April 17, 2015

சாரு நிவேதிதாவின் புதிய எக்ஸைல்-5: ஒரே விடியல்!

இதுவரையான அஞ்சலியின் கதையைக்கூட பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் காட்டேரி, பில்லி சூன்யம், மாந்த்ரீகம் என செல்லும் அஞ்சலியின் கதை ‘என்ன இழவுடா இது?’ என்று தோன்றிவிடுகிறது. தனது நாவலைப் பற்றிச் சொல்லும் சாரு, “இதை வாசிக்காது போனால் உங்கள் இருப்பை உணரும் அனுபவத்தை இழக்கிறீர்கள் என்று பொருள். உங்களை மட்டுமே உணரும் ஒருவித மோனநிலை அது. அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயல்வதை விட ஆத்மார்த்தத்தை உணர முயற்சியுங்கள். மிகமிகச் சுதாரிப்புடன், உங்கள் கவனத்தை ஒரு புள்ளியில் குவிக்கும் மாயம் இதில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது” என்கிறார். அந்த மாயம் அஞ்சலியைத் துன்புறுத்த திவாகர் செய்யும் மாந்த்ரீகம்தான் போலும்! அது என்ன மோனநிலையோ ஆத்மார்த்தமோ கடவுளுக்கே வெளிச்சம்!. (ஒருவர் தன் இருப்பை உணர்வதற்கு அல்ல மாறாக இருப்பைத் தொலைப்பதற்கு வேண்டுமானால் புதிய எக்ஸைல் மிகவும் உதவக்கூடும்!  -கும்மாங்கோ).

உதயாவின் நண்பர் ஒருவர் ரயிலில் பயணிக்கும் போது, தன்னுடைய பெர்த் எண்ணை மறந்துவிட்டு, ‘வாட் ஈஸ் யுவர் டேட் ஃஆப் பர்த்?’ என்று கேட்டதாகச் சொல்லும் மொக்கை ஜோக் நாவலில் இரண்டு இடங்களில் வருகிறது. (அது சரி! நேற்று காலையில் சாப்பிட்டதற்காக இன்று காலையில் சாப்பிடாமல் இருக்கிறோமா என்ன? -கும்மாங்கோ). அதுமட்டுமில்லாது நாவலின் பல விசயங்கள் திரும்பத் திரும்ப வருவதாகவும், நாவல் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நின்று சுழல்வதாகவும் பிரமை ஏற்படுகிறது. பெண்கள் அணியும் உள்ளாடடைகள் பற்றிய உதயாவின் குறிப்புகள் என்னவொரு ஆராய்ச்சி என்று நம்மைப் புல்லரிக்க வைக்கிறது! அவ்வப்போது சித்தர் பாடல்களைச் சொல்லிவிட்டு உதயா மீண்டும் மீண்டும் அஞ்சலியிடம் ஓடிவிடுவதும், அவள் சொல்லும் அபத்தக் கதையைக் கேட்பதும் செம எரிச்சல்! (அந்த எரிச்சலுக்கும் எந்தப் பக்கத்திலாவது மருந்து மாயம் இருக்கும் -கும்மாங்கோ).

பெங்களுர் விஞ்ஞானக் கழக மாணவர்களின் சந்திப்பில் நிகழும் வாந்தியைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வரும் வாந்தியின் சம்பவங்களைப் படிக்கப் படிக்க நமக்கு பேதி கிளம்புகிறது! இத்தனையும் படித்துவிட்டு ஐயப்பனுக்கு மாலை போடுவது, பக்திப் பரவசத்தோடு கோயிலுக்குப் போவது, பதினெட்டாம் படியோடு பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை ஒப்பிடுவது ஆகியவற்றைப் படிக்க நேர்கிறது. (எல்லாத்துக்கும் பிரயாச்சித்தம் போல! -கும்மாங்கோ). கொக்கரக்கோவின் வாழ்வின் சம்பவங்களை விவரிக்கும் பகுதி அலாதியானது. நமக்கு நகையும் உவகையும் தரும் கதை அது. நாவல் ஒரு வழியாக முடிந்துவிடும் என்று நினைக்கும் போது இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது! இதுவரை சொல்லப்பட்ட பல்வேறு விசயங்களையே வெவ்வேறு சம்பவங்களுடன் மீண்டும் படிக்க நேர்வது பெரும் ஆயாசத்தைத் தருகிறது. அதன் பிறகு முத்தாய்ப்பாக மூன்றாம் பாகம் வருகிறது. இருபது பக்கங்கள் உள்ள இதில் மீண்டும் மாடுகள், மீன்கள், நாய்கள், மரங்கள் பற்றிச் சொல்லி மீன்கள் மற்றும் அஞ்சலி வீட்டு மரம் இரண்டின் மரணத்தோடும், உதயா, அஞ்சலி இருவரின் சோகத்தோடும் நாவல் முடிவடைகிறது. (உஸ்!... அப்பாடா...! -கும்மாங்கோ).


தினசரி நாம் பார்க்கும், கேட்கும், பேசும், சந்திக்கும், செய்யும் அனைத்தையும் பற்றிய பதிவுதான் புதிய எக்ஸைல். ஒரு மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளை, சிக்கல்களைச் சொல்வதோடு அவனது ஆசைகள், அபிலாஷைகள், அச்சங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், தடுமாற்றங்கள், வக்கிரங்கள், கோபதாபங்கள் அனைத்தையும் நாவல் பேசுகிறது. டூத் ஃபிரஸ் மற்றும் கொசுவர்த்தி இரண்டும் விடுபட்டுவிட்டதாக அறிகிறேன். (தான் எழுதப்போகும் அடுத்த நாவலில் கட்டாயம் சாரு அவற்றைச் சேர்த்துவிடுவார் -கும்மாங்கோ). இருந்தும் ஏனோ அவைகள் நம்மில் போதுமான தாக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்டோ ஃபிக்ஸன் என்ற நாவலின் வடிவம் அனைத்தையும் வெறும் செய்தியாக மட்டுமே உள்வாங்க நம் மூளைக்குத் துணை செய்கிறது.

ஒரு நாவல் என்ற வகையில் புதிய எக்ஸைல் என்னைக் கவரவில்லை. ஒன்றிலிருந்து மன்றொன்றாக ஆரம்பித்து கிளை பரப்பிச் செல்லும் கதைகூறல் பாணி ஆரம்பத்தில் சுவாரஸ்யத்தைக் கொடுப்பினும் அதுவே நாவல் நெடுக வரும்போது திகட்டி விடுகிறது. நாவலின் பக்கங்களை கணிசமாகக் குறைந்திருந்தாலாவது நாவல் செறிவாக, அடர்த்தியாக இருந்திருக்கும் என்பதோடு நாவலின் பல்வேறு குறைகளும் நிவர்த்தியாகியிருக்கும். அவரது நாவல்கள் அனைத்தும் ஒரே கார்பன் பிரதியாகவே காட்சி தருகிறது. ஆக, ஒரே மாவையே தோசை, இட்லி, பனியாரம் என்று பரிமாறுவதில் என்ன இருக்கிறது? 

“நமது மூளைக்கு சிக்கலில் சிக்கிக்கொண்டு மீள வகை தெரியாமல் தவிக்கப் பிடிக்கும். நாம் விரும்பினால் மட்டுமே கை, கால் விரல்களைக் கூட அசைக்கிறோம். அதைப் போலவே மூளையையும் நாம் விரும்பும் சமயம் மட்டுமே சிந்திக்க அனுமதிக்க வேண்டும். ‘புதிய எக்ஸைல்’ பழம்பெருமை பேசுவதில்லை. நம் வாழ்க்கையின் அப்பட்டமான பிரதி. பாசாங்கை உதறி, பல அபூர்வங்களைச் சாத்தியப்படுத்தும் படைப்பு. உத்திகளுக்காக அல்ல, உண்மைக்கான தரிசனத்தை விரும்பினால், ‘புதிய எக்ஸைல்’தான் ஒரே விடியல்!’’ என்று தன் நாவலைப் பற்றிச் சொல்கிறார் சாரு நிவேதிதா. (எல்லா வியாதிகளுக்கும் இந்த ஒரே லேகியம் போதும் போல -கும்மாங்கோ).

இருப்பதை அப்பட்டமாகச் சொன்னால் வாந்திதான் எடுக்க முடியும். குறிப்பாக அஞ்சலியுன் உதயா புரியும் காதல் மற்றும் காம லீலைகள் அப்படியானவை. எனவேதான் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. (அவற்றைச் சொன்னால் வாந்தி நிச்சயம்! -கும்மாங்கோ). தன்னைத் திறக்கிறேன் என்று ஒவ்வொரு மனிதனும் திறந்துகொண்டே போனால் அவன் கீழே கீழே என்று கீழானவற்குத்தான் செல்ல முடியும். அப்படிச் செல்லும்போது அதுவே எல்லா மனிதர்களின் இயல்பு என்றும் சாசுவதம் என்றும் பலரும் அதையே பற்றிக்கொண்டு, பின்பற்றும் ஆபத்தும் நிறைந்திருக்கிறது. எப்போதும் நாம் மேலானவற்றிற்கே திறப்பாக இருக்க வேண்டும் என்பார் ஓஷோ. எனவே நாம் எப்போதும் மேல்நோக்கியே பயணப்பட வேண்டுமே ஒழிய கீழ்நோக்கி அல்ல.

மேலும் அப்பட்டமானவற்றைச் சொல்வது மட்டும் போதுமானதா என்ன? உண்மைக்கான தரிசனம் என்பது எல்லாவற்றையும் திறந்து காட்டுவதில் மட்டுமல்ல மறைப்பதிலும் இருக்கிறது. இருப்பதை அப்பட்டமாகச் சொல்வதற்கு எழுத்தாளன் எதற்கு? பத்திரிக்கைகள், நாளேடுகள், ஆபாசப் புத்தகங்கள், சமையல் குறிப்புப் புத்தகங்கள் என்று பலவும் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்துக் கொடுப்பதில் ஒரு எழுத்தாளனின் சாதனை என்ன இருக்கிறது? மேலும் அவனது மதிப்புமிக்க சொந்த அனுபவங்களும் இதனுடன் சேர்வதால் நீர்த்துப்போகின்றன. ஆனால் அவற்றையே செய்நேர்த்தியுடன், மன எழுச்சியும் மன நெகிழ்ச்சியும் கூடும் விதமாக வழங்குவதில்தான் எழுத்தாளனின் ஆற்றலும் அவனுக்கான சாகசமும் உள்ளடங்கி இருக்கிறது. அதிலிருந்தே வாசகன் தன்னையும் வாழ்க்கை குறித்த மேலான தரிசனத்தையும் அடைய முடியும்.

(முற்றும்).

1. எல்லா உயிரும் ஓருயிரே!
2. உதயாவின் புலம்பல்கள்
3. உதயாவின் வெளிநாட்டுப் பயணமும் உள்நாட்டு அனுபவமும்
4. நாகூரும் தில்லியும்


Related Posts Plugin for WordPress, Blogger...