சுந்தர ராமசாமியின் இறுதிக்கால நாட்குறிப்புகள்: மணத்தைப் பிடித்துக்கொள்வது

சுந்தர ராமசாமி அவர்கள் 14.10.2005-ல் மறைந்துபோனது நாமனைவரும் அறிந்ததே. அவர் இறுதி நாட்களில் எழுதிய சில குறிப்புகள் அவரது “மனக்குகை ஓவியங்கள்” (காலச்சுவடு பதிப்பகம்) என்ற கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

இக்குறிப்புகளைப் படிக்கும் தருணத்தில் மனதில் சொல்லமுடியாத சோகம் வந்து கவிகிறது. மிகப்பெரிய எழுத்தின் ஆளுமை ஒன்றின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சாசுவதமில்லாத மனித வாழ்க்கையில் விதி விலக்கு ஒன்றிரண்டு இருக்கலாமே என்று மனம் ஏங்குகிறது. ஆனால் வாழ்க்கை நம் கையில் இல்லை என்று தேறுதல் அடைவதைவிட வேறு என்ன செய்யமுடியும் நம்மால்? தன் எழுத்தின் மூலம் வாசக மனங்களை தன்னை நோக்கி ஈர்த்து நெருக்கமானவையாக செய்துகொண்ட வல்லமை அவருக்கே உரியது. செய்நேர்த்தி, நுட்பம், அழகுணர்ச்சி, தெளிவும் கொண்ட, பரவசமூட்டும் வசீகரம் உடையவை அவரது படைப்புகள். அவர் நடையில் இருந்த நளினத்தை இன்னும் யாரும் தொடவில்லை என்று சொல்லலாம். காலத்தின் பக்கங்களில் தன் இருப்பை ஸ்திரப்படுத்திக்கொண்டுவிட்ட படைப்பாளி அவர்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
26.07.2005: உடல் நிலை மிகவும் பாதித்து விட்டது. மூச்சுத் திணறல். ஏற்கனவே சாப்பிட்டு வந்த ஒரு மாத்திரை சுவாசப்பையை மோசமாக பாதித்துவிட்டது என்கிறார்கள் டாக்டர்கள். அந்த விஷமியை உடனடியாக வெளியேற்றினார்கள். எதிர்பார்த்த குணம் உடனடியாகக் கிடைக்கவில்லை. அசகாய சூர மருந்தொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆஸ்பத்திரி வழக்கப்படி புதிய மருந்தொன்று தரும்போது பக்க விளைவுகளை நோயாளியிடம் படித்துக்காட்ட வேண்டும். 25 நிமிடம் படித்தாள் நர்ஸ்.
இருமுறை ஆஸ்பத்திரியில் சேர நேர்ந்தது. வீட்டில் வைத்து சிகிச்கை என்ற இந்திய சாகசம் இங்கு நடக்காது. ஆஸ்பத்திரி என்பது ஒரு குட்டி ஐந்து நட்சத்திர ஓட்டல் மாதிரி. ஒரு மாதிரி நியாயமான வியாதி என்றால் எக்கச்சக்கமாக அனுபவிக்கலாம். அனுபவிக்கிறார்கள் மகான்கள். காதல் குடித்தனம் நடத்துகிறார்கள். எனக்கு ஒரு காலுறை அணிந்துகொண்டு நடுவில் ஓய்வெடுத்தால்தான் மறு கால்உறை அணிய முடியும் என்ற நிலை.
எனக்கு வெஜ் உணவு. பார்க்கப் பிரமாதமாக இருக்கும். வாயில் வைக்க முடியவில்லை. மணம் ஆகவே ஆகவில்லை. எவ்வளவு சாப்பிட்டேன் என்று நர்ஸ் பார்த்து ஒவ்வொரு நாளும் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். ஏன் என்று கேட்பார். நான் இட்லி தோசை கேஸ் என்பது அவருக்குத் தெரியாது. எனக்கு 15 கதவீதத்திற்கு மேல் உணவு தேறவில்லை.
நர்சுகள் காட்டிய ஆதரவுக்கு அளவில்லை. என்னைக் கவனித்துக் கொண்டு வரும் டாக்டரின் கவனமும் இணக்கமும் குழந்தைத்தனமான புன்சிரிப்பும் என்னை அவருடன் ஒட்டவைத்தன. எனக்குக் குணம் கிடைக்குமாம். பழைய வேகத்தில் கடற்கரையில் நடப்பாய் என்றார். பொன்னாக இருக்கட்டும் அவர் வாக்கு.
27.07.2005: மூன்று வாரங்களாக எந்தப் புத்தகத்தையும் படிக்க முடியவில்லை. புத்தம் புதிய புத்தகங்கள் மேஜைமீது கிடக்கும்போதுகூட எடுத்து மேலட்டையைப் பார்க்கத் தோன்றவில்லை. கையில் படிக்க எதுவும் எடுத்துச் செல்லாமல் கழிப்பறைக்கு, கடந்த அறுபது வருடங்களில் ஒருநாள் கூடச்சென்றதாக நினைவு இல்லை. அந்தப் பழக்கம்கூட மறந்துபோய்விட்டது. மனைவி பாதி பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிட்டிருக்கிறேன். இரவு பகல் பாராமல் தூங்கினேன். மாலையா அதிகாலையா என்பது தெரியாமல் தூங்கினேன். சுவர்க் கடிகாரத்தில் AM, PM தான் இல்லையே.
28.07.2005: ஆர்வங்கள் எட்டிப் பார்க்கின்றன. வாழ்க்கை மீது மீண்டும் கவனம் திரும்புகிறது. புத்தகங்கள் படிக்கிறேன். கணினியில் உட்கார முடிகிறது. நண்பர்களிடமிருந்து வந்த ஈ மெயில் கடிதங்களுக்கு ஒவ்வொன்றாகப் பதில் எழுதுகிறேன். தொடர்ந்து வீட்டிற்குள் முடிந்த மட்டும் நடக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.
29.07.2005: காலையில் நீச்சல் குளத்தைச் சுற்றியும் மாலையில் கடற்கரையிலும் சிறிது நடந்தேன். நத்தை தாண்டிப் போய் விடும். ஒவ்வொரு நாளும் தைலா கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். அவளுடைய வேலைத் திட்டத்திற்குள் இதையும் நுழைப்பது கடினம், கடினம், கடினம்.
நண்பர் கொடிக்கால் சேக் அப்துல்லா பற்றிய என் பேச்சைச் சுருக்கி இன்று எழுதி முடித்தேன். லஷ்மணனுக்குத் தர அரவிந்தனுக்கு அனுப்பி வைத்தேன். இதுதான் கடைசிக் கட்டுரை என்று லஷ்மணனுக்குத் தெரிவிக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மாதம் இரண்டு விஷயங்களைக் கண்டுபிடித்து எழுதுவது சுமையாக இருக்கிறது. எழுதியது வரையிலும் சந்தோஷம். சில புத்தகங்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவர முடிந்தது. அறிமுகப்படுத்த ஆசைப்பட்ட புத்தகங்கள்.
30.07.2005: வாசிப்பு வேகம் பற்றிக்கொண்டு வருவது சந்தோஷத்தைத் தருகிறது.
02.08.2005: இனி என்ன என்ற கேள்வி தோன்றிவிட்டது. மீண்டும் சுவாசப்பை சிறிது சக்தி பெற்றால் நியாயமாக இயங்கலாம். குணம் கிடைக்கும் என்றார் டாக்டர். அவர் சொன்னபடி இயங்க முயல்கிறேன். நடக்க முயற்சிக்கிறேன். வீட்டு நீச்சல் குளத்தைச் சுற்றிதான். நத்தை வேகத்தில் ஐந்து நிமிடம். பழைய வேகத்திற்கு அரைக்கால் பங்குகூடத் தேறாது. அதற்குள் மூச்சுத் திணறல். அதன் பின் ஐந்து நிமிட ஓய்வு. மீண்டும் நடை. மீண்டும் ஓய்வு. என்னால் இந்தக் கண்டத்தைக் கடந்து போக முடிய வேண்டும். அம்மாவும் அப்பாவும் இறந்தது மூச்சுத்திணறலில். நண்பன் (கிருஷ்ணன் நம்பி) இறந்ததும் மூச்சுத்திணறலில்தான்.
நடந்து திணற அற்புதமான இடம் கண் முன்னால் அமைந்துவிட்டது. இயற்கைக்கு நன்றி. நவீன வடிவம் கொண்ட நீச்சல் குளம் அது. ஓவல் வடிவத்தில் அமைத்துக்கொண்டு வரும்போதே ஒரு பக்கம் துணிந்து சரேரென்று ஒரு கோணலைப் போட்டுவிட்டிருக்கிறான். அங்குதான் அற்புதம் வழிகிறது. வடிவங்கள் மாறி மாறி வராத வரையிலும் அலுப்பு மேலிட்டு உயிர் உறைந்துபோக வேண்டியதுதான்.
ஏதோ ஒரு அற்புதமான செடியின் மருந்து மணம் திடீரென்று வந்து மனதைக் கோதிற்று. ஒரு நொடிதான். எவ்வளவு விலை மதிப்பற்ற நொடி அது. இந்த மணத்தைப் பிடித்துக்கொள்வது தவிர இப்போதைக்கு எனக்கு வேறு வழியில்லை. இயற்கையின் ரகசியங்களைப் பற்றி மனம் என்னென்னவோ யோசிக்கத் தொடங்கியது.
நடுவில் ஓய்வெடுக்கக் குளக்கரையில் அதிர்ஷ்டம் போல் ஒரு இடமும் அமைந்துவிட்டது. குளத்திற்கு ஒரு பக்கம் வெயில். வெளிச்சம் அருவியாகக் கொட்டுகிறது. நான் ஓய்வெடுக்கும் எதிர்ப்பக்கம் நிழலும் வெயிலும் இடைகலந்து கிடக்கிறது. அந்த இடத்தில் அரைச்சுவரோடு புதைந்து நிற்கும் அந்த மர வேலியின் மேல் நுனியில் பிரியத்துடன் உட்கார்ந்துகொள்ள முடிகிறது. மென்மையான தென்றல் வீசுகிறது. ஆனால் இப்போது அந்த மணத்தைக் காணோம். மனம் அதைத் தேடுகிறது.
செடியை மனதிற்குள் ஆதாரமில்லாத நிச்சயத்துடன் இனங்காண முயன்றேன். பச்சைப் பசேலென்று ஒரு குட்டிச்செடி என் வலது தோளை உரசியபடி நிற்கிறது. அநேகமாக அதுதான். அதிகபட்சம் ஒன்றரை அடி உயரம் இருக்கும். ஒவ்வொரு இலையும் குண்டாக, பச்சைப் புழுப் போல் சுருண்டு தொங்கிக்கொண்டிருந்தது. இலையைக் கசக்கலாம். என் விரல்கள் துடிக்கின்றன. வேண்டாம் என்று மனம் தடுக்கிறது. முதலில் கேட்டா வந்தது அந்த மணம்?
வானத்தின் வெளிர் நீலம் அப்படியே குளம் முழுக்கக் கரைந்து கிடக்கிறது. நீரிலும் அடிமட்டங்களிலும். மரங்களின் பச்சை நிழல்கள் வேரை வெட்ட வெளியலில் விட்டு நீரின் சலனத்தில் அசைகின்றன. மிக மென்மையான ஒரு விறையல். ஓய்வற்ற துடிப்பு. நீர்ப்பரப்பின் வெளிச்சம் நெளிசலான கோடுகளில் அற்புதமான கோலங்களை இடைவிடாது உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. அவை குளம் முழுக்கப் பரவுகின்றன. கரையோரம் சென்று காணாமல் போகின்றன. இந்தக் கோலங்கள் எல்லாமே நிச்சயமற்றவை. ஒரு நொடியில் அவை உருமாறுவது தெரியாமல் உருமாறிவிடும். இனி என்ன புதிய கோலம் உருவாகும் என்று யாராலுமே கற்பனை செய்ய இயலாது. காற்றைப் பொறுத்து. ஒளியைப் பொறுத்து. நிழல்களைப் பொறுத்து. இன்னும் நாம் அறிந்திராத பலவற்றையும் பொறுத்துத்தான் எல்லாம். மணத்தைத் தேடியபடியே நடக்கத் தொடங்குகிறேன். மீண்டும் அது வரலாம். எனக்கு ஆசுவாசம் தரலாம்.
வெயிலேறிக்கொண்டிருக்கிறது. குளிர் விரைந்து பின்னகர்ந்து போகிறது. மருந்து மணத்திற்காக மனம் காத்துக்கொண்டிருக்கிறது. முதலில் தானாக வந்து வருடிய வாசனை எதற்காக இப்போது தன்னை மறைத்துக் கொள்கிறது? நான் உணராத நிலையில்கூட எங்கும் பரவி நிற்கும் அவ்வாசனைதான் என் சுவாசப் பையில் சுருக்கொடுக்க வேண்டும். சிறுகச் சிறுக அவ்வாசனை சுவாசப்பையின் உட்சுவரெங்கும் பரவி பிராண வாய்வைப் பைகளில் நிரப்பி இதப்படுத்தும்.
இனி எனக்கு யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? நிச்சயம் என கற்பனை செய்து கொள்ளச் சாத்தியமாக இருந்த காலங்கள் தேய்ந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. இனி அன்றாடம் சாத்தியப்படுவது சாத்தியப்படும். எதுவும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. பெரும புதையல் போல் வாழ்க்கை திரும்பாது என்றும் சொல்ல முடியாது.
நான் நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன். இதை நினைவுபடுத்தத்தான் காலையில் அந்த அரிய மணம் வந்து சமிக்ஞை காட்டிவிட்டுப் போயிருக்கிறது. மீண்டும் அது வரும். எதிர்பாராத வேளைகளில் அது வர விரும்புகிறது. அதன் விருப்பம்போல் இயங்க அதற்கு உரிமை உண்டு.
நடந்துகொண்டே இருக்கிறேன். சாத்தியப்படும் என்றெண்ணியதை விடவும் சிறிது சாத்தியப்படுகிறது. நான் எதுவும் பெரிதாக இப்போது கேட்க முடியாது. நான் காத்திருக்க வேண்டும். மீண்டும் அந்த அற்புத மணம் என்னைத் தேடி வரும்.
சுந்தர ராமசாமியின் அஞ்சலி பற்றிய கட்டுரையில் சி.மோகன் சொன்னதை இங்கே நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்குமென்று தோன்றுகிறது. ”அஞ்சலி நாளன்று வந்திருந்த பல எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் மனோபாவங்களை அவர்களுடைய நடவடிக்கைகள் மற்றும் பேச்சுகளிலிருந்து அறிய முடிந்தபோது ஒரு விசேஷமான அம்சத்தை உணர முடிந்தது. அநேகமாக ஒவ்வொருவருமே மற்ற எவரையும்விடத் தனக்குத்தான் சு.ரா. மிகவும் நெருக்கமானவர் என்ற அலாதியான உணர்வோடு கலங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. சு.ராவின் ஆளுமையில் சுடர்கொண்டிருந்த ஓர் அற்புத அம்சமிது. அவர் வாழ்வின் ரகஸ்யம் இது. எவராலும், இனி எப்போதும் கைப்பற்ற முடியாத ரகஸ்யம்”

சுந்தர ராமசாமியின் நினைவுகள் நம் நெஞ்சில் என்றும் நீங்காது நிலைத்திருக்கும் அவரது படைப்புகளைப் போலவே.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஜனவரி 7, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...