ஜெயமோகனின் பிரயாகை-3: உணர்ச்சிகளின் மோதல்!

எதுவும் கையில் கிடைக்கும் வரைதான் மனதுக்குக் கலக்கமும் தயக்கமும். கிடைத்துவிட்டாலோ ஆசையும் விருப்பமும் கலக்கம் தயக்கம் இரண்டையும் உதறச்செய்து கிடைத்ததை தன்னிச்சையாக பயன்படுத்தவும் அனுபவிக்கவும் முயல்வதே மனித இயல்பு. தானடைந்த வெற்றிக்குப் பிறகு தருமன் செய்யும் காரியங்கள் இதையே நிரூபணம் செய்கின்றன. அதனால்தான் வெற்றியை முறைப்படி மன்னரான திருதிராஷ்டிரனிடம் சமர்ப்பிக்காமல் தன்னிச்சையாக பலதையும் செய்கிறான். தான் அப்படிச் செய்ததற்கு குந்தியே காரணம் என்று விதுரரிடம் சமாதானம் சொல்கிறான். இந்தச் சூழ்நிலையில்தான் பலராமரின் தூதோடு துரியோதனன் வருகிறான். ஏகலய்வனால் யாதவர்கள் படும்பாட்டையும், மகதம், கூர்ஜரம், அஸ்தினபுரி ஆகிய நாடுகளின் அரசியல் சிக்கலையும் துரியோதனன் வார்த்தைகள் வழியாக சொல்லவைத்து, மகாபாரத காலத்தை வாசிப்போர் மனங்களில் துலக்கமாக காட்சிப்படுத்திவிடுகிறார் ஜெயமோகன்.

ஏகலய்வனுக்கு எதிராக போர்தொடுக்கவும் யாதவர்களைக் காக்கவும் திருதிராஷ்டிரனும் அமைச்சரவையும் மறுத்துவிடுகிறது. என்றாலும் பலராமருக்கு தான் உதவுவதாக வாக்கு தந்திருப்பதன் பொருட்டு போரிட தனக்கு ஒரு படை தரவேண்டும் என்று துரியோதனன் தருமனிடம் கேட்கிறான். மகாபாதர கதாபாத்திரங்களில் தருமனின் பாத்திரம் பலநேரங்களில் செயற்கையான பாவனைகளையும், நடிப்பையும் கொண்டது. ஆனால் அவன் அகம் செல்லும் திசை அவன் பாவனைகளுக்கும் செயலுக்கும் முற்றிலும் எதிரானது. சௌவீர நாட்டின் மணிமுடியையும், செல்வங்களையும் தன் விருப்பம்போல பயன்படுத்திக் கொண்டதற்கு குந்தியைக் காரணம் காட்டிய தருமன், இப்போது துரியோதனனிடம், “உன் சொற்கள் அஸ்தினபுரியின் வாக்குறுதி அல்ல என்று கணிகர் சொன்னார் அல்லவா? அது யாதவர்களுக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் அதை கருத்தில்கொள்ள மாட்டார்கள்” என்று சொல்லும்போது இதை நாம் நுட்பமாக விளங்கிக்கொள்ள முடியும். தருமனின் கதாபாத்திரத்தை ஜெயமோகன் மிக அற்புதமாக கையாண்ட ஒரு தருணம் என்று இதைச் சொல்ல முடியும்.

தருமன் தான் சொன்னதன் பொருளை அவனே இன்னதென்று அறியாத போது, பீமனும் அர்ச்சுனனும் அதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். தருமன் பாவனையிலும் நடிப்பிலும் வாழ்பவன் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. மகபாபாரதம் என்றதும் கௌரவர்களை தீயவர்களாகவும், பாண்டவர்களை நல்லவர்களாகவும் அறியும் பலருக்கு, இது புதியதோர் திறப்பைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் ஓஷோ தருமனை ஒரு சாதாரண மனிதனைவிட எவ்வகையிலும் மேம்பட்டவனல்ல என்று தன்னுடைய பல்வேறு உரைகளில் திரும்பத் திரும்ப குறிப்பிடுகிறார். தருமன் பதிலால் துரியோதனன் உடலும் உள்ளமும் தளர, அவமதிப்பின் பாதாளத்தில் விழுகிறான். தருமன் செயலால் முன்பு தந்தை காயம்பட்டார் இப்போதோ தனயன் பலியாகிறான்!

துரியோதனுக்கு தருமன் செய்த அவமதிப்பு அர்ச்சுனனை அலைக்கழிக்க பீமனிடம், “அன்னை பின்னர் ஆசிரியர் என ஒவ்வொரு தெய்வமாக கல்லாகிக் கொண்டிருக்கின்றன மூத்தவரே” என்கிறான். இந்நிலையில், கிருஷ்ணன் நேரில் வந்து குந்தியைச் சந்தித்து உதவி கேட்கிறான். அத்தை என்ற உறவும், யாதவர் என்ற குலப்பற்றும் உந்த குந்தியும் அதற்கு ஆவண செய்கிறாள். இது ஏற்கனவே ஏற்பட்ட விரிசலில் ஆப்பு சொருகும் காரியமாக ஆகிறது! இரண்டாயிரம் வீரர்கள் கொண்ட படையுடன் செல்லும் கிருஷ்ணன் மதுராவை கைப்பற்றுகிறான். இந்தப் படையெடுப்புக்காக துரியோதனன் தலைமையில் ஒரு பொய்ப்படையை உருவாக்கி அவனை வெற்று பொம்மையாகச் செய்துவிட, இதுவரை அடக்கிவைத்திருந்த உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாதவனாக, துரியோதனன் அபரிமிதமான கோபத்துடன் தன் தந்தையைச் சந்திக்கிறான்.


துரியோதனன், துச்சாதனன், திருதிராஷ்டிரன் மூவரும் சந்திக்கும் அந்தக் காட்சி உணர்ச்சிகளின் கொந்தளிப்பு நிறைந்தது; நாடி நரம்புகளை முறுக்கேற்றுவது. உணர்ச்சிகளின் மோதலில் கனல் பறக்கும் அந்தக் காட்சி அற்புத ஓவியமென நம்முடைய மனத்திரையில் பதிந்துவிட, மீண்டும் மீண்டும் அதைப் புரட்டிப் பார்த்து மனம் பரவசம் கொள்கிறது. உணர்ச்சிகரமான இந்தக் காட்சியை வாசிப்பவர்கள் துரியோதனன் மீது இரக்கமும் அவன் தரப்பு நியாயத்தையும் உணர்வார்கள் என்பதோடு, காலங்காலமாக இருந்துவரும் துரியோதனன் மீதான வெறுப்பு என்ற போர்வையை தூக்கி வீசிவிடுவார்கள். இக்காட்சியின் சித்தரிப்வை கடந்து செல்லும் எவரும் பாண்டவர்கள் மீதான தங்கள் அபிமானத்தைத் துறப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. நாவலின் கதையாடல் முழுவதுமே இந்த நடுநிலையான போக்கையே ஜெயமோகன் கையாண்டிருப்பது வெகுசிறப்பு. அதனாலேயே வெண்முரசை வாசிப்பதன் தேவையும் அவசியமும் உறுதிப்படுகிறது. உத்தானபாதன் விருப்பு வெறுப்புக்கு இடையில் சிக்கித்தவிக்கும் தவிப்பை போலவே வாசிப்பவர்களும் கௌரவர்கள் பாண்டவர்களுக்கு இடையே அல்லாடுவது வாசிப்பு தரும் பேரின்பம்!

(தொடரும்...)
Related Posts Plugin for WordPress, Blogger...