காந்தியின் மதிப்புமிக்க வரிகள்

1986. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். ஒரு நாள் நான் மட்டும் வீட்டில் தனியாக இருக்க நேர்ந்தது. அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் காந்தியின் சத்திய சோதனை நூலை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க நான் என்னிடத்தில் இல்லை. அந்த நூல் என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. படிக்கப் படிக்க சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போனது. அன்று இரவில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.

இன்று நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. எப்படி அவ்வாறு படிக்க முடிந்தது? இத்தனைக்கும் அது நாவலோ கதையோ அல்ல. ஒரு மனிதனின் சுயசரிதை. மொழிபெயர்ப்பு வாசிப்பிற்கு குந்தகம் விளைவிக்காமல் சரளமாக இருந்தது ஒரு காரணம். மற்றொரு காரணம் காந்தியின் வியக்கவைக்கும் எழுத்தாற்றல். வாசிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் அவருடனும் அவரது கருத்துக்களுடனும் என்னை உரசிப் பார்த்துக்கொண்டே வந்தது எல்லாவற்றையும் விட முக்கியக் காரணம். எனக்கும் உண்மைக்கும் இடையே எவ்வளவு தூரம் என்பதைக் கண்டடைவதில், என்னை நான் அறிந்துகொள்ளும் ஆவலே அந்நூலை ஒரே மூச்சில் வாசிக்க வைத்தது.

அந்நூலில் படித்த பல விசயங்கள் இன்று மறந்துவிட்டன. ஆனால் இரண்டு விசயங்கள் இன்னும் மறக்கவில்லை. ஒன்று அவர் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. அது இவ்வாறு அமைகிறது:
எனக்குச் சாத்தியமானது, ஒரு சிறு குழந்தைக்கும் சாத்தியமானதாகவே இருக்கும் என்ற மற்றொரு நம்பிக்கையும் என்னுள் வளர்ந்து வருகிறது. இவ்விதம் நான் கூறுவதற்குத் தக்க காரணங்களும் இருக்கின்றன. சத்தியத்தை அடைவதற்கான சாதனங்கள் எப்படிக் கஷ்டமானவையோ, அப்படி எளிமையானவையாகவும் இருக்கின்றன. இறுமாப்பைக் கொண்ட ஒருவனுக்கு அவை முற்றும் சாத்தியமில்லாதவையாகத் தோன்றலாம். ஆனால் கபடற்ற ஒரு குழந்தைக்கு அவை சாத்தியமானவை. சத்தியத்தை நாடிச் செல்பவர், தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின் கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரோ, அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்-அதற்குமுன் அல்ல-ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும்.
எவ்வளவு மகத்தான வரிகள் இவை. இவ்வரிகள் நம்முள் ஏற்படுத்தும் மனக்கிளர்ச்சி அசாதாரணமானது. பணிவு என்பதன் பொருளை யாரும் இவ்வளவு நுட்பமாகச் சொல்லிவிட முடியாது என்பது இதைப் படிக்கும் போது புரியும். உண்மையின் உரைகல் பணிவுதான் என்பது அழுத்தமாகவும் அனுபவ பூர்வமாகவும் இவ்வரிகளில் வெளிப்படுகிறது. இன்று போலி பணிவுகள் பெருகிவிட்டன. அவை அகங்காரத்தின் மறுவடிவமாக இருக்கின்றன. எனவே சத்தியம் நம்மிலிருந்து விலகி வெகுதொலைவு சென்றுவிட்டது.

இந்த பணிவின்மையே இன்று எல்லா மட்டத்திலும் சண்டைகளும் சச்சரவுகளும் பெருகக் காரணமாக அமைந்துவிடுகின்றன. தான், எனது என்ற ஆணவம் இன்று பல்கிப் பெருகிவிட்டது. அரசியல்வாதி முதல் ஆன்மீகவாதி வரை அனைவரிடமும் அகங்காரமும் ஆணவமும் தலைவிரித்து ஆடுகிறது. அதன் விளைவுகளை நேற்றைய சரித்திரம் சொல்கிறது. நாளை சரித்திரமும் அதையே சொல்லும் என்பதில் சந்தேகமில்லை.

அகிம்சையின் அடிப்படையே இந்த பணிவுதான். பணிவின்மையே ஹிம்சையைத் தூண்டுகிறது. பணிவு என்பது கோழைத்தனத்தின் வெளிப்பாடாக இன்று கருதப்படுகிறது. ஆனால் பணிவுகொள்ள அசாத்திய துணிச்சல் வேண்டும். சத்தியத்தை நிலைநிறுத்த பணிவே துணை.

இந்நூலில் மற்றொரு மறக்க முடியாத பகுதி காந்தி காசிக்குச் செல்வது. காந்தி நாத்திகர் என்று சொல்லத்தக்க வகையில் இப்பகுதி அமைந்திருக்கிறது. உண்மையான ஒரு பக்தன் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், கடவுளை பூஜிப்பவன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், கோயில்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாகவே இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இன்றும் கோயில் என்பதும் கடவுள் என்பதும் செல்வம் மிகுந்தவர்களின் கையில்தான் இருக்கிறது. பூசாரிகள் கடவுளை பூஜிப்பவர்களாக இல்லாமல் இத்தகையவர்களை பூஜிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். நான் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் காந்திக்கும் பண்டாவுக்கும் இடையே நடந்த இந்நிகழ்ச்சி தவறாமல் நினைவுக்கு வரும்.
பன்னிரண்டு மணிக்கு பூஜை முடிந்தது. நான் சுவாமி தரிசனத்திற்காகக் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போனேன். அங்கே நான் கண்டவை எனக்கு மன வேதனையைத் தந்தன. 1891–ல் நான் பம்பாயில் பாரிஸ்டராக இருந்த சமயம், பிரார்த்தனை சமாஜ மண்டபத்தில் ‘காசிக்கு யாத்திரை‘ என்பது பற்றி நடந்த ஒரு பிரசங்கத்தைக் கேட்க நேர்ந்தது. ஆகையால், ஓரளவு ஏமாற்றத்திற்கு நான் தயாராகவே இருந்தேன். ஆனால், உண்மையில் நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததைவிடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது.
குறுகலான, வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயலுக்குப் போக வேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொயத்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சத்தம் சகிகக் முடியாததாக இருந்தது. தியனத்திற்கும் தெய்வசிந்தனைக்கும் ஏற்ற சூழ்நிலை இருக்கவேண்டும் என்ற எதிர்பார்க்கத்தக்க அந்த இடத்தில் அது இல்லவே இல்லை. அந்தச் சூழ்நிலையை ஒருவர் தம் உள்ளத்தினுள்ளே தான் தேடிக்கொள்ள வேண்டும். சுற்றுப் புறத்தைப் பற்றிய பிரக்ஞையின்றி, மெய்ம் மறந்தவர்களாகச் சகோதரிகள் தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தேன். இதற்காகக் கோயில் நிர்வாகிகளை யாரும் பாராட்டிவிடுவதற்கில்லை. கோயிலைச் சுற்றிலும் சுத்தமான, இனிய, சீரிய சூழ்நிலையை உள்ளும் புறமும் உண்டாக்கி, அது நிலைத்திருக்கச் செய்வது, நிர்வாகிகளின் பொறுப்பு. இதற்குப் பதிலாக கபடஸ்தர்களான கடைக்காரர்கள், மிட்டாய்களையும், புது நாகரீக விளையாட்டுப் பொம்மைகளையும் விற்கும் கடைத் தெருவையே நான் அங்கே கண்டேன்.
நான் கோயிலுக்குள் போனதும் வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. உயர்ந்த சலவைக் கற்களாலான தரை. ஆனால், அழகு உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன.
ஞான வாவி (ஞானக் கிணறு)க்குப் பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால், நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாயில்லை. ஞானவாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சிணை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்துவிட்டார். “இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்!” என்று கூறி என்னைச் சபித்தார்.
இதைக் கேட்டு நான் பரபரப்படைந்துவிடவில்லை. “மகராஜ்! என் விதி எப்படியானாலும் சரி, ஆனால் இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதையும் நீங்கள் இழந்த விடுவீர்கள்” என்றேன்.
“போய்த் தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம்” என்றார் தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்.
தரையில் கிடந்த தம்படியை எடுத்துக் கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாரட்டிக்கொண்டேன். ஆனால், மகராஜ், அந்த தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல. என்னைத் திரும்பக் கூப்பிட்டார். “அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப் போ. உன்னைப் போலவே நானும் இருந்துவிட முடியாது. உன் தம்படியை நான் வாங்கிக்கொள்ள நான் மறுத்துவிட்டால் அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும்” என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒருமுறை பெருமூச்சு விட்டுக்கொண்டு அப்பால் போய்விட்டேன்.
அதற்குப் பிறகு இரு முறை காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போயிருக்கிறேன். ஆனால், அது ‘மகாத்மா‘ பட்டம் என்னைப் பீடித்த பிறகு. ஆகவே, நான் மேலே கூறியிருப்பதைப் போன்ற அனுபவங்கள் அப்பொழுது ஏற்படுவது அசாத்தியமாயின. என்னைத் தரிசிப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கும் மக்கள், கோயிலில் சுவாமியை தரிசிப்பதற்கு என்னை அனுமதிக்கமாட்டார்கள். ‘மகாத்மா‘க்களின் துயரங்கள் ‘மகாத்மா‘க்களுக்கு மாத்திரமே தெரியும். மற்றபடி அழுக்கும் சப்தமும் முன்பு இருந்தது போலவே இருந்தன.
கடவுளின் எல்லையற்ற கருணையில் யாருக்காவது சந்தேகம் இருக்குமாயின், அவர்கள் இப் புண்ணிய ஷேத்திரங்களுக்குப் போய்ப் பார்ப்பார்களாக. மகா யோகியான கடவுள், தம் தெய்வீகப் பெயரைக் கொண்டே செய்யப்படும் எவ்வளவு வஞ்சகங்களையும் அதர்மங்களையும் சகித்துக்கொண்டிருக்கிறார்! “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்தவைவ பஜாம்யஹம்” (மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான்) என்று ஆண்டவனே கூறியிருக்கிறார். கரும பலனை அனுபவிக்காமல் யாரும் தப்பிவிடவே முடியாது. ஆகையால், இதில் ஆண்டவன் தலையிடுவதற்கு அவசியமே இல்லை. அவர் இச் சட்டத்தை இயற்றிவிட்டு விலகிக்கொண்டார் என்றே சொல்லலாம்.
முன்னுரையில் காந்தி குறிப்பிடும் இவ்வரிகளும் மகத்தானவை:
என்னுடைய எல்லாக் குற்றங்களையும், தவறுகளையும் வாசகருக்கு அறிவிப்பேன் என்று நம்புகிறேன். என் நோக்கம், சத்தியாக்கிர சாத்திரத்தில் நடத்திய சோதனைகளை விவரிப்பதேயன்றி, நான் எவ்வளவு நல்லவன் என்பதைச் சொல்வது அன்று.
இன்று பலர் எழுதும் சுயசரிதைகள் சுயதம்பட்டம் அடிப்பவையாகவே இருப்பதை நாம் காண்கிறோம். காந்தி என்ற மனிதனின் முழு ஆளுமையும் இம்முன்னுரைக் குறிப்பின் வாயிலாக நாம் அறியமுடிகிறது. சத்திய சோதனையை முழுமையாக வாசிக்கவேண்டியதில்லை, இதைப் படித்தாலே போதும் என்று கருதுகிறேன்.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஆகஸ்ட் 30, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...