June 27, 2015

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு

சென்ற வியாழன் புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன். புத்தகக் கடைக்குச் சென்று பல நாட்கள் ஆகிவிட்டன! புத்தகங்களை தற்போது ஆன்லைனில் வாங்கிவிடுவதால், தமிழ் புத்தகங்கள் வாங்கவென்று புத்தகக் கடைக்குச் செல்லவேண்டி வந்தது. நான் தேடிய புத்தகம் கிடைக்கவில்லை. நான் வாங்க உத்தேசித்திருந்த ஒரு புத்தகத்தின் அச்சு மிக மோசமாக இருந்ததால் அதை வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். அப்போது ஒரு புத்தகத்தின் அட்டைப் படம் என்னைக் கவர்ந்தது. எடுத்துப் பார்த்தபோது அது ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று தெரிந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் அந்தப் புத்தகம் என்னை ஈர்த்து வாங்கத் தூண்டியது. ஜெயகாந்தனின் பல நாவல்களை முன்னரே வாசித்திருக்கிறேன். அவரது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவல் தவிர வேறு புத்தகங்களில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. மீனாட்சி புத்தக நிலையத்தின் சில நேரங்களில் சில மனிதர்கள் பழைய பிரதி ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்தப் புத்தகம் ஊரில் இருந்தது. என்னுடைய தற்போதைய மனநிலையில் படிப்பதற்கு, மிக வேகமாக படித்து முடிப்பதற்கு, ஒரு புத்தகம் ஒன்று தேவைப்பட்டது. எனவே தயக்கமின்றி ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களை வாங்கினேன்.

இந்நாவல் அவரது அக்கினிப் பிரவேசம் என்ற சிறுகதையின் நீட்சி என்பது அனைவரும் அறிந்ததே. அந்தக் கதைக்குக் கிடைத்த எதிர்வினைகளின் விளைவாகவே இந்த நாவலை எழுதும் உத்வேகம் பெற்றிருக்கிறார் ஜெயகாந்தன். நாவல் முழுதுமே கங்கா என்ற பாத்திரத்தின் மனவோட்டத்தின் மூலமாகவே கதையை நடத்திச் செல்கிறார் ஜெயகாந்தன். இந்தக் கதை கூறல் முறை முந்தைய என்னுடைய வாசிப்பில் (சுமார் 20 வருடங்களுக்கு முன்னால்!) உவப்பானதாக இல்லாமல் இருந்தது. அக்கிரஹாரக் கொச்சையுடன் வெளிப்படும் அந்த நடை அன்று என்னைக் கவரவில்லை. இன்றும் அப்படியே இருக்கும் என்றுதான் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அதில் ஓர் அழகும் ஈர்ப்பும் இருப்பதை இன்றைய வாசிப்பில் உணரமுடிகிறது.

கதையின் ஆரம்பத்திலேயே கங்காவின் பாத்திரத்தை பற்றிய மிகப்பெரிய எதிர்பார்ப்பை நம்முள் ஏற்படுத்தி, கதையை கனகச்சிதமாக நடத்திச் செல்கிறார் ஜெயகாந்தன். எனவே நாவலின் முதல் 75 பக்கங்களை மிக விரைவாகப் படித்து முடித்தேன். இப்பக்கங்களில் அக்கனிப் பிரவேசம் என்ற கதையின் முடிவைப் பற்றி கங்கா, கனகம், வெங்கு ஆகியோரின் பார்வையில் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார் ஜெயகாந்தன். மூன்றுவிதமான பார்வைக் கோணத்தை காட்டி, படிப்போர் மனதில் பல்வேறு கேள்விகளை ஜெயகாந்தன் எழச்செய்கிறார். அந்தக் கதையை கங்கா தன்னுடைய அம்மாவை படிக்கும்படி செய்வதும், அதைப் படித்த கனகம் புலம்புவதும் நம் மனதைக் கரைக்கிறது. கடந்த காலத்தில் வாழ்க்கையில் நடந்து முடிந்துவிட்ட பல சம்பவங்களை ஒரு சிறு சொல் அல்லது செயலால் மாற்றியமைத்திருக்க முடியும் என்பதை இன்று நிகழும் காலத்தில் அறியும்போது பாதிக்கப்பட்ட மனதில் ஏற்படும் தவிப்பும், அங்கலாய்ப்பும், ஆற்றாமையும் சொல்லொண்ணாதது.

நாவலில் வெங்கு மாமாவின் பாத்திரம் ஒரு அற்புதம். ஒரு பெண் கெட்டுப்போவதன் மீதான ஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும் வெவ்வேறு என்பதையே வெங்குவின் பாத்திர வார்ப்பின் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார் நாவலாசிரியர். வெங்கு தனி மனிதன் அல்ல; மாறாக இச்சமூகத்திலுள்ள ஆண்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு கதாபாத்திரம். கெட்டுப்போன ஒரு பெண்ணை எவ்விதம் நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கிலேயே ஆணின் பார்வை அமைந்திருக்கிறது என்பதை வெங்குவின் பேச்சில், செயலில் கனகச்சிதமாக அபாரமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஜெயகாந்தன். தர்மமும் நியாயமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறானது என்பதாக அவர் சொல்வதிலிருந்து இதை உணரலாம். உண்மையில் மிகவும் வியப்புக்குரிய விசயமாகவே இது படுகிறது. ஒழுக்கம் என்பதும் கற்பு என்பதும் பெண்களுக்கு மட்டுமே உரியதாக ஏன் வலியுறுத்தப்படுகிறது? அதிலிருந்து ஆண்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு? யோசித்துப் பார்த்தால், தன் மனைவி மட்டும் கற்புடையவளாக இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் விரும்புவதால் விளைந்தது இந்த நீதியும் தர்மமும் என்பதை அறியும்போது, ஆணாதிக்க சமூகத்தின் கோரமுகம் வெளிப்படுகிறது. அதனால்தான், ஒரு ஆண் கற்புடையவனாக இருந்தால் போதும் உலகில் எல்லாப் பெண்களும் கற்புக்கரசிகளாக இருப்பார்கள் என்கிறார் பாரதியார்.

உலகெங்கும் ஆண்களின் பார்வை இவ்வாறாகவே இருக்கக் காண்கிறோம். அதனால்தான் படிதாண்டும் பெண்களின் கதையை இலக்கியமாக படைத்திருக்கிறார்கள். Anna Karenina-Leo Tolstoy, Madame Bovary-Gustave Flaubert, Lady Chatterley's Lover-D.H.Lawrence போன்ற உலக இலக்கியங்கள் பெண்களின் தரப்பை நியாயப் படுத்தவே படைக்கப்பட்டன. ஆனால் உலக இலக்கியத்திலேயே துணிந்து, ஐந்து ஆண்களை மணந்தவளாக பாஞ்சாலியை சித்தரித்தது நமது மகாபாரதம் மட்டுமே. இதிலும் நம்மவர்கள் பாஞ்சாலி ஐந்து கணவர்களை மணந்ததற்கு சப்பைக் கட்டு கட்டுவதை நாம் பார்க்கலாம். எங்கே எல்லா பெண்களும் அப்படியாகத் துணிந்து விடுவார்களோ என்ற ஆண்களின் அச்சமே அதற்குக் காரணம். சிலப்பதிகாரமும் படிதாண்டிய கோவலனின் கதையைச் சொல்கிறது என்பது கவனிக்கத்தக்கது. படிப்போரின் மனதில் இத்தகைய கேள்விகளையும் விவாதங்களையும் எழச்செய்யும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஓர் அபூர்வமான படைப்பு என்றே தோன்றுகிறது.

மாமாவின் நோக்கமும் எண்ணமும் புரிந்த கங்கா அவரை எதிர்க்கவும் முடியாமல் பணியவும் முடியாமல் திண்டாடுகிறாள். அந்தத் திண்டாட்டத்தை மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, அதிலிருந்து கங்கா தப்பிப்பதை வெகு இலாவகமாக நாவலில் திறம்பட சித்தரித்திருக்கிறார் ஜெயகாந்தன். இந்த ஆடு-புலி ஆட்டத்தில் கங்கா தனக்கும் இசைய மாட்டாள், வேறு ஒருத்தனையும் கைப்பிடிக்க மாட்டாள் என்று அறிந்து, திறமையிருந்தால் முடிந்தால், அவள் கெட்டுப்போக காரணமாக இருந்தவனையே தேடிப்பிடித்து வாழட்டும் என்கிறார் வெங்கு. கங்காவுக்கும் அப்படிச் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. எனவே 12 வருடங்களுக்குப் பிறகு அவனைத் தேடும் முயற்சியில் இறங்குகிறாள். ஆறு மாதங்களாகத் தேடி ஒரு நாள் அவனைக் கண்டடைகிறாள்.

ஆண்கள் மீது வெறுப்பும், பெண்களை அணுகும் முறையில் ஆண்கள் செயல்பாடு மீது அதிருப்தியும் கொண்ட கங்கா என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவே அவனைத் தேடுகிறாள். 12 வருடங்களுக்கு முன்னர் தன் வாழ்க்கையில் மட்டும் அந்தச் சம்பவம் நடந்திராவிட்டால் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிக்கிறாள். வாழ்க்கையின் பல தருணங்களில் நடந்து முடிந்துவிட்ட பல சம்பவங்களை நமது மனம், ‘அப்படி நடந்திருந்தால் அல்லது இப்படி நடந்திருந்தால்’ என்றுதான் யோசிக்கிறது. நடந்துவிட்டதை மாற்ற முடியாது என்பதைத் தெரிந்திருந்தும் மனித மனம் பல நேரங்களில் இப்படித்தான் சிந்திக்கிறது. ஆனால் கங்கா 12 வருடங்களுக்கு முன் இருந்த பெண் அல்ல. எனவேதான் அந்த நினைப்பை, “என்ன பெரிசா நடந்துடப் போறது? அன்னிக்கு ஆர்.கே.வி. ஆத்திலே சில மாமிகளைப் பார்த்தேனே, அவா மாதரி ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிண்டு, ஒரு அஞ்சாற கொழந்தையைப் பெத்துண்டு, உலகத்தையே ஒரு ‘அவர்’லே அடக்கிண்டு, அந்த ‘அவ’ருக்குப் பயந்தமாதிரி காட்டிண்டு, சமயத்திலே ‘அவ’ரைப் பயமுறுத்திண்டு.... பெண் ஜென்மங்களுக்கு வாழ்க்கை வேற என்ன பெரிசா அமைஞ்சுடப் போறது இங்கே?” என்பதாக எடுத்துக்கொள்கிறாள். நம் சமூகத்தில் நிலவும் பெண்களின் நிலையை கங்காவின் இந்த எண்ணங்கள் மிகச் சரியாகப் படம்பிடிக்கின்றன.

உரையாடல்களின் போதும், கதையைச் சொல்லும் போதும் கங்காவின் மனம் சுற்றுச்சூழலை கிரகித்து, அதைச் சொற்களாக வெளிப்படுத்தும் சித்தரிப்பு நாவலின் பல இடங்களில் மிகப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. உதாரணமாக தன் அலுவலகத்தின் சூழலை, “இந்த ஹாலிலே இந்த ஆபீஸின் இயக்கத்தை - இதன் மும்முரத்தைப் பாக்கறச்சே - ரொம்ப மெக்கானிகலா - ஒரு கடிகாரத்தைத் திறந்து பார்த்த மாதிரி இருக்கு” எனக் கருதுவதைச் சொல்லலாம். ஆண்களின் மீது வெறுப்பு கொண்டிருந்த போதும், தன் கண்ணெதிரில் நடந்துவிட்ட விபத்தில் ‘காரை ஓட்டிவந்தவன் பிழைக்கவேண்டும்’ என்று கங்கா வேண்டிக்கொள்வது அவள் மனதில் இரக்கம் செத்துவிடவில்லை என்பதையும், அந்த கதாபாத்திரத்தின் குணத்தையும் மிக இயல்பாக காட்சிப்படுத்துகிறது. கங்காவும் பிரபும் சந்திக்கும் காட்சி நம் மனத்தை நெகிழ்ச்சியால் நிரைக்கிறது.

இருவரும் காரில் பயணிக்கும்போது, “இந்த நிமிஷம் வரைக்கும் நடந்ததெல்லாம் அழிச்சுட்டு இந்தக் காருக்குள்ளேயே நான் வளர்ந்து முன்பக்கத்து ஸீட்டிலே வந்து உட்கார்ந்துண்ட மாதிரி, இதுக்கு நடுவிலே ஒண்ணுமே நடக்காத மாதிரி, நான் கெட்டுப்போகாத மாதரி, சித்த முன்னரே ‘சீ’ன்னு சொன்னப்ப, இவர் பதிறிப்போய் விலகினாரே அது மாதிரி இவரை விலக்கிட்ட மாதரி எல்லாம் கற்பனை பண்ணிக்கிறேன்” என வெளிப்படும் எண்ணவோட்டங்கள் கங்காவின் மனதில் நடந்துவிட்ட அந்தச் சம்பவமும், அந்த சம்பவத்தால் நிகழ்ந்துவிட்ட அவமானமும், அவள் வாழ்நாளின் ஒவ்வொரு கணமும் அவளைக் குத்திக் கிழித்த அவஸ்தையை, துன்பத்தை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல் இந்த நாவலின் மையத்தைத் திறக்கிறது. மிகக் கூர்மையான, கனகச்சிதமான வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக இயல்பாவும் அற்புதமாகவும் அந்த உரையாடலில் புலப்படுத்துகிறார் ஜெயகாந்தன்.
“இந்த உலகத்திலே இல்லாதது எது? ஆனா - உன்னை மாதரி வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கிற பொண் எனக்குத் தெரிஞ்சவரை நீ ஒருத்திதான்” - இவர் பேசிண்டு இருக்கிறபோதே நான் குறுக்கே கேக்கறேன்:
“அது எப்படி முடியும்? என் மனசாட்சியை ஒரு பக்கம் விடுங்கோ. இந்த மாதிரிக் கெட்டுப்போனவள்னு பகிங்கிரமாயிட்டப்புறம் ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க யார் முன் வருவா?”
“வாட் ஆர்யூ டாக்கிங்? கெட்டுப் போறது, கெட்டுப் போறதுன்னு... ஐ கேன் ஸே மெனி கேஸஸ். ஒருத்தனோட வாழ்ந்து டைவர்ஸ் பண்ணிக்கிட்டு இந்தக் காலத்திலே வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்கள்ளாம் இருக்காங்க. நீ கெட்டுப் போனதை கூட நின்னுக்கிட்டுப் பார்த்தாங்களா எல்லாம்? - நான் உன்னைச் சந்திச்சதுக்கு ஒரு பலன் இருக்கணும். சீக்கிரம் அது என்னாது சொல்லு?”
இந்த இடத்தில் ஏறக்குறைய நாவல் முடிந்துவிட்டதாகவே தோன்றுகிறது. கங்கா அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள்? அல்லது அவன்தான் அவளுக்கு என்ன செய்ய முடியும்? இந்த இரண்டிலும் அர்த்தமில்லாதபோது கங்காவின் எதிர்காலம் எத்தகையது?

(தொடரும்...)

Related Posts Plugin for WordPress, Blogger...