அஞ்சலி: ஜெயகாந்தன்

வெறும் புத்தக ரசிகனாக இருந்த நான் இலக்கிய ரசிகனாக மாறியபோது அதிகமும் படித்தது ஜெயகாந்தனையே. அவர் எழுத்துக்களின் மீது பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம். ஆனால் தான் ஒரு எழுத்தாளன் என்று நிமிர்ந்து நின்று ஆணவத்துடன் வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன் மட்டுமே என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அந்தத் திமிர், அந்தக் கர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எழுத்தாளன் என்ற கெத்துடன் இன்று பலர் திரிவதற்கு முழு முதற் காரணம் அவர்தான் என்றால் அதில் மிகையில்லை. எழுத்தாளன் என்பதற்கு என் மனதில் இருந்த கற்பனைக்கு உயிர் கொடுத்தவர் ஜெயகாந்தன்தான். அவரது அலைபாயும் முடியும், முறுக்கிவிட்ட மீசையும், கம்பீரத் தோற்றமும் யாராலும் மறக்க முடியாதவை.

அவரது நாவல்கள், குறுநாவல்கள் எனப் பலவற்றை வாசித்திருந்த போதும் இன்று அவைகள் எதுவும் என் நினைவில் இல்லை. திரும்பிப் பார்க்கும் போது அவைகள் கனவு ஒன்றின் புகைமூட்டமாகக் காட்சி தருகின்றன. அந்த புகை மூட்டத்தில் இன்றும் பிரகாசமாகத் தெரிவது அவரது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்தான். அன்று அந்த நாவல் என்னிடம் அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றும் இன்றும் என்றும் அந்த நாவலின் ஹென்றி பாத்திரத்தை என்னால் மறக்கவே முடியாது. நானும் கடந்த மூன்று வருடங்களாக அந்த நாவலை மறுவாசிப்பு செய்து எழுத வேண்டும் என்று பிரயத்தனப்பட்டேன் முடியவில்லை.

என்னைப் பொருத்தவரை இந்த இரண்டும்தான் என்றென்றும் ஜெயகாந்தனை மறக்க முடியாமைக்கான காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...