September 3, 2015

எனக்குப் பிடித்த செகாவ் கதைகள்

செகாவின் கதைகள் நுட்பமும், அழகும், ஆழமும் கொண்டவை. அவர் கதைகளை வாசித்து முடித்ததும் நாம் ஒருபோதும் முன்பிருந்த மனிதராக இருக்க முடியாது. நம்முடைய அகத்தே ஒரு மாபெரும் மாறுதல் நிகழ்ந்துவிடுகிறது. அதுவே செகாவ் கதைகளின் சிறப்பம்சம். சமீபத்தில் நான் எழுதிய வார்டு நெ.6 செகாவின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று. அதைத் தவிரவும் எனக்குப் பிடித்த செகாவின் கதைகள் சிலவற்றுக்கு நான் முன்னர் எழுதிய பதிவுகளையும், கதைகளையும் தொகுத்துத் தருகிறேன். இவற்றை வாசிக்கும்போது நாம் செகாவை மட்டும் அறிவதில்லை நம்மை நாம் அறிந்தவர்களாவோம்.

1. பரிசுச்சீட்டு

ருஷ்யச் சிறுகதை இலக்கியத்தின் மேதை என்று போற்றப்படுபவர் ஆண்டன் பாவ்லொவிச் செகாவ். அவர் எழுதிய பரிசுச்சீட்டு என்ற கதை மனித மனத்தின் ஊசலாட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்துவதாக உள்ளது. அது நடைமுறை வாழ்க்கை என்றாலும் சரி வெறும் கற்பனை என்றாலும் சரி. இரண்டிலுமே மனிதர்கள் ஒன்று போலத்தான் சிந்திக்கிறார்கள் என்பதை சுவையாக சித்தரிக்கிறார் அவர்.

மனித வாழ்க்கையில் எதார்த்தத்தைவிட கற்பனை அழகாகவும், விருமபத்தக்கதாகவும், கொண்டாடத்தக்கதாயும் இருக்கிறது. கையில் கிடைக்கும் சிறு துருப்புச் சீட்டும் நம் கற்பனையை சிறகடித்துப் பறக்க வைக்கிறது. இருப்பின் பாரம் இக் கற்பனைகளின் மூலமே லகுவாகிறது. வாழ்க்கைப் பாதையில் நம்மைச் சற்றே ஆசுவாசப்படுத்துவன இத்தகைய கற்பனைகளே.

இவான் டிமிட்ரிச் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை நடத்தும் நடுத்தர வர்கத்தினன். அவன் மனைவி பரிசுச்சீட்டு ஒன்று வாங்குகிறாள். அதன் முடிவை செய்தித்தாளில் பார்க்கிறான். வரிசை எண்கள் சரியாகப் பொருந்துகின்றன. அடுத்த இரு எண்களைப் பார்ப்பதற்குள் அவன் கற்பனை வானில் பறக்கிறான். பரிசு விழுந்தால் என்னென்ன செய்யலாம் என்று கனவு காண்கிறான். அவன் கற்பனை அவனுக்கு இதத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. அது அவள் மனைவி வாங்கிய பரிசுச்சீட்டு என்பது திடீரென நினைவுக்கு வருகிறது. பரிசு விழுந்தால், தான் மனைவியின் கையை எதிர்பார்த்து இருக்கவேண்டும் என்பது புரிய அவன் சந்தோஷம் வற்றிவிடுகிறது. எண்களை சரிபார்க்கும்போது கடைசி எண்கள் மாறியிருக்கின்றன. பரிசு இல்லை என்பதை அறிந்தவுடன் அவன் கனவிலிருந்து மீள்கிறான். எதார்த்த வாழ்க்கை அவனை அவன் மனைவியின் மீது கோபம் கொள்ளவைக்கிறது.

ஒன்று நமக்குக் கிடைக்கிறது என்றால் அதனால் கிடைக்கும் இன்பங்களை நினைத்து நம் மனம் மகிழ்கிறது. ஆனால் அதுவே பிறருக்குக் கிடைக்கிறது எனும்போது அது அவர்களுக்கு கிடைக்காமலே போகவேண்டும் என்று நம் மனம் விரும்புகிறது. இவான் டிமிட்ரிச், பரிசு வி்ழவில்லை என்பதற்காக மட்டும் தன் மனைவியின் மீது எரிந்து விழவில்லை. பரிசு கிடைத்திருந்தாலும் அவன் அதைத்தான் செய்திருப்பான். ஏனெனில் அந்த பரிசால் அவன் பெறும் சகாயம் சொற்பமானதாகவே இருக்கும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். அதுவே அவனை அவள் மனைவி மீது கோபமும் எரிச்சலும் அடையச் செய்கிறது.

இதன் காரணமாகவே இந்தக் கதையின் முடிவு நாம் வேறுவிதமாக சிந்திக்கவும் இடம் தருகிறது. பரிசு விழுந்ததா இல்லையா என்பதைச் சரி பார்ப்பவன் அவன்தான். எனவே அவன் அந்தப் பரிசால் பெறும் ஆதாயத்தை எண்ணி உண்மையிலேயே பரிசு விழுந்ததை மறைக்கிறான் என்று எடுத்துக்கொள்ளும் சாத்தியத்தையும் இந்தக் கதையில் பொதிந்திருக்கிறார் ஆண்டன் செகாவ்.


2. வான்கா

செகாவின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று வான்கா. ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவனின் துயரத்தையும் ஏக்கத்தையும் நம் மனம் உருகுமாறு அற்புதமாக புனையப்பட்ட கதை இது. இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அசாதாரணமானது. கதையை வாசித்து முடித்ததும் நம் மனம் கொள்ளும் துயரம், அந்த சிறுவன் மீது நாம் கொள்ளும் பரிவு, வார்த்தைகளில் சொல்லமுடியாதது.

புதைமிதி தாயாரிக்கும் அல்யாஹினிடம் வேலை பழகுவதற்காக விடப்படுகிறான் வான்கா. அங்கே அவன் முதலாளியாலும் சக தொழிலாளர்களாலும் கொடுமைப் படுத்தப்படுகிறான். அங்கிருந்து தப்பித்தால் போதும் என்றிருக்கிறது அவனுக்கு. எனவே தன்னை அங்கிருந்து கூட்டிச் செல்லுமாறு தன் தாத்தாவுக்குக் கடிதம் எழுதுகிறான்.

கதை சாதாரணமானதுதான். ஆனால் செகாவ் என்ற படைப்பாளி அதில் காட்டும் நுட்பங்களும், கதைசொல்லும் திறனும் நம்மை பிரமிக்கச் செய்கிறது. சிறுகதை என்பது ஒரு சிறு நிகழ்வுதான். ஆனால் அதில் மூன்று காலங்களையும் கொண்டுவந்து இக்கதைக்கு மெருகேற்றுகிறார் செகாவ். கதை வான்கா கடிதம் எழுதுவதில் ஆரம்பிக்கிறது. “எனக்கு அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை; உன்னை தவிர யாருமே இல்லை எனக்கு.” என்று ஆரம்பிக்கும் கடிதம் வான்காவின் துயரத்தை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. கடிதம் எழுதும் போது, அவனது தாத்தா என்ன செய்துகொண்டிருப்பார் என்று அவரைப்பற்றிய நினைவுகள் அவன் மனதில் ஓடுகின்றன. அவரோடு சேர்ந்து கிறிஸ்மஸ் மரம் நடும் கடந்த கால நினைவுகள் அவனுள் எழுகிறது.

தான் படும் இன்னல்களை விவரித்து எழுதுகிறான். தாத்தா தன்னை திருப்பி அழைத்துச் செல்லாவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் அவனுள் எழுகிறது. எனவே அவன், தன் தாத்தாவை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்வேன் என்று எழுதுகிறான். ”நான் பெரியவனானதும் உன்னைக் கருத்துடன் கவனித்துக் கொள்வேன். யாரும் உன்னைத் துன்புறுத்த விடமாட்டேன். நீ இறந்த பின் உன்னுடைய ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்காகப் பிரார்த்திக்கிறேனே அதே போல செய்வேன் உனக்காகவும்.” தன் தாத்தா எப்படியாவது தன்னை கூட்டிச் சென்றுவிட்டால் போதும் என்ற அவனது ஏக்கத்தை இதன் மூலம் செகாவ் நம் மனதில் ஆழப் பதிக்கிறார்.

கடிதத்தை எழுதிமுடித்து,

கன்ஸ்தந்தீன் மக்காடிச். கிராமம்.

என்று முகவரியை எழுதுகிறான். பிறகு அருகில் இருக்கும் தாபால் பெட்டியில் கடிதத்தைச் சேர்ப்பிக்கிறான். அவன் மனம் அமைதியடைகிறது. தன் தாத்தா தன்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்படுகிறது. அவர், தான் எழுதிய கடிதத்தை சமையல்காரிக்குப் படித்துக் காண்பிப்பதாய் அவன் மனதில் ஓடும் சிந்தனைகள் அவனைத் தட்டிக்கொடுத்து தூங்கவைக்கின்றன.

வான்காவின் ஏக்கமும் துயரமும் கதை முழுதும் விரவிக்கிடக்கிறது. அவனை எப்படியாவது அங்கிருந்து விடுவித்து அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அநதக் கடிதத்தில் முகவரி இல்லை என்பதையும், அநதக் கடிதம் அவன் தாத்தாவுக்குப் போய்ச்சேராது என்பதையும் நாம் அறியும்போது நம் மனதில் ஏற்படும் வலியும், அந்த சிறுவன் மீது நாம் கொள்ளும் அனுதாபமும் பன்மடங்காகப் பெருகுகிறது. அதுவே செகாவின் இந்தக் கதையை உலகப் புகழ் பெற்றதாகச் செய்கிறது.


3. பந்தயம்

வாழ்க்கையில் பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு முடிவுகளை நாம் எடுக்கிறோம். ஆனால் அதை நிறைவேற்றும் தருணத்தில், ஆதாயம் கருதியோ இல்லை அந்த ஆதாயத்தை மறுதலித்தோ நாம் எடுத்த முடிவை மாற்றிக்கொள்கிறோம். இதற்குக் காரணம் என்ன? நாம் முடிவு எடுத்ததற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் இடையேயான கால இடைவெளி நம்மை மாற்றிவிடுகிறது. எனவே நாம் முன்னரே எடுத்திருந்த முடிவை செயல்படுத்தாமல் விடுகிறோம். எனவே எண்ணத்துக்கும் அதை செயல்படுத்துவதற்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி சதா இருந்துகொண்டே இருக்கிறது. அது காலத்தின் இடைவெளியாயும் இருக்கலாம் அன்றி எண்ணத்தின் இடைவெளியாகவும் இருக்கலாம்.

செகாவின் பந்தயம் சிறுகதையில் வங்கி அதிபருக்கும் வக்கீலுக்கும் இடையே நடக்கும் பந்தயத்தில் இருவருக்கும் இதுவே நேர்கிறது. மரண தண்டனை கொடியதா இல்லை ஆயுள் தண்டனை கொடியதா என்ற விவாதம் இருவருக்குமிடையே வருகிறது. அப்போது வங்கி அதிபர் ஆயுள் தண்டனையே கொடியது என்கிறார். வக்கீலோ சாவதைவிட எப்படியும் உயிரோடிருக்கம் ஆயுள் தண்டனை மேலானது என்கிறார். விவாதம் பந்தயமாகிறது. வங்கி அதிபர் 2 மில்லியன் ரூபிள் பந்தயம் வைக்கிறார். வக்கீல் அதற்காக 15 வருடம் தனிமைச் சிறையில் கழிக்க வேண்டும் என்கிறார்.

வங்கி அதிபர் தன் பணத்தையும் வக்கீல் தன் சுதந்திரத்தையம் பந்தயமாக வைக்கிறார்கள். வக்கீல் தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். வெளி உலகத்தோடு அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது.

கடைசியில் என்ன ஆகிறது என்பதை கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தக் கதையை எதிர்பார்ப்புடன் பரபரப்புடன்தான் நாம் வாசிக்கிறோம். இறுதியில் என்ன ஆகிறது என்பதை அறிய நம் மனம் பறக்கிறது. ஒரு சிறுகதையில் இத்தகைய விருவிருப்பையும் பரபரப்பையும் கொண்டுவருவது மிகவும் சிரமமான காரியம். ஆனால் செகாவ் எனும் மேதை அதை அற்புதமாகவும் அனாயசமாகவும் செய்திருக்கிறார். அவர் கதைகளில் ஒளிரும் முத்துக்களில் இதுவும் ஒன்று.


4. சொல்லின் செல்வன்

செகாவின் இக்கதை இறந்துவிட்ட பேராசிரியர் ஒருவரின் இறுதிச்சடங்கின் போது நடக்கும் நிகழ்ச்சியை நகைச்சுவையாகச் சொல்கிறது. இறந்து போனவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் மாரியாதை கருதி அவர் இப்படி அப்படி என்று புகழ்ந்து பேசுவது சமூகத்தில் ஒரு மரபாகிப் போன விசயம். அதை அடிப்படையாக வைத்து, அதனூடே நகைச்சுவை மூலாம் பூசி இக்கதையைப் படைத்துள்ளார். படியுங்கள் கட்டாயம் சிரிப்பீர்கள்.

ஆனால் வெறும் நகைச்சுவைக்காக மட்டும் செகாவ் இக்கதையைச் சொல்லவில்லை. அந்த நகைச்சுவைக்குப் பின்னே இருக்கும் சமூகத்தின் மாற்று முகத்தைக் காட்டுவதே அவரது நோக்கம். இறந்து போனவனின் மாற்று முகத்தை அல்ல என்பது நாம் நுட்பமாகக் கவனிக்க வேண்டிய விசயம். மேலும் சமூகத்திற்கு தனி ஒரு மனிதனின் இழப்பு என்பது பொருட்படுத்த தக்கதல்ல என்பதையும் நமக்கு அறிவுறுத்துகிறார்.

அதுமட்டுமல்ல தன்னைப் பற்றிய சில தவறான அபிப்ராயங்கள் சிதைந்து போவதைக் கூட மனிதர்கள், சில சமயம், விரும்புவதில்லை. அது இறந்து போனவர்களுக்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் உயிரோடு இருப்பவர்களுக்கு அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது அவர்கள் அடையும் ஆதாயத்திற்கு தடைகளாகிவிடும் என அஞ்சுகிறார்கள் என்பதைச் செகாவ் இக்கதையின் அடிநாதமாகச் சுட்டிக்காட்டுகிறார்.


5. நாயுடன் வந்த பெண்

செகாவின் மற்றொரு புகழ்பெற்ற கதை இது. வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையும் இருவரிடையே ஏற்படும் மன வேற்றுமைகள் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பதைச் செகாவ் இக்கதையில் படம் பிடித்துக்காட்டுகிறார்.

யால்ட்டா நகரில் சந்திக்கும் குரோவ் மற்றும் அன்னா இருவருக்குமிடையே நட்பு ஏற்படுகிறது. இருவருமே தத்தம் குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி அடைந்தவர்கள். குரோவிற்கு தன் மனைவி மீதும், அன்னாவிற்கு தன் கணவன் மீதும் ஏற்படும் அதிருப்தி இருவரையும் இணைக்கிறது. இருவரும் வெவ்வேறு நகரத்தில் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து வருவது ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சலித்துவிடுகிறது. எனவே ஏதாவது செய்யவேண்டும் என்று யோசிக்கிறார்கள்.

இருவரும் சேர்ந்து என்ன செய்யப்போகிறார்கள்?

செகாவ் அதை நம் ஊகத்திற்கே விட்டுவிடுகிறார். இக்கதையின் சிறப்பம்சமே, அவர் கதையின் முடிவை நம்மிடமே விட்டுவிடுகிறார் என்பதுதான்.

அவரவர் மனோபாவங்களுக்கு ஏற்ப முடிவை கற்பனை செய்துகொள்ளலாம். மனிதர்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை. அவர்கள் எடுக்கும் முடிவுகளும் பல்வேறு தரப்பட்டவையாகவே இருக்கும். ஆகவே இத்தகைய சூழ்நிலையில் சொல்லப்படும் ஏதாவது ஒரு முடிவு உவப்பானதாக இருக்காது. எனவேதான் முடிவை வாசகரிடத்தில் விட்டுவிடுகிறார் செகாவ். நம் விருப்பம்போல் முடிவை நாம் கற்பனை செய்துகொள்ளலாம். கதையின் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.


6. பச்சோந்தி

அன்றும் சரி இன்றும் சரி அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கே அனைவரும் பணிந்து போகிறார்கள். அதுவும் குறிப்பாக அரசாங்க அதிகாரிகள். மிகக் குறிப்பாக போலீஸ்காரர்கள். பொது மக்களின் ஊழியர்களாகச் செயல்படவேண்டியவர்கள் அரசாங்கத்தின் கைப்பாவையாகப் பணியாற்றுவது ஜனாநாயக நாட்டில் மட்டுமல்ல, முதலாளித்துவ, கம்யூனிச நாடுகளிலும் இருப்பது கண்கூடு. தம் வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகவே சராசரி ஜனங்கள் இதை எதிர்கொண்டு வாழ்கிறார்கள்.

இந்தச் சிக்கலை, கருத்தை வலியுறுத்துவதாக அமைந்த கதைதான் செகாவின் பச்சோந்தி. இந்த ஆழமான கருத்தை, சிக்கலான கருத்தை, போகிற போக்கில் அற்புதமாகச் சொல்லிச் செல்கிறார் செகாவ். மிக எளிமையான கதை. ஆனால் அது நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. ஒரு சிறு சம்பவத்தை வைத்து தான் சொல்லவந்த கருத்தை இலாவகமாக, அதே சமயம் அழுத்தமாக இந்தக் கதையில் சித்தரிக்கிறார் செகாவ் என்ற படைப்பாளி.

நாய் ஒருவரைக் கடித்துவிடுகிறது. அவ்வழியாக வரும் இன்ஸ்பெக்டர், அந்த நாய்க்கு உரியவரை தண்டிக்கவேண்டும் என்கிறார். ஆனால் போலீஸ்காரர் ஒருவர் அந்த நாய் ஜெனரலுடையது என்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் மாறுகிறார். நாயால் கடிபட்டவனைக் குற்றம் சாட்டுகிறார். மீண்டும் நாய் ஜெனரலுடையது அல்ல எனும்போது, நாயின் சொந்தக்காரனை விடக்கூடாது என்கிறார். இப்படியாக அவர் மூன்று நான்கு முறை தன் கருத்தை மாற்றுகிறார். கடைசியில் நாய் ஜெனரலின் சகோதரருடையது என்றறிருந்து கடிபட்டவனை எச்சரித்து அனுப்புகிறார்.

ஒரு சிறிய நாய்க்கடிக்கே இந்த பாடு என்றால் இன்னும் பல பெரிய விசயங்களுக்கு என்னென்ன நடக்கும் என்பதை செகாவ் நம் ஊகத்திற்கு விடுகிறார். அந்த ஊகம் நம் சிந்தனையை விரிக்கிறது. அதுவே ஒரு படைப்பு செம்மையானது என்பதற்கான சான்றாகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...