தமிழ் மொழிபெயர்ப்பு குறித்த சில சந்தேகங்கள்

சமீபமாக, தஸ்தயேவ்ஸ்கி மற்றும் டால்ஸ்டாய் இருவரின் நாவல்களை ஆங்கிலத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது என்னுள் பல சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவே இப்பதிவை எழுதுகிறேன். பலரும் தங்களின் மொழிபெயர்ப்பில் ஆங்கில வாக்கியங்களைத் துண்டுதுண்டாக வெட்டிவிடுவதைக் காணமுடிகிறது. பத்திகளையும் தங்கள் விருப்பம் போல பிரித்துக் கொள்கிறார்கள். மேலும் ஆங்கிலத்தில் இல்லாத வார்த்தைகள் சிலதை தங்களது தமிழ் வாக்கியங்களில் சேர்த்துக்கொள்கிறார்கள். எனவே ஆங்கிலத்தில் சொல்லும்போது சிறியதாக இருக்கும் வாக்கியங்கள் தமிழில் பெரிதாக நீண்டுவிடுகின்றன. இப்படிச் செய்தால்தான் தமிழில் மொழிபெயர்ப்பு சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எனக்கு.

உதாரணத்திற்கு டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவலை எடுத்துக் கொள்வோம். நாவலின் ஆங்கில வடிவம், நா.தர்மராஜனின் மொழிபெயர்ப்பு, அதைத்தொடர்ந்து நான் செய்த மொழியாக்கம் மூன்றையும் கீழே தந்திருக்கிறேன். வாசகர்கள் அதனை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆங்கில வடிவம்:

Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.

Everything was in confusion in the Oblonskys’ house. The wife had discovered that the husband was carrying on an intrigue with a French girl, who had been a governess in their family, and she had announced to her husband that she could not go on living in the same house with him. This position of affairs had now lasted three days, and not only the husband and wife themselves, but all the members of their family and household, were painfully conscious of it. Every person in the house felt that there was no sense in their living together, and that the stray people brought together by chance in any inn had more in common with one another than they, the members of the family and household of the Oblonskys. The wife did not leave her own room, the husband had not been at home for three days. The children ran wild all over the house; the English governess quarreled with the housekeeper, and wrote to a friend asking her to look out for a new situation for her; the man-cook had walked off the day before just at dinner time; the kitchen-maid, and the coachman had given warning.

நா.தர்மராஜன் மொழிபெயர்ப்பு:

மகிழ்ச்சியாக வாழும் எல்லாக் குடும்பங்களும் பார்ப்பதற்கு அநேகமாக ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன. ஆனால் துயரத்தில் தத்தளிக்கிற ஒவ்வொரு குடும்பமும் தனக்குரிய வழியில் துன்பப்படுகின்றன.

ஆப்லான்ஸ்கியின் வீட்டில் எல்லாம் நிலை குலைந்து போயிருந்தது. குழந்தைகளைக் கவனித்தக்கொள்ளவும், பாடங்களைச் சொல்லித் தரவும் இதற்கு முன்னால் நியமிக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆசிரியைக்கும், தன் கணவன் ஆப்லான்ஸ்கிக்கும் இடையே இருந்த கள்ள உறவை மனைவி கண்டு பிடித்து விட்டாள். இனியும் தொடர்ந்து இதே வீட்டில் ஆப்பலான்ஸ்கியுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று அவள் பிடிவாதமாகக் கூறிவிட்டாள். இவ்வாறாக ஆப்லான்ஸ்கி தம்பதிகளிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டன. கணவன் மனைவி மட்டுமின்றி குடும்பத்தினர் எல்லோருமே, வேலைக்காரர்களும் கூட இதனால் துன்பப்பட்டார்கள். துன்பத்தில் உழலும் தம்பதியினருக்கு, மனிதாபிமானத்தோடு, அவர்களது துன்பத்தை மாற்ற தங்களால் முடிந்த எதையேனும் உதவியைச் செய்ய இயலாமல், இந்தச் சூழலில், நாம் எல்லோரும் சேர்ந்து வாழ்வதில் எந்தவிதமான அர்த்தமுமில்லை; ஒரு விடுதியில் தற்செயலாகச் சந்தித்துக் கொள்ளும் மனிதர்கள் கூட தங்களைக் காட்டிலும் ஒற்றுமை உணர்ச்சியுடன் இருப்பார்கள் என்று அவர்கள் ஒவ்வொருவரும் நினைத்தார்கள்; வேதனையடைந்தார்கள்.

மனைவி வெளியே தலைகாட்டாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். கணவனோ அதிகாலையில் வீட்டைவிட்டு வெளியேறினான் என்றால் பகல் பொழுதுகள் முழுவதுமே வீட்டுப் பக்கம் வருவதில்லை. குழந்தைகளோ கேட்பார் எவருமின்றி இங்கும் அங்குமாக வீடு முழுதும் ஓடித் திரிந்து அமர்களப்படுத்திக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர புதிதாக நியமிக்கப்பட்டிருந்த ஆங்கிலேயப் பெண்ணும் கூட வீட்டு நிர்வாகியுடன் சண்டைப் போட்டு விட்டு, தனக்கு வேறு இடத்தில் வேலை தேடித் தருமாறு வேண்டி தனது நண்பனுக்கு கடிதம் எழுதி விட்டாள். முதல் நாள் மதிய உணவு சமைத்து விட்டுச் சாப்பிடும் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற சமையற்காரன் இதுவரை வீடு திரும்பவில்லை. சமையல் உதவியாளரான பெண்ணும் கோச்சு வண்டியோட்டியும் இனியும் தொடர்ந்து இந்த வீட்டில் வேலை செய்ய இயலாது என்று முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்துவிட்டனர்.

எனது மொழியாக்கம்:

மகிழ்ச்சியான குடும்பங்கள் ஓரே மாதிரியாக இருக்க; மகிழச்சியற்ற ஒவ்வொரு குடும்பமும் தனக்கேயான முறையில் மகிழ்ச்சியற்று இருக்கின்றன.

ஆப்லான்ஸ்கியின் வீட்டில் எல்லாமே குழப்பத்தில் இருந்தன. ஃப்ரெஞ்ச பெண்ணும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்ல நியமிக்கப்பட்ட ஆசிரியைக்கும் தன் கணவனுக்கும் இடையே இருந்த தொடர்பை மனைவி கண்டுபிடித்து, இனி தான் அவனோடு இந்த வீட்டில் சேர்ந்து வாழ முடியாது என்று கணவனிடம் சொல்லிவிட்டாள். இது நடந்து மூன்று நாட்களாகிவிட்ட நிலையில் கணவன் மனைவி மட்டுமல்ல, குடும்ப அங்கத்தினர்களும் வேலைக்காரர்களும் கூட இதை வேதனையுடன் உணர்ந்தனர். வீட்டிலுள்ள அனைவரும் இனி இவர்களுடன் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை, முன்பின் அறியாத நபர்கள் கூட உணவு விடுதி ஒன்றில் அசந்தர்ப்பமாக சந்திக்கும் போது தங்களைவிட ஒற்றுமையாக இருப்பார்கள், என ஆப்லான்ஸ்கியின் குடும்பத்தாரும், வேலையாட்களும் நினைத்தார்கள். மனைவி தன்னுடைய அறையைவிட்டு வெளியே வராமலிருக்க, கணவனோ மூன்று நாட்களாக வீட்டுப்பக்கமே தென்படவில்லை. குழந்தைகள் கட்டுப்பாடின்றி வீடு முழுதும் ஒடித்திரிய; ஆங்கில ஆசிரியை வீட்டு நிர்வாகியோடு சண்டையிட்டுக் கொண்டு, தன் நண்பனிடம் தனக்கு வேறு இடம் பார்க்க வேண்டி கடிதமும் எழுதிவிட; நேற்றைய தினம் இரவு உணவு நேரத்தில் சமயல்காரனும் போய்விட, சமயல்காரியும் வண்டியோட்டியும் தாங்களும் சென்றுவிடுவதாக எச்சரித்திருந்தனர்.

இரண்டே பத்திகள் உடைய இந்தப் பகுதியை நா.தர்மராஜன் மூன்று பத்தியாக பிரித்ததோடு, ஒரு வாக்கியத்தைப் பல வாக்கியங்களாக உடைத்திருக்கிறார். (படித்து முடிப்பதற்குள் ஆயாசம் மேலிடுகிறது) அத்தோடு மட்டுமில்லாமல் பல வார்த்தைகள் அவரால் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு மொழிபெயர்பாளன் என்பவன் தான் மொழியாக்கம் செய்யும் நூலின் படைப்பாளி அல்ல என்பதை உணர்ந்திருக்க வேண்டும். பத்திகளையும், வாக்கியங்களையும் தன் விருப்பம் போல பிரிக்கவும் உடைக்கவும் கூடாது என்பது என்னுடைய கருத்து. மொழியாக்கம் செய்பவர்கள் இந்த விசயத்தில் ஆழ்ந்த அக்கறையும் கவனமும் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன். நான் ஒரு மொழிபெயர்ப்பாளன் அல்ல இருந்தும் நான் மொழியாக்கம் செய்ததில் கூடிய வரை இவைகளைத் தவிர்த்திருக்கிறேன். இத்தனைக்கும் நான் மேம்போக்காகத் தான் தமிழாக்கம் செய்துள்ளேன். (இரண்டையும் படிக்கும் வாசகர்கள் தங்களுக்கு எது உவப்பானதாக இருக்கிறது என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்). எனக்கு இவைகள் முடியும்போது மொழிபெயர்ப்பாளர்களுக்கு இவைகள் ஏன் முடியக்கூடாது? அப்படிச் செய்யும் போதே நாம் தமிழாக்க நூல்களைப் படிப்பதில் அர்த்தமிருக்கும் இல்லையேல் அவற்றை ஆங்கிலத்திலேயே படித்து விடுவது சாலச் சிறந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...