ஜெயமோகனின் பிரயாகை-1: விருப்பும் வெறுப்பும்!

நிலையில்லா இவ்வுலகில் நிலைபேற்றை அடைந்த துருவனின் கதையை சொல்வதாக தொடங்குகிறது பிரயாகை. பேரன்பைப் போல சலிப்பூட்டுவது ஏதுமில்லையென உத்தானபாதன் நினைப்பதும், தன்னுடைய மகன் துருவனை அருவருக்கும் பல்லிக்குஞ்சாக ஒதுக்குவதும், தன் மனைவிகள் இருவரையும் இரண்டுவிதமாக அணுகுவதும் மிக ஆழமாகவும் அழகாகவும் வெளிப்பட்டு ஓர் அருமையான சிறுகதை ஒன்றை வாசித்த நிறைவைத் தருகிறது பிரயாகையின் தொடக்கம். மனித வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் விருப்பும் வெறுப்பு எனும் இரட்டையில் சிக்கித் தவிக்கும் உத்தானபாதனுக்கு, நிலைபேற்றை அடைந்தவனாக துருவன் மகனாக அமைவது வாழ்க்கையின் உடன்பாட்டு முரண்களில் ஒன்று என்பதை உத்தானபாதனின் மனவோட்டத்தின் வழியே சித்தரிக்கிறது இந்தக் கதை. “மறுக்கமுடியாத இடத்தை அவள் எப்படிக் கண்டடைகிறாள்? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தருணம். ஒருமுறைகூட அது பிழையானதாகவும் இருப்பதில்லை” என்பதாக உத்தானபாதன் நினைப்பதை, காரியம் சாதிக்கும் அனைவரும் கைக்கொள்ளும் சாகசத்தின் உச்சமாகக் குறிப்பிடலாம். அடுத்தவர்களின் சொல், செயல், அங்க அசைவுகளில் மேலோட்டமாக வெளிப்படும் அர்த்தங்களை விடவும் அவற்றின் உள்ளர்த்தங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்துக் காட்டுவதன் மூலம், மனித மனம் வெளிப்படும் வித்தையை அறிந்து வியப்பும் திகைப்பும் ஒருங்கே அடைகிறோம்.

பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் குருகுல வாழ்க்கையை முடித்து, துரோணருக்கு காணிக்கையாக துருபதனை தேர்க்காலில் கட்டி இழுத்துவரும் பொருட்டு, காம்பில்யத்தின் மீது போர் தொடுக்கிறார்கள். கொல்வதும் கொல்லப்படுவதும் போர் என்பதை தருமன் அர்ச்சுனன் இருவருக்கும் இடையிலான உரையாடலில் தெளிவுபடுத்தும் ஜெயமோகன், போர்க்காட்சியின் வியூகங்களை விரிவாக விவரித்துச் செல்கிறார். “போரை தொலைவில் நின்று பார்க்கும்போது அது ஒர் ஒற்றை நிகழ்வாக மாறிவிடும் அற்புதத்தை அர்ஜூனன் எண்ணிக்கொண்டான். ஆயிரக்கணக்கானவர்கள் தனித்தனியாக செய்யும் போர். அவர்கள் ஒவ்வொருவரும் அப்போது முழுமையான தனிமையில் தங்கள் எதிரிகளுடனும் ஆயுதங்களுடனும் இருந்துகொண்டிருப்பார்கள். ஆனால் அவை இணைந்து ஒற்றை நிகழ்வாகிவிடுகின்றன. இப்புடவியின் அத்தனைகோடி நிகழச்சிகளும் இணைந்து விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு ஒற்றை நிகழ்வாகத் தெரியுமோ?” என்பதாக ஓரிடத்தில் சொல்வது டால்ஸ்டாய் தன் போரும் அமைதியும் நாவலில் விவரிக்கும் போர்க்கள அணிவகுப்பையும், இந்த உலகில் தன்னிச்சையான செயல் என்று ஒன்றில்லை, எல்லா நிகழ்வுகளுமே ஒருங்கிணைந்த பேருயிர் இயக்கமொன்றின் வெளிப்பாடு என்பதாக அவர் சொல்வதை நினைவு படுத்துகிறது.

துருபதனைக் கட்டி இழுத்துவரும் அர்ஜூனன் முகபாவங்கள், துரோணரின் முகபாவத்திற்கு எதிர்த் திசையில் நகர்வதைக் காட்டுவதன் மூலம் மனித மனத்தின் சலனங்களையும், சபலங்களையும் நுட்பமாகச் சித்திரித்திருக்கிறார் ஜெயமோகன். அதைப் பற்றிய தனது எண்ணங்களை பீமனிடம் பேசும் போது, “சஞ்சலங்களை சரியான சொற்களில் சொல்லிவிட்டாலே நம் அகம் நிறைவடைந்துவிடுகிறது. அந்தப் பெருமிதத்தில் அதற்குக் காரணமான இக்கட்டை மறந்துவிடுவோம். அந்த சொற்றொடரை முடிந்தவரை சொல்லிச்சொல்லி பரப்பி நிறைவடைவோம்” எனச் சொல்லும் பீமனின் வார்த்தைகள், அனுபவங்களை எழுத்தாக்கும் அனைவரும் உணர்ந்து வியக்கும் ஒன்றாக அமைந்திருப்பது பெருவியப்பு!.

இளவரசுப் பட்டம் தருமனுக்கா அன்றி துரியோதனுக்கா என்ற கேள்வி எழும் போது, எல்லோரும் தங்கள் அகம் விரும்புவதையே, நீதியாக முறையாக எடுத்தியம்புகிறார்கள். மாற்றுத் தரப்பினர் கருத்து தங்களுக்கு உவப்பானதல்ல என்பதாலேயே அநீதி என்றும் முறையற்றது என்றும் வாதிடுகிறார்கள். இந்நிலையில் வாதத்திலும் எதிர்வாதத்திலும் ஈடுபடாது, தன் மனம் சொல்வதற்கு ஏற்ப தருமனுக்கே இளவரசுப் பட்டம் கட்ட முடிவு செய்வதாகச் சொல்கிறான் திருதிராஷ்டிரன். முன்னர் தனக்கு ஏற்பட்ட நிலையே இன்று தன் மைந்தனுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்றுணரும் அவன், “பொருத்திரு காலம் வரும்” என்று துரியோதனைத் தேற்றுவது, ஒரு தந்தை என்ற நிலையில் என்றாலும் தருமனுக்கு பட்டம் சூட்ட இசைவது, ஒரு நாட்டின் அரசன் என்ற நிலையில் அவன் செயல்படுவதைக் காட்டுவதாக அமைய, திருதிராஷ்டிரன் நம் உள்ளத்தில் ஓங்கி உயர்ந்து நின்று விடுகிறான். அதன் பிறகு, ஒவ்வொருவரையும் அழைத்து அவன் வாஞ்சையோடு அணைத்துக் கொள்ளும் போது அந்த அணைப்பின் இதத்தை நாமும் நம்முடைய உடலில் உணர்கிறோம் நம்முடைய பாட்டனின் அன்பைப் போல!

அவமானத்தினால் மனமுடைந்து படுத்த படுக்கையாகும் துருபதனின் நாட்களை மிக அற்புதமாக படம்பிடித்துக் காட்டுகிறார் ஜெயமோகன். “ஒரு கணம்கூட நில்லாமல் விழிகள் தத்தளிக்கும். கைவிரல்கள் எப்போதும் ஒன்றுடன் ஒன்று தொட்டுத்தொட்டு காற்றை பின்னிக்கொண்டே இருக்கும். கண்ணுக்குத் தெரியாத ஏதோ சரடை நெய்வதுபோல. உதடுகள் ஒலியற்ற சொல் ஒன்றை உச்சரித்துக்கொண்டே இருக்கும்” எனும் வரிகள், இறக்கும் தருவாயில் இருப்பவனின் செய்கைகள் பிறர் கண்களுக்கு வேண்டுமானால் அர்த்தமற்றவையாகத் தெரியலாம், ஆனால் விடைபெறுபவனுக்கோ ஆயிரம் அர்த்தங்கள் கற்பிப்பவை என்பதையே நமக்கு உணர்த்துகிறது. தோல்விக்குப் பின் துருபதன் மனம் உடல் இரண்டாலும் படும் இன்னல்கள், மனிதன் மற்றொரு மனிதன் மீது கொள்ளும் வஞ்சினத்தின் கொடுமையை, விளைவை பறைசாட்டுகிறது. துருபதனும் அஸ்வத்தாமனும் சந்திக்கும் காட்சியில் அவை உச்சம் கொண்டு நம்மைக் கலங்கடிக்கிறது! துருபதன் அனிச்சையாக கழிக்கும் சிறுநீறின் வாசம் நம் நாசிகளில் ஏறி, கண்ணீராக கண்களில் வழிகிறது!

ஆனால் இதே துருபதன் துர்வாசரைச் சந்திந்த பிறகு தன்னை ஆற்றமுடியாமல் உபயாஜரிடம் தஞ்சமடைந்து, “இனி இவ்வாழ்வில் நான் விழைவது ஒன்றே. ஒரு நாளேனும் அகம் அழிந்து துயில வேண்டும். காலையில் நிறைந்த உள்ளத்துடன் விழித்தெழவேண்டும்” எனும்போது, தன்னுடைய வெறுப்பை, வஞ்சத்தை, பகையுணர்வை மாற்ற மனிதன் சக்தியற்றவன் என்பதை அறிவுறுத்துவதோடு, மனிதனின் இத்தகைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மூலமாகவே, இப்பிரபஞ்சம் எது நிகழவேண்டுமோ அதை நிகழ்த்திக் கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்கிறோம்.

துருபதனின் வஞ்சத்தை போக்கும் விதமாகவே, அவன் செய்யும் யாகத்தின் பலனாக, திரௌபதி பேரழகுடன் அவனுக்கு மகளாக வந்து பிறக்கிறாள்.

(தொடரும்...)
2. முதல் விரிசல்!
3. உணர்ச்சிகளின் மோதல்!
4. வஞ்சத்தின் பின்னல்கள்!
5. கல்லில் செதுக்கிய ஓவியம்!
6. அகத்தின் திறப்பு!

Related Posts Plugin for WordPress, Blogger...