April 15, 2015

சாரு நிவேதிதாவின் புதிய எக்ஸைல்-4: நாகூரும் தில்லியும்

அடுத்ததாக வரும் நூறு பக்கங்கள் கொண்ட இந்நாவலின் பகுதியை நீங்கள் தாரளமாக நீளத் தாண்டுதல் செய்யலாம். (இந்நாவலைப் படிக்கும் பலரும் நீளத் தாண்டுதல் உயரத் தாண்டுதல் இரண்டிலும் தேர்ந்த நிபுணராகலாம்! உயரத் தாண்டுதல் என்பது பத்திகளையும், நீளத் தாண்டுதல் என்பது பக்கங்களையும் குறிக்கும்!). இருந்தாலும் மனம் கேட்காமல், ‘படி படி’ என்கிறது. படிக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் பெரும் அவஸ்தை! என்னதான் இருக்கிறது? என அறியும் ஆவலுடன் படித்து முடித்த பிறகு, மனம் அலுப்பும் சலிப்பும் கொள்கிறது. இந்தப் பகுதிகளின் அவசியம் என்ன என்பது என்னுடைய சிற்றறிவுக்கு எட்டவில்லை. (சாருவுக்கே வெளிச்சம்!)

உதயா சிறு வயதில் வாழ்ந்த நாகூர் பற்றிய சாருவின் சித்தரிப்புகள் படிக்கும்படி இருக்கின்றன. சிவா, சந்திரன், விஜயன் ஆகிய பள்ளித் தோழர்களைப் பற்றியும், தனது காமாட்சி பெரியம்மா பற்றியும் சொல்லும் இப்பகுதிகள் இந்நாவலில் கதை என்ற அம்சத்தைத் தொட்டுச் செல்கின்றன. தவறாமல் இடையிடையே அஞ்சலியின் கதையும் வந்துபோகிறது. காலத்துக்கும் வெளிக்குமான தொடர்பு என்னவென்று நாகூரை வைத்தே புரிந்தது என்று உதயா சொல்வது குறிப்பிடும்படி இருக்கிறது. அவனுடைய பள்ளிப் பருவத்தில் பிரம்மாண்டமாக தெரிந்த நாகூர் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு சாதாரண குக்கிராமத்தை போலவே தோற்றம் தருவது இந்தக் கால-வெளி தொடர்பினால்தான். ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த இருப்பிடத்தை பலவருடங்கள் இடைவெளியில் மீண்டும் பார்க்கும்போது இதே உணர்வை அடையமுடியும்.

தாவர சங்கமம் என்ற பகுதி மரங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. சங்க இலக்கியப் பாடல்களோடு வரும் இதை ரசித்துப் படிக்க முடியும். அந்த மரங்களின் நிழல்களை மனிதர்கள் பொறுப்பற்றும், அலட்சியமாகவும் குப்பை மேடாக ஆக்கும் போது வெளிப்படும் உதயாவின் கோபம் அதீதமானது; அவசியமானதும் கூட. அதைப் படிக்கும் நமக்கும் நம் வீட்டருகில் பலர் செய்யும் அக்கிரமங்கள் நினைவில் வந்துபோகிறது. இதைத் தொடர்ந்து வரும் ஹிந்தி சினிமா பற்றிய பகுதி, தங்கள் இளமைப் பருவத்தில் ஹிந்தி சினிமா மீது மோகம் கொண்டு அலைந்தவர்களுக்கு சுவாரஸ்யமானதாக இருக்கும் பிறர் அவற்றை ஹிந்தி சினிமா பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரையாக வாசிக்கலாம்.

இந்நாவலின் ஆகச்சிறந்த புனைவின் பகுதியாக உதயாவின் தில்லி நாட்குறிப்புகளைச் சொல்லலாம். மனிதர்கள் மற்றும் மனித வாழ்க்கையின் விநோதங்களை, புதிர்களை இப்பகுதி சித்தரிக்கிறது. கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த மனிதர்கள் பிற (கலாச்சார) மனிதர்களை எப்படி அணுகுகிறார்கள் நடத்துகிறார்கள் என்பதை இப்பகுதி நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவின் ஒரு மாநிலத்தவர் அடுத்த மாநிலத்தில் சென்று வாழ்வது மிகப்பெரிய சவால்தான் என்பதையும் புரியவைக்கிறது. அத்தோடு அரசாங்க அலுவலகங்கள் செயல்படும் விதம் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. உதயா தான் வாசித்த நூல்கள் பற்றிச் சொல்லும் குறிப்புகள் நமக்கும் உபயோகமாக இருக்கின்றன. தில்லியின் பல்வேறு இடங்கள் பற்றிய சித்தரிப்புகள் நம்மையும் அங்கங்கே அழைத்துச் செல்கின்றன. தாளிச்சா என்ற உணவு தயாரிக்கும் செய்முறை விளக்கம் நம்முடைய நாக்கில் சுவையையும், நாசியில் வாசனையையும் ஏற்றுகிறது. நாட்டைக் காக்கும் பொருட்டு தன் உயிரைவிட்ட சீக்கிய ராணுவ வீரரின் கதையும், இந்திரா காந்தி சுடப்பட்டபோது, கொன்று குவிக்கப்பட்ட எண்ணற்ற சீக்கியர்களின் கதையும் மிகப்பெரிய முரண்நகையாக இப்பகுதியில் வெளிப்படுகிறது. அப்போது நடந்த கலவரத்தின் ஒரு பகுதியை சாருவின் எழுத்துக்கள் அற்புதமாக நம் கண்முன் திரைக்காட்சியென காட்சிப்படுத்துகிறது.

நாவலின் இப்பகுதிகளை தடங்களின்றியும், சுவாரஸ்யமாகவும் படிக்க முடிவது ஒர் அனுகூலம். பிலாய் என்ற வேலைக்காரனுடன் மோதி அவன் கையைச் சாய்த்துவிட்டதாக உதயா சொல்வதில் தொடங்கும் இப்பகுதி எங்கெங்கோ பயணித்து அவனது தில்லி வாழ்க்கை அனுபவங்களைச் சரளமாகச் சொல்லிச் செல்கிறது. சாரு என்ற எழுத்தாளனை இப்பகுதிலேயே காணமுடிகிறது என்றால் அது மிகையல்ல. இந்நாவலை வேறெங்கும் விட இந்தப் பகுதியிலிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. அப்படிச் செய்திருந்தால் நாவலின் அமைப்பும் வடிவமும் இன்னும் மேம்பட்டிருக்கும்; மாறுபட்டிருக்கும். இது என் அனுமானம்.

சாரு நிவேதிதா இந்நாவல் பற்றிச்  சொல்வது:

‘‘எழுதப் படிக்கக் கற்றிருந்தாலும், 300 வருஷத்துக்கு மேல் நாம் இங்கிலீஷ்காரனுக்கு அடிமையாக இருந்துவிட்டோம். விளைவு, அதே அடிமை மனோபாவமே நம்மிடம் வளர்ந்துவிட்டது. அது இன்னமும் நம்மை விட்டபாடில்லை. உடன்கட்டை ஏறுதல் உட்பட காட்டுமிராண்டித்தனம் ஏகப்பட்டதை நாம்தான் கடைப்பிடித்தோம். 

தமிழ் ஞான மரபை உள்ளே போய்ப் பார்த்தால் ஆச்சரியம் மேலிடுகிறது. போகர் முதலான சித்தர்கள் தகரத்தை தங்கமாக்கியிருக்கிறார்கள், நீரில் நடந்திருக்கிறார்கள், பஞ்ச பூதங்களை ஆட்டிப் படைத்திருக்கிறார்கள். வள்ளலார் ஜோதியில் சென்று மறைந்தார் என்பது பொய்யில்லை... எல்லாமே சாத்தியம்தான். ஆனால், நாம் சிங்கப்பூர், அரபு நாடுகளுக்குப் போய் அடிமைத் தொழில் செய்து பொருளீட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானோம். 

இன்றைய தமிழ் எப்படியிருக்கிறது..? 5000 வருடத்து பழைய தமிழ் வரலாறு தான் என்ன? இதையெல்லாம் எழுதத் துணிந்தேன். கடம்ப மரத்தை வீட்டிலே வைத்து மூன்று வருஷமாக வழிபட்டேன். எல்லா வகையான சோதனையும் என் உடம்பிலேயே செய்து பார்த்தேன். என்னுடைய மூன்று வருட விடாத உழைப்பின் பலன்தான் ‘புதிய எக்ஸைல்’.

மிகச் சிறந்த படைப்பாக என்னையே இதில் விதைத்திருக்கிறேன். ஆதி முதல் இன்று வரை யாரும் பயன்படுத்த முடியாத புதிய நடையில் எழுதியிருக்கிறேன். நிறையவும் Flow of Thoughts-தான். அதில்தான் ஆழமான உண்மை இருக்கும். 

இவ்வளவு பக்கம் எழுதுவேன் என்று நினைக்கவேயில்லை. எல்லாமே சத்தியம். தொன்று தொட்டு இப்போதுவரை நாவல் நீண்டுகொண்டே போகிறது. அழகான அனுபவத்திற்கு, நேர்த்திக்கு, வாசிப்பு அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

(தொடரும்...)

1. எல்லா உயிரும் ஓருயிரே!
2. உதயாவின் புலம்பல்கள்
3. உதயாவின் வெளிநாட்டுப் பயணமும் உள்நாட்டு அனுபவமும்
5. ஒரே விடியல்!


Related Posts Plugin for WordPress, Blogger...