June 29, 2015

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-3 : தனிமையி்ன் இருள்

கங்காவின் செயல்களைத் தட்டிக்கேட்பதற்காக வெங்கு மாமாவை கடிதம்போட்டு வரவழைக்கிறாள் கனகம். கங்காவிடம் பேசுவதற்காக வெங்கு மாமா காத்திருக்கும்போது அலுவலகத்திலிருந்து திரும்பிய கங்கா, “இப்போ அறைக்குள்ளே தனியா இருக்கறது மனசுக்குச் சுகமா இருக்கு. டிரஸ் சேஞ்ச் பண்ணிண்டப்புறம் கதவைத் திறந்துண்டு வெளியே போகணும், சாப்பிடணும், இவாகிட்டே பேசணும், இவா கேக்கற கேள்விகளுக்குப் பதில் சொல்லணும், இவா பண்ற தர்க்கங்களையெல்லாம் கேட்டுண்டு இருக்கணும், இவா சொல்ற புத்திமதிகளையெல்லாம் தாங்கிக்கணும், இவா செஞ்ச உதவிகளையெல்லாம் நன்றியோட நினைச்சு பார்க்கணும்கறதையெல்லாம் யோசிக்கிறபோது இந்தக் கதவைத் திறந்துண்டு வெளியே போகவே பயமா இருக்கு” என்பதாக கங்காவின் மனதில் ஓடும் எண்ணங்கள், அன்பு, உறவு எனும் போர்வையில் அவள் வாழ்க்கை பிறரால் நிர்பந்திக்கப்படுவதை நுட்பமாக உணர்த்திச் செல்கிறது. மனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இப்படி பிறரால் கட்டுப்படுத்தப்படுகிறது எனினும், தன் வாழ்க்கையின் மீதான பிறரின் ஆக்ரமிப்பு அதிகளவில் இருப்பதாக கங்கா உணர்வது உளவியல் சார்ந்து அவளுக்கிருக்கும் பிரச்சினைகளால்தானோ என்று தோன்றுகிறது.

இதுவரை அவளுள் அடக்கிவைத்திருந்த உணர்வுகள் பீறிட்டு எழுவதால்தான், அவள் பிரபுவுடன் கொண்டிருக்கும் தொடர்பை பகிங்கிரமாக செய்கிறாள். தான் நினைத்தது போல வெங்கு கங்காவைக் கண்டிக்காதது கனகத்திற்கு ஏமாற்றமளிக்கிறது. இதற்கு மேலும் அங்கிருப்பதை விரும்பாத கனகம் கணேசன் வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள். தன்னிடம் அத்துமீற முற்பட்ட மாமாவை கங்கா விரட்டியடிக்கிறாள். தனிமை எனும் இருளில் கங்கா தன்னைத்தானே மூழ்கடித்துக் கொள்கிறாள். தனிமையின் வெறுமையை உணரும் அவள் உறவுகளில் கணவன்-மனைவி உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிகிறாள். அவளுள் இருக்கும் காமத்தைப் பற்றி ஜெயகாந்தன் ஒன்றுமே சொல்லவில்லை என்றாலும், உடலுறவு இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்வதை கங்கா யோசிப்பது, உடலுறவின் மீது அவளுக்கு இருக்கும் அளவற்ற அச்சமே அவளுள் இருக்கும் காமத்தை மூடிமறைக்கிறது என்பதைப் புரியவைக்கிறார். பிரபுவிடம் அதனால்தான் அவள் வெறும் நட்பையும் தோழமையையும் மட்டுமே விரும்புகிறாள். அவள் வேறோர் ஆடவனை மணமுடிப்பதை மறுப்பதற்கும் இந்த அச்சமே காரணம் என்று தோன்றுகிறது.

கங்கா தன்னுடன் அவள் பெயரை இணைத்து, அவள் பெயருக்குக் களங்கம் கற்பித்துக்கொள்வது ஏன் என்று பிரபுக்கு புரியவில்லை. சொல்லப்போனால் அதற்கான காரணம் தனக்கே புரியவில்லை என்று கங்கா உணர்கிறாள். இருந்தும் அதற்கான காரணத்தைத் தொகுக்கும் முயற்சியில் அவள் பிரபுவிடம், “எனக்குக் கொஞ்ச நாளாகவே ஒரு பயம். என்னை யாராவது ‘ரேப்’ பண்ணிடுவாளோன்னு நான் எப்பவும் பயந்துண்டு இருக்கேன். அப்படி யாராவது பலாத்காரமா கெடுக்க வந்தா நான் பணிஞ்சுடுவேனோங்கற பயம். அந்த பயத்தினால்தான் நான் உங்ககிட்ட வந்து ஒளிஞ்சிண்டேன்” என்கிறாள். பிரபுவிடம் தன்னை மனமுவந்து ஒப்படைக்க முடியாத கங்கா, அவனாக தன்னை எடுத்துக்கொள்ளட்டும் என்று நினைக்கிறாள். கங்காவுக்கிருக்கும் உளவியல் சிக்கல்களின் மொத்த முடிச்சு இந்த இடத்தில் வெளிப்படுகிறது. ஒரு ஆணின் பலாத்காரத்துக்குப் பின், பாதிக்கப்பட்ட பெண் சந்திக்கும் மிகப்பெரிய உளவியல் சிக்கலை மிக அற்புதமாக படம்பிடித்த ஜெயகாந்தனின் புனைவின் திறன் வியக்கவைக்கிறது.

அக்கினிப் பிரவேசம் கதையை எழுதிய ஆர்.கே.வி. கங்காவுக்கு வரன் ஒருவனைக் கொண்டுவருகிறார். கணேசனும், கனகமும் அத்திருமணத்தை முடித்துவிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் கங்கா அதற்கு மறுத்துவிடுகிறாள். அப்போது கணேசன், “யாரையோ நீ கல்யாணம் பண்ணிக்கமாட்டேங்றேன்னு ஒண்ணும் நாங்க அலுத்துக்கலே. எவனுக்கோ வைப்பாட்டின்னு பேர் எடுத்துண்ட திரியறயே - அதை மாத்தித் தொலைக்கணுமேன்னுதான் - இவ்வளவு தூரம் பிரயாசைப் படறோம்” என்கிறான். அவளும் அதை ஒப்புக்கொண்டவளாக தன் முடிவில் பிடிவாதமாக இருக்கிறாள். தனக்கிருக்கும் பயத்தின் காரணமாக, இன்னோர் ஆணை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பிக்கவும், தன்மீது உறவுகள் கொண்டிருக்கும் போலித்தனமான அன்பையும், பாசத்தையும் முற்றாக வெறுப்பதினாலும் இம்முடிவை நோக்கிச் செல்கிறாள் என்பதை நுட்பமான வாசிப்பில் உணர முடியும்.

கங்கா திருணம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக பிரபு அவளிடமிருந்து விலகிவிட, மதுவும், புகையும் கங்காவின் வாழ்வை முழுமையாக ஆக்ரமிக்கிறது. அவளின் இந்த நிலைக்கு யார் காரணம்? அவள் நலத்தில் அக்கறை காட்டுவதாகச் சொல்லிக்கொள்ளும் உறவுகளா? இல்லை ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணிக்காப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்தச் சமூகமா? எது அவளின் இந்நிலைக்குக் காரணம்? அல்லது இரண்டுமே இல்லாமல் அவளின் இந்த நிலைக்கு அவளேதான் காரணமா? இப்படி பல்வேறு கேள்விகளை நம்மில் எழச்செய்தபடி நாவல் முடிந்துவிடுகிறது. இதற்குப் பிறகு கங்காவுக்கு நிகழ்வதை ‘கங்கா எங்கே போகிறாள்?’ ‘சுந்தரகாண்டம்’ ஆகிய நாவல்களில் விவரிக்கிறார் ஜெயகாந்தன்.

ஜெயமோகன், இந்நாவலைப் பற்றிச் சொல்லும்போது, “சில நேரங்களில் சில மனிதர்கள் மிதமிஞ்சிப் பிரபலமானதனாலேயே அந்தரங்கமான கூரிய வாசிப்புக்கு ஆளாகாமல் போன நாவல் என்பது என் எண்ணம். அப்படி பிரபலமாகும்போது ‘தீவிர’ வாசகர்கள் என தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அது உதாசீனத்தை பெறுகிறது. மேலோட்டமாக படிக்கும் பெரும்பான்மை வாசகர்கள் அதை அங்கீகரிக்கப்பட்ட பொதுவான வாசிப்புத்தடத்திலேயே வாசித்து முடித்துவிடுகிறார்கள். ஆகவே நல்ல இலக்கியப்படைப்புக்கு அளிக்கப்படவேண்டிய – அப்படி ஒன்றை கோருவது அதன் உரிமையும் கூட – பன்முக வாசிப்பை பெறாமலேயே எளிய முத்திரைகளுடன் அப்படைப்பு நம் முன் நின்று கொண்டிருக்கிறது” என்கிறார். எனவே ‘சில நேரங்களில் சில மனிதர்களை’ புறக்கணிப்பதற்கு மாறாக, அதற்குரிய இலக்கிய அந்தஸ்தை அளிக்கவேண்டியது வாசகர்களின் கடமை.

காலச்சுவடு பதிப்பகத்தின் இந்தப் புத்தகத்தில் எழுத்துப் பிழைகள் மலிந்துள்ளன. அவைகள் பல இடங்களில் வாக்கியங்களின் அர்த்தத்தை திரிப்பதோடு, அர்த்தமின்மையையும் வெளிப்படுத்துகிறது கங்காவின் வாழ்க்கையைப் போல.

(முற்றும்).

Related Posts Plugin for WordPress, Blogger...