ஜெயமோகனின் பிரயாகை-2: முதல் விரிசல்!

பதினெட்டு வருடங்களாக எது நிகழவேண்டும் என்பதற்காக காத்திருந்த போதும் அது நிகழாமலே போக ஏமாற்றமடையும் சகுனி காந்தாரம் நோக்கிப் பயணப்படுகிறார். கௌரவர்கள் தரப்பு இளவரசுப் பட்டம் இழந்துவிட்டதின் ஏமாற்றம் மக்கள் மனங்களிலும் எழுவதாகக் காணும் சகுனி, அது தன்னுடைய பிரமையல்ல என்பதை பீஷ்மரின் வார்த்தைகளில் உறுதி செய்துகொள்கிறார். அவருக்கும் துச்சாதனனுக்கும் இடையயே நிகழும் உரையாடல்கள் பொருள் பொதிந்தவை. மக்கள் மனங்களில் இருக்கும் ஏமாற்றத்தை சரிசெய்யும் விதமாகப் பாண்டவர்களைப் பற்றிய பல கதைகள் இனிமேல் நாட்டில் உலவும் என்று சொல்லும் சகுனி, “அந்தக் கதைகள் திட்டமிட்ட முடிவுகள் கொண்டவை” என்கிறார். எந்த ஒரு கதையை வாசிக்கும்போதும், மனம் எப்போதும் முடிவை நோக்கி விரைவதே அதன் இயல்பாதலால், சகுனி இங்கே இவ்வாறு குறிப்பது ஆழ்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்தும் அதே நேரத்தில், அவரது மனதிலுள்ள கசப்பையும், ஏமாற்றத்தையும் ஒருசேர புலப்படுத்துகிறது.

சப்தசிந்துவை கடக்கும் போது, முதிய ஓநாய் ஒன்றால் கடிபடும் சகுனி, குதிகால் நரம்பு ஒன்று துண்டிக்கபட, பல மாதங்கள் படுக்கையில் கிடந்து வைத்தியம் செய்துகொள்ள நேர்கிறது. செத்துப் பிழைக்கும் அவர், காந்தாரம் செல்வதை கைவிட்டு மீண்டும் அஸ்தினபுரிக்குத் திரும்புகிறார். அப்படித் திரும்பும்போது வைதிகனாக கணிகர் என்ற ஒருவரையும் உடன் அழைத்து வருகிறார். துருபதன், சகுனி இருவருமே தங்கள் வஞ்சத்தை மனதில் இருத்தி போஷித்து வளர்க்கிறார்கள். அந்த செய்கையே அவர்களை வீழ்ச்சியிலிருந்து மீட்டு நடமாடச் செய்கிறது என்பதையே நேர்த்தியாகவும், அற்புதமாகவும் நாவலின் இப்பக்கங்களில் விரியச்செய்திருக்கிறார் ஜெயமோகன். இங்கே துருபதன், சகுனி இருவரின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, “மனித மனதின் வஞ்சமும் பகையும் எப்போதும் தீர்க்கபடமுடியாதவை” என்பதையே நாம் உணர்ந்து கொள்கிறோம். 

தனது மகள் திரௌபதி வளர்வது கண்டு துருபதன் உள்ளம் மகிழும் அதேவேளையில் தன் மனைவிகள் பிருஷதி, அகல்யை இருவரின் மகன்களில் யாருக்கு இளவரசுப் பட்டம் கட்டுவது என்பதற்கு அவள் சொல்லும் யோசனையால், திரௌபதி அழகால் மட்டுமல்ல, அறிவாலும் நிகரற்றவள் என்பதை அறிகிறான் துருபதன். அவளைப் பற்றிச் சொல்லும்போது, “இப்புவியில் பெண்களை அளக்க பிரம்மன் உருவாக்கிய அளவுகோல் அவள்” எனும் ஒற்றை வரியின் மூலம் திரௌபதியின் மொத்த உருவமும் நம்முடைய மனக் கண்ணில் வந்துவிடுவதோடு, இப்புவியில் இதுவரை தோன்றிய பெண்களில் முற்றிலும் மாறுபட்டவள் அவள் என்ற குறிப்பையும் அதன் வாயிலாக நாம் பெற்றுக் கொள்கிறோம்.  தன் மகன் திருஷ்டதுய்மனுக்கு இளவரசுப் பட்டம் கிடைக்காத துயரத்திலும், அகல்யை மீதான ஆத்திரத்திலும் இருக்கும் பிருஷதியிடம், ‘உங்கள் மகனின் இளவரசுப் பட்டத்தை இழந்ததால், உங்கள் மீதான அகல்யையின் வெறுப்பையும் இழந்துவிட்டீர்கள்’ என்று சுட்டிக் காட்டுவதை திரௌபதியின் பாத்திர வார்ப்பில் மிக நுட்பமான சித்தரிப்பு எனலாம். நாவலின் வாசிப்பில் இவையெல்லாம் படித்து இன்புறத்தக்கவை.

சௌவீர நாட்டை வென்று, அதன் மணிமுடியையும் செல்வங்களையும் கொண்டுவரும் பாண்டவர்களை வரவேற்க திருதிராஷ்டிரரும், குந்தியும் நேரில் செல்வது முறையல்ல என்று சொல்லும் விதுரன், “மிகையாகிச் செல்பவை எதிர்த்திசைக்கு திரும்பக்கூடும்” என்று எச்சரிக்கிறார். அப்போது சௌனகர், “அன்புகூடவா?” எனக்கேட்க, “ஆம், முதன்மையாக அன்புதான் எல்லை மீறலாகாது. அன்பு ஒவ்வொரு கணமும் தன் எதிரொலிக்காக செவிகூர்கிறது. நிகரான எதிரொலி எழாதபோது ஏமாற்றம் கொள்கிறது. சினமடைகிறது. அது வன்மமாகவும் வெறுப்பாகவும் திரிகிறது” என்கிறார். முறுக்கப்படும் நூல்கள் போன்றவை உறவுகள். அதிகப்படியாக வலுவேற்ற செய்யும் முறுக்கலே அறுபடும் காரியத்தைச் செய்துவிடுகின்றன என சுந்தர ராமசாமி ஜே.ஜே.சில குறிப்புகளில் சொல்வதை நினைவு படுத்துகிறது விதுரனின் மொழிகள்.

மணிமுடியை பீமன் தன் காலடியில் சமர்ப்பிப்பான் என்று திருதிராஷ்டிரன் காத்திருக்க, தருமனோ அதை தன் தாய் குந்தியின் காலடியில் வைக்கிறான். தருமன் முறையற்ற காரியத்தைச் செய்துவிட்டதாக உணரும் விதுரன் முதல் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொள்கிறார். கூட்ட நெரிசலில் பாண்டவர்களை பார்க்கமுடியாமலே திருதிராஷ்டிரன் அரண்மணைக்குத் திரும்புகிறார். அங்கே அவருக்கு சாங்கிய அரசநீதியை போதிக்கிறார் கணிகர். கணிகர் என்ற பாத்திரத்தின் சித்தரிப்பு அபாரமான முறையில் நாவலில் அமைந்திருப்பதோடு அதை மிகச்சரியாக சரியான தருணத்தில் கொண்டுவந்து கதை ஓட்டத்திற்கு அபரிமிதமான வலுவைச் சேர்த்திருக்கிறார் ஜெயமோகன். “குறைவாகச் சொல்லி கேட்பவரை மேலே சிந்தனை செய்யவைப்பவன் அவன். அவ்வெண்ணங்கள் கணிகர் உருவாக்குபவை என்றறியாமல் அவர்கள் தங்கள் எண்ணங்கள் அவை என எண்ணிக்கொள்வார்கள். தாங்கள் அடைந்ததனாலேயே அவை சரியான எண்ணங்கள் என்று நம்புவார்கள்” என்று விதுரர் சொல்வதன் மூலம் அந்த பாத்திரத்தின் சித்தரிப்பை நாம் துல்லியமாக அறியமுடிகிறது.

கணிகரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே திருதிராஷ்டிரன் பாண்டவர்களையும் விதுரனையும் வரச்சொல்கிறார். ஆனால் பாண்டவர்களோ தாங்கள் கொண்டு வந்த செல்வங்களை குந்தியின் கையால் கொடையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் முறை மீறிய செயல் என்றுணரும் விதுரர் செய்வதறியாது திகைக்கிறார். பாண்டவர்களை உடனடியாக திருதிராஷ்டிரனைச் சந்திக்கவைக்க விழைகிறார். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்காமல் போகவே இனி செய்வதற்கு ஏதுமில்லை என்று உணர்கிறார். அவர் ஒருவரே ஒற்றை ஆளாக நின்று நிலைமையை சரிசெய்ய பலவகையிலும் முயற்சிக்கிறார். ஆனால் விதி வேறுவிதமாக இருக்க யார்தான் என்னசெய்ய முடியும்? ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் விதுரர், “நான் சோர்ந்துவிட்டேன். தெய்வங்களின் ஆணை என ஒன்றன் மீது ஒன்றாக நிகழ்கின்றன. வெறும் தற்செயல்கள். ஆனால் அவை முடிவெடுத்தவைபோல வந்துகொண்டிருக்கின்றன” என்கிறார். பாண்டவர்கள் திருதிராஷ்டிரனைத் தொட்டுவிடச் செய்யும் கடைசி எளிய முயற்சி கூட முடியாமல் போவது விதுரரை விரக்தியின் உச்சிக்கே இட்டுச்செல்கிறது. மாறிமாறிக் காட்டும் வெட்டப்பட்ட திரைக்காட்சிகளாக நாவலின் இப்பக்கங்களை நாம் நம்முடைய மனத்திரையில் ஓட்டிப்பார்க்கும் போதே இக்காட்சிகளின் அபாரமான கற்பனையின் வீச்சும் அழகும் புலப்படும். படிக்கப் படிக்க காட்சிகளின் தீவிரம் கூடிக்கொண்டே செல்கிறது அந்த முதல் விரிசலின் தருணத்தை நோக்கி.

இவை போதாவென்று பலராமரின் தூதோடு அஸ்தினபுரிக்கு வருகிறான் துரியோதனன்.

(தொடரும்...)
1. விருப்பும் வெறுப்பும்!
3. உணர்ச்சிகளின் மோதல்!
4. வஞ்சத்தின் பின்னல்கள்!
5. கல்லில் செதுக்கிய ஓவியம்!
6. அகத்தின் திறப்பு!

Related Posts Plugin for WordPress, Blogger...