July 6, 2015

சிந்தனைகள்: நானும் இரும்புக்கை மாயாவியும்

பாடப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த காலங்களில் படிக்க தொடங்கியவைதான் காமிக்ஸ் புத்தகங்கள். சிறுவயதில் அவைகள் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. அது ஒரு அற்புதமான கனவு உலகம். அந்த உலகத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அந்த உலகில் சஞ்சரித்து திரிவது என்பது ஒரு அலாதியான இனிமையான உணர்வு. கனவிலும் நினைவிலும், மனம் முழுதும் எப்போதும் அந்த உலகமே நிறைந்திருக்கும். சிறுவயதில் முத்து காமிக்ஸ் அறிமுகம் செய்த அதன் கதாநாயகர்கள் என்றென்றும் மறக்க முடியாதவர்கள். குறிப்பாக இரும்புக்கை மாயாவி.

அந்த காலத்தில் படித்த காமிக்ஸ் புத்தகங்களையும் அதன் நினைவுகளையும் இன்று மீட்டெடுக்கும்போது மனம் உவகையால் நிரம்புகிறது. அவைகள் என்னுள் ஏற்படுத்திய அனுபவங்களின் தருணங்கள் சிலிர்ப்பும், வசீகரமும் கொண்டவை. இரும்புக்கை மாயாவியின் சாகசங்கள் மறக்க முடியாதவை. ஒவ்வொரு புத்தகத்தையும் திரும்பத் திரும்ப பலமுறை சலிக்கும்வரை படிப்பதில் இருந்த ஆர்வம் அளவிடமுடியாதது. முடித்ததும் அடுத்த புத்தகத்திற்காக மனம் நாட்களை எண்ணியபடி காத்திருக்கும். காசு சேமித்துவைத்து மாதமாதம் முத்து காமிக்ஸ் வந்துவிட்டதா என கடைக்கு ஓடுவது ஒரு சுகமான அனுபவம். இன்று நினைக்கையிலும் அவைகள் இனிமையாக மனதில் இனிக்கிறது. தனியறையில் யாருடைய குறுக்கீடும் இன்றி மாயாவியின் மாய உலகத்தில் சஞ்சரித்தவை வாழ்வின் பொற்காலங்கள் . மழை பெய்யும் நாட்களில், குறிப்பாக இரவுகளில், குளிருக்கு இதமாகப் போர்வையால் போர்த்திக்கொண்டு மாயாவியின் சாகசங்களில் மனம் லயித்துக் கிடந்தவை அழிக்க முடியாத மனச் சித்திரங்கள்.

முத்து காமிக்ஸ் 1972ல் முதன் முதலாக வெளியானது. அதன் நிறுவனர் சவுந்திரபாண்டியன் முன்பொரு முறை தினகரன் இதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்:
"ஐம்பதுகளில் இருந்தே எங்கள் குடும்பம் சிவகாசியில் அச்சு தொடர்பான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறது. ஐரோப்பாவில் இருந்து கலர் ஆப்செட் இயந்திரம் ஒன்றினை இறக்குமதி செய்வது எங்கள் திட்டமாக இருந்தது. நமக்கு புதியது என்பதால், அந்த இயந்திரத்தை இயக்குவதற்கு பயிற்சி தேவைப்பட்டது. அதற்காக 1967ல் சென்னைக்கு வந்தேன். நாகிரெட்டியின் வடபழனி அச்சகத்தில் அந்த இயந்திரம் இருந்தது. பயிற்சிக்காக இங்கே வந்தபோது துடிப்பான இளைஞனாக இருந்ததால் நாகிரெட்டிக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது. குழந்தைகளிடையே பிரபலமான ‘அம்புலிமாமா’ பத்திரிகையை நாகிரெட்டிதான் அச்சடித்து, வெளியிட்டு வந்தார்.
அங்கே அச்சடிக்கப்படும் பத்திரிகைகளை எல்லாம் ஆவலோடு வாசிப்பேன். ‘ஃபால்கன் காமிக்ஸ்’ என்று ஐரோப்பிய காமிக்ஸ்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். அந்த காமிக்ஸ்க்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாத்திரம் ‘இரும்புக்கை மாயாவி’. ஏனோ அவர்களுக்கு இவரைப் பிடிக்கவில்லை. மாறாக என்னை ரொம்பவும் கவர்ந்துவிட்டார் ‘மாயாவி’. பத்து மாத அச்சு இயந்திரப் பயிற்சி முடிந்து ஊருக்குப் போயும் மனம் முழுக்க ‘இரும்புக்கை மாயாவி’ நிறைந்திருந்தார். நாமே ஏன் ஒரு காமிக்ஸை தொடங்கக்கூடாது என்று நினைத்தேன்.
அடுத்த ஆண்டே லண்டனுக்கு பயணித்து ‘இரும்புக்கை மாயாவி’யை தமிழில் வெளியிடுவதற்கான உரிமைகளை பெற்றேன். தகுந்த காலநேரம் பார்த்து 1972 பொங்கலுக்கு ‘முத்து காமிக்ஸி’ன் முதல் இதழை கொண்டு வந்தேன். முதல் இதழை கையில் எடுத்துப் புரட்டிப் பார்க்கும்போது, என் முதல் குழந்தையை கையில் வாங்கியபோது கிடைத்த பரவசத்தை அடைந்தேன். விளையாட்டாக நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அந்த கணத்தை நினைத்தாலும் சிலிர்க்கிறது..."
மாயாவியின் எதிரிகள் பலராக இருப்பினும் அவர்கள் அனைவரும் அ.கொ.தீ.க என்ற கழத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வாசிப்பில் நமக்குச் சுவாரஸ்யம் தரும் விசயம். எனவே அவரின் எதிரிகள் ஒவ்வொரு கதைக்கும் ஒருவராக இருப்பர். தன் உடலில் மின்சாரம் பாய்ந்ததும் அவரின் உடல் மறைந்துவிட அவரின் கை மட்டும் அந்தரத்தில் பறந்து செய்யும் சாகசங்கள் வியப்பில் ஆழ்த்தி மெய்சிலிர்க்க வைப்பவை. சிறுவயதில் அவரைப் படிக்காதவர்கள் அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். இன்றைய பெரும்பான்மையான குழந்தைகள் அப்படியானவர்களே என்பது வருத்தம் தரும் ஒரு செய்தி. எப்போதும் எங்கேயும் பாடப்புத்தகங்களின் சுமையில் அவர்கள் மூச்சடைந்து கிடக்கிறார்கள்.

1962-ம் வருடம் அக்டோபர் 6-ம்தேதி Valiant இதழில் British Weekly Adventure Comics-ல் மாயாவி அறிமுகமானார். மாயாவிக்கான உருவத்தைக் கொடுத்தவர் Jesus Blasco. கதையாசிரியர் Tom Tully. 1960-1970-களில் உலகமெங்கும் மிகப்பிரபலமாக உலா வந்த காமிக்ஸ் ஹீரோக்களில் முதன்மையானவர் மாயாவிதான். டெக்ஸ் வில்லர், முகமூடி வேதாளம், இரும்புக் கை மாயாவி மூவரும் எனக்குப் பிடித்தமானவர்கள். எல்லோரிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் மாயாவிதான். அப்போதைய காலகட்டத்தில் முத்து காமிக்ஸ் வெளியிடும் சிறப்பு வெளியீடான மாயாவியின் சாகஸக் கதைகள் என்னை நிலத்திலிருந்து வானத்தில் பறக்கச் செய்தன. என் கால்கள் தரையில் பாவாத காலங்கள் அவை என்றால் மிகையில்லை. எனக்கான என் கனவுலகை அவைகள் சிருஷ்டித்துத் தந்தன. முனை மழுங்காமல் அவற்றைப் பாதுகாப்பாக வைத்து நான்கைந்து புத்தகங்களை ஒன்றாக பைண்டு செய்து தொகுத்து வைத்திருந்தேன். அவைகளை எனது பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வந்தேன். காலங்கள் உருண்டோட வாசிப்பின் ரசனைகள் மாற அவைகள் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை.

மனிதன் முன்பு இருந்தது போல் இன்று இல்லை. அவன் எப்போதும் பதட்டப்படுபவனாக, அச்சப்படுபவனாக, கோபப்படுபவனாக இருக்கிறான். வளரும் பருவத்தில் அளவுக்கதிகமான மன அழுத்தத்தால் நிரம்பும் மூளை தனது வளர்ச்சியை முற்றாக அடைவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே இப்படியான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் கிட்டும் இன்பமே மனத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் பள்ளிப் புத்தகங்கள் என்ற சுமை அவனை எப்போதும் இலகுவாக இருக்க முடியாமல் செய்துவிடுகிறது. அவனது பிந்தைய வாழ்வில் இதுவே பூதாகரமாக உருவெடுக்கிறது. தங்கள் குழந்தைகள் தங்களைக் கைவிடுகிறார்கள் என்று பெற்றோர்கள் புலம்புவதில் அர்த்தமில்லை. தாங்கள் செய்வது இன்னதுதான் என்று தெரியாமல் செய்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது என்பதை அவர்கள் அறியாமல் இருப்பது வருந்தத்தக்கது. பாடங்களுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணரும்போதுதான் குழந்தைகள் விடுதலை பெறுவார்கள். அப்போதுதான் அவர்கள் நல்ல மனிதர்களாக நாளை இந்த உலகில் நடமாட முடியும்.

இப்போதைய காமிக்ஸ் உலகம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. முன்பைவிட மேம்பட்ட அச்சாக்கத்தில் நவீன உத்தியில் அவைகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் மாயாவியின் சாகஸத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆசை எழுகிறது. நாம் நம் வயதைத் தொலைத்துவிட்டு மீண்டும் சிறுவர்களாக மாறவேண்டும். அப்போதே மாயாவியை நிறைவாக முழுமையாக ரசிக்க முடியும்.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஜீன் 30, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...