இரண்டு சாகச நாவல்கள்: யதார்த்தமும் கற்பனையும்

என்னுடைய பதின் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த சாகச கதைகள் இரண்டு. ஒன்று ராபின்சன் குரூஸோ மற்றொன்று கில்லிவர்ஸ் டிராவல்ஸ். டேனியல் டிஃபோவின் ராபின்சன் குரூஸோ வாழ்வின் யதார்த்தமான சிக்கலைப் பேசுகிறது என்றால் ஜனாதன் ஸ்விப்ட்டின் கில்லிவர்ஸ் டிராவல்ஸ் யதார்த்தத்திற்குப் புறம்பான கற்பனையைச் சித்தரிக்கிறது. இந்த வகையில் இந்த இரண்டு நாவல்களும் முக்கியமானவை.

தனி ஒரு மனிதனாக தீவு ஒன்றில் மாட்டிக்கொள்ளும் ராபின்சனின் வாழ்க்கை அனுபவங்கள் தரும் சாகசங்கள் அற்புதமானவை. அந்தத் தீவிலிருந்து ஒவ்வொரு நாளும் தப்பிக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகளினூடே தன் அன்றாடத் தேவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்துகொள்கிறான் என்பதை டேனியல் டிஃபோ மிக தத்ரூபமாக நாவிலின் பக்கங்களில் துல்லியமான படக்காட்சியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதைப் படிக்கும் தருணத்தில் மனம் கொள்ளும் பரவசமும், விடாமுயற்சியின் மீது நமக்கு ஏற்படும் அபரிமிதமான நம்பிக்கையும் மிக மிக முக்கியமானவை.

இதற்கு மாறாக முற்றாக விநோதமான கற்பனையின் வெளியில் நம்மைச் சஞ்சரிக்க வைப்பது கில்லிவர்ஸ டிராவல்ஸ்.  தன்னைவிடக் குள்ளமான மனிதர்களோடும், உயரமான மனிதர்களோடும் நாயகன் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதும்  தப்பிப்பதும் படித்தவர்களால் என்றென்றும் மறக்க முடியாதவை. அந்த வயதில் இதைப் படித்த போது அவைகள் உண்மை என்றே மனம் நம்பியது. அப்படி ஒரு உலகத்தைக் காணவும், அதில் வாழ்ந்து பார்க்கவும் மனம் விரும்பியது. இதே மாதிரியான கதைகள் உலகம் முழுதும் வெவ்வேறு வடிவங்களில் தோன்றியிருக்கின்றன இன்னும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்ல குழந்தைகளாக மாற விரும்பும் பெரியவர்களும் இந்தக் கதைகளை விரும்பி வாசிக்கிறார்கள்.

இந்த இரண்டு அபூர்வமான கதைகளைப் படிக்கும் ஆர்வம் திடீரென ஏற்பட்டது. தமிழில் கில்லிவர்ஸ் டிராவல்ஸ் யூமாவாசுகி அவர்களால் கில்லிவர்ஸ் யாத்திரை என்று தமிழாக்கம் பெற்றிருக்கிறது. பல முறை அதை வாங்கும் உந்துதல் இருந்தும் வாங்காது விட்டுவிட்டேன். ஆயினும் ராபின்சன் குரூஸோ தமிழில் வந்துள்ளதா என்பது தெரியவில்லை. இந்த இரண்டையும் ஆங்கிலத்தில் வாசிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்கான புத்தகங்களைத் தேடியதில் எவ்வரிமென்ஸ் லைப்ரரியின் கில்லிவர்ஸ் டிராவலும், பென்குவின் கிளாசிக்கின் ராபின்சன் குரூஸோவும் படிக்க வேண்டிய புத்தகங்களாகக் கருதுகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...