ஜெயமோகனின் பிரயாகை-4: வஞ்சத்தின் பின்னல்கள்!

பாதி நாட்டை அல்லது ஒரு பகுதியை அல்லது ஓர் ஊரையாவது தனக்குத் தருமாறு திருதிராஷ்டிரரிடம் மன்றாடுகிறான் துரியோதனன். அவர் எதையும் ஏற்றுக்கொள்ளாத போது, தான் அஸ்தினபுரியை விட்டு வெளியேறி சுயமாக ராஜ்யத்தை ஸ்தாபிக்க அனுமதி கோருகிறான். அதையும் மறுக்கும் அவர், “இங்கே ஒவ்வொரு நாளும் அவமதிப்புக்குள்ளாக வேண்டும் என்றும் அனைத்து தன்முனைப்பையும் இழந்து சிறுமைகொண்டு இவ்வாழ்நாளை முழுக்க கழிக்கவேண்டும் என்றும் நான் ஆணையிட்டால் என்னை நீ வெறுப்பாயா” என்று கேட்கிறார். அதற்கு துரியோதனன், “தந்தையே எந்நிலையிலும் உங்களை வெறுக்கமாட்டேன்” என்கிறான். “அவ்வாறென்றால் அதுவே என் கொடை” என பேச்சை முடித்துக்கொள்கிறார். இருந்தும் பாண்டவர்கள் நடத்திய போர் முறையும், எதிரிகளின் மூக்குகளை அறுத்துக் கொண்டுவந்து பலிநிறைவுப் பூசை செய்வதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகவே, பாண்டவர்களின் அந்த நிகழ்வில் கௌரவர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என உத்தரவிடுகிறார். கௌரவர்கள் பாண்டவர்களுக்கு இடையேயான இந்தப் பிளவு மக்கள் மத்தியிலும் பிரதிபலிக்கிறது.

போரில் அடைந்த வெற்றி அர்ச்சுனன் மனதையும் கலங்கடிக்கிறது. அப்போது, ”வாழ்நாளெல்லாம் பிறரது வஞ்சினங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டவன்” என்று அர்ச்சுனனைக் குறிப்பிடுகிறான் பீமன். இருந்தும் போரில் கிருஷ்ணன் காதல் பாடல்களைப் பாடிக்கொண்டும், இனிப்புப் பண்டங்களை சுவைத்துக்கொண்டும் போரிட்டது தன்னை வியப்பில் ஆழ்த்தியது என்று அர்ச்சுனன் விதுரரிடம் சொல்கிறான். மதுராவையும் கூர்ஜரத்தின் ஒரு பகுதியையும் கைப்பற்றும்போது கிருஷ்ணன் செய்யும் இரக்கமற்ற செயல்கள் நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, அவன் மீதான அபிமானத்தையும் குறைக்கிறது என்பது உண்மைதான். அர்ச்சுனன் விதுரரிடம் கிருஷ்ணனைப் பற்றிச் சொல்வதைக் கேட்கும் போது, ‘இது என்ன சுத்த பைத்தியக்காரத்தனம்’ என்றும் தோன்றுகிறது. ஆனால் நிதானமாக யோசிக்கும்போதுதான் அதிலுள்ள பல நுட்பங்கள் நமக்குப் புலப்படும்.

வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளில் அது நிழும் கணத்தில் அதன் அவசியம் நமக்குப் புரியாமல் போகலாம். ஆயினும் பின்னால் நடக்கப்போகும் காரியங்களுக்கான ஒத்திசைவு அதில் மறைந்திருப்பதை அவைகள் நிகழும்போதே அறியமுடியும். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு அது அசாத்தியமானதாகத் தெரிகிறது. ஒரு விதை விழுந்து அது விருட்சமாக வளரும்போதே அதைக் காண்பது போல. அதை நிகழும் கணத்திலேயே அறிந்தவன் கலங்குவதில்லை; தடுமாறுவதில்லை. மாறக நிகழும் காலத்தை மட்டும் கவனிப்பவன் பதற்றம் கொள்கிறான், வருங்காலத்தை அதிலிருந்து உய்த்துணர்பவன் பதட்டம் கொள்வதில்லை. சாவகாசமாக காரியங்களைச் செய்கிறான். பின்னாளில் கீதையை உபதேசிக்கப்போகும் கிருஷ்ணனின் குணாம்சம் இப்போதே வெளிப்படுகிறது. நிகழ்காலத்தை மட்டும் அறிந்தவன் கலங்கலாம்; முக்காலத்தையும் அறிந்தவன் கலங்குவதெவ்வாறு? 

ஜெயமோகன் கதாபாத்திரங்களின் வார்ப்பில் கொண்டுள்ள கவனத்தையும் நுட்பத்தையும் புரிந்துகொள்ளவே கிருஷ்ணனின் இத்தகைய செய்கைகள் உதவுகின்றன. கிருஷ்ணன் மட்டுமல்ல பீமனின் கதாபாத்திரமும் தருமனை குத்தலாகவும், துடுக்குத் தனமாகவும் அவ்வப்போது பேசுவதை நாவல் நெடுகவே நாம் காணமுடியும், ‘எரிதழல் கொண்டு வா தம்பி அண்ணன் கையை எரித்திடுவோம்’ என்று பின்னாளில் அவன் சொல்லப்போவதன் வெளிப்பாடாகவே இந்தக் குத்தலும் துடுக்கும் என்பதை உணர்வதே வாசிப்பில் நாம் பெறும் இன்பம்.

பாண்டவர்களின் வெற்றிக்கொண்டாட்டத்தை கௌரவர்கள் புறக்கணித்தது, அவர்களது வெற்றி அறப்பிழை என்பதாக மக்களிடையே தோற்றத்தை ஏற்படுத்தி நாட்டைப் பிரிக்க திருதிராஷ்டிரன் மேற்கொள்ளும் சதித் திட்டம் என குந்தி சொல்கிறாள். பாவம் திருதிராஷ்டிரர்! அவமதிப்பையும் சிறுமையையுமே தன் மைந்தனுக்குக் கொடையாக தந்தவர் அவர் என்பதை வேண்டுமானால் குந்தி அறியாதவளாக இருக்கலாம். ஆனால் விழியில்லாத அவர் மனமில்லாதவராகவும் இருப்பார் என்பதாக குந்தி நினைப்பது வியப்பளிக்கிறது. குந்தியின் மீதான நமது அபிப்ராயங்கள் அதளபாதாளத்தில் விழ, தருமனைப் போலவே காட்சியளிக்கிறார் அவர். பிறர் காரியங்களில் காரணத்தைக் காண்பவர்கள் தங்களைப் பிறர் இடத்தில் வைத்துப் பார்ப்பதினால்தான் அந்தக் காரணங்களைக் கண்டடைகிறார்கள். பேராசை எனும் தீ அகத்தே கனலாக தகிக்கும்போது குந்தியும் அதிலிருந்து தப்ப முடிவதில்லை.

தங்களின் அனைத்து முயற்சிகளும் பயனற்றுவிட்ட நிலையில், கணிகரின் திட்டப்படி அரக்கு மாளிகை ஒன்றை அமைத்து, அதில் பாண்டவர்களை கூண்டோடு கொலைசெய்ய கௌரவர்கள் திட்டமிடுகிறார்கள். அப்போது கொலைகளில் எத்தனை வகையென்றும், ஒவ்வொன்றுக்கான பிராயசித்தம் பற்றியும் நூல்களிலிருந்து கணிகர் மேற்கோள் காட்டி சொல்வது நம்மில் அதிர்ச்சியை, வியப்பை தோற்றுவிக்கிறது. எல்லாவற்றுக்கும் நூல்களை காரணங்களாகக் காட்டுவது மனிதர்கள் தாங்கள் செய்யும் காரியங்களுக்காக தங்கள் அகத்தை இலகுவாக்கிக் கொள்ளும் முயற்சியே என்று தோன்றுகிறது. காரியத்தைத் திட்டமிட்ட கணிகர், புரோசனன் அமைக்கும் மாளிகையில் பாண்டவர்களை தங்கவைக்க, போரில் அவர்கள் செய்த பாவங்களுக்குப் பிராயசித்தம் என்ற காரணத்தை முன்வைக்கிறார். அதையே திருதிராஷ்டிரன் வாயால் சொல்லவும் வைக்கிறார்.

வஞ்சத்தின் பின்னல்கள் ஒவ்வொன்றாக பின்னிச்செல்ல அதன் உச்சமான மாபெரும் வெடிப்பின் தருணத்தை நோக்கி கதையும் அதன் மாந்தர்களும் பயணிக்கிறார்கள்.

(தொடரும்...)
Related Posts Plugin for WordPress, Blogger...