படித்து முடிப்பது எப்போது?

உலக இலக்கியங்களை ஆங்கிலத்தில் படித்துவிடும் உவப்போடும் உத்வேகத்தோடும் தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் மற்றும் துர்க்கனேவ் ஆகியோரின் சில நாவல்களை வாங்கியுள்ளேன். தமிழில் அவைகள் எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. அப்படியே கிடைத்தாலும் அவற்றில் எனக்கு முழுமையான நிறைவு கிட்டவில்லை என்பது பற்றி ஏற்கனவே முந்தயை பதிவில் எழுதியுள்ளேன்.

டால்ஸ்டாயின் நாவலைத் தவிர பிற அனைத்துமே Everyman's Library-யின் வெளியீடு. புத்தகங்களின் அளவும், கனமும் கைக்குக் கச்சிதமாக இருக்கின்றன. புத்தகத்தை மேசை மீது வைத்து விரித்தால் உடனடியாக ‘ஹாயாக’ நீண்டு படுத்துவிடுகிறது. நம்முடைய தமிழ் புத்தகங்கள் கூன் விழுந்த முதுகாக மேசையின் மீது படுக்கவே படுக்காது. தடிமனான புத்தகங்களைப் படித்து முடிப்பதற்குள் நாம் படும்பாடு சொல்லி மாளாது. நமது புத்தகங்கள் பருத்துப் பெருத்துப் போன பெண்ணாக அழகற்று இருக்க ஆங்கிலப் புத்தகங்கள் ஸ்லிம்மாக அழகாக இருக்கின்றன. காகிதங்களும், அச்சும், கட்டமைப்பும் வெகு நேர்த்தி. கெட்டி அட்டையும், கெட்டிக் காகிதமும் போட்டுவிட்டால் புத்தகம் தரமானதாக ஆனதாக நம்மவர்கள் நினைத்துக் கொள்வது அறியாமை. தமிழ் சினிமாவை ஆங்கில சினிமாவிற்கு நிகராக எடுக்கத் தெரிந்த நமக்கு இன்னும் புத்தகங்களை வெளியிடுவதில் சிவகாசியைத் தாண்டி வரமுடியவில்லையே என்று, எனக்கு இந்தப் புத்தகங்களைப் பார்க்கபார்க்க, மனதில் ஆதங்கம் எழுகிறது.

நான் வாங்கிய புத்தகங்கள் ஆறு. அவற்றின் விலைகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. தற்போது நாம்வாங்கும் வெண்முரசு நாவலைவிடச் சற்றே கூடுதலாக இல்லையேல் குறைவாக இருக்கும். தஸ்தயேவ்ஸ்கியின் Notes From Underground, Crime and Punishment, The Double The Gambler, The Idiot ஆகிய நான்கு புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். இவற்றில் குற்றமும் தண்டனையும் நாவலை ஏற்கனவே சுசிலா அவர்களின் மொழியாக்கத்தில் படித்திருக்கிறேன். படித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் அவரின் மொழியாக்கம் பற்றி இப்போது சொல்ல ஏதும் நினைவில் இல்லை. ஆயினும் சிரமத்துடனேயே படித்ததாக நினைவு. சமீபமாக அந்நாவலை மீண்டும் படிக்கும் விருப்பம் ஏற்பட்டது. ஆனால் பாரதி புத்தகாலயத்தின் கிரௌன் வடிவம் எனக்கு பெரும் எரிச்சலைத் தருவதால் அதைப் படிக்க முடியாமல் இருக்கிறேன். தி டபுள், தி கேம்பளர் இரண்டும் குறுநாவல்கள். தி டபுளின் நூற்றுக் கொச்சம் பக்கங்களைத் தாண்டிவிட்டேன்.

டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை ஏற்கனவே படித்துள்ளேன். இருந்தும் அவரின் அன்னா கரீனினாவைப் படிக்கும் விருப்பம் பல நாட்களாக என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. நான் முன்பே சொல்லியபடி தமிழில் அதைப் படிக்க முடியாத நிலை இருப்பதால் ஆங்கிலத்தில் வாங்கிவிட்டேன். இந்நூலை வாங்கும்  போது யாருடைய மொழிபெயர்ப்பை வாங்குவது என்று குழப்பம் ஏற்பட்டது. இலவசமாக இணையத்தில் கிடைக்கும் Constance Garnet மொழிபெயர்ப்பு மிகப் பழமையானது; படிக்க முடியாததும் கூட. அதற்கடுத்தபடியாக Louise and Aylmer Maude மொழியாக்கம் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. அதைப் படித்துப் பார்த்ததில் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அடுத்ததாக Richard Pevear and Larissa Volokhonsky மொழிபெயர்ப்பு தஸ்தயேவ்ஸ்கி நாவல்களுக்குப் பெயர்போனது. இருந்தும் டால்ஸ்டாயிக்கு அவர்களைவிட Marian Schwartz மொழியாக்கம் சரளமானது; அபாரமானது என்று பேசப்படுகிறது. எனவே நான் அதையே வாங்கியுள்ளேன். இந்தப் புத்தகம் வழியில் உள்ளது; இன்னும் வீடு வந்து சேரவில்லை.

இவான் துர்க்கனேவ் பெயரைக் கேள்விப்பட்டிருந்த போதும் அவர் நாவல்கள் எதையும் இதுவரை வாசித்ததில்லை. அவரின் Fathers and children எனும் ஆகச்சிறந்த நாவலைப் படிக்கும் ஆசை வெகுநாட்களாகவே எனக்கிருந்தது. அது தமிழில் எந்தக் காலத்தில் எப்போது கிடைக்கும் என்பது தெரியாத காரணத்தால் ஆங்கிலத்தில் படிக்கத் துணிந்து விட்டேன். ஆக அதையும் வாங்கியிருக்கிறேன்.

ஆசைப்பட்டு எல்லாவற்றையும் வாங்கியாயிற்று இனி படித்து முடிப்பது எப்போது?

Related Posts Plugin for WordPress, Blogger...