June 25, 2015

Ward No.6 -Anton Chekhov: சாதாரணமானவர்களும் அசாதாரணமானவர்களும்

செகாவின் பிரசித்தி பெற்ற கதைகளில் ஒன்று வார்டு எண் 6. அரசாங்க மருத்துவமனை ஒன்றோடு இணைக்கப்பட்ட இந்த வார்டு மன நலம் பிறழ்ந்த நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டது. அங்கிருக்கும் நோயாளிகளின் கதையைச் சொல்லும் முகமாக வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளை ஆராய்கிறார் செகாவ். இந்தக் கதை வழக்கமான சிறுகதை அம்சமான முடிவை நோக்கி நம்மை இட்டுச்செல்லாமல், வாழ்க்கை குறித்த பல்வேறு கேள்விகளை நம்முள் எழச்செய்து, அந்த கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயற்சிப்பதின் வாயிலாக வாழ்வைக் குறித்த நம்முடைய புரிதல்களை விகாசப்படுத்துகிறது.

வார்டு எண் 6-ல் இருக்கும் இவான் டிமிட்ரிவிச் கல்வி கற்ற இளம் வாலிபன். அவன் வாழ்க்கை எல்லோரையும் போல இருந்துவந்த நிலையில், ஒரு நாள் அவனுக்கு தான் போலீஸால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் பீடிக்கிறது. காரணம் தெரியாத அந்த பயம் அவனை வெளியே நடமாடுவதை தடைசெய்ய, அறையிலேயே தனிமையில் முடங்கிக் கிடக்கிறான். அந்த பயத்தின் காரணமாக அவன் உடல்நிலை மோசமாகிறது. எனவே அவனை மருத்துவமனையின் வார்டு எண் 6-க்கு கொண்டுசேர்க்க அவன் அங்கேயே சிறைபட்டவனாகிறான். அப்போது அந்த மருத்துவமனைக்கு ஆன்ட்ரி இஃபிமிச் மருத்துவராக பொறுப்பேற்கிறார். அவர் மிகவும் மெல்லிய மனம் படைத்த மனிதர். யாரிடமும் அதிர்ந்து ஒரு வார்த்தையும் பேசமாட்டார். கண்ணும் கருத்துமாக நோயாளிகளையும் மருத்துவமனையையும் கவனித்த அவர் ஒரு கட்டத்தில் திடீரென அசிரத்தைக்கு ஆளாகிறார். ஒரு மனிதன் இறந்து போகிறான் என்றால் அவனுக்குச் சிகிச்சை அளித்து அவன் ஆயுளை மேலும் நீட்டிக்கச்செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறார். எனவே தனது பெரும்பான்மை நேரங்களை இவான் டிமிட்ரிவிச்சுடன் உரையாடுவதில் கழிக்கிறார். அவனது சிந்தனைகளும் விவாதங்களும் அவரை வெகுவாகக் கவர்கின்றன. வீட்டில் புத்தகங்களைப் படிப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் இஃபிமிச்சை பல்வேறு சிந்தனைகள் அலைக்கழிக்கின்றன.

மாலைப்பொழுதில் குடிக்கவும் உரையாடவும் மைக்கேல் அவரென்ஞ் என்ற தபால் நிலைய அதிகாரி, இஃபிமிச்சின் வீட்டுக்கு தினமும் வருகிறார். ஒரு நாள் மனித வாழ்க்கையின் -ஆன்மாவின் அழிவின்மை- குறித்த கேள்வி எழுகிறது. டாக்டருக்கு அதில் நம்பிக்கை இல்லாவிடினும், வாழ்க்கையில் திரும்பத் திரும்ப நிகழும் நிகழ்ச்சிகளின் அர்த்தமின்மை அல்லது அர்த்தம் டாக்டரை பல்வேறு சிந்தனைகளுக்கு அழைத்துச் செல்கிறது. அவற்றைப் பற்றி அவர் வார்டு எண் 6-ல் டிமிட்ரிவிச்சுடன் தீவிரமாக உரையாடுகிறார். தான் பல வருடங்களாக இந்த வார்டில் ஒரு விலங்கைப் போல வாழ்ந்து வருவதாகவும், வெளி உலகச் சுவடே தன்னுடைய உள்ளத்தில் அழிந்துவிட்டதாகவும் சொல்லும் டிமிட்ரி, வெளியே சுதந்திரமாக உலவுபவர்கள் பலவும் பேசலாம் ஆனால் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டவனின் நிலைமை பரிதாபத்திற்குரியது என்கிறான்.

அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லும் இஃபிமிச், “ஒரு மனிதனுக்கு அமைதி என்பது வெளியில் இல்லை மாறாக அது அவன் உள்ளத்தில்தான் இருக்கிறது. எங்கே இருந்தாலும் சிந்திக்கத் தெரிந்த மனிதன் இயல்பாக, அமைதியாகவே இருப்பான்” என்கிறார். அதைத் தொடர்ந்து, "No. like all pain in general, it's possible not to feel cold. Marcus Aurelius said: 'Pain is the living notion of pain: make an effort of will to change this notion, remove it, stop complaining, and the pain will disappear.' That is correct. This wise man, or simply the thinking, perceptive man, is distinguished precisely by his scorn of suffering; he is always content and is surprised at nothing" என்கிறார். மனிதன் என்பவன் சதையாலும் ரத்தத்தாலும் ஆனவன். எனவே அவன் வலியையும் வேதனையையும் உணரவே செய்வான் என்று நீண்ட பதில் சொல்லும் டிமெிட்ரி முடிவாக, "To scorn suffering, to be always content and  surprised at nothing, you must reach that condition or else harden yourself with suffering to such a degree that you lose all sensitivity to it, that is, in other words, stop living. Forgive me, I'am not wise man or a philosopher and I understand nothing about it. I'am unable to reason" என்று தன் வாதத்தை வைக்கிறான்.

இப்படியாக இஃபிமிச் டிமிட்ரியுடன் அடிக்கடி உரையாடிக் கொண்டிருப்பது மருத்துவமனை ஊழியர்களின் பார்வையில் வித்தியாசமாகப்படுகிறது. ஆயினும் அதை உணராதவராக இருக்கிறார் இஃபிமிச். இந்நிலையில் புதிதாக ஒரு டாக்டர் மருத்துவமனைக்கு வருகிறார். அப்போதே வேலையிலிருந்து தன்னை விலக்கிவிட்டதாக அறியும் இஃபிமிச் வீட்டில் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவதிலும், பட்டியலிடுவதிலும் தன்னுடைய நேரத்தைச் செலவழிக்கிறார். அவ்வப்போது மருத்துவமனையின் புதிய டாக்டரும் தபால் நிலைய அதிகாரியும் அவரை வந்து சந்தித்துச் செல்கிறார்கள். புதிய மருத்துவர் ஒவ்வொரு முறை வரும்போதும் இஃபிமிச் சாப்பிடுவதற்கென மருந்துகளைக் கொண்டு வருகிறார். அவர்களின் அணுமுறையும் நடவடிக்கையும் இஃபிமிச்சுக்கு கோபத்தை ஏற்படுத்த, அவர்களை இனிமேல் வீட்டிற்கு வரவேண்டாம் என்று விரட்டியடிக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் புதிய டாக்டர் இஃபிமிச்சை மருத்துவமனையைப் பார்ப்பதற்காக என்று அழைத்துச்சென்று வார்டு எண் 6-ல் அடைத்துவிடுகிறார்.

அப்போதுதான் தனக்கு ஏற்பட்ட நிலையை உணரும் இஃபிமிச் அபரிமிதமான பயத்துக்கும், சஞ்சலத்துக்கும் ஆட்படுகிறார். “கடைசியில் தங்களையும் இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா?” என்று டிமிட்ரி வியக்கிறான். அந்த வார்டில் ஒரு நிமிடமும் இருக்க முடியாத இஃபிமிச் அங்கிருந்து வெளியேற முயற்சிக்க, காவலாளி அவரை அடித்து உதைத்து கட்டிப்போடுகிறான். மறுநாள் இஃபிமிச் இறந்துபோகிறார். இந்தச் சமூகம் அசாதாரண மனிதர்களை எவ்விதம் எதிர்கொள்கிறது என்பதை கதையின் முடிவில் அறியும் நாம் வியப்பும் அதிர்ச்சியும் அடைகிறோம். சாதாரணமானவர்கள், அசாதாரணமானவர்கள் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை மனப்பிறழ்வாகப் பார்ப்பது ஒரு சமூகத்தின் முதிற்சியற்ற நிலையையே சுட்டுகிறது. சக மனிதர்களும் இந்தச் சமூகமும் கைகோர்த்தால் ஒரு மனிதனை பைத்தியக்காரனாக மாற்றிவிட முடியும் என்பதையே செகாவ் அற்புதமாக இந்தக் கதையில் படம்பிடிக்கிறார்.

இந்த நீண்ட கதை மனித வாழ்க்கையின் சிக்கலான பலவிசயங்களை ஆராய்வதன் மூலம் மனிதனுக்கு மனப்பிறழ்வு ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய பல்வேறு சிந்தனைகளை நம்முள் விதைக்கிறது. ஒரு மனிதன் மெல்ல மெல்ல எவ்வாறு மனப்பிறழ்வின் உச்சத்தை அடைகிறான் என்பதை தேர்ந்த உளவியல் நிபுணராக இந்தக் கதையில் காட்சிப்படுத்துகிறார் செகாவ். மனப்பிறழ்வு என்பது ஒரு மனிதன் சிந்தனையில் ஏற்படும் சிறு சறுக்கல்தான் என்று சொல்லும் செகாவ், அதைத் தீர்க்கும் வழிமுறை தனிமைப்படுத்துவதோ, அடைத்து வைப்பதோ அல்ல என்பதையும், அவனையும் ஒரு சாதாரண மனிதனாக இந்த உலகில் நடமாடவைப்பதே இந்தச் சமூகம் செய்யவேண்டிய முக்கியமான காரியம் என்பதையும் வலியுறுத்துகிறார்.

சிடுக்கும் அடர்த்தியும் கொண்ட இந்தக் கதையைச் சுருங்கச் சொல்வதோ, விவரிப்பதோ எளிமையானதல்ல. பெரும் நாவலுக்கு இணையான கதையும், சித்தரிப்புகளும், விவாதங்களும் உடைய இந்தக் கதை நமக்குள் ஏற்படும் தாக்கத்தை நாம் மேற்கொள்ளும் வாசிப்பினூடான பயணத்திலேயே கணிக்க முடியும். எனவே வாசகர்கள் இந்தக் கதைகயை அவசியம் படித்து உணரும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கதை 2009-ல் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...