July 6, 2015

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்: வாழ்வின் சாகசம்

கடல் வசீகரம் மிகுந்த பேராபத்து கொண்ட ஒரு அழகு. கடல் என்ற பிரம்மாண்டத்தின் முன் நாம் நிற்கும்போது அதை உள்வாங்கும் வல்லமையும் வலிவும் நமக்கு வேண்டும். அப்போதே நாம் கடலை நோக்கி விரிவுகொள்ள முடியும். கடல் ஓர் ஆன்மீக அழைப்பு. கடலின் முன் நாம் நிற்கும் தருணத்திலேயே நாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு துளி என்பதை உணர முடியும். நான் எனும் ஆணவம் நம்முள் ஒடுங்கும் இடங்கள் இரண்டு. ஒன்று வானம் மற்றொன்று கடல். வானத்தையும் கடலையும் நாம் நீண்ட நேரம் கவனித்து அமர்ந்திருத்தல் மிகச் சிரமமான காரியம். அதன் தொடர்ச்சியான கவனத்தில் நாம் அவற்றுடன் ஒன்றிவிடுவதில் நம்முள் நிகழும் மாற்றங்கள் ஆன்மீகமானவை. அப்போது நம் மனம் கொள்ளும் பரவசத்தில் நாம் நம் இருப்பைத் தொலைத்து பிரபஞ்ச வெளியுடன் ஒன்றிவிடும் கணங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

எனவே கடல் பிரயாணம் என்பது பயமும் கவர்ச்சியும் கொண்டது என்பதில் சந்தேகமில்லை. தரைக்கும் வானத்துக்கும் இடைப்பட்ட கடல்வெளிப் பயணம் அற்புதமானதொரு உணர்வைக் கொடுப்பவை. அதனால்தான கடல் பிரயாணம் பற்றிய சினிமாக்களும் புத்தகங்களும் நம்மை வெகுவாகக் கவர்கின்றன. அப்படியான கடலில், மீன் பிடிக்கும் வயதான முதியவர் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியது ஹெமிங்வெயின் கிழவனும் கடலும் நாவல். ஹெம்மிங்வேயின் ஆகச்சிறந்த படைப்பு கிழவனும் கடலும். மனைவியின் மரணத்திற்குப் பின் தனிமையில் இருக்கும் ஒரு கிழவன். அவனுக்கு அவ்வப்போது உதவிசெய்யும் ஒரு சிறுவன். கடந்த 84 நாட்களாக கடலுக்குச்சென்று மீன் எதுவும் அகப்படாமல் வெறுங்கையுடன் திரும்புகிறான் கிழவன். அவனை ராசியில்லாதவன் என்று சிறுவனின் அப்பா கிழவனுடன் செல்லும் சிறுவனை தடுத்துவிடுகிறார். மீன் பிடிப்பின் நுட்பங்களை நன்கு அறிந்த கிழவனுக்கும் மீன் பிடிபடாமல் இருப்பது அவனை ஒதுக்கிவைக்க நேர்கிறது. இந்த சமூகத்தில், வாழ்க்கையின் ரகசியங்களை அறிந்தவன் மட்டுமே வெற்றிகரமானவனாக ஆவதில்லை என்பதை ஹெமிங்வே சுட்டிச்செல்கிறார். 85-வது நாளான அன்று கிழவன் மட்டும் தனியாக கடலுக்குச் செல்கிறான். கிழவனுக்கு மீன் மாட்டுகிறதா இல்லையா என்பதுதான் கதை.

அன்று எப்படியும் மீன் பிடிப்பது என்று கிழவன் கடலில் வெகுதூரம் செல்கிறான். நீண்ட நேரத்துக்குப் பின்னரே ஒரு மீன் மாட்டுகிறது. பெரிய மீன் என்று கிழவன் ஊகிக்கிறான். தூண்டிலில் மாட்டிய மீன் கிழவனை படகோடு சேர்த்து வெகுதூரம் இழுத்துச் செல்கிறது. இரவு முழுவதும் கிழவன் தூண்டிலை விட்டுவிடாமல் மீன் இழுக்கும் போக்கிற்கே செல்கிறான். சிறுவனை உடன் அழைத்து வந்திருக்க வேண்டும் என்று கிழவன் அவ்வப்போது நினைக்கிறான். சில பழைய மீன்பிடிப்பு நிகழ்வுகள் கிழவனுக்கு மனதில் தோன்றுகிறது. மீனின் திட்டம் எதுவென்று கிழவனும், கிழவனின் திட்டம் என்னவென்று மீனும், உணர்ந்தவர்களாக அவர்களுக்குள் ரகசிய சாம்பாஷணை நடக்கிறது. மீனைப் பிடிப்பதில் முனைப்புடன் இருக்கும் கிழவன் அதன் மீது இரக்கமும் கொள்கிறான். மீனைப்பற்றி வருந்தும் அதே சமயம் அவனுக்கும் முகத்திலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வருகிறது. இரக்கம், அனுதாபம் எல்லாம் தாண்டி வாழவேண்டிய அவலம் எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது என்பதை ஹெமிங்வே குறிப்பால் உணர்த்துகிறார்.

இரண்டு நாட்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கிழவன் மீனைப் பிடிக்கிறான். அவன் எதிர்பார்த்ததை விடவும் பெரிய மீன். மீனைப் படகுடன் கட்டி கரைக்குத் திரும்பும்போது சுறாக்கள் மீனைச் சாப்பிடத் தாக்குகின்றன. சுறாக்களுடன் போராடி மிகவும் களைத்துவிடுகிறான் கிழவன். கடைசியில் மீனின் வெறும் எழும்புக்கூட்டோடு, சோர்ந்து கரை திரும்புகிறான். கடலில் கிழவன் போராடிப் பெற்றதை மீண்டும் கடலே பறித்துக்கொள்கிறது. கடைசியில் எஞ்சுவது வெறும் கைதான். நாமும் வாழ்க்கையில் மிகவும் பிரயாசைப்பட்டுப் போராடுகிறோம். ஆனால் நாம் போராடிப்பெற்றது மீண்டும் கைமாறி விடுகிறது. கடைசியில் மிஞ்சுவது சூன்யமே. ஆக வாழ்க்கை, போராடிப் பெறுவதில் இல்லை. போராடுவதிலேயே இருக்கிறது என்பதை கிழவனின் கடல் பயணத்தின் சாகசம் நமக்குப் புரியவைக்கிறது.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் டிசம்பர் 11, 2012)

Related Posts Plugin for WordPress, Blogger...