June 28, 2015

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-2: கங்காவின் உளவியல் சிக்கல்கள்

கங்காவின் மனதில் ஆழ்ந்து கிடக்கும் பல்வேறு உளவியில் சார்ந்த சிக்கல்களை நாவல் முழுதும் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஜெயகாந்தன். அசட்டுத்தனமாக செய்த ஒரு காரியத்தால் அவளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியும், அவள் மீதான வெங்கு மாமாவின் அபிப்ராயங்களும், அவள் ஆழ்மனதில் அடக்கப்பட்ட பாலுணர்வும், அவளது இந்த உளச்சிக்கலுக்கு அடிப்படையாக அமைகிறது. அவளது இந்த மனச்சிக்கல்கள் நாவல் முழுதுமே பரந்து விரிந்து கிடக்கிறது. அவற்றை ஜெயகாந்தன் வெளிப்படையாக சுட்டிக்காட்டவில்லை என்றாலும் இயல்பான சித்தரிப்பின் மூலமே மிக நுட்பமாக உணர்த்திச் செல்கிறார். வாசிப்பில் நாம்தான் அவற்றை உய்த்துணர வேண்டும்.  நாட்கள் செல்லச்செல்ல கங்காவின் உளவியல் சார்ந்த சிக்கல்கள் குற்றவுணர்வாகவும் பிறகு தாழ்வுணர்ச்சியாகவும் மாறுவதை மிக அற்புதமாக சித்தரிக்கிறார் ஜெயகாந்தன்.

தன்னைப் பற்றிய மோசமான சித்திரம் வெங்கு மாமாவின் வாயிலாகவே கங்காவின் மனதில் மிக ஆழமாகப் பதிகிறது. “நீ இயற்கையிலேயே எவ்வளவு கீழ்த்தரமான குணம் உடையவள்னு தெரியிறதா? ஏன்னா, யாருன்னே தெரியாத ஒருத்தனுக்கு அவ்வளவு சுலபமா எப்படி உன்னாலே இணங்க முடிஞ்சது?” என அவர் அவளிடம் கேட்பதன் மூலமாக அந்த எண்ணம் அவளில் பசுமரத்தாணி போலாகிறது. மேலும் அவர் அடிக்கடி சொல்லும், “நீ யாருக்காவது வைப்பாட்டியா இருக்கலாம் ஆனா எவனுக்கும் பெண்டாட்டியா இருக்க முடியாது” என்று சொல்வது அவளைப் பற்றிய சுயபிம்பத்தை முற்றாக சிதறடிக்கிறது. பிரபு பிடிக்கும் சிகெரெட் வாசனையை ரசிக்கும் கங்கா, “இந்த சிகரெட் நாத்தம் நன்னா இருக்கறதாவது? இது நன்னா இருக்கனும்னா அந்தப் பெண்ணோட மனசு எந்த அளவுக்குக் கெட்டுப் போயிருக்கணும்கறதைப் பத்தி எங்க மாமாவைக் கேக்கணும். ஒரு பெரிய ‘தீஸிஸ்’ஸே படிச்சுடுவார்!” என்று நினைப்பது அவள் மனதளவில் எந்த அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதையே காட்டுகிறது. பிரபுவிடம் தன் அம்மாவைப் பற்றிச் சொல்லுமிடத்தில், “என் லைஃப் இப்படி ஆனதுக்குக் காரணம் முக்கியமா அவதான். அதுக்காக நான் அவளை வெறுத்துட முடியுமா?” என்கிறாள். தான் செய்துவிட்ட தவறுக்கு மற்றொருத்தரை பொறுப்பாக்குவது அவளுள் உறையும் மிகப்பெரிய உளவியல் சிக்கலை வெளிப்படுத்துகிறது. தவறு செய்த அவளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா என்ன? அந்தத் தவறுக்கு தண்டித்ததற்காக, தண்டிப்பவரையே காரணமாக ஆக்குவது எந்தவிதத்தில் நியாயம்?

கங்கா தினமும் பிரபுவுடன் காரில் போவதும் வருவதும் கனகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதை மறைவாகச் செய்யாமல் எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதற்காக வெளிப்படையாகவே அதைச் செய்கிறாள். தன்னைக் கெட்டுப்போனவள் என்றதற்காக சமூகத்திற்கு எதிராக அவள் விடும் சவால் அது. ‘இப்போது என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்வி அந்தச் செய்கையில் மறைந்திருக்கிறது. அதை அவள் செய்வதற்குக் காரணம் தன் களங்கத்திற்கு காரணமானவனுடன் தான் பழகுவது தன் களங்கத்தை ஒரு வகையில் துடைக்கும் செயல் என்று அவள் கருதுவதுதான். இதுவே அவளுக்கு ஆசுவாசத்தைத் தருகிறது. இத்தனை நாள் இல்லாத நிம்மதி கிடைத்துவிட்டதாக உணர்கிறாள். “நான் இப்படி இருக்கறதை எப்படி ஏத்துக்கறதுங்கறது இனிமேல் மத்தவா பிரச்சினை. ஏத்துக்கலேன்னாலும் எனக்குக் கவலையில்லை” என்று கங்கா எண்ணுவது அதனால்தான். அதைக் கேட்கும் அம்மாவிடம்,“கிளாஸ்கோ மல்லிலே ரவிக்கை போட்டுண்டு இருக்கியே? கலர் புடவை கட்டிண்டிருக்கியே? அப்பா செத்த அன்னிக்கே தலையைச் சிரைச்சா கொட்டிட்டே?” என்று எதிர்த் தாக்குதல் தொடுக்கிறாள்.

அக்கினிப் பிரவேசம் என்ற கதை மஞ்சு-கங்கா இருவருக்குமிடையே விவாதத்திற்கு வரும்போது, கதை என்பது வெறும் கதை மட்டுமல்ல, அது யாரோ ஒருவரின் நிஜ வாழ்க்கையும் கூட என்பதை அறிகிறோம். “கதை படிக்கிறவர்களுக்குத்தான் அது ஆரம்பித்துத் தொடர்ந்து முடிகிறது. எழுதுகிறவனைப் பொறுத்தவரை ‘முடிந்து’போன ஒன்றைப் பற்றித்தான் அவன் எழுதுகிறான் என்று புரிந்தகொண்டால், ‘ஐயோ! என்ன இப்படி முடித்துவிட்டீர்களே!’ என்று அவனிடம் அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை என்பதை உணரலாம்” என்று நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது.

வாசிப்பில் நம்முன் விரியும் நாவலின் காட்சிகளின் சித்தரிப்புகள் நம்முடைய மனத்திரையில் உடனடியாக விரிவதற்கு மாறாக, ஒலியாக முதலில் நம்முடைய காதுகளில் விழுந்து அதன்பிறகே மனத்திரையில் காட்சியாக விரிகிறது. படிக்கப் படிக்க கங்காவின் குரல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்க, அதன் பின்னால் காட்சிகள் தம்போக்கில் விரிந்துகொண்டே செல்கின்றன. ஆகவேதான் கங்கா என்ற கதாபாத்திரத்தின் கண்களின் வழியாகவே இந்நாவல் சொல்லப்படுவதால், வெங்கு மாமாவைப் பற்றி அவள் கொண்டிருக்கும் அபிப்ராயங்கள் அனைத்துமே உண்மையானது அல்ல என்றும், அவைகள் பெரும்பாலும் அவள் உளவியல் சார்ந்து பிரதிபலிப்பவை என்றும் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் முழுக்க முழுக்க அந்தப் பார்வையில் நாவலை வாசிப்பது ஆபத்தானது என்றும், ஆண்களைப் பற்றிய அவளது கருத்துக்கு வலுவான ஆதாரமாக நாவலில் பல இடங்கள் உள்ளன என்பதும், ஒரு ஆண் எந்த நோக்கத்தில் ஒரு பெண்ணை நெருங்குகிறான் என்பதை ஒரு பெண் தெளிவாக அறிய முடியும் என்பதையும் வாசிப்பில் கவனத்தில் கொள்வது நல்லது. உண்மையில் அவள் கெட்டுப்போனதால் எல்லா ஆண்களையும் அவ்வாறு கருதுகிறாளா இல்லை பெரும்பாலான ஆண்கள் அப்படி இருப்பதால்தான் அவள் அப்படி நினைக்கிறாளா என்பது சிந்தனைக்கும் பரிசீலனைக்கும் உரியது.

(தொடரும்...)

Related Posts Plugin for WordPress, Blogger...