சில வரிகள் சில வாக்கியங்கள்

நாம் எத்தனையோ படிக்கிறோம். ஆனால் படித்ததில் சில வரிகள் அல்லது வாக்கியங்கள் நம்மைப் பெரிதும் பாதித்ததாக இருக்கும். பல சமயங்களில் அந்த வரிகள் நமக்கு ஆறுதல் தந்தவையாகவும், வாழக்கையில் உத்வேகத்தைக் கொடுத்த தூண்டுதலாகவும், வாழ்க்கை என்ற சிக்கலைப் புரிந்துகொள்ளச் செய்த ஆசானாகவும் இருந்திருக்கும்.  அவைகள் நம் வாழக்கையை அதன் இயல்பான போக்கில் முன்னெடுத்துச் செல்ல பெரும் உதவியாக இருந்திருக்கும். அப்படியாக என்னை பாதித்த சில வரிகளையும் வாக்கியங்களையும் பற்றியே இந்தப் பதிவு.
நட்புறவுகளைப் பிசிறுகளற்றும் சிடுக்குகளற்றும் சாதுர்யங்களற்றும் பேணக்கூடியவர் கோபி. அவர் வாழ்வின் அகராதியில் சாதுர்யம் என்ற சொல்லுக்கே இடமில்லை. இப்படியான ஒரு ஸ்திதி எனக்கெல்லாம் ஒருபோதும் வாய்க்கப் போவதில்லை.
கோபிகிருஷ்ணனின் குடும்பத்தாருக்கு நிதி உதவி அளித்தபோது சி.மோகன் வாசித்த கட்டுரையின் இறுதி வாக்கியங்கள் இவை. இந்த வாக்கியங்கள் நம் மனதில் ஏற்படுத்தும் கோபிகிருஷ்ணனின் பிம்பம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. அந்த வாக்கியங்களில் சாதுர்யம் என்ற சொல் மகத்துவம் வாய்ந்தது. அது நம் மனதில் ஏற்படுத்தும் எண்ணச் சிதறல்கள் அநேகம். அந்த சொல் உடனடியாக நம்மைப் பற்றிய பிம்பத்தை ஒரு கணம் உற்று நோக்கச் செய்கிறது. நாம் எத்தகைய சாதுர்யம் கொண்டவர்கள் என்பது பற்றி மனம் யோசிக்க ஆரம்பிக்கிறது. மனம் தரும் பதில் பல சமயங்களில் நமக்கே ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருப்பதில்லை. அந்த ஏற்றுக்கொள்ள முடியாததன் மூலமாக கோபிகிருஷ்ணனின் பிம்பம் நம் உள்ளத்தில் ஓங்கி நிற்கிறது.

இப்படியாக சில வரிகள், வாக்கியங்கள் நம்மை, நம் மனதை பெரிதும் ஏன் பாதிக்க வேண்டும்? அந்த வாக்கியங்கள் நம் சுயபிம்பத்தை தராசுத் தட்டில் நிறுத்திப் பார்க்கிறது. அந்த வாக்கியம் அல்லது வரிக்கு நேர்மாறாக நாம் இருப்பதை அறிந்துகொள்கிறோம். அதனால்தான் அவைகள் நம்மை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன. நம்மை பிரதிபலிக்கும் வாக்கியங்கள் கூட இத்தகைய பாதிப்பை நம்மிடம் ஏற்படுத்தச் சக்தியற்றவை. நமக்கு மாற்றான ஒரு பிம்பத்தை நாம் காணும்போதே, “என்ன மனிதன் அவன்” என்ற அவனுடனான நம் ஒப்பீடு தொடங்குகிறது.

அப்துல் காலம் அவர்ககளின் அக்கினிச் சிறகுகள் அது வெளியான காலத்தில் படித்தபோது, அதன் ஒரு கட்டத்தில் நான் பெரிதும் மனத் தூண்டுதல் அடைந்தேன். அது ஏற்படுத்திய தாக்கம் இன்றும் என்னைத் தொடர்ந்து வருகிறது. அது என்னை நோக்கி, ஏதேதோ கேள்வியைச் சதா கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நான்தான் காது கேளாதவனாக இருக்கிறேன்.
முன்பு வாழந்து வந்தது போலவே இப்போதும் பத்தடி அகலமும் பன்னிரண்டு அடி நீளமும் கொண்ட ஓர் அறையில்தான் வசித்து வந்தேன். அறை முழுவதையும் புத்தகங்களும், தாள்களும்தான் அலங்கரித்தன. வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஒன்றிரண்டு மேசை, நாற்காலிகளும் இருந்தன. அப்போது திருவனந்தபுரத்தில் எனது அறை இருந்தது. இந்த சமையத்திலோ அது ஹைதராபாத்தில் இருந்தது.
இவற்றை தொடர்ந்து வரும் கடைசிப் பகுதி இதனோடு மிகவும் பொருந்திப் போய் அவரின் தனிமையையும், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பொருளையும் நம் மனதில் சம்மட்டி கொண்டு அடிப்பதாக இருக்கிறது. என்ன இருந்தாலும் உயர்ந்த மனிதர்கள் அப்படித்தான். சாமனியர்களான நாம் இப்படித்தானே இருக்க முடியும். (இப்படியாக எல்லாவற்றுக்கும் நாம் சமாதானமான பதில் வைத்திருக்கிறோம்).
இந்தக் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்குப்படி எனக்கு எந்த பரம்பரைச் சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டி வைக்கவில்லை. என்னிடம் எதுவுமே கிடையாது. குடும்பம், மகன்கள், மகள்கள் யாருமே எனக்குக் கிடையாது.
அவர் என்றுமே வீட்டில் வசித்ததில்லை. அவர் இருந்தது எப்போதுமே அறைதான். காரணம் அவர் தனியன். குடும்பமாக இருப்பவன்தான் வீட்டில் வசிக்க முடியும். தனியாக இருப்பவன் எங்கிருப்பினும் அது அறைதான். சி.மோகனின் எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை என்ற கவிதைதான் இதை எழுதும் இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

ந.முருகேசபாண்டியன் ப.சிங்காரம் குறித்த வாழ்க்கைக் குறிப்புகளை புயலிலே ஒரு தோணி நாவலில் எழுதியுள்ளார். அதன் கடைசி வரிகள் இவ்வாறு அமைகின்றன.
அவரது சடலம் தத்தநேரி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் தனது இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று கூறியிருந்தாராம்.
இந்த வரிகள் நம்முள் எத்தகைய தாக்கத்தையும் அதிர்வையும் ஏற்படுத்துகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள். மனித வாழ்க்கையின் மொத்த சித்திரத்தையும் இவ்வரிகள் தன்னகத்தே கொண்டு, நம்மை நம் மனதை அலைக்கழிப்பதாக இருக்கின்றன.

விஷ்ணுபுரம் நாவலின் முன்னுரையில் ஜெயமோகன் எழுதிய இவ்வரிகளைப் பாருங்கள்:
அன்று முழுக்க ஆற்றங்கரை மணலில் அமர்ந்திருந்தேன். இரவில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வெளிப்பிரகாரத்தில் படுத்துக்கொண்டேன். ஏற்கனவே அங்கு சிலர் படுத்திருந்தினர். இரவு இரண்டாம் ஆட்டம் விட்டு சிலர் வந்து இருளுக்குள் படுத்துக்கொண்டனர். ஒரு முதியவர் பெருமாளைப் பற்றிப் பேசினார். மூன்று கருவறைகளை நிரப்பியபடி மல்லாந்து படுத்திருக்கும் ஆதி கேசவன் ஒரு யுகம் முடியும்போது புரண்டு படுப்பார் என்று அக்குரல் கூறியபோது, பெரியதோர் மன அதிர்வை அடைந்தேன். அவர்கள் குரட்டைவிட ஆரம்பித்த பிறகும் நான் தூங்கவில்லை. என் மனதிற்குள் சிலவருடங்களாக எழுந்திருந்த வினாக்கள் அப்பெரும் சிலையின் பாதங்களில் மோதி நுரைத்துச் சுழிப்பதாகப் பட்டது. மறுநாள் காலையில் கிளம்பினேன். வீடு நிரந்தரமாக அந்நியமாயிற்று.
நான் முதன்முதலாக இதை வாசித்தபோது நானும் அவரைப்போலவே மனத்தாக்கம் பெற்றேன். அவரின் அனுபவம் நேரடியானது. நான் பெற்றதோ இவ்வரிகளின் மூலம். அதுவே என்னை விஷ்ணுபுரத்தை வாசிக்கத் தூண்டியது. என் மனதையும் எனனையும் புரட்டிப்போட்ட வரிகள் இவை. கடவுள் மனிதர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டுவிடுகிறார் என்பதன் வெளிப்பாடாக என்னுள் அந்த வாக்கியங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் நாவலின் முன்னுரையில் மாலன் எழுதிய சில வரிகள் என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. நான் வாழ்க்கைப் போராட்டத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்த காலமது. வாழ்க்கையின் எல்லா வாசல்களும் அடைபட்டுவிட்டதாக எண்ணி, எங்கேயாவது எதிலாவது மாற்றம் ஏற்படாத என்று பரிதவித்துக்கொண்டிருந்த நேரம். அப்போது இவ்வரிகளை வாசிக்க நேர்ந்தது:
எல்லாமே இயற்கை, இயல்பு, சுபாவம் அதைப் புரிந்து கொள் முதலில். இந்தப் புரிவு இல்லை என்றால் என்ன கஷ்டம்? புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை அதன் இயல்பை புரிந்துகொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம்? ஜெயிப்பது முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்தப் புரிவு இல்லையேல் இருத்தலே ஹிம்சையாகும். எதிலும் அமைதியிழந்து எப்போதும் சுலபமின்றி இருந்தால் வாழ்க்கை நரகமாகிவிடாதா?  தன்னையும் துன்புறுத்திக் கொண்டு, உடன் வாழ்கிறவர்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தால் ஒரு மொத்த சமூகமே நாசப்பட்டுப் போகாதா?
இதை வாசித்த பின் நானே எனக்கு பாரமற்றுப் போனேன். வாழ்க்கை லகுவாயிற்று. துடுப்பு கூட பாரமாகும் அவல நிலை மாறிற்று. மாறிற்று என்றால் நான் உள்முகமாக மாற்றமடைந்தேன். வெற்றி தோல்விகளையும் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்பதை அந்த வரிகளே எனக்கு உணர்த்திற்று.

நிறைவாக சுந்தர ராமசாமியின் ஜே.ஜேயிலிருந்து சில வரிகள். ஜே.ஜேயின் நாட்குறிப்பில் மழையைப் பற்றிய ஒரு சித்தரிப்பு வருகிறது. அதில் ஜே.ஜே இவ்வாறு சிந்திக்கிறான்.
மழையில், மழையை ரசிக்காதவர்களின் கோபத்தைப் பார்ப்பது, மழையைப் பார்ப்பது அல்ல. மழையைப் பார்க்க எனக்குத் தெரிய வேண்டும். தெரியவேண்டும் என்று சொல்வதுகூடச் சரியில்லை. கூடவேண்டும். கூடும். நிச்சயமாகக் கூடும். பார்க்கத் தெரிந்துவிட்டால் கிடைக்கவேண்டியது, அதன் பின் எதுவும் இல்லை.
மழை பெய்கிறது. அதன் அழகு அற்புதமானது. ஆனால் அதை உள்வாங்கும் ஆற்றல் நமக்கு இருக்கிறதா என்ன? அதனுடன் நாம் ஒன்றிவிடும் தருணங்கள் எப்போதாவது நேர்ந்திருக்கிறதா? நாம் சில சமயம் அப்படிப் பார்க்க நேர்ந்துவிட்டதாகக் கற்பனை செய்து, “என்ன அற்புத மழை. இதைப் பார்க்காமல் மூடர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கோபப்படுவது நாம் மழையைப் பார்க்கிறோம் ரசிக்கிறோம் என்பதாகிவிடாது. அது போலத்தான் வாழ்க்கையும். நமக்கும் உண்மையான பொருளில் வாழ்க்கையைப் பார்க்கத் தெரிந்துவிட்டால், அப்போதே வாழ்க்கையின் அர்த்தம் புரிபடும். வாழ்வதில் நிறைவும் கிட்டும்.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஆகஸ்ட் 20, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...