May 1, 2015

ஃபாரன்ஹீட் 451 -ரே பிராட்பரி: புத்தகங்கள் நம் சுவாசம்!

தீ வைத்து எரிப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

451-ம் எண் தலைக்கவசம் அணிந்திருந்த மோன்டாக் வீடு ஒன்றை புத்தகங்களுடன் எரிக்கும் போது இப்படித்தான் நினைத்துக் கொள்கிறான். அரசாங்கத்தின் தீயணைப்பாளனாக, தன்னுடைய இருபது வயதிலிருந்து கடந்த பத்து வருடங்களாக, பணிபுரியும் அவன் அன்றைய வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புகிறான். திரும்பும் வழியில் யாரோ தன்னை அழைப்பதாக உணர்ந்து திரும்பும் போது அண்டைவீட்டுக்குப் புதிதாகக் குடி வந்த க்லாரிஸ் என்ற பதினேழு வயதுப் பெண் ஒருத்தியைச் சந்திக்கிறான். அவள் அவனிடம், எரிக்கும் புத்தகங்களைப் படிப்பதுண்டா? என்று கேள்வி கேட்டு, முன்னொரு காலத்தில் தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தார்கள் என்ற முரணைக் கேலி செய்து, தான் ‘சுவர்தொலைக்காட்சியை’ பார்ப்பதில்லை, புல், மலர்கள், பனித்துளி போன்றவைகளே தனக்கு விருப்பமானவை எனச் சொல்லி, ‘நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்கிறாள்.

அதன் பிறகு வீடு திரும்பும் அவன், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்ட தன் மனைவியைக் காண்கிறான். தொலைபேசியில் மருத்துவ உதவியை நாடுகிறான். அவன் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக, ‘பத்தாயிரம் மைல் நீளம் இருந்த கறுப்பு லினன் துணியை இரண்டு ராட்சதக் கைகள் தையலின் வாட்டத்திலேயே கிழிப்பதைப் போல் வானம் பயங்கராமாகக் கிழியும் ஓசை’ ஜெட் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பறந்து காதைக் கிழிக்கின்றன. அப்போது மருத்துவரல்லாத இருவர் வந்து கருவி ஒன்றின் உதவியால் அவளைக் காப்பாற்றிவிட்டு, ‘இது போல் இரவில் ஒன்பது பத்து கேஸ்கள் வருகின்றன. அதற்கு மருத்துவர் தேவையில்லை’ என்று மோன்டாக்கிடம் சொல்லிவிட்டு அடுத்த அழைப்புக்கு விரைகிறார்கள். அதன் பிறகு தூங்கப் போகும் அவன் க்லாரிஸ் தன்னுடன் உரையாடியவற்றை நினைத்து, ‘மகிழ்ச்சியை ஒரு முகமூடியைப் போல தான் அணிந்திருப்பதாக’ தன்னைத் தானே சுய விசாரணை செய்துகொண்டு, கட்டுப்பாடின்றி ஓடும் தன் மனதை நிறுத்த தூக்க மாத்திரை ஒன்றைப் போட்டுக்கொண்டு உறங்குகிறான். அடுத்தடுத்து பல நாட்கள் அவன் க்லாரிஸை சந்திக்கிறான். ஒரு முறை, ‘நான் ஏன் வெளியே போய், காடுகளில் திரிந்து, பறவைகளைக் கவனித்துப் பார்த்து, பட்டாம் பூச்சிகளைச் சேகரிக்கிறேன் என்று மனநல மருத்தவர் அறிய விரும்புகிறார்’ என்கிறாள்.

ஒரு முறை முதிய பெண்மணி ஒருத்தியின் வீட்டில் புத்தகங்கள் இருப்பதை அறிந்து அதை அழிக்க கேப்டன் பியாட்டியுடன் அங்கு செல்கிறான் மோன்டாக். பரண்  மேலிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை அவர்கள் எரிக்க முயலும் போது புத்தகத்திடமிருந்து பிரிய விரும்பாத அவள், ‘நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்’ என்று சொல்லி அவர்களாக எரிக்கும் முன்பே, புத்தகங்களோடு சேர்த்து தீக்குச்சியால் தன்னையும் பற்றவைத்துக் கொண்டு தீக்கிரையாகிறாள். அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் புத்தகம் ஒன்றை திருடி வீட்டிற்குக் கொண்டு வருகிறான் மோன்டாக்.

மறுநாள், எப்போதும் சுவர்த் தொலைக் காட்சியைப் பார்த்தபடி, ‘அதுதான் என் குடும்பம்’ என்று வாழும் அவன் மனைவி மில்ட்ரெட், மோன்டாக் காய்ச்சலுடன் வாந்தியும் எடுப்பதைக் கண்டு விசாரிக்கிறாள். ‘எரிந்து கொண்டிருக்கும் வீட்டில் ஒரு பெண்ணை அங்கேயே இருக்கும்படி செய்ய வேண்டுமென்றால், நாம் கற்பனை செய்துபார்க்க முடியாத ஏதோ ஒன்று புத்தகங்களில் இருக்க வேண்டும். அவற்றில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். ஒன்றுமில்லாத விஷயத்துக்காக யாரும் அங்கேயே இருந்துவிட மாட்டார்கள்’ என்று முந்திய நாள் நடந்ததைச் சொல்கிறான். அதற்காக கவலைப்படுவதை விட்டுவிட்டு வேலையைப் பார்க்கச் சொல்கிறாள் அவள்.

அந்த முதியவள் இறந்ததை விடவும், தான் இதுவரை எரித்த புத்தகங்களின் பின்னால் அந்த முதியவளைப் போலவே பலர் இருந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் அவனைச் சுடுகிறது. ஒரு புத்தகத்தை உருவாக்க ஒருவருக்கு எத்தனை உழைப்பும் சிந்தனையும் தேவைப்பட்டிருக்கும் என்ற உண்மையும், அவற்றைத் தான் இரண்டே நிமிடங்களில் அழித்துவிடுவதும் மிகப்பெரிய குற்றமாக அவன் மனதை உறுத்துகிறது. எனவே எல்லாவற்றையும், வேலையைக்கூட தான் விட்டுவிடுவதாக மனைவியிடம் சொல்கிறான். அப்போது அவன் மனைவி க்லாரிஸ் இறந்துவிட்டதாகவும், அவள் குடும்பத்தினர் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதாகவும் சொல்கிறாள்.

இந்நிலையில் அவன் வேலைக்கு வராததை அறிந்த பியாட்டி அவனைத் தேடி விட்டிற்கே வருகிறார். “தீயணைப்பவர்கள் ஒவ்வொருவரும், என்றாவது ஒரு நாள், இந்த நிலையை வந்து அடைகிறார்கள். சரியாகப் புரிந்துகொள்வது அவர்களுக்கு அவசியம், எல்லாம் எப்படி முறைப்படி நடக்கின்றன என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய தொழிலின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று தொடங்கி புத்தகங்களின் அவசியமின்மை பற்றிச் சொல்லி, “வாழ்க்கை என்பது அந்தந்தக் கணம்தான், பிழைப்புக்கான வேலைதான் முக்கியம், வேலை நேரம் முடிந்ததும் எல்லாவிதக் களிப்பும் சுற்றிலும் இருக்கும். விசைகளை அமுக்குவது, இழுப்பது, பொருத்துவதைத் தவிர வேறெதையும் எதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும்?” என்று கேட்கிறார்.

அவர் தன்னுடைய நீண்ட விவாதத்தின் முடிவாக, “நாம் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க  வேண்டும். எல்லோருமே, அரசியல் சட்டத்தில் இருப்பதைப் போல, சுதந்திரமாகவும் சமமாகவும் பிறப்பதில்லை. ஆனால் எல்லோருமே சமமாக ஆக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரின் பிம்பம்; அந்த விதத்தில், எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்... ஆகவே, புத்தகம் என்பது பக்கத்து வீட்டில் இருக்கும் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி. அதைக் கொளுத்து. ஆயுதத்திலிருந்து குண்டை நீக்கிவிடு. மனிதனின் மனதைத் தகர்த்துவிடு” என்கிறார். க்லாரிஸ் போன்றவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிவது அவசியம் என்பதையும் தெரிவித்துவிட்டுச் செல்கிறார். மனிதனை சிந்தனை செய்யவிடாமல் செய்து, அவன் சிந்தனையை முற்றாக விரட்டி அடிப்பது அவசியம் என்பதும், புத்தகங்கள் சொல்வதில் ஒன்றுமில்லை, சொல்லிக் கொடுக்கவோ, நம்பிக்கை வைக்கவோ அவற்றில் ஒன்றுமே இல்லை என்பதும் அவர் பேச்சின் சாராம்சம்.

பியாட்டி சென்றபிறகு, தான் இதுவரை சேகரித்து வைத்திருந்த இருபது புத்தகங்களை தன் மனைவிக்குக் காண்பிக்கிறான் மோன்டாக். அந்த முதியவள் மரணம், க்லாரிஸ் இறந்தது இவற்றைச் சுட்டிக்காட்டும் அவன், அவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தீயணைப்பவர்களைக் கொளுத்திவிடுவதே சிறந்தது என்கிறான். மில்ட்ரெட் அவன் சொன்னதையும், புத்தகங்களையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, “நீ நம்மை அழித்துவிடப் போகிறாய்! யார் உனக்கு முக்கியம்? நானா, புத்தகமா?” என்று கூச்சலிடுகிறாள்.

செய்ய வேண்டியது என்னவென்று புரியாத மோன்டாக், தான் முன்னர் ஒரு முறை சந்தித்த ஃபேபர் என்ற ஆங்கிலப்  பேராசிரியரைச் சந்திக்கிறான். அவர் புத்தகங்கள் அவசியம் என்பதற்கான மூன்று காரணங்களைச் சொல்கிறார். ஒன்று தொட்டு உணர்தல். புத்தகம், ஆசிரியன், வாசகன் மூவரின் ஆன்மாவை இணைக்கும் பாலம் இந்த தொட்டு உணர்தல்தான். இரண்டாவது ஓய்வு நேரம். தொலைக்காட்சியும் பிற ஊடகங்களும் நம் நேரத்தைப் பிடுங்கிக் கொள்ள, நாம் நமக்கேயான ஓய்வு நேரத்தில் படிக்கவும், புரிந்துகொள்ளவும் முடிவது புத்தகங்களையே. மூன்றாவது உரிமை. முன்னதின் இரண்டிலிருந்து நாம் கற்றுக்கொண்டதின் அடிப்படையில் செயல்புரியும் உரிமை. இவ்வாறாகச் சொல்லும் அவர், புத்தகங்கள் அழிந்துவரும் நிலையில் அவற்றுக்கான பிரதிகளை உருவாக்க வேண்டும் என்றும், அதற்குப் பணம் தேவை என்றும் சொல்கிறார்.

அங்கிருந்து வீடு திரும்பும் அவன், வீட்டிலிருக்கும் தன் மனைவியின் தோழிகளிடம் புத்தகத்திலிருந்து சில கவிதைகளை வாசித்துக் காட்டுகிறான். அதைக் கேட்டு திருமதி ஃபெல்ப்ஸ் அழுகிறாள். ”திருமதி ஃபெல்ப்ஸ் அழுததைப் பார்த்தது எனக்கு அதிர்ச்சியளித்தது. ஒருவேளை, அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம், எதையுமே எதிர்கொள்ளாமல் ஓடிக்கொண்டே, உல்லாசமாக இருப்பதே மேலானதாக இருக்கலாம், தெரியவில்லை, நான்தான் குற்றவாளி என்று உணர்கிறேன்” என்று தான் காதுக்கருகில் வைத்திருந்த மைக்கில் ஃபேபரிடம் சொல்கிறான். “கூடாது. அப்படி உணரக் கூடாது!” என அவர் அவனை எச்சரிக்கிறார்.

மீண்டும் பணிக்குத் திரும்பும் அவன் பியாட்டியைச் சந்திக்கும்போது, அபாய அறிவிப்பு ஒலிக்கிறது. எல்லோரும் அழைப்பு வந்த இடம் நோக்கி விரைய, இறுதியில் அது தன்னுடைய வீடாக இருக்கக் காண்கிறான் மோன்டாக். அவன் மனைவி அங்கிருந்து சென்றுவிட, வீட்டை அவன் கையாலேயே எரிக்கச் சொல்கிறார் பியாட்டி. எரித்த பிறகு அவனைக் கைது செய்யவும் உத்தரவிடுகிறார். என்ன நடந்தது என்று தெரியாத ஒரு குழப்பத்தில் வீட்டை எரிக்கும் மோன்டாக், அதே நெருப்பால் பியாட்டியையும் எரித்து, இரு தீயணைப்பாளர்களைத் தாக்கிவிட்டுத் தப்பித்து ஓடுகிறான். அவனை வேட்டை நாயும், காவலர்களும், ஹெலிஹாப்டர்களும் துரத்துகின்றன. அவை எல்லோருடைய வீட்டுத் தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

ஃபேபரைச் சந்திக்கும் அவன் அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, ஆற்றைத் தாண்டி தந்திரமாக தப்பிக்கிறான். ஆற்றுக்கு அப்பால் உள்ள கிராமத்தை அடையும் அவன் க்ராஞ்ச் என்பவரையும் அவருடன் இருக்கும் பலரையும் சந்திக்கிறான். அங்கிருக்கும் தொலைக்காட்சியில் அவனது தேடலைக் காட்டும் க்ராஞ்ச், “அவர்கள் நடிக்கிறார்கள். ஆற்றுக்கு வந்தபோது உங்களை அவர்கள் தவறவிடும்படி செய்துவிட்டீர்கள். அவர்களால் அதை ஒப்புக்கொள்ள முடியாது. இன்னும் கொஞ்ச நேரம்தான் பார்வையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். இந்த நிகழ்ச்சி சட்டென்று முடிவுக்கு வர வேண்டும்... ஆகவே, எல்லாவற்றையும் டமாலென்று முடிக்க பலிகடா ஒன்றை மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். கவனியுங்கள். அடுத்த ஐந்து நிமிடங்களில் மோன்டாக்கை அவர்கள் பிடித்துவிடுவார்கள்!” என்கிறார். அப்படியே நடக்கிறது.

நான்தான் ப்ளாட்டோவின் ‘குடியரசு’ என்று சொல்லும் க்ராஞ்ச், தங்களுடன் உள்ள ஆயிரக்கணக்கானவர்களில் ஒவ்வொருவரும் ஒரு நூலை அல்லது புத்தகத்தின் சில பக்கங்களை மனனம் செய்து வைத்திருக்கிறார்கள் என்கிறார். எல்லோருமே நடமாடும் புத்தகங்கள்! நம் வருங்காலச் சந்ததிக்கு புத்தகங்களை கொண்டு சேர்க்க நாங்கள் செய்யும் பணி என்கிறார். இந்நிலையில் ஏற்கனவே போர் அறிவிப்பு செய்யப்பட்டுவிட்ட நிலையில், போரின் உச்சகட்டமாக, தான் எங்கிருந்து தப்பித்து வந்தானோ அந்த நகரம் முற்றிலும் தரைமட்டமாக அழிக்கப்படுவதைக் காண்கிறான் மோன்டாக். பிறகு அவர்களுடன் சேர்ந்து தன் பயணத்தைத் தொடங்குகிறான்.

இயற்கையை, புத்தகங்களை முற்றாகப் புறந்தள்ளிவிட்ட ஒரு சமூகத்தில், அவற்றைக் காக்கப் போராடும் சில மனிதர்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், புத்தகங்களைத் தடைசெய்யும் ஒரு நாடு அல்லது சமூகம் எப்படி இருக்கும் என்பதையும் இந்தக் கதையில் சொல்கிறார் பிராட்பரி. க்லாரிஸைப் போன்றவர்களை அரசாங்கம் அந்நியமாகப் பார்க்கிறது. மாறாக வீட்டில் எந்நேரமும் தொலைக்காட்சியின் பிடியிலும், வெளியில் சதா ஒலிக்கும் விளம்பரங்களின் பிடியிலும் சிக்கி, ஏன் எதற்கு என்று சிந்திக்காமல் மில்ட்ரெட் போல வாழ்பவர்களையே அரசாங்கம் ‘சாதாரணமாக’ பார்க்கிறது. மக்கள் அனைவரையும் சிந்தனை, செயல் இரண்டிலும் ஒரே மாதிரியாக ஆக்கிவைத்திருப்பதே அதன் குறிக்கோள். எனவேதான் புத்தகங்களை வைத்திருப்பதும் படிப்பதும் சட்டப்படி குற்றம் என்று கடுமையாக தண்டிக்கப் படுகிறது. மில்ட்ரெட்டை சந்திக்கும் திருமதி ஃபெல்ப்ஸ் மற்றும் பௌல்ஸ் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகள் பராமரிப்பு என்பது வாசிங்மெசினில் துணி துவைப்பது மாதிரிதான் என்று சொல்வது எதிர்கால சந்ததியினர் குறித்த அச்சத்தையும், குடும்ப உறவுகளின் சிதைவையும் காட்டுகிறது.

மொத்தத்தில், புத்தகங்களை நேசிக்காத, வாசிக்காத, சுவாசிக்காத ஒரு சமூகம் நடைபிணமாகத்தான் இருக்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை இயந்திரத்தனமாகவே இருக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் பிராட்பரி. புத்தகங்களை அழிப்பதும் அவற்றை நிராகரிப்பதும் உண்மையில் மனிதன் தன்னைத்தானே அழிப்பதற்கும் நிராகரிப்பதற்கும் ஒப்பானது என்பதை சுவாரஸ்யமான விறுவிறுப்பான கதையாடல் மூலம் நமக்குப் புரியவைக்கிறார் ரே பிராட்பரி. மிகக் குறைந்த முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு இந்நாவலை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் பிராட்பரி. க்ரியாவின் மொழியாக்கம் எப்போதும் துல்லியமாகவும், நம்பகத் தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்பதை இந்நூலின் மொழியாக்கமும் நிரூபிக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...