June 23, 2015

சி.சு. செல்லப்பாவின் இரு நாவல்கள்: அகமும் புறமும்

சின்னமனூர் சுப்ரமணியம் செல்லப்பா 29.09.1912-ல் பிறந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற தியாகி. மணிக்கொடி எழுத்தாளர். இவர் முதல் கதை “மார்கழி மலர்” 1934-ல் வெளியானது. இவர் எழுதிய சுதந்திர தாகம் நாவல் 2001-ல் சாகித்திய அக்காடமி விருது பெற்றது. எழுத்து பத்திரிக்கை மூலம் தமிழ் இலக்கியத்திற்கு மாபெரும் சேவை செய்தவர். 18.12.1998-ல் மறைந்த இவர் எழுதிய சிறுகதைகள் 109.  நாவல்கள் வாடிவாசல், ஜீவனாம்சம், சுதந்திர தாகம் ஆகியன. தவிரவும் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். முறைப்பெண் என்ற நாடகமும் எழுதி இருக்கிறார். புகைப்படக் கலையில் ஆர்வம் மிக்கவர். வாடிவாசல் நாவலுக்கு இவர் எடுத்த புகைப்படமே அட்டைப் படமாகப் பயன்படுத்தப் பட்டது.

இவரது வாடிவாசல், ஜீவனாம்சம் இரண்டும் தமிழில் முக்கியமான நாவல்கள். இந்த இரண்டு நாவல்களும் முற்றிலும் மாறுபட்ட தளத்தில் இயங்குபவை. வாடிவாசல் புறக்காட்சிகளின் சித்தரிப்பை தேர்ந்த திரைப்படமாக நம்முள் விரிக்கிறது எனில் ஜீவனாம்சம் மனித மனத்தின் அகத்தை மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. வாடிவாசல் மாட்டை வீழ்த்தும் சாகத்துடன் அதனூடாக பின்னியிருக்கும் பகையை, வஞ்சத்தை படம் பிடிக்கிறது. மாறாக கணவனை இழந்த பெண், தனது புகுந்த வீட்டாரோடு வழக்கு தொடர்ந்து, ஜீவனாம்சம் பெற மேற்கொள்ளும் முயற்சியில் அவளுள் எழுகின்ற குழப்பத்தை, மனப்போராட்டத்தை சித்தரிக்கிறது ஜீவனாம்சம். இந்த நாவல்கள் குறித்து ஏற்கனவே தனித்தனி பதிவுகள் எழுதியிருக்கிறேன். அவற்றை ஒருசேர வாசிக்கும் போது அந்த நாவல்கள் பற்றிய நினைவுகளை மீட்டெடுக்க முடிந்தது. அப்போதைய பதிவுகள் மிகச் சுருக்கமாக அமைந்துவிட்டிருப்பது தெரிகிறது. இருந்தும் நாவலைப் பற்றிய முக்கியமான சிலவற்றைச் சொல்லியிருக்கிறேன் என்றே படுகிறது. மீண்டும் மறுவாசிப்பு செய்தால் இந்நாவல்களை மற்றொரு கோணத்தில் அணுகமுடியும் என்று நினைக்கிறேன். அதற்கான காலமும் நேரமும் வாய்க்கவேண்டும். நாம் தவறவிடக்கூடாத முக்கிய நாவல்கள் இவை.

வாடிவாசல்-மனிதனும் மிருகமும்:

வாடிவாசல் ஜல்லிக்கட்டை விவரிக்கும் ஒரு கதை.  பிச்சியும் மருதனும் ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்க வருகிறார்கள். அவர்களுடன் உரையாடும் கிழவனார் அவர்கள் ஜமீன்தாரின் மாட்டைப் பிடிக்க வந்திருக்கிறார்கள் என்று அறிகிறார். அவர்கள் மீது அவருக்கு ஆரம்பத்தில் வெறுப்பு வருகிறது. ஆனால் இதே ஜமீன்தார் மாட்டைப் பிடிக்க உயிரைவிட்ட அம்புலியின் மகன்தான் இந்த பிச்சி என்று அறிந்ததும் அவன் மீது பாசமும் பரிவும் பிறக்கிறது கிழவனாருக்கு. ஒவ்வொரு மாட்டைப் பற்றியும் நுணுக்கங்களை அவனுக்குச் சொல்கிறார். அவனுக்கு அவைகள் உபயோகமாக இருக்கின்றன. ஆரம்பத்தில் இரண்டு காளைகளை அவன் அடக்கிவிடுகிறான். ஜமீன்தார் பார்வை அவன் மீது விழுகிறது. அவன் யார் என்பதையும் எதற்காக வந்திருக்கிறான் என்பதையம் அறிகிறார். பிச்சி, ஜமீன்தார் காளையையும் அடக்கி தொடையில் காயத்துடன் தப்பிக்கிறான். தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றவே தான் மாட்டைப் பிடித்ததாக ஜமீன்தாரிடம் சொல்கிறான் பிச்சி. தன் இலக்கு தப்பிய ஆவேசத்தில் காளை கூட்டத்தில் கோபத்துடன் பாய்கிறது. அதில் பலர் காயமடைகிறார்கள். இருவர் உயிரிழக்கவும் நேர்கிறது. ஜமீன்தார் தன் காளையை துப்பாக்கியால் சுட்டுச் சாகடிக்கிறார்.

ஜல்லிக்கட்டு காட்சிகளைத் தத்ரூபமாக நம் கண் முன் கொண்டுவருகிறார் செல்லப்பா. பிச்சி மாட்டை பிடிக்கும் காட்சியை மிகச்சிறப்பாக வர்ணிக்கிறார். அவர் வருணணையில் அக்காட்சி திரைப்படம் போல நம் மனக் கண்ணில் விரிகிறது. மனிதனின் பழிவாங்கும் குணம், ஆறறிவு மனிதர்கள் மீது மட்டுமல்ல ஐந்தறிவு மிருகங்கள் மீதும் ஏற்படவே செய்கிறது.

பல நாட்கள் தன்னுள் ஊறிக்கிடந்த அந்த பழிவாங்கும் கோபமே பிச்சியை ஜமீன்தார் காளையை பிடிக்க வைக்கிறது. தன் தந்தையின் மரணத்திற்கு அன்று பழி தீர்த்துக்கொள்கிறான் பிச்சி. அவன் கோபம் வெளிப்படுவது அவ்வாறென்றால், தன் காளை தோற்றுவிட்டதில் அவமானமடையும் ஜமீன்தார் தன் கோபத்தை அந்தக் காளையைக் கொன்று தீர்த்துக்கொள்கிறார். மனிதன் மிருகமாகிய தருணங்கள் அவை. அவரது கோபம் உண்மையில் அந்த மிருகத்தின் மீதா இல்லை பிச்சி என்ற மனிதன் மீதா? அதேபோல் பிச்சியின் கோபம் மாட்டின் மீதா இல்லை மாட்டை வளர்த்த ஜமீன்தார் மீதா? மனித மனத்தின் புதிர்களை விடுவிக்கும் ஆழமான கேள்விகள் இவை.

ஜல்லிக்கட்டு வெறும் வீர விளையாட்டு என்பதையும் தாண்டி, மனிதனின் கோபம், குரோதம், அவமானம் ஆகியன வெளியாகும் இடமாகவும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் போது, விளையாட்டை விளையாட்டாய்ப் பார்க்கும் மனோபாவம் நமக்கு வர ஏதுவாகிறது. வாடிவாசல் நமக்கு உணர்த்தும் உண்மையும் அதுதான்.

வாடிவாசல் முக்கியமான குறுநாவல் என்பதில் உண்மை இல்லாமலில்லை.

ஜீவனாம்சம்-மனதின் போராட்டம்:

ஒரு பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் செல்லப்பாவின் ஜீவனாம்சம் தமிழின் முக்கியமான நாவல். 1960-ல் வெளியான இந்நாவல் இன்று வாசிக்கும்போதும் ஜீவனுடன் இருப்பது வியக்கவைக்கிறது. மனித மனதின் போராட்டங்களை அவ்வளவு நுட்பமாகவும், தேர்ந்த மனோதத்துவ நிபுணரின் லாவகத்தோடும் நாவலில் கையாண்டிருக்கிறார் செல்லப்பா. மிகக் குறைந்த பாத்திரங்களைக் கொண்டு ஒரு அற்புதமான மனோ உலகத்தில் நம்மை சஞ்சரிக்க வைக்கிறார். உறவுகளத் தீர்மானிப்பது அன்பா அல்லது பொருளா என்ற சர்ச்சையை நம்முன் வைக்கிறார். வாழ்வில் புறவயமாக ஏற்படும் ஒரு சிக்கல் அகவயமாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதை மிகச்சிறப்பாக சித்தரித்திருக்கிறார். அடுத்தவர் சொல்லும் வார்த்தை அல்லது வாக்கியத்திலிருந்து அவர்களை அவதானிக்கும் கலையை நோ்த்தியோடும் ஆழ்ந்த புரிதல்களோடும் வெளிப்படுத்தியுள்ளார். மனித மனத்தின் ஆழத்தில் நுழைந்து செல்லும் ஆற்றல் அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. படிக்கும்போது மூளையில் ஏற்படும் லகரி, மனப்பாய்ச்சல் வார்த்தையில் சொல்லும் தரமன்று. செல்லப்பாவின் ஆகச்சிறந்த படைப்பு என்று ஜீவனாம்சத்தைச் சொல்லலாம்.

சாவித்திரி தன் கணவனை இழந்து தன் பிறந்தகத்துக்கே திரும்பி வருகிறாள். அவளது அப்பாவின் மறைவுக்குப் பின் அவளது அண்ணன், தன் மனைவின் யோசனையால், புகுந்த வீட்டார் மீது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடுக்கிறான். அந்த வழக்கு என்ன ஆகிறது என்பதுதான் கதை. மூன்றே மூன்று பிரதான பாத்திரங்கள். சாவித்திரி, அவள் அண்ணன் விஸ்வநாதன், அவள் அண்ணி அலமேலு. மீதிப் பாத்திரங்கள் பிரதான பாத்திரங்கள் இல்லை என்றாலும் அவர்களின் இருப்பினால்தான் அல்லது இல்லாமையினால்தான் கதையே நடக்கிறது என்பது சுவாரஸ்யமான ஒன்று. ஆரம்பத்தில் வழக்கு தொடுக்கும் போது சாவித்திரிக்கு மனதளவில் எந்தக் கருத்தும் இல்லை.

அண்ணன் கேட்கும் போது சரி என்று சொல்லி விடுகிறாள். ஆனால் வழக்கு தாங்கள் நினைத்தது போல் அவ்வளவு சீக்கிரம் முடியாது போது, கிடைக்கும் இடைவெளியிலும், இடைவெளியில் நடந்துவிட்ட சில காரணங்களாலும், சாவித்திரியின் அபிப்ராயம் மாறிக்கொண்டே வருகிறது. அவளது பார்வையும் புரிதல்களும் விசால மடையும்போது, இந்த வழக்கு தொடுத்ததே தவறோ என்ற எண்ணம் அவளுக்கு வருகிறது. தான் புகுந்த வீட்டிலேயே இருந்திருக்கக் கூடாதா என்ற மன வருத்தமும் அவளுக்கு ஏற்படுகிறது. சாவித்திரியின் உள்ளத்தில் எழும் மாற்றங்கள் அவளின் பல்வேறு வகையான மனப்போராட்டங்களுக்குப் பிறகே வருகிறது. படிக்கப் படிக்க நம் உள்ளத்தில் சாவித்திரி மீதான அன்பும் துக்கமும் பெருகுகிறது. நம் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணாகவே அவள் ஆகிவிடுகிறாள். அவளின் துன்பம் நம் துன்பமாகிறது.

சாவித்திரியின் எண்ணவோட்டங்களை விவரிக்கும்போதே செல்லப்பாவின் கலையம்சத்துடன் கூடிய அவர் பார்வை வெளிப்படுகிறது. அதுவே நாவலின் பிரதான அம்சம். சிறுகதைக்கான ஒரு கதைக் கருவைக்கொண்டு அதை நாவலாக ஆக்கியிருப்பது செல்லப்பாவின் படைப்பின் திறன். ஜீவனாம்சம் நாவலை மிகக்கவனத்துடன் கட்டமைத்திருக்கிறார் செல்லப்பா. அவரே சொல்வது போல, ”இது என் இரண்டாவது நாவல். கருவாக என் நெஞ்சிலே இருபது ஆண்டுகள் இருந்த பிறகுதான் இந்த உருவம் கிடைத்தது. அந்த நாட்களில் ஜீவனாம்சம் உருவாகி இருந்தால் அதன் உள்ளடக்கம் இன்று இருப்பதைப் பெற்றிராது. உருவம் வேறாக இருந்திருக்கும். வெறும் நிகழ்ச்சிகளுக்கு அவற்றின் கோவையான போக்குக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பேன். நடக்கும் விஷயங்களை “எல்லாம் தெரிந்தவனாக” நானே நடத்திச் சென்றிருப்பேன். இதெல்லாம் செய்திருந்தால் இன்று அதுக்கு ஏற்பட்டிருப்பதாக நான் கருதும் ஒரு கலை மதிப்புக் கிடைத்திருக்காது.”

வாடிவாசலை வெட்டவெளியில் படைத்த செல்லப்பா ஜீவனாம்சத்தை நான்கு சுவர்களுக்குள் படைத்திருக்கிறார். நான் சுவர்களுக்குள் என்பதைவிட மனவுலகத்தில் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஜீவனாம்சம் அவசியம் படிக்கவேண்டிய நாவல் என்பதைவிட, படிக்க மறக்கக் கூடாத நாவல்.

Related Posts Plugin for WordPress, Blogger...