கலை-இலக்கியம்-வாழ்க்கை: எஸ்.ராமகிருஷ்ணன்

தி இந்து சித்திரை மலர் 2015-ல் ஷங்கர்ராமசுப்ரமணியன், எஸ்.ராமகிருஷ்ணன் சந்திப்பில் ‘எளிய காதல் கதை எழுத முடியாது’ என்ற தலைப்பிலான நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அதிலிருந்து என்னைக் கவர்ந்த மூன்று விசயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


ஒன்று:
மனித மனம் துயரத்திலிருந்து விடுபடுவதற்கு ஏன் கலையை நாடுகிறது? தமிழ் நாவல்களுக்குள் செவ்வியல் கூறுகள் இருக்கின்றன. ஆனால் முழு செவ்வியல் பிரதியாக ஒரு படைப்பு உருவாகவே இல்லை. ஏனெனில் 20-ம் நூற்றாண்டு வாழ்க்கை அத்தனை முழுமைத்தன்மை உடையதாக இல்லை. சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையைச் சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் கலைஞன் சொல்ல முடியும்.
எதை நம்புகிறோமோ அதையே மறுக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்த நூற்றாண்டின் குரல் அதுதான். எதைச் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதைச் செய்யவே நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் வாழ்க்கை நெருக்கடியாக இருக்கிறது.
இந்த நூற்றாண்டில்தான் ஒரு மனிதனின் இருப்பைக் கிட்டத்தட்ட இயந்திரங்கள் இடம்பெயர்த்துள்ளன. ஒரு மனிதனிடம் பேசுவதற்கு நமக்குத் தொலைபேசி போதும். தொலைவு என்ற ஒன்றையே இது இல்லாமல் ஆக்கிவிட்டது. பிரிவைப் பாடித் தீர்த்த சங்க இலக்கிய காலத்தில் ஒரே ஒரு செல்போன் இருந்திருந்தால் போதும். இத்தனை பிரச்சினை இருந்திருக்காது.
அதனால்தான் இதிகாசங்கள் இன்று சாத்தியம் இல்லை. இதிகாசங்கள் எல்லாம் பிரிவுகளையும், மனித துக்கங்களையும், அதற்கான காரணங்களையும், ஒன்று சேர்த்தலையும் பேசுபவைதான். 
இரண்டு:
ஒரு புத்தகத்தையோ, நாவலையோ படிக்கும்போது ஒரு வாசிப்புமுறை பொதுவாகக் கைக்கொள்ளப்படுகிறது. அதை வாசிக்கும் மனம் சுருக்கிக்கொண்டே இருக்கிறது. முழுமையாக அதைச் சுருக்க முடிந்துவிட்டால் நல்ல புத்தகம் என்று கருதப்படுகிறது. சுருக்க முடியாவிட்டால் நல்ல புஸ்தகம் இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது.
ஒரு படைப்பு என்பது கடற்பஞ்சு மாதிரி. அதை வாசிக்கிற வாசகனுக்குச் சுருங்கியது போன்ற தோற்றத்தைத் தருகிறதே தவிர அது சுருங்காது. திரும்ப அது தனது விஸ்தீரணத்துக்குள் போய்விடும். ஒரு நாவலையோ, படைப்பையோ திரும்பத் திரும்ப நினைவில் வாசிக்கிற வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் தன்னைத் திறந்த காட்டுகிற ஒன்றாகத்தான் சிறந்த படைப்புகள் இருக்கின்றன. வெறுமனே படித்து, கொண்டாடித் தூக்கிப் போடறதுக்கு மட்டுமே ஒரு நாவல் எழுதப்படவில்லை. சொல் இல்லாத உறைந்த நிலையில் இருக்கிற அனுபவங்களை இலக்கியங்கள் வைத்துள்ளன. அதை வாசிப்பதுதான் அவசியமானது. இருப்பு பாதிப்பது மாதிரியே இன்மையும் நல்ல வாசகனை பாதிக்கும். 
மூன்று:
எனது வாழ்க்கை அனுபவங்கள் கொடுத்த அளவு ஞானத்தை நான் படித்த புத்தகங்கள் கொடுத்திருக்கின்றன. எனது காலம், சமூகம், நான் வாழும் உலகம் எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ளப் புத்தகங்களே உதவியிருக்கின்றன. ஒரு புது எழுத்தாளனை, அவன் எந்த நூற்றாண்டிலோ, எந்த மூலையிலோ வாழுபவனாகவோ வாழ்ந்தவனாகவோ இருக்கலாம். அவனுடைய நூல் வழியாக கைக்குலுக்க முடிவது எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுப்பது.
ஒரு புத்தகம் மூலமாக இன்னொரு வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஒரு எழுத்து ஒரு வாசகனை இரு வாழ்க்கைகளை வாழ வைக்கிறது. சொந்த வாழ்க்கை அலுப்பாக இருந்தால் ஒரு புத்தகத்தின் மூலம் இன்னொரு வாழ்க்கைக்குள் நுழைந்துவிட முடியும். இந்த உலகத்தின் மிக அபூர்வமான பொருள் என்னவெனில் அது புத்தகம்தான். அன்றாடத் தளத்தை மொழியில் கடப்பவன்தான் இலக்கியவாதியாகவே அடையாளம் காணப்படுவான்.
நன்றி: தி இந்து

Related Posts Plugin for WordPress, Blogger...