April 29, 2015

உப்பு வேலி -ராய் மாக்ஸம்: உப்பு சுவையல்ல சோகம்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை, ‘எந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்?’ என மேசை மீதிருந்த பல புத்தகங்களைக் கலைத்த போது, ராய் மாக்ஸம் எழுதிய உப்பு வேலி கண்ணில் பட்டது. எடுத்து, சும்மா படித்து வைப்போமே என படிக்கத் தொடங்கினேன். விறுவிறுப்பான துப்பறியும் நாவலுக்கு இணையான வேகத்தை நாவல் கொண்டிருந்ததால் முதல் எழுபத்தைந்து பக்கங்களை விரைவில் படித்து முடித்தேன். ஒரு சாதாரண உப்பில் இத்தனை விசயங்கள் உள்ளனவா என வியப்பு மேலிட தொடர்ந்து வாசித்து முடித்தேன். வரலாற்று நாவல் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் உப்பு வேலிதான். தமிழில் இப்படியான நாவல்கள் அரிதிலும் அரிது என்றும், வெறும் இட்டுக் கட்டிய மாயக் கற்பனைகளும், வரலாற்றை தன் விருப்பம் போல் மனப்புணர்ச்சி (சு.ரா.) செய்து மகிழ்வதுமான எழுத்துக்களே வரலாற்று நாவல்கள் என்பதாக தமிழில் காணக்கிடைக்கின்றன என்றும் தோன்றியது.

ஒரு கதைசொல்லியாகவே நாவலுக்குள் புகுந்துகொள்ளும் ராய் மாக்ஸம், தீவிர நம்பிக்கையோடும் விடாமுயற்சியுடனும் உப்பு வேலியைத் தேடிய அனுபவத்தையும், உப்பு சம்பந்தமான வரலாற்று நிகழ்வுகளையும் மாறி மாறிச் சொல்வதாக நாவலைக் கட்டமைத்திருப்பதன் மூலம் நாவலுக்கு விறுவிறுப்பையும், செறிவையும் கூட்டியிருக்கிறார். உப்பு வேலி என்பது என்ன? அது எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது? உப்பு மீதான வரிக்கும் இதற்கும் என்ன தொடர்பு? வரி விதிப்பின் விதிகள் சாதாரண மக்களை எவ்விதம் பாதிக்கிறது? அதனால் நிகழ்ந்த வரலாற்று சோகங்கள் என்னென்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகளையும், அவற்றினூடே பின்னிப் பிணைந்த ஒவ்வொரு மனிதனின் சுயநலத்தையும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போலச் சொல்லி, நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார் ராய் மாக்ஸம்.

‘குயின்டோ’ எனும் பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் ஸ்லீமன் எழுதிய ‘ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும் நியாபகங்களும்’ எனும் புத்தகத்தை வாங்கிப் படிக்கும் போது அதில் சிந்துவிலிருந்து மகாநதி வரை 2300 மைல்கள் நீண்டதாக முள்வேலி இருந்தது என்கிற குறிப்பைப் படிக்க, அந்த முள்வேலி ராய் மாக்ஸமை விடாப்பிடியாகப் பற்றிக்கொள்கிறது. எனவே அதைத் தேடும் பொருட்டு, தனது தில்லி சிநேகிதி தீதி என்பவரின் குடும்பத்தினர் உதவியோடு தன்னுடையத் தேடலை ஆரம்பிக்கிறார். அவர்களுடன் துர்கா பூஜையில் கலந்துகொள்வது, முழுமையாக இந்தி கற்றுக்கொள்வது என்பதாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார் அவர்.

தில்லி, மைசூர், கான்பூர், ஜான்சி, மங்ரோல், ஷேக்பூர், ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் இந்த வேலியைத் தேடி அலைகிறார் மாக்ஸம். தீதியின் குடும்பத்தாரும் மற்றவர்களும் அவருக்கு பெரும் உதவிகளைச் செய்கிறார்கள். அந்தப் பகுதிகளை விவரிக்கும் ராய் இந்தியாவின் சித்திரத்தை, அந்த மக்களின் வாழ்க்கையை நாவல் நெடுகிலும் பதிந்து செல்கிறார். அவரது தேடலும் வரலாறும் நாவலில் ஊடும் பாவுமாக பின்னிச் செல்கிறது. இதோ கண்டுவிட்டேன என்ற உற்சாகம், மறுகணம் இல்லை காணவில்லை என்ற சோர்வு, இப்படியாக மாறிமாறி வெளிப்படும் உணர்வுகளுக்கிடையே வெறித்தனமாக விடா முயற்சியுடன் அயராமல் உப்பு வேலியைத் தேடுகிறார் ராய் மாக்ஸம். இந்தத் தேடலுடன் உப்பின் அவசியம், அதன் பலன்கள், உப்பில்லாமையால் ஏற்படும் உடல் சோர்வு ஆகியவற்றை சொல்லிச் செல்லும் பகுதிகள் உப்பு ராயை எவ்வளவு தூரம் பைத்தியமாய் அடித்திருக்கிறது என்பதை அறியச்செய்வதோடு, எதிலும் அதிக பட்ச நிறைவை நாடும் அவர் குணத்தைத் தெரிந்துகொள்கிறோம்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஓம்கரேஷ்வர் செல்வது, அங்குள்ள மகாதேவா கோவில் பற்றிய சித்தரிப்பு, அங்கிருந்து ராஜஸ்தானின் புலெராவுக்கு மேற்கொள்ளும் ரயில் பயணம், சம்பர் உப்பு ஏரியைப் பார்வையிடுவது என அனைத்தையும் ராய் மாக்ஸம் சுவைபட சித்தரித்துள்ளார். ஆயினும் எங்கும் அவர் தேடியதைக் காணாமல், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேடிய ஜான்சியிலேயே தன் தேடலை மீண்டும் தொடர்கிறார். எரிச், இட்டாவா, சகநகர் என்று அலைந்து, இறுதியில் சம்பல் கொள்ளைக்காரர்கள் வசிக்கும் பலிகர் என்ற ஊரில் சவுகான்ஜி என்பவரின் உதவியால் 40 அடி நீளமுள்ள புதர் வேலியான உப்பு வேலியைக் கண்டடைகிறார் ராய்.

“பிரித்தானிய பேராசையால் உப்புவரி உருவானது. முதலில் கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளர்களின் தனிப்பட்ட பேராசை, பின்னர் கம்பெனியின், அதன் பங்குதாரர்களின் பேராசை, பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தின், அதன் மக்களவையின் பேராசை, அதன் மக்கள் பிரதிநிதிகளின் பேராசை” என்பதாக உருவான உப்புவரி குடிமக்களுக்கு பெரும் அழிவைத் தேடித் தந்தது என்கிறார் ராய் மாக்ஸம். ராபர்ட் கிளைவின் வருகைக்குப் பின்னர் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சொத்து சேர்க்க முற்பட்டதன் விளைவாக குடிமக்கள் தங்கள் வருமானத்தில் பாதியை உப்புக்காக செலவிட நேர்ந்தது. “... அதிக காலம் வேலை செய்த அறுபத்தி ஒரு ஊழியர்கள் - நிர்வாக உயரதிகாரிகள், இராணுவ வீரர்கள், மருத்துவர்கள், மதபோதகர்கள் போன்றோர் - அவரவர் அனுபவத்தைப் பொருத்து பகிர்ந்துகொண்டனர். ஐம்பத்தொரு ‘மூன்றில் ஒரு பங்குகள்’ இருந்தன. ஆளுநர் கிளைவுக்கு இருந்ததிலேயே அதிக பங்கு, ஐந்து பங்குகளை அவர் எடுத்துக் கொண்டார். மிகக் குறைந்த அனுபவமுடையவர் ஒரு பங்கில் மூன்றில் ஒன்றை எடுத்துக்கொண்டார்” என்பதைப் படிக்கும் போது நாம் அதிர்ச்சியடைகிறோம். ஆரம்பத்தில் கிழக்கிந்திய கம்பனி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், கிளைவ் கம்பெனிக்கு ஆண்டுக்கு ரூ.12,00,000 இலாபத்திலிருந்து கொடுத்து அவர்களின் வாயை அடைத்து விடுகிறார்.

எனவே வேறெங்கும் இல்லாத அளவிற்கு உப்புக்கான வரி இந்தியாவில் அதிக அளவில் விதிக்கப்பட்டது. அதன் விளைவாக நாட்டில் உப்புக் கடத்தல் பெருமளவில் நடந்தேறியது. உப்புக் கடத்தலினால் தன்னுடைய வருமானத்தை இழக்க விரும்பாத அரசாங்கம் கடத்தலைத் தடுக்க புதர் வேலி ஒன்றை உருவாக்கியது. அதுவே உப்பு வேலி எனப்பட்டது. (அந்த உப்பு வேலி அமைக்கப்பட்டதும், அதைப் பராமரிக்கச் செய்யப்பட்ட பணிகள் பற்றிய விவரிப்புகளும் நமக்கு மாபெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. எத்தகைய மனித உழைப்பு, மனிதனின் பேராசையால் இத்தகைய வேலையில், பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை அறியும் போது அயர்ச்சி மேலிடுகிறது). கடத்தலைத் தொடர்ந்து அதைச் சரிகட்ட லஞ்சம் தலைவிரித்தாடியது. இதனால் சாதாரண மக்கள் பெரும் துன்பமடைய நேர்ந்தது. அவர்களுக்கு உப்பு கிடைப்பது குதிரைக் கொம்பாயிற்று. இவ்வாறாக உப்பு வேலி உருவாக்கப்பட்டதன் வரலாற்று பின்னனியை அதன் விளைவுகளை விவரிக்கும ராய், பஞ்சம் ஏற்பட்ட போது பல்லாயிரக் கணக்கானோர் இறந்து போனதற்கு அவர்கள் உடலில் போதுமான உப்புச் சத்தில்லாததும் ஒரு காரணம் எனும் பார்வையை நம்முள் விதைத்துச் செல்கிறார்.

ஒரு பக்கம் வரிச்சுமை மக்களை அழுத்த, மறுபக்கம் சுங்கப் பணியார்கள் மற்றும் அதிகாரிகளின் அராஜகமான போக்கு குடிமக்களை வெகுவாக பாதித்தது என்பதை, “முதலாவது, குடிமக்களின் வீட்டில் உப்பை தூவிவிட்டு அவர்கள் உப்பு தயாரிக்கிறார்கள் என்று அவர்களை கைது செய்வது. சாட்சிக்கு அங்கிருந்த உப்புக் கலயங்களைப் பயன்படுத்துவது. இரண்டாவது, நூறு நூற்றைம்பது பேராகக் குடியிருப்புகளில் நுழைந்து ஆண் பெண் என அங்கிருக்கும் அனைவரையும் கைது செய்வது, பெண்களை இழிவுபடுத்துவது. மூன்றாவது, உப்புக்கான சோதனை என்று குடியானவர்களின் உடைமைகளை அபகரிப்பது. நான்காவது, பத்துப் பதினைந்து நாட்களுக்கு விசாரணைக்காக பூட்டி வைத்தவிட்டு வாக்குமூலங்களை பெறுவது” என்ற வரிகளின் வாயிலாக திகைப்புடன் அறிகிறோம். ஒரு சாதரண உப்பு மனிதர்களின் மனிதத் தன்மையை முற்றலாக உலரச்செய்து விட்ட அவலத்தை, நாவலின் இந்தப் பக்கங்களில் வெளிப்படும் வரலாற்றுத் தரவுகள் நமக்குப் புரிய வைக்கின்றன.

உலகெங்கும் சீனா, ஆப்பரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரெஞ்சு என எல்லா நாடுகளிலும் உப்பு வரி இருந்தாலும் அது இந்தியாவில் மிகமிக அதிகமானது; அநியாயமானது. இதில் மிகக் கொடுமையான செய்தி என்னவென்றால், நிலச் சுவான்தார்களும், பணம் படைத்த செல்வந்தர்களும் வைஸ்ராயிடம் நிலவரியை வெகுவாகக் குறைத்து உப்பு வரியை அதிகரிக்கும்படி கேட்டுக்கொள்வதுதான். இந்த வரிக்கு எதிரான போராட்டங்கள் பிரெஞ்சில் நடந்தபோது இந்தியாவில் நிகழாமைக்கு, இந்திய மக்களின் உடலில் போதிய உப்பில்லாத சுரணைகெட்ட தன்மையே காரணம் என்று ராய் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.  1857 சிப்பாயக் கலகம் நீர்த்துப் போனதற்கும் இதுவே காரணம் என்பதாக அவர் நினைக்கிறார் என்பது நமக்குப் புதியதோர் செய்தி.

இந்நிலையில் உப்பு வரிக்கெதிரான போராட்டம் காந்தி ஒருவராலேயே நடத்தப்பட்டது. ”அரசுக்கு உப்பின் மீதுள்ள சட்டத்துக்குப் புறம்பான முற்றதிகாரத்தை நீக்க விரும்புகிறேன். என்னுடைய குறிக்கோள் உப்பு வரியை ஒழிப்பதாகும். என்னைப் பொருத்தவரையில், அதுவே முழு விடுதலைக்குமான ஒரே வழி, முதல் படி” எனப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர் காந்தியடிகளே. வரலாற்றின் பக்கங்களில் காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம் வெறும் ஒற்றை வரிச்செய்தியாகவே தெரிந்த நமக்கு, ராயின் இந்நூல் அதன் அவசியத்தையும், காந்தியடிகளின் விடுதலைக்கான போராட்டத்தின் வியூகத்தையும் உணர்த்துகிறது.

மூன்று வருடக் கடும் உழைப்பு ராயை அவரது இலக்கில் வெற்றிபெறச் செய்துவிட்டது எனினும் அவர் மகிழச்சியடைவில்லை. ஒன்றின் தேடலில் உள்ள உற்சாகமும் ஆர்வமும் அதைக் கண்டடைவதில் இருப்பதில்லை. வேலியைக் கண்டடைந்த பின்னர் ராய்க்கு இதுவே நிகழ்கிறது. எனவே இப்படி எழுதி நாவலை நிறைவு செய்கிறார்: “நான் அளவில்லாத மகிழ்ச்சி கொண்டிருக்க வேண்டும். ஆனால் எனக்கு வருத்தமாகவே இருந்தது. ஒரு இனம் புரியாத சோகம் என்மீது படிந்திருந்தது. குளிருக்காக என்னுடைய போர்வையை இழுத்துவிட்டுக் கொண்டேன். இரு பக்கிகள் இலக்கற்று பறந்து கொண்டிருந்தன, சோகமாய் கீச்சிட்டபடியே.” ஆங்கிலேய இரும்புக் கரத்தின் அடக்கு முறையின் அடையாளமாகவே அதைக் கண்டதின் வருத்தம், சோகம் அவர் மீது படிகிறது. உப்பு வேலி என்னதான் ஆங்கிலேயர்களின் அராஜகமான அடக்குமுறை என்றாலும் அதில் இனம் வர்க்க பேதமின்றி ஒவ்வொரு மனிதனுக்கும் பங்கிருக்கிறது என்பதை நாவலை வாசித்து முடிக்கையில் நாம் உணரும்போது ராய் மாக்ஸின் சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் சரளமாக அமைந்து நாவலைத் தடையின்றி வாசிக்க வைக்கிறது. இந்த அரிய நூலை கெட்டி அட்டையில் இன்னும் சிறப்பாக வெளியிட்டிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...