July 14, 2015

வண்ணதாசனின் ஐந்து கதைகள்: தூரிகையைப் பற்றிப் படரும் ஓவியம்

வண்ணதாசன் கதைகள் கச்சிதமான வடிவமும், செய்நேர்த்தியும் கொண்டவை. கதைகளை நடத்த அவர் எடுத்தாளும் வார்த்தைகளும், வாக்கியங்களும் இயல்பாக, அதேசமயம் அபாரமாகவும் அமைந்து வாசிப்பனுபவத்தை மிகுத்துபவை. அவற்றை வாசிக்கும்போது, பேனா எனும் தூரிகையைப் பற்றிப் படர்ந்த ஓவியமென அவைகள் நம் சிந்தையையும் மனதையும் ஆக்கிரமிக்கும். காட்சிகளைச் சித்தரிக்க அவர் கையாளும் மொழியின் விவரணைகள் அதனாலேயே ஒர் ஓவித்தை பார்த்த, ரசித்த உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது. எனவேதான் அவர் கதைகள் வாசிக்குந்தோறும் திகட்டாதவையாக இன்றும் இருக்கின்றன. என்றென்றும் அப்படியே இருக்கும் என்பதும் நிச்சயம். நான் முன்னர் தனித்தனியாக எழுதிய ஐந்து பதிவுகளையும், கதைகளையும் ஒருசேர வாசித்தபோது அந்த உணர்வே என்னுள் எழுந்தது. வாசகர்களும் அப்படியே உணர்வார்கள் எனக் கருதுகிறேன்.

1. நிலை:

அன்று ஊரில் தேர்த்திருவிழா. ஆச்சியின் வீட்டில் எல்லோரும் தேரை பார்க்க கிளம்புகிறார்கள். சீக்காய் கிடக்கும் பெரிய ஆச்சி மட்டும் வீட்டில் இருக்கிறாள். அவளைப் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலையையும் செய்யச்சொல்லிவிட்டு அனைவரும் சென்றுவிடுகிறார்கள். வேலைக்கார சிறுமியான கோமுவுக்கும் தேரை பார்க்க ஆசைதான். ஆனால் வேலை கிடக்கிறதே? தண்ணீர் பிடிக்கவேண்டும், துணி துவைக்கவேண்டும், மாவு ஆட்டவேண்டும், தொழுவத்தில் இருக்கும் கன்றுக்குட்டியைக் கவனிக்கவேண்டும். எத்தனை வேலைகள்! அதைவிட்டுவிட்டு திருவிழா, தேர் என்று போகமுடியமா?

அந்த வீதியில் ஏறக்குறைய எல்லோருமே சென்றுவிடுகிறார்கள்.

எத்தனைவிதமான கடைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு முளைத்திருக்கும். அதையெல்லாம் பார்த்துதான் ரசிக்கமுடிமா? அவள் வேலைக்காரிதானே? ஓயாமல் ஒழியாமல் பம்பரமாக வேலை செய்யவது தவிர வேறு சிந்தனை அவளுக்கு இருக்கமுடியுமா? இருந்தும் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறதே என்னசெய்வது?

தேரையும் விழாபற்றிய கற்பனையிலும் வேலையை செய்து முடிக்கிறாள் கோமு.

பெரிய ஆச்சி, ”நீயும் போய்விட்டு வா” என்கிறாள்.

அதற்குள் இருட்டத்தொடங்கிவிடுகிறது.

அவள் சந்தோஷமாகக் கிளம்ப ஆயத்தமாகிறாள். அப்போது ஆச்சியும் வீட்டு உறுப்பினர்களும் வந்துவிடுகிறார்கள். தேர் கடந்த ஒன்பது வருஷமாக ஒரே நாளில் நிலைக்கு வராமல் இருந்தது இந்த வருஷம் வந்துவிட்டது என்று பேசிக்கொண்டே வருகிறார்கள்.

வந்ததும் வராததுமாக, “என்னடி எல்லாவேலையும் முடிச்சிட்டியா? துவையலுக்கு பொரிகடலை வேண்டும் வாங்கிவா” என்று உத்தரவு வருகிறது. கோமுவும் கடைக்குக் கிளம்புகிறாள். கடையில் பொரிகடைலை வாங்கி்க்கொண்டு தேரை பார்க்கிறாள். தேர் நிலைக்கு வந்து நின்றிருந்தது. அதையே வியப்பாக பார்த்துக்கொண்டு நிற்கிறாள் கோமு. அப்போது தேர் நிலையத்துக்குள் இருந்து கோமுவையே அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தது.

இந்தக் கதை வேலைக்கார சிறுமியின் ஆசைகளையம் அபிலாஷைகளையும், அவளின் கஷ்டங்களையும் சொல்கிறது என்பது மாத்திரமல்ல. மொத்த கதையின் போக்கையும் சிந்தனையையும் அந்த கடைசி வாக்கியத்தில் நிலைநிறுத்துகிறார் வண்ணதாசன். தேர் கோமுவை அசையாமல் பார்க்கவேண்டிய அவசியம் என்ன? தேர் ஊர் பூராவும் சுற்றி நிலைக்கு வந்துவிட்டது. அதை எல்லோரும் வியப்புடன் பார்க்கிறார்கள். ஆனால் தேர்போல் சுற்றி வேலைசெய்யும் கோமு இப்போதுதான் நிற்கிறாள். எனவே அவளை தேர் வியப்புடன் பார்க்கிறது. தேர் கூட இனி அடுத்த திருவிழாவில்தான் சுற்ற ஆரம்பிக்கும். ஆனால் கோமுவோ தினமும் சுற்றிக்கொண்டிருப்பாள். அவள் தன் நிலைக்குத் திரும்பி நிற்கும் காலம் எப்போது வரும்?


2. சமவெளி 3. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்:

மனித மனம் உணர்வுகளின் சங்கமம். ஏதோ ஒரு சந்தோஷம் தென்றலாய் மனதை வந்து வருடுவதும், ஏதோ ஒரு சோகம் மனதை கசக்கிப் பிழிவதும் வாழ்க்கையில் நாம் அனுதினமும் அனுபவிப்பவையே. சில சமயம் சந்தோஷம் சில சமயம் துக்கம். காரணமே இல்லாமல் கூட இவ்வுணர்வுகள் மாறிமாறி நம் மனதை ஆக்ரமிக்கிறது. எப்போது எந்த உணர்வு தலைதூக்கும் என்று கணிக்க முடியாது. அகக்காரணங்களை விடவும் புறக்காரணிகளே நம் மனதை பெரிதும் பாதிப்படைய வைக்கின்றன. ஏதோ ஒரு சொல், செயல், நம் மனதை பெண்டுலம்போல் துக்கத்துக்கும் சந்தோஷத்துக்குமிடையே ஆட்டுவிக்கிறது. அந்த சொல் அல்லது செயலின் புற்காரணிகளாய் வெளிமனிதர்களே இருக்கிறார்கள். நம் உணர்வுகளை பாதிப்பதாய் அவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன. சமூக உறவு, குடும்ப உறவு அனைத்திலும் உள்ள நம்மைச்சார்ந்த மனிதர்களே நம்மை இன்பத்துக்கும் துன்பத்துக்குமிடையே அல்லாடவைக்கிறார்கள் என்பது விசித்திரமான உண்மை.

மனித மனதின் இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதாக வண்ணதாசன் அவர்களின் சமவெளி கதையும் தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் கதையும் அமைந்திருக்கிறது. மனித மனதை நுட்பமாக அவதானித்து இக்கதைகளை வண்ணதாசன் படைத்திருக்கிறார்.

சமவெளி கதையில் ஒரு பெண்ணின் ஓவியத்தை வரையும் ஓவியன் அதில் லயித்து, தன் வாழ்க்கைக்கான நம்பிக்கையை அதிலிருந்து பெற்று உற்சாகமடைவதும், ஓவியத்தைப் பற்றிய அவன் மனைவியின் கருத்து, அவ்வுணர்வுகளிலிருந்து அவனை கீழே புரட்டிப்போடுவதையும் கச்சிதமாக சித்தரித்திருக்கிறார். .

அடுத்து தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் கதை.

சுந்தரம் தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு மாமா வீட்டுக்குச்செல்கிறான். மனைவி இல்லாமல் அவன் மட்டும் செல்கிறான். அவன் மனதில் காரணமில்லாத சந்தோஷம் புரள்கிறது. பேருந்தில் பயணிக்கும்போதும், மாமா வீட்டை அடையும்போதும் அவன் மனதில் அதே சந்தோஷம் ஸ்திரமாய் அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் செல்லும்போதும் அவனது பெரிய கொழுந்தியாள், “சின்னக்குட்டீ” என்று ஓடிவருவாள். அவளைத்தொடர்ந்து அவனின் அடுத்த கொழுந்தியாளும் வருவாள். குழந்தையும் “கெக்கெக்“ என சிரித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும். இது வழக்கமாக நடப்பது.

ஆனால் இந்த முறை வெளியே வந்தவள், “அக்கா வரலையா?” என்று கேட்கிறாள். இதனால் அவன் சந்தோஷம் வடிந்துவிடுகிறது. தான் குழந்தையோடு வந்திருப்பதை வரவேற்காமல் தன் மனைவியைப் பற்றி விசாரிப்பது அவனுக்கு எரிச்சலைத் தருகிறது. குழந்தையை அவளிடம் தரக்கூடாது என முடிவு செய்து, வீட்டிற்குள் செல்லாமல் அப்படியே ஊருக்குத் திரும்புகிறான். புற்ப்பட்டபோது அவன் மனதில் இருந்த சந்தோஷம் மடிந்துவிடுகிறது. குழந்தை பஸ்ஸில் அழுகிறது. அதை சமாதானப்படுத்த முடியாமல் அவன் தவிக்கிறான். அப்போது ஒரு பெரியவர் குழந்தையை வாங்கி சமாதானம் செய்து தூங்கவைக்கிறார். தன் குழந்தையை எதிர்பார்த்து மனைவி காத்திருப்பாள் என்ற எண்ணம் அவனுக்குள் மீண்டும் சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது.

நம் வாழ்வில் நாம் இப்படியாக உணர்ந்த தருணங்கள் அநேகம் இருக்கலாம். அதை இக்கதைகளில் நாம் கண்டடையும்போது நம் மனம் ஆழந்த அமைதியையும், அமைதியின்மையையும் ஒருசேர அனுபவிக்கிறது.

4. தனுமை:

ஞானப்பன் வாழ்வில் எதிர்படும் டெய்ஸி என்ற வாத்திச்சி, கால் ஊனமான தனு என்ற இரண்டு பெண்களைப் பற்றிய கதை தனுமை. தினமும் கல்லூரிக்குச் செல்லும் தனுவை ஞானப்பன் பார்க்கிறான். டெய்ஸி வாத்திச்சியையும் பார்க்கிறான். திரட்சியான தேகம் கொண்ட வாத்திச்சியைவிட கால் ஊனமான தனுவின் மீது அவனுக்கு ஈடுபாடு ஏற்படுகிறது. வாத்திச்சியின் மீது அவனுக்கு சொல்லமுடியாத வெறுப்புதான் வருகிறது. இது வாத்திச்சிக்கும் தெரிகிறது. ஒரு மழை நாளான்று அவள் அவனிடம் இதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்கிறாள் என்பதாகக் கதை முடிகிறது.

பெண்களுக்கு அவர்களின் அழகையும், கவர்ச்சியையும் விட வேறு ஏதோ ஒன்று பிரதானமாகத் தேவைப்படுகிறது. அது இல்லாவிட்டால் இந்த அழகும் கவர்ச்சியும் இருந்தும் பயனில்லை என்பதை இந்தக் கதை சொல்கிறது. அது என்ன என்பதை தனுவின் பெயரோடு மை விகுதியை இணைத்து கதையின் தலைப்பாக வைத்து நம்மைப் புரிந்துகொள்ளச் செய்கிறார் வண்ணதாசன்.

கதையின் ஓரிடத்தில் ஞானப்பன் கிதாரை இசைத்து ஏசுவின் பாடலைப் பாடுகிறான். அந்த பாடல் உயிரின்றி, அலுமினியத் தட்டும தம்ளருமாக கோதுமை உப்புமாவுக்கும், மக்காச்சோள கஞ்சிக்கும் எதிர்பார்த்திருக்கும் உணர்வை அவனுக்குத் தருகிறது. கடவுள் என்ற தத்துவம் வயிற்றுப்பாட்டைத் தீர்க்கும் வெறும் கருவியாக மட்டுமே கையாளப்படுவதையும், நம் மனோபாவத்துக்கும் ஆசைக்கும் ஏற்பவே நாம் கடவுளையும் காண்கிறோம் என்பதையும் இதன் மூலம் வண்ணதாசன் சுட்டிக்காட்டுகிறார். அந்த பாடல் ஞானப்பனுக்குத் தரும் உணர்வை வண்ணதாசன் பின்வருமாறு சொல்கிறார்:

இசை என்பது நம்மை வானத்தில் சிறகடித்து பறக்கவைப்பதாக இருக்கவேண்டுமே அல்லாமல் நம்மை மண்ணுக்குள் புதைப்பதாக இருக்கக்கூடாது என்பதை இதன் மூலம் நமக்குப் புரியவைக்கிறார் வண்ணதாசன். டெய்ஸியின் அருகாமை ஞானப்பனுக்கு ஒரு மோசமான இசையாகவும், தனு ஒரு நல்ல இசையாகவும் படுகிறது.


5. வடிகால்:

வடிகால் வண்ணதாசனின் சிறந்த கதை என்று சொல்லலாம். தொடக்கம், நடு, முடிவு என்று கச்சிதமாக அமைந்த கதை. கதையின் ஆரம்பத்தில் சுந்தரத்திற்கு தன் அப்பாவின் மீது ஏன் கோபம் வருகிறது என்பதை பூடகமாகச் சொல்லியவாறு கதையை நகர்த்துகிறார். அதற்கான காரணத்தை எதிர்பார்த்து நாமும் கதையுடன் பயணிக்கிறோம். கதையின் நடுவில் சுந்தரம் இறந்து போகிறான். நாம் சற்றே பிடிபடாத தன்மையுடன் கதையை வாசிக்கிறோம். வாசிக்க வாசிக்க அதன் முடிவை நோக்கி நம் மனம் விரைந்து சென்றுவிடுகிறது. ஆனால் அது எப்படி வெளிப்படும் என்பதை நாம் உணர முடியாமல் கதையை மேற்கொண்டு வாசித்து, அட இப்படித்தான் என்று கண்டடைகிறோம்.

ஒவ்வொரு மனிதனின் துக்கமும் அவனளவில்தான். அடுத்தவன் துக்கம் நமக்கு வெறும் செய்திதானே தவிர, அதில் நம் மனம் பங்கு கொள்வதில்லை. ஒவ்வொரு துக்க வீட்டிலும் அழுகிறவர்கள் தங்கள் துக்கத்திற்காகத்தான் அழுகிறார்களே அல்லாமல் பிறரின் துக்கத்திற்காக அல்ல. தங்கள் துக்கத்தை ஆசுவாசப் படுத்தும் வடிகாலாகத்தான் அடுத்தவரின் துக்கம் நமக்குப் பயன்படுகிறது என்பதை வண்ணதாசன் கச்சிதமாகவும் சிறப்பாகவும் இந்தக் கதையில் சொல்லியிருக்கிறார்.

வண்ணதாசனின் நடையால், அவர் சித்தரிக்கும் காட்சிகள், முப்பரிமாண உருவம் கொண்டு நம்முன் துலக்கம் பெறுகின்றன. அழகானதும் நுணக்கமானதுமான காட்சிகளின் சித்தரிப்பு நம் வாசிப்பை இயல்பானதாகவும் எளிதானதாகவும் ஆக்குகிறது. அவரின் பெரும்மான்மையான கதைகளில் ஓவியம் அல்லது அது பற்றிய செய்தி நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இந்தக் கதையில் அப்படி எதுவும் இல்லை எனலாம். அதற்கு மாற்றாக மொத்த கதையின் வடிவமும் ஓவியமாக நம்முன் விரிகிறது.


கதையில் வர்ணணைகளின் கவித்துவமான இந்தப் பகுதி நம்முள் அபாரமான கற்பனையைத் தோற்றுவிக்கிறது. சிறுகதைகளில் வெறும் கதையையும், கதையின் போக்கையும் மட்டுமே படிக்க முடிகிற நிலையில் வண்ணதாசனின் எல்லாக் கதைகளிலும் இத்தகைய ரசனையுடன் கூடிய வர்ணணைகளை வாசிக்கமுடிவது ஓர் அலாதியான உணர்வுதான்.

Related Posts Plugin for WordPress, Blogger...