June 11, 2015

Master and Man -Leo Tolstoy: மனிதகுல மீட்சிக்கான வழி!

லியோ டால்ஸ்டாயின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று Master And Man. பனி பொழியும் கடும் குளிர் நாள் ஒன்றில், பயணம் மேற்கொள்ளும் வியாபாரியான ஆண்ட்ரூவிச்சும், அவருடைய வேலைக்காரன் நிகிதாவும் நடுவழியில் மாட்டிக்கொண்டு சிரமத்திற்குள்ளாகும் அனுபவங்களையும் அதன் முடிவையும் இந்தக் கதையில் மிக அற்புதமாக விவரித்துச் செல்கிறார் டால்ஸ்டாய். அவரது புனைவின் சித்தரிப்பில் அந்தப் பனியும், குளிரும் நிஜம் போலவே தோன்றி மயக்கவைத்து நம்மை கனவின் வெளியில் சஞ்சரிக்க வைக்கிறது. வேலைக்காரனான நிகிதாவுக்கும் அவன் எஜமானனுக்கும் உள்ள உறவு அவ்வளவு நெருக்கமாகவும் இல்லை விலகியும் இல்லை என்பதை அவ்வப்போது அவர்களின் நடவடிக்கையிலும் பேச்சிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதை டால்ஸ்டாய் மிக சூட்சுமமாக நமக்கு உணர்த்தியபடியே கதையை நடத்திச்செல்கிறார். 

அதீதமான பனிப்பொழிவும், சுழன்றடிக்கும் சூறைக்காற்றும் அவர்களை இரு முறை வழிதவறச்செய்கிறது. எனவே செல்வந்தர் ஒருவரின் வீட்டில் சற்றே ஓய்வெடுத்து, அவரது பேரன் சற்றுதூரம் வரை வழிகாட்ட, ஆண்ட்ரூவிச் மீண்டும் பயணிக்கிறார். இந்த இரவு நேரத்தில், அதுவும் இத்தகைய தருணத்தில் பயணம் வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியும், தான் மேற்கொள்ளவேண்டிய வியபாரம் கைவிட்டுப் போய்விடும் என்று தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார் ஆண்ட்ரூவிச். ஆனால் அவர்கள் எண்ணியபடி மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாமல் போகிறது. திரும்பத் திரும்ப சுற்றி ஒரே இடத்திற்கு வருகிறார்கள். சரியான வழி தெரியாமல் போகவே வழியிலேயே விடியும்வரை தங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுசெய்கிறான் நிகிதா.

குதிரையை மரத்தில் கட்டிவிட்டு, வண்டியில் ஆண்ட்ரூவிச் படுத்துக்கொள்ள, வண்டியை ஒட்டியவாறு நிகிதா படுக்கிறான். “நாம் பனியில் உறைந்துவிட மாட்டோமா?” என்று ஆண்ட்ரூவிச் வினவ, “அது அப்படியே ஆகுமென்றால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்கிறான் நிகிதா. இரவு நேரம். பனிப்பொழிவு. சூறைக்காற்று. உறையவைக்கும் குளிர். இவற்றுக்கிடையிலும் தான் தவறவிட்டுவிட்ட வியபாரம், அதனால் இழந்துவிட்ட பணம் இவற்றைச் சுற்றியே ஆண்ட்ரூவிச்சின் சிந்தனை சுழன்றுவர அப்படியே உறங்கி்விடுகிறார். நடுஇரவில் ஓநாயின் குரல் கேட்டு திடுக்கிட்டு விழிக்கிறார். அவர் உள்ளத்தை பயம் முழுமையாக ஆக்கரமிக்கிறது. இங்கிருந்து இறப்பதைவிட எப்படியாவது சென்றுவிடுவது நல்லது என நினைத்து, வண்டியையும், நிகிதாவையும் விட்டுவிட்டு, குதிரையில் ஏறி பயணிக்கிறார். ஆனால் அவர் நினைத்தது போல அது அவ்வளவு சுலபமாக இல்லை. சுற்றிச் சுற்றி கடைசியில் வண்டியும், நிகிதாவும் இருந்த இடத்திற்கே வந்துசேர்கிறார்.

நிகிதா பனியில் உறைந்து இறக்கும் தருவாயில் இருப்பதை அறிகிறார் ஆண்ட்ரூவிச். “எனக்குச் சேரவேண்டிய பணத்தை என் மனைவியிடம் கொடுத்துவிடுங்கள். நான் சாகப்போகிறேன். கிறுஸ்துவின் பெயரால் என்னை மன்னியுங்கள்” என்கிறான் நிகிதா. அதைக்கேட்டு திகைத்து நிற்கும் ஆண்ட்ரூவிச் தன்னுடைய உடம்பாலும், கம்பளிக்கோட்டாலும் நிகிதாவை மூடி, அவனுடலில் கதகதப்பை ஏற்றுகிறார். அப்போது அவர் கண்களில் அவரையும் அறியாமல் கண்ணீர் வழிகிறது. அது துன்பத்தாலும், வேதனையாலும் விளைந்ததல்ல மாறாக, வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஓர் இன்பம் அது என்பதை ஆண்ட்ரூவிச் உணர்கிறார். ஓர் உயிரை இன்னோர் உயிர் அறியும் தருணம் அது! வாழ்க்கையில் பணம், செல்வம் இவற்றுக்கு அப்பாற்பட்டு நாம் நம்முடைய ஆன்மாவின் உண்மையான இயல்பை தரிசிக்கும் கணம் அது. அதைச்சொல்ல வார்த்தைகள் இல்லை; அது வார்த்தைகளில் சொல்லக்கூடியதுமல்ல. ஆண்ட்ரூவிச் அதை, “That's Our Way!” என்ற மூன்று சொற்களில் அறிகிறார். வழிதவறிய மனிதகுல மீட்சிக்கு அதுவே வழி என்பதை நாமும் அத்தருணத்தில் உணர்கிறோம். அப்படியே உறங்கிவிடும் அவர், கனவா நிஜமா என்று நிர்ணயிக்க முடியாத, பல்வேறு மாயத் தோற்றங்களை தன்னுடைய மனத்திரையில் காண்கிறார்.

திடீரென விழித்துக்கொள்ளும் அவர் நடந்தவற்றை நினைவுகொள்கிறார். அவற்றை பின்வரும் டால்ஸ்டாயின் வார்த்தைகளில் படிப்பது உகந்தது.

He remembered that Nikita was lying under him and that he had got warm and was alive, and it seemed to him that he was Nikita and Nikita was he, and that his life was not in himself but in Nikita. He strained his ears and heard Nikita breathing and even slightly snoring. 'Nikita is alive, so I too am alive!' he said to himself triumphantly. 

And he remembered his money, his shop, his house, the buying and selling, and Mironov's millions, and it was hard for him to understand why that man, called Vasili Brekhunov, had troubled himself with all those things with which he had been troubled.

'Well, it was because he did not know what the real thing was,' he thought, concerning that Vasili Brekhunov. 'He did not know, but now I know and know for sure. Now I know!' And again he heard the voice of the one who had called him before. 'I'm coming! Coming!' he responded gladly, and his whole being was filled with joyful emotion. He felt himself free and that nothing could hold him back any longer.

After that Vasili Andreevich neither saw, heard, nor felt anything more in this world.

இந்த உலகில் தனிப்பட்ட முறையில் எந்த ஜீவனும் இயங்க முடியாது. மற்றவர்கள் ஜீவித்திருக்கும் வரையில்தான் நாமும் ஜீவித்திருக்க முடியும். ஒரு மனிதனின் இருப்பு என்பது அவன் பௌதீகமான உடலை மட்டும் சார்ந்ததல்ல. உடல் ஒரு பாண்டம் மட்டுமே. அந்த பாண்டம் உடையும்போது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்து விடுகிறது. அப்போது எங்கும் நிறைந்திருப்பது இந்த பிரபஞ்சவெளி மட்டுமே. அங்கே எஜமானனும் வேலைக்காரனும் ஒன்றே. அப்போது நீ நான் என்ற வேறுபாடு இல்லாமலாகி நானே நீ, நீயே நான் என்றாகிறது. நீயுக்கும் நானுக்குமான பேதம் முற்றாக அழிந்துவிடும் அந்த தருணம் ஆண்ட்ரூவிச்சுக்கு நிகழ்கிறது. 'Nikita is alive, so I too am alive!' என ஆண்ட்ரூவிச் கண்டடைவது அதனாலேயே. அப்படிக் கண்டு கொண்டதாலேயே வியபாரம், வீடு, பணம் என எதற்கும் இந்த உலகில் அர்த்தம் இல்லை என்பதையும், அவைகள் நம்மை அழுத்தும் சுமைகளே என்றும் கண்டு கொள்கிறார். அந்தக் கண்டடைதலின் சந்தோஷத்தில் அவரது உயிர் பிரிகிறது. கடும் பனியிலும், காற்றிலும் தன்னுடைய வியபாரத்தையும், பணத்தையுமே பெரிதாகக் கருதிய ஆண்ட்ரூவிச், மரணத்தின் வாசலில் ஞானத்தை அடைகிறார். நிகிதா அதன் பிறகு இருபது வருடங்கள் வாழ்ந்து மறைந்துபோகிறான்.

இந்தக் கதையின் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் நம்முடைய மூளையால் சிந்தித்து படித்தறியவேண்டிய கதையல்ல இது. மாறாக நாம் நம்முடைய ஆன்மாவால் உணரவேண்டிய கதை. நம் கற்பனையின் துணைகொண்டு நம்முடைய மனத்திரையில் காட்சிகளை ஓடவிட்டு ரசிக்கவேண்டிய கதை. அப்படிச் செய்யும்போதே இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் தாக்கத்தை உணர முடியும். சிந்தனைகளை முற்றாகத் தவிர்த்துவிட்டு, மனக் கண்ணில் காட்சிகளை காண்பதன் மூலமாக மட்டுமே நம்முள் பரவசத்தை ஏற்படுத்தும் அம்சம் இந்தக் கதையில் மிகுந்திருக்கிறது. இருந்தும் கதையின் இறுதியில் ஆண்ட்ரூவிச் நிகிதாவைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கு பிறகு நாம் நம்முடைய இதயத்தையும், மூளையையும் தாண்டி நம் ஆன்மாவை அதிகமும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நம்மை சடாரென தாண்டிக் குதிக்கவைக்கும் அற்புதத்தை கதையின் அந்த இறுதிப் பக்கங்களில் செய்துவிடுகிறார் டால்ஸ்டாய். எனவே கதையின் இதுவரையான தொனி கடைசியில் மாறுதலடைந்து நம்முள் மிகப்பெரிய திறப்பை ஏற்படுத்துகிறது. அதுவே டால்டாயின் வெற்றிக்கும் புனைவின் திறத்திற்கும் சான்றாக அமைகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...