பிரயாகை கிடைத்தது!

கிழக்குப் பதிப்பகத்தின் பிரயாகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்து, கையில் வாங்கியபோது ஏமாற்றமே மிஞ்சியது. புத்தகத்தைப் புரட்டிப் பார்த்ததில் பல்வேறு குறைகள் தென்பட்டன. ஜெயமோகன் புத்தகங்கள் கைக்கு அடக்கமானவை அல்ல என்ற போதிலும், கிழக்கின் இப்புத்தகம் கைக்கு அடங்காமல் பூதாகரமாக கருப்புப் பிசாசாகக் காட்சியளித்தது. எழுத்துகள் மிகப்பெரியதாக இருப்பதால், பக்கங்கள் அதிகரித்துவிட புத்தகம் பெரிதாகக் கனக்கிறது. புத்தகத்தின் பக்கங்களில் படங்கள் கவனமாக ஒட்டப்படவில்லை. எனவே படங்கள் ஒட்டிய பக்கத்தோடு, அதற்கு முந்தைய பக்கமும் பல இடங்களில் ஒட்டிக்கொண்டு இடையூறு செய்கின்றன. படங்களை ஒட்டக்கூடிய அளவிற்கு காகிதம் அவ்வளவு தரமானதாக இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை எல்லாவற்றுக்கும் மேலாக புத்தகத்தின் ஆதாரமான தையல் அவ்வளவு வலுவானதாக இல்லை. (எனக்கு வந்த புத்தகத்தில் தையல் துண்டித்திருந்ததால் வேறு பிரதிக்காகத் திருப்பி அனுப்பியிருக்கிறேன்). ஒரே ஆறுதல் கெட்டி அட்டையும், அச்சும் நேர்த்தியாக இருப்பதுதான்.

இவற்றைச் சரி செய்ய சில யோசனைகள்: எழுத்துக்களின் அளவு இவ்வளவு பெரிதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இதனாலேயே பக்கங்கள் தேவையில்லாமல் கூடுவதோடு விலையும் அதிகரிக்கிறது. இதைச் சரியசெய்வதன் மூலம் புத்தகத்தின் கனத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும். வரவர இத்தனை படங்கள் தேவையா என்ற கேள்வி எழுகிறது. ஆக, படங்களைக் குறைப்பதன் மூலமாகவும் புத்தகத்தை கையாளுவதற்கு இலகுவானதாகச் செய்யலாம்; விலையும் குறையும். ஐநூறு பக்கங்களுக்கு மேல் மிகும்போது இரண்டு தொகுதிகளாக வெளியிடுவது சாலச்சிறந்தது. ஏனெனில் இத்தகைய தடித்த புத்தகங்களை படிப்பதற்கு வாசகர்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கும் என்பதை பதிப்பாளர்கள் உணர்வது அவசியம். புத்தகங்கள் பிரம்மாண்டமாக பெரிதாக இருப்பது அலமாரியில் காட்சிக்காக வைப்பதற்கு மட்டுமே ஈர்ப்புடையதாக இருக்கும் மாறாக படிப்பதற்கு அல்ல. இல்லை ஒரே புத்தகம் என்றால், கிழக்கு முன்னர் வெளியிட்ட புதிய எக்ஸைல் போல ‘லைட் வெயிட்’டில் வெளியிடுவதும் உகந்ததே. 

Related Posts Plugin for WordPress, Blogger...