாளிடமிருந்து சிகரெட்டை வாங்கி மேசை டிராயருக்குள் வைத்தார்.
கிளாஸை எடுத்து ஒரு மடக்குக் குடித்தேன். அவர் ஒரே மூச்சில் கிளாஸைக் காலி செய்தார்.
‘‘நீங்க தொடர்ந்து எழுதலியே...’’
‘‘அதெல்லாம் ஒரு காலத்து ஆர்வம். அப்ப உற்சாகப்படுத்தி முடுக்கிவிட ஆளுக யாருமில்லை. இப்ப அந்த மனநிலை இல்ல.. எழுதவும் முடியாது.’’
சி.மோகன் இந்நாவலைப் பற்றியும் சிங்காரத்தைப் பற்றியும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்ததாலேயே இன்று இந்நாவல் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. இருந்தும் பல தீவிரமான இலக்கிய வாசகர்கள் கூட இந்நாவலை இன்னும் படித்திருக்க மாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். ஏனெனில் வாசிப்பில் உள்ள பல்வேறு மனத் தடைகளை தாண்டிச் செல்லாமல் இந்நாவலை வாசிக்க முடியாது. எனவேதான் ஜெயமோகன் இந்நாவலைப் பற்றிச் சொல்லும்போது, “ஓர் இலக்கியப் படைப்பின் சிறப்பம்சம் எதுவோ அதுவே அதன் வாசிப்புக்குத் தடையாகவும் ஆகும் என்று படுகிறது. ஏனெனில், அது நமது பழகிப்போன வாசிப்பைத் தடைசெய்து புதிய மனநிலையை, புதிய வாசிப்பு முறையைக் கோருகிறது. ஓர் அசலான கலைப்படைப்புக்கு எப்போதும் நூதனத்தன்மை - இதற்கு முன்பு இதுபோல ஒன்று இல்லை என்ற உணர்வு இருக்கிறது என்பதை இதனுடன் சேர்த்து யோசிக்கலாம். சிங்காரத்தின் படைப்புகளில் நமக்குத் தடையாக அமையும் அம்சங்களையே அவற்றின் சிறப்புகளாகக் கொண்டு யோசிப்பது உதவிகரமானது” என்கிறார்.

தமிழின் பெருமிதம்:
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படைகள் ரஷ்யாவில் முன்னேறிக் கொண்டிருந்த காலம். ஜெனரல் தொமயூக்கி யாமஹித்தான் தலைமையில் சிங்கப்பூரை வென்ற ஜப்பானியத் துருப்புகள் மெடான் நகரில் நுழைவதில் கதை ஆரம்பிக்கிறது. இதே மெடான் நகர் கெர்க் ஸ்ட்ராட்டில் இதற்கு முன்னர் ஆங்கிலேயர்கள், போர்த்துக்கீசியர்கள், அரேபியர்கள், தமிழர்கள் காலடி வைத்திருக்கிறார்கள், இப்போது ஜப்பானியர்கள் என்று சொல்லும் சிங்காரம் மனித வாழ்க்கையின் நிலையாமையைச் சூசகமாகச் சொல்கிறார். மனிதர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் உலகம் அப்படியேதான் இருக்கிறது. மனித இயல்புகளும் அப்படியேதான் மாறாமல் தொடர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறார்.

மொஸ்கி ஸ்ட்ராட்டில் மொய்தீன் ராவுத்தர் கடையில் கிளர்க்காக பணிபுரியும் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதையைச் சொல்கிறார் சிங்காரம். வாயில் தீயொளி வீசும் சிகரெட்டுடன் நாயகன் பாண்டியன் வரும் ஆரம்பம், நம்மூர் திரைக் கதாநாயகர்கள் அறிமுகமாவதை ஒத்திருக்கிறது. ஜப்பானிய வீரர்கள் வெற்றிக் களிப்பில் கடைகளைச் சூறையாடுகிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். சிலர், பெண்களை நடு வீதியில் மானபங்கப் படுத்துகிறார்கள். அக்காட்சியை வர்ணிக்க, ”பகலவன் பார்த்திருந்தான். நிலமகள் சுமந்திருந்தாள். ஊரார் உற்று நோக்கிக் களித்து நின்றனர்” என்ற கவித்துவமிக்க வரிகளைக் கையாள்கிறார். விமானங்கள் குண்டுகளை வீசுகின்றன. துப்பாக்கிகள் வெடிக்கும் ஓசை எங்கும் நிரம்புகிறது. இவ்வாறு ஹாலிவுட் படத்தின் ஆரம்பக் காட்சிகள் போல் நாவலின் ஆரம்பம் நடந்தேறுகிறது. அரசாங்க உத்தரவின்படி, கொள்ளை அடித்தவர்களின் தலையைக் கொய்து, எச்சரிக்கும் விதமாக, நடுவீதியில் வைக்கிறார்கள். அந்த ஐந்து வீரர்களின் தலையை ஒரு வீரன் சீப்பைக்கொண்டு சிரத்தையாக சீவிவிடும் காட்சியை சித்தரித்துப் போரின் கோர தாண்டவத்தைப் பகடி செய்கிறார்.

இக்காட்சிகளினூடே பாண்டியன் அங்குமிங்கும் அலைந்தபடி இருக்கிறான். கைதிகளைக் கொண்டு அர்னேமியா ஆற்றில் மணல் அள்ளும்போது கைதிகளின் தலைவனான டில்டனுக்கு உணவு, காபி, சிகரெட் கொடுத்து உதவுவதின் மூலம் பாண்டியனின் உள்ளத்தை நாம் அறியமுடிகிறது. நிலைமை ஓரளவு சீர் பட்டதும் பாண்டியன் தன் நண்பர்களுடன் சிற்றுண்டியில் சாப்பிடுகிறான். வீர இளைஞர்கள் படை ஒன்றை நிறுவ வேண்டும் என அவர்கள் ஆவேசமாகப் பேசிக்கொள்கிறார்கள். சங்கத் தமிழ் பாட்டுக்கள் பல அவர்கள் உரையாடலின் பிரதான அம்சமாக இருக்கிறது. போருக்குப் பின் வியபாரம் சீரழிந்துவிட்டதால் பலரும் பினாங் சென்று வியாபாரம் செய்ய நிச்சயிக்கிறார்கள். பாண்டியனும் செல்கிறான்.

அதன் பிறகு ஆயிஷா என்ற வேசையில் ஆரம்பித்துப் பயணிக்கும் பாண்டியனின் நினைவுகள் சிறப்பான புனைவு என்றால் அதைத் தொடர்ந்து வரும் பக்கங்களில் பினாங்கு செல்லும் கப்பலில், ஆண்டியப்ப பிள்ளை வாயிலாகச் சொல்லப்படும் கதைகளும் பின்னர் வரும் புயலும் புனைவின் உச்சமாகச் சொல்லலாம். பாண்டியனின் நினைவுகளினூடே இளங்கோ அடிகளைக் கிண்டல் செய்யும்விதமாக அமையும் காட்சிகள், முதன் முதலாக வாசிக்கும் வாசகனைத் தூக்கி வெளியே வீசிவிடும். ஆனால் கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் ஒப்பிட்டு அவர் செய்யும் கிண்டலும் கேலியும் நுட்பமானவை. ஆண்டியப்ப பிள்ளையின் கதை வாயிலாக மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும், பணத்திற்காக நாடுவிட்டு நாடு வந்து படும் இன்னல்கள் மற்றும் அவலங்களைச் சொல்லி, மனிதனும் வாழ்க்கை எனும் கடலில் தத்தளிக்கும் ஒரு தோணிதான் என்று குறிப்பாக உணர்த்துகிறார் சிங்காரம்.

கப்பலில் பயணிக்கும் பாண்டியன் தன் பால்யகால நினைவுகளில் பிரவேசிக்கிறான். தன் ஊரான மதுரை பற்றிய நினைவுகளில் மூழ்குகிறான். மதுரைக் காட்சிகளை மிகத்துல்லியமாக வடித்து, பழைய மதுரை பற்றிய சித்திரத்தை அற்புதமாக வரைந்திருக்கிறார். அவர் சொல்லிச் செல்லும் நடையழகும் பாங்கும், நம் மன ஏட்டில் வரைந்த ஓவியமாக துலக்கம் பெறுகின்றன. கடலலைகள் கப்பலில் வந்து மோதிமோதிச் செல்வதுபோல் பாண்டியனின் நினைவுகளும் வந்துவந்து விலகிச் செல்கின்றன. அவனது நினைவுகளையும், கப்பலின் நிலையையும் மாற்றி மாற்றிக் காண்பித்து, தேர்ந்த கேமராக் காட்சியின் கோணமாக நம் மனதில் பதிக்கிறார் சிங்காரம். புயலில் அகப்பட்டு கப்பல் தத்தளிக்கும் காட்சியைத் தத்ரூபமாக கண்முன் கொண்டுவரும்படியாக வர்ணனைகள் உள்ளன. புயல் நின்ற பிறகு பெரும் அமைதி நிலவுகிறது. அதைச் சொல்வதற்காக சிங்காரம் பயன்படுத்தும் வார்தைகளும், வாக்கியங்களும் பெரும் சூன்யத்தை, நம் மனதில் வீசிச் செல்கிறது. “கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்ததென்று கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ, முடிந்தபோதோ, முடிந்து வெகுநேரம் வரையிலோ யாரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கடிகாரங்களும் நின்று போயிருந்தன.”

புயலிலிருந்து உயிர்ச்சேதம் ஏதுமின்றி பொருட்சேதத்துடன் கரை சேர்கிறார்கள். பாண்டியன் பினாங்கில் பலரையும் சந்திக்கிறான். உறவினர்கள், நண்பர்கள் கொடுத்த செய்தியை அங்குள்ளவர்களுக்குப் பகிர்கிறான். நண்பர்களுடன் ஞான்யாங் விடுதியில் சந்தித்து, வழக்கம்போல் சங்கத்தமிழ்ப் பாடல்களைப் பற்றி இலக்கிய விசாரம் செய்கிறான். மனிதனைப் போலவே நாட்டுக்கும் தோற்றம், வளர்ச்சி, சரிவு, அழிவு இருக்கிறது என்பது பற்றி விவாதிக்கிறார்கள். அந்த அத்தியாத்தை சிங்காரம் ஓரங்க நாடக பாணியில் அமைத்திருக்கிறார். அவருக்கு அப்போதே அப்படி செய்யத்தோன்றியது குறித்து நம் மனதில் வியப்பு மேலிடுகிறது.

போர் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருக்கிறது. தமிழர்கள் பலரும் இந்திய சுதந்திர சங்கத்தில் இணைந்து உற்சாகமாகப் போர்ப் பயிற்சி மேற்கொள்கிறார்கள். பாண்டியனும் நீசூன் ராணுவ அதிகாரிகள் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெறுகிறான். அங்கு தேறிய அவன் கொரில்லா படை ஒன்றின் செகண்ட் லெப்டிணன்டாகிறான். ராணுவத்திற்கு உணவுப் பொருள் கொண்டுவருவதில் சில தில்லுமுல்லு நடக்கிறது. அது பிரச்சினையாகி கொலையில் முடிவே, பல்வேறு அணிகள் தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. பாண்டியன் ஜராங் முகாமின் புதிய கமாண்டொ ஆகிறான். நிலவரம் அறிந்து அங்கு வரும் நேதாஜி பாண்டியனின் பதவியைப் பறித்து ராணுவ கோர்ட் விசாரணைக்கு உத்தரவிடுகிறார். ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தின் படக்காட்சிபோல் இந்தப் பக்கங்கள் நம் மனதில் விரிகின்றன.

பின்னர் பாண்டியன் விடுதலை செய்யப்படுகிறான். பர்மா விடுதலைச் சேனைத் தலைவர் அவுங்சான் நேதாஜிக்கு எழுதிய கடிதமொன்று, ஜெனரல் சிவநாத்ராயிடமிருந்து காணாமல் போகிறது. முக்கிய கடிதமான அதைக் கொணரும் பணி பாண்டியனுக்கு வழங்கப்படுகிறது. அதைக் கண்டுபிடிக்க அவன் பேரழகியான விலைமாது விலாசினியைச் சந்திக்கிறான். அவள் அறிமுகமாகும் அத்தியாத்தில் அவளின் மனமொழியை அனாசயமான நடையில் எழுதியிருக்கிறார் சிங்காரம். கடிதம் மேஜர் சடாவோ யாமசாக்கியிடம் அகப்பட்டு விட்டதாகச் சொல்கிறாள் விலாசினி. தற்போது மெடானில் இருக்கும் யாமசாக்கியிடமிருந்து கடிதத்தை மீட்க மூவர் படையை அங்கு அனுப்புகிறார் நேதாஜி. பாண்டியன் தலைமை வகித்து, மெடான் சென்று யாமசாக்கியைக் கொன்று கடிதத்தைக் கொணர்கிறான். இடையிடையே ஊடாடும் போர்க் காட்சிகளிடையே பாண்டியன் நிகழ்த்தும் சாகசங்கள் இந்நாவலுக்கு புதியதோர் பொலிவைத் தருபவை. அது நம் மனங்களி்ல் நிகழ்த்தும் பரவசத் தருணங்கள் நாவல் வாசிப்பில் நமக்குப் புதியதோர் அனுபவம். அதற்காக இதை நாம் வெறும் சாகச நாவல் என்று வகைப்படுத்திவிட முடியாது. சொல்லப்போனால், மனிதன் வாழ்க்கையோடு கொள்ளும் போராட்டம் சாகசம் அன்றி வேறென்ன?

பணி முடிந்து பாண்டியன் லீவில் செல்கிறான். போர்ச் சூழல்கள் மாற்றமடைகின்றன. ஹிரோஷிமா, நாகசாகியில் குண்டு மழை பொழிகிறது. ஜப்பான் அடிபணிகிறது. நேதாஜி விமான விபத்தொன்றில் மரணமடைகிறார். பினாங்கில் ஹவில்தார் சுந்தரம் பணத்துக்காக எல்லோரையும் காட்டிக்கொடுப்பதாக பாண்டியனுக்குத் தகவல் வருகிறது. கோபம் கொண்ட அவன் பினாங் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து அவனைத் தீர்த்துக்கட்டுகிறான். பின் பேங்காங் பயணிக்கிறான். அங்கே தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓரியண்டல் டிரேடிங் கம்பனி ஒன்றை ஆரம்பிக்கிறான். பணம் கொழிக்கிறது. உல்லாசத்திலும் கேளிக்கையிலும் மூழ்கித் திளைக்கிறான். நுட்பமான சித்தரிப்புகள் கொண்ட அற்புதமான பகுதிகள் இவை. மொழியும், நடையும், கற்பனையும் செறிவுடன் கூடிய இப்பகுதிகள், சிங்காரத்தின் படைப்புத் திறனின் சிகரம் என்று போற்றத்தக்க வகையில் நேர்த்தியாக அமைந்துவிட்டிருக்கின்றன.

பிறகு பாண்டியன் பேங்காங்கிலிருந்து பினாங் செல்கிறான். அங்கிருந்து மெடான் செல்லும் அவன் யோசனையை நண்பர்கள் எதிர்க்கிறார்கள். அங்கே அவன் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார்கள். பாண்டியன் அதைப் பொருட்படுத்தாமல் அங்கே செல்கிறான். மெடான் நகரம் பெரும் மாற்றமடைந்திருக்கிறது. டச்சுக்காரர்கள் தற்போது மெடானை ஆக்ரமித்திருக்கிறார்கள். எல்லாம் எதற்காக? இறுதியில் மிஞ்சுவது என்ன? என்ற தத்துவ விசாரத்தில் இறங்குகிறான். நண்பர்களிடம் கற்பனையே உலகை ஆள்கிறது என்று விவாதிக்கிறான். எல்லோருக்கும் பற்றி படர ஏதாவதொன்று வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று, எனக்கு யுத்தம். என்று சொல்லும் அவன் காடுகளில் மறைந்து டச்சுக்காரர்களுக்கு எதிராகக் கொரில்லா தாக்குதல் நடத்துகிறான். டச்சுக்காரர்களுக்குத் தலைவலியாக இருக்கிறான். அவன் உருவம் மக்களின் மத்தியில் விஸ்வரூபம் எடுக்கிறது. ஒரு கட்டத்தில் மறைவு வாழ்க்கை அவனுக்குக் கசக்கிறது. சொந்த ஊர் ஞாபகங்கள் எழுகின்றன. நண்பர்கள் உதவியுடன் ஊர் திரும்ப முயற்சிக்கும் போது சுடப்பட்டு மரணமடைகிறான்.

மரணத்தருவாயில் இருக்கும் பாண்டியனின் நினைவுகள், வேகமாக ஓட்டப்படும் படச்சுருளைப் போல், பால்யத்திலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக ஓடுகின்றன. கடைசியில் அவனில் வந்து நிற்கிறது. பிறகு அதுவும் மறைந்து போகிறது. தன் எழுத்தின் ஆற்றலால் அக்காட்சிகளை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் சிங்காரம். அவர் கற்பனையின் உச்சம் அது என்றால் மிகையாகாது.
மூச்சுத் திணறியது. நெஞ்சுத் தொண்டை உருண்டுருண்டு பாதாள வெற்றுவெளி பாழ்வெளி காயம் குருதிவெளி பாழ்வெளி பினாங் ரஜூலா நாகப்பட்டினம் மதுரை சின்னமங்கலம் சந்தை வேப்பண்ணெய் மருக்கொழுந்து கடகடவண்டி ஆளுயரப் பொரி உருண்டைக் கூடை புழுதி வட்டக் குடுமி பழுக்காக் கம்பி வேட்டி சாக்கு புகையிலை ‘ஓடியா ராசா ஓடியா போனா வராது பொழுது விழுந்தாச் சிக்காது’ அம்மன் கோயில் பொட்டல் பால் நிலவு சடுகுடு ‘நான்டா ஙொப்பன்டா நல்ல தம்பி பேரன்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாரண்டா’ மதுரை இம்பீரியல் சினிமா தெற்கு வெளிவீதி வியாபாரி வீடு மஞ்சனக்காரத் தெரு குயவர் பாளையம் ஒண்ணாம் நம்பர் சந்து ‘ஞே இவட நோக்கே’ மெடான் மொஸ்கி ஸ்ட்ராட் பிலிதோன் ஸ்ட்ராட் அயிஷா தங்கத் தந்தப் பளிங்குப் பட்டு ‘சாயா பூஞா சிந்தா சாயா பூஞா ராஜா’ யுத்தம் கொள்ளை ஐந்து தலைகள் அர்னேமியா ஆறு ரோல்ஸ் லாயர் டில்டன் தொங்கான் புயல் பினாங் மாணிக்கம் நான்யாங் ஹோட்டல் நீசூன் கோத்தா பாலிங் ஜாராங் பலவேசமுத்து ரக்பீர்லால் சிறை கலிக்குஸூமான் விலாசினி யாமசாக்கி நேதாஜி ‘விதித்த கடமையை வழுவின்றி நிறைவேற்றினாய்’ பினாங் நடராஜன் சூலியா தெரு சுந்தரம் ‘அண்ணே காப்பாத்துங்கண்ணே’ பேங்காக் ரேசன் தீர்க்கதரிசி மெடான் அயிஷா தங்கையா காடு சண்டை கங்சார் ஊர் ஊர் ஊர் பதக்கம் கெர்க் ஸ்ட்ராட் குண்டு டில்டன் ‘ஆ என்ன விபரீதமான சந்திப்பு’ நெஞ்சு தொண்டை மூச்சு நெஞ்சு தொண்டை மூச்சு நான் நான் நான் புல் மரம் புள் விலங்கு நிலம் நீர் நெருப்பு வாளி வான் அண்ட பிண்ட சராசரங்கள் நான் நான் நான் நானே…
சி.மோகன் இதைப்பற்றிச் சொல்லும்போது, “துண்டு துண்டான காட்சிப் படிமங்கள் துண்டு துண்டான வார்த்தைகளில் அடுக்கப்பட்டிருக்கும் விதம் அலாதியானது. மொழியின் விந்தை பிரமிப்பூட்டுகிறது. வெளியீட்டில் பூரணத்துவத்தை அடைய, அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் படைப்பு மொழி இவருடையது” என்கிறார்.

முடிவுரை:
நாவலை வாசித்து முடித்த தருணத்தில், புயலுக்குப் பின் உண்டாகும் அமைதி நம்மில் நிலவுகிறது. நம் மனக் கடிகாரமும் சில கணங்களுக்கு நின்று விடுகிறது. காலத்தின் எல்லையற்ற வெளியில் பயணித்ததான உணர்வு, நாவலின் வாசிப்பில் நமக்குக் கிடைக்கும் பேரனுபவம். நாவலின் கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பது இந்நாவலின் பெரும் சிறப்பு. நாவலின் கதைக் களமும், மொழி நடையும் வேறு எந்த தமிழ் நாவலிலும் நமக்கு வாசிக்கக் கிடைக்காதவை. இந்நாவலின் வசீகரம் என்றும் நம் நெஞ்சைவிட்டு நீங்காது நிலைத்திருக்கும். புயலிலே ஒரு தோணி, தமிழன் என்றென்றும் பெருமிதம் கொள்ளும்படியான படைப்பு, தமிழின் தலைசிறந்த படைப்பு என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...