குறுந்தொகையும் முத்தொள்ளாயிரமும்

சங்க இலக்கியப் பாடல்களான குறுந்தொகையும், முத்தொள்ளாயிரமும் ம.இலே.தங்கப்பா என்பவரால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று பெங்குவின் நிறுவனத்தால் வெளியாகியுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி. குறுந்தொகைப் பாடல்கள்  Love Stands Alone என்ற பெயரிலும், முத்தொள்ளாயிரம் Red Lilies and Frightened Birds என்ற பெயரிலும் நூலாக்கம் பெற்றுள்ளது. குறுந்தொகையின் தமிழ்ப் பாடல்களையும் மொழியாக்கத்தையும் ஒப்பிட்டு நோக்கியதில் மொழியாக்கம் சிறப்பாக இருப்பதை அறிய முடிகிறது. தமிழைவிடவும் ஆங்கிலத்தில் சற்றே எளிதாகப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் முடிகிறது. ஒவ்வொரு பாடலுக்கும் சூட்டியிருக்கும் தலைப்புகளும் ரசிக்கும்படி இருப்பது வெகு சிறப்பு. இந்நூலின் ஆங்கில மொழியாக்கத்துக்காக சாகித்ய அகாடமி விருது 2012-ல் தங்கப்பாவுக்கு வழங்கப்பட்டது. மொழியாக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்க மூன்று குறுந்தொகைப் பாடல்களையும் அவற்றின் மொழியாக்கத்தையும் இங்கே கொடுத்துள்ளேன்.

1) குறுந்தொகை பாடல்-2, இறையனார், குறிஞ்சித் திணை, தலைவன் சொன்னது:

கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

Butterfly,
with beautiful wings,
living by
sucking nectar,
tell me honestly,
is there any flower
known to you
more fragrant
than the tresses of this girl
my most dear friend
who has close-set teeth
and a peacock's
graceful mien?

2) குறுந்தொகை பாடல்-3, தேவகுலத்தார், குறிஞ்சித் திணை, தலைவி சொன்னது:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

Larger than the earth,
vaster than the sky,
and immeasurably deeper than the seas
is my love for him
from the hills
where the honeybees make
abundant honey
from the black-stemmed
Kurinji flowers.

3) குறுந்தொகை பாடல்-28, ஔவையார், பாலைத் திணை, தலைவனைப் பிரிந்த தலைவி கூறியது:

மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோயறியாது துஞ்சும் ஊர்க்கே.

I feel an urgency to get up
and smash things,
to knock and break my head,
to send out violent shrieks
as if in mad frenzy.
This cool night breeze
kindles the fire of love in me.
But this callous village
is sweetly sleeping.

இந்நூலைப் பற்றி எழுந்த விவாதம் ஒன்றுக்கு ஆ.இரா.வேங்கடாசலபதி July 5, 2015 தி தமிழ் இந்துவில், ‘அறிஞர் அஞ்சுவர், அறியார் துணிவர்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினார். அதில் அவர் சொல்லும் பல்வேறு செய்திகள் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கவை என்பதால், வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி, நாளிதழில் வெளியான கட்டுரையைக் கீழே தருகிறேன்.

‘தராதலத்து பாஷைகளில்… தமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி' என்று பாரதிதாசன் ஒருமுறை பாடினார். வைதேகி ஹெர்பர்ட் தம் சங்க இலக்கிய மொழியாக்கங்கள் பற்றி முன்வைத்துள்ள பெருமை பாராட்டல்கள் தொடர்பாக ‘தி இந்து'வில் (28 ஜூன் 2015) ஈரநிலா எழுதிய எதிர்வினையைப் படித்தபொழுது பாரதிதாசனின் வரிகள் நினைவுக்கு வந்தன. ஈரநிலாவின் கட்டுரை மறுக்க முடியாத செய்திகளின் கோவை. முன்னோடிகளின் பணிகள் அங்கீகரிக்கப்படாதது குறித்த ஆற்றாமையும் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் இதன் தொடர்பில் எழுப்பிக்கொள்ள வேண்டிய வேறு கேள்விகளும் உண்டு.

‘தராதலத்து பாஷைகள்' என்பது உபசார வழக்கு. உண்மையில் ஆங்கில மொழியாக்கங்கள் பற்றியே தமிழர்கள் அக்கறை கொள்கிறார்கள். ருஷ்ய மொழியில், கட்டலான் மொழியில், மராட்டியில், ஒடிசாவில் யார் முதலில் மொழிபெயர்த்தார்கள் என்பது பற்றி இவ்வளவு சூடான விவாதங்கள் நடைபெறுமா? ஆங்கிலம் பற்றி அனல் பறக்கிறதென்றால் அது உலக அளவில் அதிகாரம் பெற்ற மொழி.

மொழிபெயர்ப்பவர் யார்? எதற்காக மொழிபெயர்க்கிறார்கள்? மொழிபெயர்ப்பை மதிப்பிடுகிறவர்கள் யார்? வெளியிடும் பதிப்பகம் எது? யாரை நோக்கி மொழிபெயர்ப்புகள் செய்யப்படுகின்றன? யார் முதலில் செய்தவர்கள், எவ்வளவு செய்தார்கள் என்பதைவிட இக்கேள்விகள் முக்கியமானவை.

சென்ற அரை நூற்றாண்டில் மொழியாக்கம் செய்தவர்களை இரண்டாகப் பிரிக்கலாம். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கல்விப் புலம் சார்ந்தவர்கள் முதல் வகை. ஏ.கே.ராமாநுஜன், ஜார்ஜ் எல்.ஹார்ட், ஆர்.பார்த்தசாரதி, மார்த்தா ஆன் செல்பி இதில் அடங்குவர். பெரிதும் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பதிப்பகங்களால் வெளியிடப்பட்டு, கல்வி உலகுக்குள் இவை புழங்குகின்றன. இதில் உடைவை ஏற்படுத்தியவர் ஏ.கே.ராமாநுஜன். இவர் வழியாக உலக இலக்கியத் தொகுப்புகளில் (The Penguin Book of Women Poets. The Penguin Book of Love Poetry; Women Writing in India முதலானவை) சங்கப் பாடல்கள் இடம் பிடித்தன. லண்டன் மெட்ரோவில் ‘யாயும் ஞாயும்....' இடம் பெற்றது. Red Earth and Pouring Rain, The Tigerclaw Tree, Evening is the Whole Day என்று சங்க இலக்கியத் தொடர்கள் ஆங்கில நாவல்களுக்குத் தலைப்பாயின. ஏ.கே.ராமாநுஜனின் குறுந்தொகை மொழிபெயர்ப்பான The Interior Landscape, New York Review of Books-ன் கிளாசிக் வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.

இரண்டாவது பிரிவினர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ், ஆங்கிலப் பேராசிரியர்களும் ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அன்பர்களும். ஆர்வத்தையே முதலீடாகக் கொண்டு அமைந்த முயற்சிகள் இவை. யாருக்காக மொழிபெயர்ப்பு என்ற பிரக்ஞை பெரும்பாலும் இவர்களிடம் இல்லை. சமகால ஆங்கில, உலக இலக்கியப் போக்குகள் பற்றிய புரிதலும் குறைவு. ஆங்கிலத்தின் சிறப்பு அதன் தற்காலத்தன்மை. அதிலிருந்து அந்நியப்பட்டதாகவே இவர்களுடைய மொழியாக்கங்கள் உள்ளன.

இலக்கியத்துக்குத் தொடர்பற்ற அரசியல்வாதிகள் இம்மொழி பெயர்ப்புகளையெல்லாம் பலர் தானாகவே வெளியிடுகிறார்கள். அல்லது தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்தியச் செம்மொழி நிறுவனம் போன்ற அரசுசார் அமைப்புகள் வழியாக வரிப்பணத்தில் வெளியிடப்படுகின்றன. திறமான பதிப்பகங்கள் கைக்கொள்ளும் தகுதி மேற்பார்ப்பு (peer review), பிரதி செம்மையாக்கம் முதலான இன்றியமையாத நூலாக்கப் படிநிலைகளை இவை காண்பதில்லை. அடிப்படைப்பிழை திருத்தமாவது செய்யப்பட்டதா என்று ஐயப்படும் தரத்தில் இவை அச்சேறுகின்றன. பொருத்தமான எழுத்துரு, நவீன அழகியலுடன் அமைந்த அட்டையும் வடிவமைப்பும் கொண்டதாகவும் இவை இருப்பதில்லை. நூல் தயாரிப்பில் சர்க்கார் வாடை தவறாமல் அடிக்கும். இலக்கியத்திற்குத் தொடர்பற்ற அரசியல்வாதிகள், நிர்வாகிகளின் வாழ்த்துரை இருக்கும். தமிழ் இலக்கிய மரபை அறியாத அயல் மொழியினரை ஈர்க்கும் வகையில் முன்னுரைகள் இருப்பதில்லை. ஏ.கே. ராமாநுஜனின் மொழியாக்கங்கள் வரவேற்பைப் பெற்றதற்கு அவர் உண்மையான கவிஞர் என்பதோடு இலக்கிய நயமும் புலமையும் கொண்ட அவருடைய முன்னுரைகளும் பின்னுரைகளும் முக்கியக் காரணங்களாகும். மதிப்பு வாய்ந்த ஆங்கில ஏடுகளுக்கு மதிப்புரைக்காகப் படிகள் அனுப்பப்படுவதில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே விற்பனை - விநியோக அமைப்பைக் கொண்டவையாகவும் இவை இருப்பதில்லை. விளைவாக, மறைவாக நமக்குள்ளே பேசும் பழங்கதைகளாக இந்நூல்களெல்லாம் மட்கி, நூலாம்படை அடைந்து கிடக்கின்றன. ‘இவ்வளவு மொழிபெயர்த்திருக்கிறேன். ஒருவராயினும் இவற்றைப் படித்து பார்த்து நிறைகுறைகளைக் கூறவில்லையே' என்ற அ.தட்சிணாமூர்த்தியின் சொற்கள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தப் போக்கிற்கு விதிவிலக்காக உள்ளவர் ம.இலெ.தங்கப்பா. இவரும் Hues and Harmonies from an Ancient Land என்ற பெயரில் சங்கப் பாடல் மொழிபெயர்ப்புகளை 1970-ல் தாமாகவே வெளியிட்டவர்தான். அதன் பின்னரே இவ்வழியைத் தவிர்த்தார். தகுதிவாய்ந்த ஆங்கிலம் பதிப்பங்களின்வழித் தம் மொழியாக்கங்களை வெளியிட வேண்டும் என்ற கால் நூற்றாண்டு முயற்சி 2010இல் கனிந்தது. பெங்குவின் பதிப்பகம் இவருடைய இரண்டு மொழியாக்க நூல்களை வெளியிட்டது.

தேர்ந்தெடுத்த சங்கப் பாடல்களின் தொகுப்பான Love Stands Alone-ஐ வெளியிட்ட பெங்குவினின் தலைமைப் பதிப்பாசிரியர் ரவி சிங், தலைப்பே தம்மை ஈர்த்துவிட்டதாகக் கூறினார். நூலாக்கத்தை மேற்பார்த்த பதிப்பாசிரியர் இரா.சிவப்ரியா அதன் ஒவ்வொரு கட்டத்திலும் தெரிவித்த கருத்துரைகள் நூலை மெருகேற்றின. கையெழுத்துப் படியை மேலாய்வு செய்த, இந்தியாவின் முக்கிய ஆங்கிலக் கவிஞரும், இந்திய ஆங்கில இலக்கியத்தின் வரலாற்றாசிரியருமான அரவிந்த கிருஷ்ண மெஹ்ரோத்ரா, இவ்வளவு காலம் தங்கப்பா எங்கே இருந்தார் என்று வியந்ததோடு, மொழிபெயர்ப்பை விதந்தோதி நூலுக்குப் பின்னட்டைக் குறிப்பை எழுதினார். சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் விட்னி காக்ஸ் அவரை வழிமொழிந்தார். ‘தி இந்து', ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்', ‘டெஹல்கா' முதலான ஆங்கில ஏடுகளில் வெளியான மதிப்புரைகள் ஏ.கே.ராமாநுஜனோடு ஒப்பிட்டுப் பேசின. மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன், கன்னட இலக்கியவாணர் ஹெச்.எஸ்.சிவபரகாஷ், மராட்டி நாடக ஆசிரியர் ஜி.பி.தேஷ்பாண்டே போன்றோர் தங்கப்பாவின் மொழிப்பெயர்ப்பின் வழியே சங்க இலக்கியச் சிறப்பை உணர்ந்ததாகப் பாராட்டினர். மொழிபெயர்ப்பின் சிறப்புக்கு உரைகல் தமிழறியாத பிறமொழி இலக்கியவாதிகளும் வாசகர்களுமாகவே இருக்க முடியும். இந்த வெற்றியைத் தொடர்ந்து தங்கப்பா மொழிபெயர்த்த முத்தொள்ளாயிரமும் Red Lilies and Frightened Birds என்ற பெயரில் பெங்குவின் கிளாசிக்ஸ் வரிசையில் வெளிவந்தது.

ஆங்கில மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாடமி விருது (2012) தங்கப்பாவுக்குக் கிடைத்தது. தேர்வுக் குழுவில் தமிழ் நண்டு ஒன்றுகூட இல்லை. தேர்வுக் குழுவின் தலைவர், கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் சுப்ரியா சௌத்ரி, சங்கப் பாடல்களைப் படிக்க நேர்ந்தது தம் பேறு என்று மின்னஞ்சல் அனுப்பினார். எந்தத் தமிழ் இதழும் தங்கப்பா விருது பெற்றதை ஒரு செய்தியாகக்கூட வெளியிடவில்லை!

அமெரிக்காவில் வாழும் வைதேகி ஹெர்பர்ட் தமக்கிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தக்க முறையில் தம் மொழியாக்கங்களை வெளியிட்டிருக்கலாம். அவருடைய மொழிபெயர்ப்பு எவ்வளவு தட்டையான மொழியில், இயந்திரகதியில் அமைந்துள்ளது என்பதை இலக்கிய நுட்பம் அறிந்தவர்கள் உணர்வார்கள். மேலை இலக்கியங்களை நன்கறிந்த, வைதேகி ஹெர்பர்ட்டின் புரவலர் அ.முத்துலிங்கம், ‘மூலத்தை விஞ்சிய மொழிபெயர்ப்பு' என்று புகழுரைத்திருக்கிறார்! சங்க இலக்கியத்தை விடச் சிறப்பாக எழுதக்கூடியவர் அதை மொழிபெயர்ப்பானேன்!

இரண்டொரு நூல்களை மொழிபெயர்ப்பதற்கே சிலருக்கு ஒரு வாழ்நாள் போதவில்லை. எட்டுத்தொகையையும் பத்துப்பாட்டையும் வைதேகி ஹெர்பர்ட் தனிஒருவராகவே முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார் (முத்தொள்ளாயிரம் கொசுறு). தேவார திருவாசகங்களுக்கு உரை எழுதுங்கள், உரை எழுதுங்கள் என்று ஒரு சைவ அன்பர் வித்துவான் தியாகராச செட்டியாரை மிகவும் நச்சரித்தபொழுது, காவிரியில் குதித்துவிடுவேன் என்று அவர் பதிலளித்தாராம். அறிஞர்கள் அஞ்சுவர். அல்லாதார் துணிவர்.

Related Posts Plugin for WordPress, Blogger...