வாசிப்பின் பெருங்கனவு!

பிற மொழி நாவல்களில் அவசியம் படிக்கவேண்டிவை என நான் கருதியது தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் மற்றும் விக்டர் ஹியுகோ இவர்களின் நாவல்களைத்தான். இதில் தஸ்தாவெஸ்கியின் குற்றமும் தண்டனையும், கரமசாவ் சகோதரர்கள், டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவல்களை வாசித்துவிட்டேன். இன்னும் எஞ்சியிருப்பது விக்டர் ஹியுகோவின் லே மிஸரபில்ஸ்!

லே மிஸரபில்ஸ் நாவலின் முழுமையான தமிழாக்கம் இதுவரை வெளிவரவில்லை என்றே நினைக்கிறேன். எனவே ஆங்கிலத்தில் இதை வாசித்துவிட துணிந்துவிட்டேன்! அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தேடியபோது எதை வாசிப்பது என்று குழப்பமாகவே இருந்தது. கடந்த இரு நாட்களாக லே மிஸரபில்ஸ் என்னை வெகுவாக அலைக்கழித்து விட்டது! ஒரு வழியாக பென்குவின் நிறுவனம் தற்போது (2015) வெளியிட்டுள்ள Christine Donougher அவர்களின் மொழிபெயர்ப்பை படிக்க முடிவு செய்து இன்று மதியம் ஆர்டர் கொடுத்துவிட்டேன். புத்தகம் நாளை கையில் கிடைத்துவிடும்! (ஒரே நாளில் டெலிவரி கொடுத்து அசத்துகிறது அமேசான்!).


சுத்தானந்த பாரதியார் ‘ஏழைபடும் பாடு’ என்று லே மிஸரபில்ஸ் நாவலைச் சுருக்கமாக மொழிபெயர்த்ததாக அறிந்திருக்கிறேன். ஜெயமோகனின் ‘நாவல்’ எனும் நூலின் வழியாக லே மிஸரபில்ஸ் உரைநடைக் காவியம் என்று அறிந்திருக்கிறேன். மற்றபடி வேறெதுவும் இந்நாவலைப் பற்றி மேலதிகமாக எதுவும் எனக்குத் தெரியாது. டெம்மி வடிவத்தில் 1450 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தைப் படிப்பது என்னுடைய வாசிப்பின் பெருங்கனவுகளில் ஒன்று!

இந்த நாவலைப் படிக்கும் விருப்பம் தற்போது ஏன் ஏற்பட்டது என யோசித்தபோது, ஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் சமீபத்தில் புத்தகங்களை பற்றிச் சொல்லும் நூலகம் என்ற பதிவில் விக்டர் ஹியுகோ எனும் பெயரைக் குறிப்பிடவே என் மனம் லே மிஸரபில்ஸ் நாவலைத் தொடர்ந்து சென்றுவிட்டது என்பதை அறியமுடிகிறது! அதுமட்டுமல்ல, சென்ற ஞாயிறு ஊருக்குச் சென்றிருந்த போது புத்தக அலமாரியில் இருந்த சில புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் ஒன்று. மூன்று தொகுதிகளில் 2700 பக்கங்கள் கொண்ட அந்தநாவல் இன்றும் எனக்குப் பிரமிப்பை ஊட்டியது. அதை மொழியாக்கம் செய்த டி.எஸ்.சொக்கலிங்கத்தை நினைத்தபோது எத்தகைய அரும்பணி இது என்று தோன்றியது. மொழியாக்கம் என்பது முழுக்கமுழுக்க விருப்பமும் ஆசையும் சார்ந்தது. தான் மிகவும் விரும்பும் ஒரு படைப்பாளியின் படைப்பையே ஒருவர் மொழியாக்கம் செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட படைப்பின் மீதான எல்லையற்ற ஆசையே ஒருவரை மொழிபெயர்ப்புக்குத் தூண்டுகிறது. போரும் அமைதியும் நாவலுக்குப் பிறகு மிகப்பெரிய நாவலாக நான் கருதுவது லே மிஸரபில்ஸ் மட்டுமே.

எல்லோரும் ஏதேனும் ஒன்றில் நிறைவைத் தேடிக்கொள்வதுதானே வாழ்க்கை. அது எனக்கு புத்தகங்களாக அமைந்து விட்டிருக்கிறது! எப்போதும் புத்தகங்கள் சூழ இருப்பது அபரிமிதமான மனநிறைவைத் தருகிறது. அதனால்தான் மேலும் பல புத்தகங்களை கடந்த ஒரு மாதங்களாக வாங்கியிருக்கிறேன். அவற்றில் டால்ஸ்டாயின் CHILDHOOD BOYHOOD AND YOUTH, RESURRECTION என்ற இரு நாவல்களும் COMPLETE SHORTER FICTION என்ற இரு சிறுகதைத் தொகுதிகளும் அடங்கும். மேலும் தஸ்தாவெஸ்கியின் BEST SHORT STORIES OF FYODOR DOSTOEVSKY, THE ETERNAL HUSBAND AND OTHER STORIES என்ற இரு சிறுகதைத் தொகுதிகளையும், செகாவின் SELECTED STORIES OF ANTON CHEKHOV என்ற தொகுதியையும் வாங்கியுள்ளேன். A FAREWELL TO ARMS என்ற ஹெமிங்வேயின் நாவலும் இதில் அடக்கம்.

Related Posts Plugin for WordPress, Blogger...