ஆரோக்கிய நிகேதனம் கிடைத்தது!

புதிய எக்ஸைல் முடித்த பிறகு படிக்க முடிவு செய்திருக்கும் புத்தகம் ஆரோக்கிய நிகேதனம். நான் எப்போதும் புத்தகங்களை முன்கூட்டியே திட்டமிட்டு படிக்கத் தேர்வதில்லை. இருந்தும் ஆரோக்கிய நிகேதனம் நாவலை அடுத்ததாக படிக்கவென்று திட்டமிட்டிருக்கிறேன். இந்த நாவல் இன்றுதான் கைக்குக் கிடைத்தது. ஜெயமோகனின் ‘நாவல்’ புத்தகம் வந்தபோதே ஆரோக்கிய நிகேதனம் நாவலை தேடத்தொடங்கினேன். ஆனால் அது என் கையில் வருவதற்கு இத்தனை காலங்கள் கடந்திருக்கின்றன. சற்றேறக்குறைய 23 ஆண்டுகள்! இந்நாவல் த.நா.குமாரசாமி அவர்களால் மொழியாக்கம் பெற்று 1972-ல் வெளிவந்திருக்கிறது. இந்நாவல் வங்காளத்தில் தாராசங்கர் பந்யோபாத்யாய அவர்களால் எப்போது எழுதப்பட்டது என்று தெரியவில்லை.

தற்போது இந்த நாவலை கானல் வெளியீடு என்ற பதிப்பகம்  2014-ல் வெளியிட்டுள்ளது. மெல்லிய அட்டையில் டெம்மி அளவும், 624 பக்கங்களும் கொண்ட  இந்தப் புத்தகத்தின் விலை ரூபாய் 500. என்ஹெச்எம்மில் கிடைக்கிறது. இந்நாவலின் முன்னுரையைப் படிக்க முயன்றபோது பக்கங்கள் விடுபட்டிருப்பது தெரியவே என்ஹெச்எம்மில் தொடர்பு கொண்டபோது, பதிப்பாளரிடம் கேட்டு, ‘லேஅவுட்’ பிராப்ளம் என்றார்கள். நான் பதிப்பாளரிடம் நேரடியாகத் தொடர்பு கொண்ட போது அவரும் அதையே சொன்னார். எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய நண்பர் என்றும், அவர் ஏதும் விடுபடவில்லை என்று சொன்னதாகவும் சொன்னார். அவர்கள் ‘லேஅவுட்’ என்று சொன்னதின் பொருள் நாவல் ஆரம்பிக்கும் பக்கத்திற்கு மேலே இடைவெளி விடாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான். நான் கவனித்து வாசித்துபோதுதான் பக்கங்கள் மாறியிருப்பது தெரியவந்தது.

பக்கம் 3-க்குப் பிறகு 5-ஐயும், பக்கம் 4-க்குப் பிறகு 6-ஐயும் வாசித்தால் குழப்பம் நீங்கிவிடும். இது பழைய புத்தகத்தின் இம்பிரிண்ட் என்பதால் அப்படியே மாறாமல் வந்திருக்கிறது. இருந்தும் ஒரு குறிப்பு என்ற தலைப்பு அந்தரத்தில் தொங்கியபடிதான் இருக்கிறது. அதற்கு விளக்கம் கிட்டவில்லை. இந்திய மொழிகளில் ஆகச்சிறந்ததாக போற்றப்படும் இந்த நாவலை வாசிக்க விருப்பமுள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்பதற்காவும், புத்தகத்தை வாங்குபவர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவுமே இவற்றை எழுதுகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...