ஜெயமோகனின் பிரயாகை-6: அகத்தின் திறப்பு!

பாண்டவர்கள் என்ற ஐந்து நதிகளும் திரௌபதி என்ற சங்கமத்தில் இணைவதுடன் பிரயாகை நிறைவடைகிறது. முந்தைய வெண்முரசு நாவல் வரிசைகளிலிருந்து பிரயாகையில் ஜெயமோகன் சற்றே சுதந்திரத்துடன் செயல்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த சுதந்திரத்தில் வெளிப்பட்ட தன் கற்பனையின் வீச்சை சரியானபடி பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்றவகையில் பிரயாகை நம்மைக் கவர்கிறது. அதன் மையப் பாத்திரமாக அவர் கருதும் திரௌபதியைவிட, திருதிராஷ்டிரனே பலவகையிலும் என்னைக் கவர்ந்து நாவலின் மையமாக விளங்குகிறார். நாவலின் எல்லா கதாபாத்திரங்களும் தங்களுக்கான ஆசைகளிலும், கனவுகளிலும் அலைப்புண்டு செல்ல, திருதிராஷ்டிரனே தூய அன்பு ஒன்றை மட்டுமே உள்ளத்திலும் செயலிலும் கொண்டு நம்மில் உயர்ந்து நிற்கிறார். தனது ஐம்புலன்களையும் அன்பு என்ற சங்கமத்தில் நிலைநிறுத்தி நம் நெஞ்சில் என்றும் நீங்காதவராக நிறைந்தவிடுகிறார்.

திருதிராஷ்டிரனுக்கு பிறகு என்னைப் பெரிதும் கவர்ந்து நிற்பது விதுரர்-சுருதை இருவரும்தான்! அவர்களிடையே உள்ள அன்பும், அந்த அன்பின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் பிணக்கும் இளந்தென்றலாய் அவ்வப்போது வருடிச்சென்று இதயத்திற்கு இதம் தருகிறது! இக்கட்டான சூழலில், நிலைமை தன் கையை மீறிச்செல்லும் போது, தனது அறைக்குள் நுழைந்து நூல்களை வாசித்து தன்னை நிலைபடுத்திக்கொள்ளும் விதுரரின் உளப்பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது! அவரது கதாபாத்திரத்தின் சித்தரிப்பு பிரயாகையில் மிக அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன்.

தன் உள்ளக் கொந்தளிப்பு, இயலாமை இரண்டையும் மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தியதன் மூலம் என்னை பாதித்த மற்றொரு கதாபாத்திரம் துரியோதனன்!  ஒவ்வொரு நிகழ்விலும் அவன் தோற்று நிற்பதும், கர்ணனிடம் கொண்ட நெருக்கமான நட்பும் நாவலின் பக்கங்களில் உயிர்த்துடிப்புடனும், யதார்த்தமாகவும் வெளிப்பட்டு துரியோதனனை முற்றிலும் மாறான தோற்றத்துடன் நம் அகத்தை நெருங்கச்செய்து, நம்முடன் பிணைத்து விடுகிறது. வெண்முரசின் ஆரம்பத்திலிருந்தே கௌரவர்களின் குண்டாசி பாத்திரம் பின்னால் சிறப்பாக வரப்போகிறது என்பதை ஊகித்திருந்தேன். அது பிரயாகையில் உண்மையாகியிருக்கிறது. தன் உள்ளம் அறியாமல், தன் உள்ளம் வருந்தாமல் ஒருவன் எத்தகைய வஞ்சத்தையும் செய்ய முடியாது என்பதை குண்டாசி பாத்திரம் அற்புதமாக உணர்த்திச் செல்கிறது. அந்த மெலிய உருவமும், விதுரரிடம் உரையாடும்போது வெளிப்படும் அந்த உள்ளத்தின் மாண்பும் போற்றுதற்குரியது.

பாண்டவர்களில் பீமனும், அர்ச்சுனனும் நம்மைக் கவர்கிறார்கள் என்றாலும் அவர்கள் துரியோதனனை மிஞ்சமுடியாது என்றே கருதுகிறேன்! திரௌபதியின் கதாபாத்திரத்தை மிக உச்சத்தில் கொண்டு வைத்து அசாதாரணமான பெண்ணாக காட்டியதற்கு மாறாக சாதாரண பெண்ணாக காட்டியிருந்தால் அவளும் என்னைக் கவர்ந்திருக்கக் கூடும். மகாபாரதத்தில் அவள் நடவடிக்கைகளுக்கு அவளை இப்படிக்காட்டியதே உகந்ததாக ஆசிரியர் நினைத்திருக்கலாம். அவளை மனதில் கொண்டே பிரயாகையை எழுத அவர் நிச்சயித்ததால், அவள் அவ்வாறாகவே அல்லாமல் வேறு எவ்வாறாகவும் வெளிப்பட்டிருக்க முடியாது என்றும் கருதுகிறேன்.

மொத்தத்தில் சரளமாக கதையோட்டத்துடன், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அகமும் மிக அற்புதமாக, ஆனால் அதேசயம் மிக இயல்பாகவும் இணைந்து பிரயாகையை சிறப்பான வாசிப்பனுபவமான ஆக்கியிருக்கிறது. இருந்தும் நாவலில் புறக்காட்சிகளின் சித்தரிப்புகள், முந்தைய பகுதியைப் போன்று, பிரயாகையில் போதுமான அளவில் சித்தரிக்கப்படவில்லை என்பது ஒரு குறையே. எப்போதும் கதாபாத்திரங்களின் அக உலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வு நம்மை வெகுவாகப் பீடிக்கிறது. பீமனுடன் இடும்பவனத்தில் உலவும் தருணங்களைத்தவிர பிற நேரங்களில் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதான உணர்வே அதிகமும் எழுகிறது. ஆக, தனி மனிதர்களின் அக உலகத்தை பூதக்கண்ணாடி கொண்டு மிக நெருக்கமாகக் கண்டு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஒருங்கே அடையும் உணர்வே பிரயாகையில் மிகுந்திருக்கிறது. மனிதர்களின் அகத்தைப் பரிபூர்ணமாகத் திறந்து காட்டிய வகையில் பிரயாகை நம் உள்ளத்தில் என்றென்றுமாக நிலைத்து நிற்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...