July 4, 2015

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே: வாழ்க்கையின் தரிசனம்

ஜி.நாகராஜனின் உலகத்தில் நாம் நுழைந்ததும் நமக்கு ஏற்படுவது முதலில் அதிர்ச்சி. பிறகு பிரமிப்பு. அதிர்ச்சி, நாம் இத்தகைய உலகத்தை இதுவரை கண்டதில்லை என்பதால் ஏற்படுகிறது. பிரமிப்பு, அத்தகைய உலகத்திலிருந்தும் இலக்கியம் உருவாக்க முடியும் என்பதை அவர் நிரூபிப்பதால். கந்தன் எனும் பாத்திரத்தின் மூலம் கதையை நகர்த்தும் ஆசிரியர், மனிதனின் வாழ்வாதாரமான பணம், மற்றும் காமம், மனித வாழ்க்கையை எப்படி நிர்பந்திக்கிறது என்பதை எள்ளலுடனும், அக்கறையுடனும் நாவலின் ஊடாக விவரித்துச் செல்கிறார். அவர்களின் உலகில், வாழக்கையின் ஆதாரமாக இருக்கும் காமம், பிறருக்கு கேளிக்கை ஆகிறது என்பதை உணரும்போது வாழ்க்கையின் முரண் நமக்கு விளங்குகிறது. பிறப்பும் இறப்பும் மட்டுமல்ல, வாழக்கையும் அவர்களுக்கு எவ்வளவு சிக்கல்களையும், சிடுக்குகளையும் கொண்டுசேர்க்கிறது என்பதை நாகராஜன் தெளிவாக நம் கண் முன் கொண்டுவருகிறார். வாழ்க்கை என்பது அவர்களுக்கு வாழ்க்கை அல்ல மாறாக அவலம் என்பதை நாகராஜன் அற்புதமாக சித்தரித்துள்ளார். இதை அவர் பிரச்சாரமாகவோ, கொள்கை முழக்கமாகவோ சொல்லாமல் நாவலாக சொன்னதுதான் நாகராஜன் எழுத்தின் சிறப்பு. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய இந்நாவல் இன்றும் படிக்க ஏதுவாக நாகராஜனின் மொழியும் நடையும் அமைந்துள்ளது.

கதை என்று பார்க்கும்போது கந்தனின் ஒரு நாள் வாழ்க்கையை நாகராஜன் விவரிக்கிறார். அந்த ஒரு நாளின் ஊடாக அவன் நினைவுகளை முன்னும் பின்னும் அடுக்கி, கனவுகளையும் புகுத்தி, அவன் சந்தித்த மனிதர்கள், நட்பு கொண்டவர்கள், பகைகொண்டவர்கள் பற்றியும் சித்தரித்து, நாவலை சிறப்பான புனைவாக ஆக்கியுள்ளார். கந்தன் போன்றவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை சொன்னாலே போதுமானது, ஏனெனில் அவனது அடுத்த நாளும் அப்படியேதான் இருக்கப்போகிறது என்று நாகராஜன் சொன்னாலும், நம்மில் பெரும்பான்மையோர் வாழ்க்கையும் அப்படியேதான் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். நாவலில் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் சில வாக்கியங்களும், உரையாடல்களும், சித்தரிப்புகளும், நம்மை, நாவலில் இருந்து தனிமைப்படுத்தி, வாழ்க்கை பற்றிய பல்வேறு சிந்தனனைகளில் லயிக்கச்செய்கின்றன.

நாவலில் முத்துச்சாமி என்ற பாத்திரம் கந்தனிடம், “இந்த சமுதாயத்துலே எத்தனையோ கொடுமைகள் நடக்குது“ என்று சொல்ல கந்தன் அவனிடம், “நாமும் கொஞ்சம் கொடுமைகள் செய்யலாங்கறே“ என்கிறான். இங்கே சமுதாயம் மனிதர்களை கொடுமைகள் செய்ய வைக்கிறதா, இல்லை மனிதன் கொடுமைசெய்வதால் சமுதாயம் அப்படி இருக்கிறதா என்ற விவாதத்தை நாகராஜன் முன் வைக்கிறார். மற்றோர் இடத்தில் அந்தோணி என்ற பாத்திரத்தின் வாயிலாக, “இந்தப் பணமே ஒரு மானங்கெட்ட விஷயம்தானே” என்று பேச வைக்கிறார். அஃறிணைப் பொருளான பணம் எவ்வாறு மானங்கெட்டதாக இருக்க முடியும்? மனிதனே அவ்வாறு இருக்கிறான் என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கு பார்த்தாலும் வளர்ச்சி, மாறுதல். ஆனால் தன் வாழ்க்கையில் மட்டும் மாறுதலே இல்லை. நமக்கு இருப்பது இன்று மட்டும்தான். நாளை என்பதே இல்லை என்று நாவலின் இறுதிப் பகுதியில் கந்தனின் எண்ணங்கள் செல்கின்றன. நாவலை முடித்தவுடன் நம் வாழ்க்கையை கந்தனின் வாழ்க்கையோடு நாம் ஒப்பீடு செய்துகொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நாகராஜன் கந்தனின் வாழ்க்கைக்கு தீர்வுகாண முயற்சிக்கவில்லை. மாறாக கந்தனின் வாழ்வை படம்பிடித்து காட்டுவதன் மூலம், இம்மொத்த மானிட வாழ்க்கையே இப்படித்தான் என்பதாக சொல்கிறார். நமக்கும் வாழ்க்கை அப்படித்தான் என்பதை நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். கந்தனைப் போன்றவர்களின் வாழ்க்கை இன்பகரமானதும் இல்லை, துன்பகரமானதும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு லயத்தில் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ளும்போது நம்மை நாமே உணர்ந்தவர்களாக ஆகிறோம். வாழ்க்கை பற்றிய ஒரு புது தரிசனம் நமக்குக் கிடைக்கிறது.

நமக்கும், நாளை மற்றுமொரு நாளே.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் நவம்பர் 25, 2012)

Related Posts Plugin for WordPress, Blogger...