July 2, 2015

விலை -சுஜாதா: கடவுளின் எல்லையற்ற கருணை

சுஜாதாவின் கதைகளைப் படித்து ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வாசிப்பின் ஆரம்பக் கட்டத்தில் அவரை நிறைய படித்திருக்கிறேன். அவரது கொலையுதிர் காலத்தை வாரந்தோறும் சேகரித்து பைண்டு செய்து வைத்துப் படித்த காலங்கள் இன்னும் மறக்கவில்லை. அது ஒரு காலம். பல்வேறு படைப்பாளிகளின் சிறுகதைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை எழுதிவரும் நிலையில் அவரது விலை கதையை வாசிக்க நேர்ந்தது. வழக்கமான சுஜாதா பாணி கதையையும் மீறி இந்தக் கதை எனக்குப் பிடித்திருக்கிறது.

ஸ்ரீரங்கம் தெற்கு வீதியில் பங்கஜா ஹோட்டலை புதிதாகத் தொடங்குகிறார் சோமசேகர். ஹோட்டலை ஒட்டினாற்போல் சுருள் ஓடு போட்ட வீட்டில் 55 வயதான ரங்கய்யங்கார் தன் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வருகிறார். தன் ஹோட்டலுக்கு சௌகர்யமாக இருக்குமே என்று ரங்கய்யங்கார் இருக்கும் வீட்டை விலைக்கு கேட்கிறார் சோமசேகர். அவரோ இது தன் வீடு இல்லை என்றும் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் மறுத்துவிடுகிறார். ரூபாய் எண்பதாயிரம் வரையிலும் தருவதாகச் சொல்லியும் ரங்கய்யங்கார் மறுத்துவிடுகிறார். அவர் மனைவிக்கு விற்பதில் விருப்பம். தன் பெண்களை கரையேற்ற உதவும் என்று நினைக்கிறார். ஆனால் யார் சொல்லியும் கேட்பதாக இல்லை அய்யங்கார். வீடு தன்னுடையதில்லை பெருமாளுடையது என்று திருப்பித் திருப்பிச் சொல்கிறார் அவர்.

எல்லோரும் சொல்லச்சொல்ல அவருக்கே சபலம் தட்டுகிறது. பெருமாளிடமே பூ போட்டு பார்க்கிறார். விற்கலாம் என்று வருகிறது. தன் மனதின் பாரம் நீங்கியவராக வீட்டை விற்றுவிடுவது என்று முடிவுசெய்கிறார். இந்நிலையில் சோமசேகர் வக்கீல் பாச்சாவை பார்த்து அவரிடம் தன் ஆசையைச் சொல்கிறார். பாச்சாவும் அய்யங்காரை பார்க்க, அய்யங்கார் தான் விற்றுவிட சம்மதிப்பதாகச் சொல்கிறார். ஆனால் அதற்கான பத்திரத்தைத் தேடும்போது, பத்திரம் இல்லை என்பதும் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட குறிப்பு மட்டுமே இருப்பதை பாச்சா அறிகிறார். வீடு கோயிலுக்குத்தான் சொந்தம் என்பதையும், இதில் அய்யங்காருக்கு எந்த பாத்தியதையும் இல்லை என்று பாச்சா சோமசேகரிடம் சொல்கிறார். அய்யங்காரை வீட்டைவிட்டு காலிசெய்ய கோயில் மூலம் நோட்டீஸ் விட ஏற்பாடு செய்கிறேன் என்று பாச்சா சொல்லி, அவ்வாறே அய்யங்காருக்கு நோட்டீஸ் வருகிறது.

இதனால் அதிர்ச்சியடையும் அய்யங்கார் வீடு தன்னுடையதுதான் என்று வாதிடுகிறார். ஆனால் கோயில் நிர்வாகம் உண்மை நிலையை எடுத்துச்சொல்ல, அய்யங்கார் தன் தவறுதான் என்று அறிந்து வீட்டை காலிசெய்கிறார். அடுத்த ஒரு வாரத்தில் வீடு தரைமட்டமாகிறது.

மனித மனதின் சலனத்தையும் சபலத்தையும் இந்தக் கதையில் சுஜாதா அற்புதமாகக் காட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் வீடு தன்னுடையதில்லை என்று சொல்லும் அய்யங்கார் அதை தான் விற்கமுடியாது என்ற நிலையில் வீடு தன்னுடையுதுதான் என்று சொல்கிறார். அவரை மாற்றியது எது? தன் வாழ்க்கையை கடவுளின் மீது நம்பிக்கை வைத்து அவரிடம் ஒப்படைத்துவிட்ட நிலையில் அவரால் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட முடியவில்லை. ஆனால் கடவள் மீதான அவரது நம்பிக்கை பிறகு சொத்து என்ற நிலையில் வீட்டின்பேரில் மாறிவிடுகிறது. அதுவரை வீட்டின் மீது எந்த பற்றுதலும் வைக்காத அவர் பற்றுதல் வைத்தனாலேயே இவ்வாறு மாறி பேச நேர்கிறது. இருந்தும் கடைசியில் தன் தவறை உணர்ந்து வருந்துகிறார் அவர்.

இந்தக் கதையின் மையத்தை சுஜாதா கோயிலில் நடக்கும் உபன்யாசத்தில் சொல்கிறார். போகிறபோக்கில் நாம் அதை கவனிக்கத் தவறிவிடுகிறோம். உபன்யாசகர் சொல்கிறார்:
“ஒரு சேதன சரீரம், அதனுள்ளிருந்து, அதை இயக்கும் சேதனனுக்கு ஜீவாத்மாவுக்குச் சொத்தாய் அவன் இஷ்டப்படி நடந்துகொள்வதாய், எல்லா நலன்களும் அவனையே நோக்கி இருப்பதாய் உள்ளது போல ஜீவனும் தனக்கு அந்தராத்மாவான நாராயணனையே ஸ்வாமியாய் தனது நலனைப் பேணுவதில் அக்கறையுள்ளவரில் முதல்வனாய் உணர வேண்டும்.”
கடவுள் நம்பிக்கை இரண்டு தரப்பிலிருந்தும் இவ்வாறு mutual-ஆக இருக்கவேண்டும். கடைசியில் தன் தவறை உணர்ந்து வருந்தியும் அய்யங்கார் வீட்டைவிட்டு வெளியேறும்படி நோ்கிறதே? அவர் கடவுள் மீது வைத்த நம்பிக்கை வீணாகிவிட்டது என்று சொல்லலாமா? அப்படி இல்லை. அதற்காகத்தான் கதையி்ன் கடைசி வரியை சுஜாதா இவ்வாறு அமைத்திருக்கிறார்.

“அண்ணே! தொட்ட உடனே உதிருது அண்ணே!”

அந்த வரியையும் உபன்யாசகர் சொல்வதையம் இணைக்கும்போது நாம் ஒன்று புரிந்துகொள்கிறோம். அந்த வீடு எப்போதும் விழத்தயாராய் இருக்கிறது. எனவே அந்த வீட்டை விட்டு வெளியேறுவதன் மூலம் அவர் குடும்ப உயிர்கள் தப்பிக்கின்றன. அந்த வீட்டுக்கு விலையாக அய்யங்கார் பெறுவது தன் குடும்பத்தினரின் உயிர்கள் என்பது புரியும்போது, சுஜாதாவின் இந்தக் கதை முக்கியமானதாகிறது.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஏப்ரல் 26, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...