ஜெயமோகனின் பிரயாகை-5: கல்லில் செதுக்கிய ஓவியம்!

வாரணவதத்தின் அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் மாண்டுவிட்டார்கள் என்ற செய்தி திருதிராஷ்டிரனை நிலைகுலையச் செய்கிறது. செய்தி அறிந்து வரும் பீஷ்மருக்கும் சகுனிக்கும் நடைபெறும் உரையாடல்கள், குறிப்பாக தேர்ந்த இலாவகத்துடன் சகுனி வார்த்தைகளை மெல்லமெல்ல எடுத்துச் சென்று அதன் உச்சமாக தன்னுடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் தருணம் அலாதியானது. “துரியோதனன் நீர்க்கடன் செய்தானா?” என்ற பீஷ்மரின் கேள்வியை வெகு சாதுர்யமாக சகுனி எதிர்கொண்டு சமாளிப்பது, அந்த சமாளிப்பின் தர்க்கம் பழுதற்றது என்பதாலேயே பீஷ்மரின் உள்ளத்தில் ஐயம் எழுவது என்பதாகச் செல்லும் அந்த உரையாடல்கள் நாம் படித்து இன்புறத்தக்கவை; ரசிக்கத்தக்கவை.

அதன் பிறகு பீஷ்மர்-விதுரர் சந்திப்பில் நிகழும் உரையாடல்களும் மிக அற்புதமானவை. அமைச்சனுக்கும் அரசனுக்கும் இடையான வேறுபாட்டைச் சொல்லும் பீஷ்மர், கிருஷ்ணன் படையெடுப்புக்கு விதுரர் மறுத்ததையும், மகதம் பற்றிய அச்சத்தையும் முற்றிலும் வேறான கோணத்தில் விவரித்து நம்மை பிரமிக்கச் செய்கிறார். போரில் கிருஷ்ணனின் அராஜகமான செய்கைகளையும் மற்றோர் பார்வையில் வெளிப்படுத்தி, கிருஷ்ணன் மீதான தவறான எண்ணங்களை உடைப்பதோடு, விதுரரின் அடிமனதில் இருக்கும் நினைவுகளை அகழ்ந்து எடுத்து நம்முன் வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக வரும் விதுரர்-சுருதை சந்திப்பும் இதையே வெளிப்படுத்தி மனித மனத்தின் எண்ணச் சிக்கல்களை, அது ஏற்படுத்தும் சூழ்ச்சிகளை இருட்குகையிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. வாசிப்பின் இதுவரையான நாவலின் பகுதிகளை இத்தருணத்தின் வாசிப்போடு இணைக்கையில் ஏற்படும் ஒருங்கிணைவை எண்ணி வியப்பும் மலைப்பும் அடைகிறோம். இந்த ஒருங்கிணைவை தஸ்தாவெஸ்கியின் கரமசாவ் சகோதரர்களில் கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன்.

பாண்டவர்களின் மறைவு குறித்து தனக்கிருந்த ஐயத்தை விதுரர் மூலம் நிவர்த்திசெய்து கொள்கிறார் பீஷ்மர். பீஷ்மரின் நடவடிக்கைகள் மூலம் பாண்டவர்களின் மரணத்தை சந்தேகப்படும் கர்ணன், தன்னுடைய சந்தேகத்தின் விதையை துரியோதனன் மனதில் விதைக்க, அதைக்கேட்டு துரியோதனன் ஒரு வகையில் நிறைவடைகிறான். பாண்டவர்கள் உயிருடன் இருப்பது குறித்து பீஷ்மர் சந்தோஷமடையலாம். துரியோதனன் ஏன் சந்தோஷம் அடையவேண்டும்? பாண்டவர்களை சதியால் கொல்லவில்லை என்பதே அவன் மனநிறைவுக்குக் காரணம் என்று ஜெயமோகன் காட்டுவது நுட்பமான காரணமெனினும் அதைவிடவும் நுட்பமான காரணம் வேறொன்று உள்ளது. இதுவரை துரியோதனனின் செயலிலும், மனதிலும் நிறைந்திருந்து அவற்றின் செயல்பாட்டைத் தீர்மானித்துவந்த எதிரிகள் மறைந்துவிட்டார்கள் என்பதே அவன் மனதில் வெறுமையை நிறைக்கிறது. இனி போராட எதிரிகள் இல்லையென்றும், தான் அரசாண்டால் அதைக்கண்டு பொறாமை கொள்ளக்கூட உறவில் எதிரிகள் யாரும் இல்லை என்பதும் பொய்யாய் போனதே துரியோதனன் மனதில் நிறைவாக வெளிப்படுகிறது! எதிரிகள் கண்ணெதிரிலேயே இருக்கவேண்டும்; அவர்களை எதிர்த்து நாளும் போராடிக்கொண்டும் இருக்கவேண்டும்! இல்லையேல் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

வெண்முரசு நாவல் வரிசைகளில் ஒவ்வொரு நாவலிலும் நாவலின் ஆகச்சிறந்த ஆக்கம் என்று சொல்லத்தக்க வகையில் ஏதாவது ஒரு பகுதி சிறப்பாக அமைந்துவிடுவதுண்டு. அந்த வகையில் பிரயாகையின் மிகச்சிறந்த புனைவின் பகுதியாக நான் காண்பது அன்னைவிழி என்ற பதினைந்தாவது பகுதிதான். வாக்கியங்களை வார்த்தைகளால் இட்டு நிரப்புவதற்கும், வார்த்தைகளே வாக்கியங்களை உருவாக்கிக்கொள்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. நாவலின் இந்தப் பகுதியை பின்னதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். பாறைமேல் ஆர்ப்பரித்துச்  செல்லும் நீராக இல்லாமல் பாறை இடுக்கில் கசியும் நீரின் ஒழுக்கென வார்த்தைகள் வாக்கியங்களை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன. அந்த நீரின் அடியில் வைக்கும் பாத்திரம் மெதுவாக நிரம்பும்போது, அதை கவனிக்காமல் விட்டுவிடும்போது, சட்டென பாத்திரம் நிரம்பி வழிவது போல வாக்கியங்கள் நம் அகத்தே நிரம்பிச் சென்று, சிந்தனையைத் தாண்டி ஆன்மாவைத் தீண்டுகிறது.

கர்ணன், துரியோதனன் இருவரும் உரையாடும் பகுதியும், திரௌபதிக்கும் அவள் தோழியான மாயைக்கும் நிகழும் உரையாடலும் ‘கிளாசிக்’ என்று போற்றத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. இந்த உரையாடல் மூலமாக கர்ணனும் துரியோதனனும் நெருக்கம் கொள்ளும் காட்சிகள் அபராமான வகையில் அமைந்து ‘சபாஷ்’ போடவைக்கிறது. கர்ணன்-துரியோதனன், திரௌபதி-மாயை இந்த இரு ஜோடிகளின் உரையாடலை ஒப்புநோக்கும் போது கிட்டும் உவகை நம்மைச் சிலிர்க்கவைப்பதாக இருக்கிறது! அன்னைவிழி என்ற இப்பகுதி கல்லில் செதுக்கிய ஓவியமென நம் அகத்தே நிலைத்து நின்றுவிடுகிறது திரௌபதி்யின் அழகைப் போல. மனித மனத்தின் சிந்தனையை அதன் அடியாழம் வரை எவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல முடியும் என்பதை இப்பகுதி செய்நேர்த்தியுடனும் அழகுடனும் சித்தரிக்கிறது. படிக்கப்படிக்க திகட்டாததாக, வாசிக்குந்தோறும் இன்பத்தைப் பெருக்குவதாக பிரயாகையின் இந்தப் பக்கங்கள் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல; உண்மை.

(தொடரும்...)
Related Posts Plugin for WordPress, Blogger...