May 9, 2015

HAM ON RYE -CHARLES BUKOWSKI: வாழ்க்கையின் உறைகல்

சாருவின் புதிய எக்ஸைல் படித்த போது அதில் அறிந்த ஒரு பெயர்தான் சார்லஸ் புகோவெஸ்கி. அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர், சிறுகதை, நாவல் ஆசிரியர், கட்டுரையாளர் என்ற பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். (லாஸ் ஏஞ்சல் நகரத்தின் பிரபலமான நாளிதழில் Notes of a Dirty Old Man எனும் பத்தி எழுதியபோது FBI இவரைக் கண்காணித்தது குறிப்பிடத்தக்கது). இதுவரை இவர் எழுதிய ஆறு நாவல்களில் மிகவும் சிலாகிக்கப்படும் Ham On Rye முதன்மையானதாக கொண்டாடப்படவே, அதில் ஈர்க்கப்பட்டவனாக அந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன். படிக்க ஆரம்பித்ததும் எனக்கேற்பட்ட மிகப்பெரிய வியப்பு, ஆங்கில நாவலைப் படிக்கிறோம் என்ற உணர்வே எழவில்லை என்பதுதான். வார்த்தைகளும் வாக்கியங்களும் அவ்வளவு எளிமையாக இருந்தன. படிக்கப் படிக்க சுவாரஸ்யம் கூடவே தொடர்ந்த வாசிப்பில் நான்கைந்து அமர்வுகளில் படித்து முடித்தேன்.

கதைசொல்லியாக வரும் ஹென்றி தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் சொல்லித் தொடங்கும் கதை, அவனது பள்ளிப் பருவத்து வாழ்க்கையை, அந்த வயதுக்கே உரிய குறும்புத் தனத்துடன் சுவாரஸ்யமாக, சித்தரிக்கிறது. ஒரு பக்கம் வெளி உலக வாழ்க்கையும், மறுபக்கம் அவன் குடும்ப வாழ்க்கையின் சூழலையும் தொய்வின்றி திறம்படச் சரளமாக சொல்லிச் செல்கிறார் புகோவெஸ்கி. அண்டைவீட்டுப் பையன்களுடன் சேர்ந்து விளையாடுவது கூட மறுக்கப்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்வது, சனிக்கிழமை தோறும் வீட்டின் புல்வெளியை கட்டாயமாகச் சுத்தப்படுத்துவது என ஹென்றியின் வாழ்க்கை நகர்கிறது. அவன் மீது கோபம் கொள்ளும்போது அவன் தந்தை அவனது பிருஷ்டத்தில் கன்றிப்போகும் அளவிற்கு கடுமையாக சவுக்கால் விளாசும் தண்டனை கொடுக்கிறார். சிறுவனான அவன் அதைத் தடுக்க முடியாத இயலாமையும், பின்னர் அவன் வளர்ந்த பிறகு, தனது ஒரு பார்வையாலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதும், கால மாற்றத்தை உணர்த்தும் விதமாக சிறப்பாக நாவலில் வெளிப்படுகிறது.

ஹென்றி வாலிப வயதை அடையும் போது, கல்லூரியில் நுழைவதும், அவன் உடலெங்கும் கொப்புளங்கள் தோன்றுவதும் ஒருசேர நிகழ்கிறது. இதனால் வெளியில் நடமாடுவதும், மனிதர்களை சந்திப்பதும் அவனுள் அபரிமிதமான தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆகவே பல மாதங்கள் கல்லூரிக்குச் செல்லாமல், அதற்காக சிகிச்சை மேற்கொள்கிறான். முகம் முதற்கொண்டு, உடலெங்கும் வெளிப்படும் கொப்புளங்களுக்காக அவன் மேற்கொள்ளும் சிகிச்சை நாவலில் விரிவாகப் பேசப்படுகிறது. ஊசியால் கொப்புளங்களைக் குத்தி எடுக்கும் சிகிச்சை ஏற்படுத்தும் வலியின் கொடுமையை மனோதிடத்துடன் எதிர்கொள்கிறான். மருத்துவ மனையில் தன்னிடம் பரிவும், அன்பும் காட்டும் ஒரே ஜீவனாக நர்ஸைக் காண்கிறான். விதவிதமான நோயாளிகளை சந்திப்பது அவன் மனதைத் தளரச் செய்வதற்கு மாறாக திடமாக ஆக்குகிறது. மருத்துவனை தவிர மற்ற நேரங்களில் வீட்டிலேயே படுக்கையில் முடங்கிக் கிடப்பது, வானில் பறக்கும் விமானத்தின் நேரத்தைக் கணக்கிடுவது, நோட்டுப் புத்தகத்தில் படங்கள் வரைவது, எழுதுவது என்பதாக அவனது நேரங்கள் கடந்து செல்கின்றன.

ஏதாவது ஒரு செயலில் இயங்கிக் கொண்டிருக்கும் போது நாம் நேரத்தைக் கொல்கிறோம். ஆனால் வெறுமனே சும்மாயிருக்கும் போது நேரம் நம்மைக் கொல்கிறது. எனவே தனது நேரத்தைச் செலவிட பொது நூலகம் ஒன்றை நாடுகிறான் ஹென்றி. அங்கே பல்வேறு புத்தகங்களைப் படிக்கிறான். நூலக நேரம் போக மற்ற நேரத்தில், தன் தந்தைக்கு பயந்து படுக்கையில் போர்வையால் மூடிக்கொண்டு (வெளிச்சம் தெரியாதிருக்க) இரவு நேரங்களில் படிக்கிறான். பல எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து ஹெமிங்வேக்கு வருகிறான். “And then along came Hemingway. What a thrill! He knew how to lay down a line. It was a joy. Words weren’t dull, words were things that could make your mind hum. If you read them and let yourself feel the magic, you could live without pain, with hope, no matter what happened to you” என்பதாக வெளிப்படும் புகோவெஸ்கியின் வார்த்தைகள் எத்தனை உண்மை என்பதை புத்தகங்களை நேசிப்பவர்களும் வாசிப்பவர்களும் மட்டுமே உணர முடியும்.

தன்னுடைய அனைத்துத் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் எங்கெங்கோ புகலிடம் தேடி அலைந்தாலும் மனிதன் இறுதியாக தஞ்சம் அடைவது கடவுளிடம்தான். அவன் கடவுளை வந்தடைவது, கடவுளுக்கு எதிரான கோஷத்திற்காக இருக்கலாம் அல்லது கடவுளைச் சரணடைவதற்காக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் கடவுளை நெருங்காமல் மனிதன் தன் துயரத்தை முற்றாகக் களைந்துவிட முடியாது என்றே கருதுகிறேன். “All right, God, say that You are really there. You have put me in this fix. You want to test me. Suppose I test You? Suppose I say that You are not there? You’ve given me a supreme test with my parents and with these boils. I think that I have passed Your test. I am tougher than You. If You will come down here right now, I will spit into Your face, if You have a face” என்பதாக ஹென்றி நினைப்பது இதை உறுதிப்படுத்துகிறது.

மருத்துவர்களின் உதவியால் ஓரளவிற்கு குணமடையும் ஹென்றி மீண்டும் கல்லூரிக்குச் செல்கிறான். எல்லா மாணவர்களும் தத்தம் பெண் சிநேகிதிகளுடன் பேசுவது, சுற்றுவது, என்றிருக்க எந்தப் பெண்ணும் ஹென்றியை நெருங்குவதில்லை. படிப்பை முடித்து, ஒருவழியாக பட்டதாரியாக வெளிவரும் அவன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றில் வேலைக்குச் சேர்கிறான். பழைய கல்லூரி மாணவன் ஒருவனோடு அங்கே ஏற்படும் கைகலப்பால் வேலையை இழக்க வேண்டியதாகிறது. இதனால் தன் தந்தையிடம் ஏச்சும் பேச்சும் வாங்குகிறான். அதுவும் சாப்பிடும் போது மிகச்சரியாக வேலை பற்றிய பேச்சை எடுப்பார். அப்போதெல்லாம், கரமசாவ் சகோதரர்களில் இவான், ‘தன் தந்தையைக் கொல்ல விரும்பாதவர்கள் யார்?’ எனக் கேட்கும் கேள்வியை நினைவு கொள்கிறான்.

வேலை தேடுவதை விட்டுவிட்டு ஜர்னலிசம் படிக்க ஆரம்பிக்கிறான். அவன் மனதில் உள்ள வேதனையும் துயரமும் அவனை ஒரு குடிகாரனாக, முரடனாக ஆக்குகிறது. அவனுக்கென ஒருசில நண்பர்கள் இருந்த போதும், பெக்கர் அவனைச் சரியாக புரிந்துகொண்டவனாக இருக்கிறான். தான் ஒரு எழுத்தாளன் ஆகப்போவதாகவும், தன்னுடைய புத்தகமும் ஒரு நாள் புத்தகக் கடையின் அலமாரியில் இருக்கும் என்பதாகவும் பெக்கர் ஹென்றியிடம் அடிக்கடி சொல்கிறான். இந்நிலையில் ஹென்றி எழுதி வைத்திருந்த கதைகளைப் பார்த்து கொதிப்படையும் அவன் தந்தை, அவனை வீட்டைவிட்டுத் துரத்துகிறார். இதனால் மேற்கொண்டு படிக்கப் போவதையும் நிறுத்திவிடும் அவன் நிர்க்கதியாய் தெருவில் நிற்கிறான். ‘ஜெயிப்பது ஒன்றைத் தவிர வாழ்வில் வேறு வழியில்லை’ எனத் தோன்றுகிறது அவனுக்கு என்பதாக நாவல் முடிகிறது. பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து வாழ்க்கை எனும் பிரம்மாண்ட வெளியில் வீசப்பட்டு, வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கும் ஒரு இளைஞனின் கதையை இந்நாவல் சித்தரிக்கிறது. தானியங்களிடையே பதரைப் போல சக மனிதர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் ஒரு மனிதனின் அகப்போராட்டத்தை இந்நாவல் படம் பிடிக்கிறது. அவன் தன்னந்தனியே நிற்கும் போது வாழ்க்கை தரும் மலைப்பு நம்மை திகைக்கச் செய்கிறது. அந்த திகைப்பு, நாம் நம் வாழ்வின் அனுபவங்களை உரசிப்பார்த்துக் கொள்ளும் ஒரு உறைகல்லாக ஹென்றியின் வாழ்க்கை இருப்பதை உணர்த்துகிறது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, அனைவரும் அவருவருக்கத் தக்க வகையில் உடம்பெங்கும் தழுப்புகள், கொப்புளங்களுடன் வாழ்க்கையில் போராடி, அமெரிக்க இலக்கியத்தின் சிகரத்தை எட்டிய ஒரு மனிதன் வாழ்க்கைக் கதையின் முன் பகுதிதான் இந்த நாவல். அந்த மனிதன் வேறு யாருமல்ல சார்லஸ் புகோவெஸ்கிதான்! 1939-40ல் ஹிட்லரின் உலகப்போர் நடந்த பின்புலத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த புகோவெஸ்கி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரத்தில் வாழ்ந்த போது, பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் தனக்கு எற்பட்ட அனுபவங்களையே இந்நாவலில் எழுதியிருக்கிறார். ஒரு நடுத்தர குடும்பத்தில் வளரும் இளைஞன் ஒருவனின் ஆசைகளையும், அபிலாஷைகளையும், ஏமாற்றங்களையும், துயரங்களையும் இந்நாவல் விரிவாகப் பதிவு செய்கிறது. புகோவெஸ்கியைப் படிப்பது எளிது என்பது மட்டுமல்ல, நாம் நம்முடைய வாசிப்பின் எல்லையை, அனுபவங்களை விஸ்தரிக்க, உலக இலக்கியத்தில் புகோவெஸ்கியிலிருந்து தொடங்குவது ஏற்புடையது; சாலச்சிறந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...