April 11, 2015

சாரு நிவேதிதாவின் புதிய எக்ஸைல்-3: உதயாவின் வெளிநாட்டுப் பயணமும் உள்நாட்டு அனுபவமும்

அடுத்தடுத்து பாரீஸ், ஜெர்மன் என்று உதயா பல வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்கிறான். அவை அனைத்தையும் பயணக்கதையாக, கட்டுரையாக நாம் படித்து இன்புறலாம். குறிப்பாக எட்வர்ட் என்ற இலங்கைத் தமிழனின் கதை, அனைத்து இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வைப் படம்பிடிக்கிறது. பாரீஸில் ஒரதூர் என்னுமிடத்தில் ஹிட்லரின் நாஜிப்படையினர் அழித்த கிராமம் ஒன்று இன்றும் அப்படியே இருப்பதாகச் சொல்வது நம் மனதில் அபரிமிதமான கற்பனையை விரிக்கிறது. உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாம் மாறுதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன. அந்த மாற்றத்தினூடே 1944-ல் மாறாமல் நிற்கும், திரைக் காட்சியின் ஒரு பகுதி மட்டும் ஸ்தம்பித்து நிற்பது போல நிற்கும் கிராமத்தை, கற்பனை செய்வது அலாதியான உணர்வைக் கொடுக்கக்கூடியது.

“ஒரதூரைப் பார்த்த போது இந்தியர்கள் கற்சிலைகளை வணங்குவதைப் போல் ஐரோப்பியர்கள் வரலாற்றை வணங்குகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. வரலாற்றை அழித்துப் போட்டு விட்டு மேலும் மேலும் அதே மாதிரியான வரலாற்றை உருவாக்காமல் ஐரோப்பியர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் இந்தியர்கள் வரலாற்றின் சுவடுகளை முற்றாக அழித்து விட்டு மீண்டும் மீண்டும் அதே வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அந்த அழிந்துபட்ட கிராமத்தைப் பற்றி உதயா குறிப்பிடுவது கவனிக்கவும் யோசிக்கவும் தக்கது.

எழுத்தால் சர்வதேசப் புகழ் அடையவேண்டும் என்பதே உதயாவின் ஆசையாக இருக்கிறது. அந்நிலையில் கணினியில் தன்னோடு செக்ஸ் சாட் செய்து, தன்னை ஆபாசமாகப் பேசினான் உதயா என்பதாக ஒரு பெண்ணின் புகார் வெளியாகிறது. அது எல்லோருக்கும் தெரியும்படியாக பத்திரிக்கைச் செய்தியாகவும், போலீஸ் கேஸாகவும் ஆகிறது. இதைப் பற்றி உதயா சொல்வது: “மற்ற நாடுகளில் ஒரு transgressive எழுத்தாளனை தண்டிக்க வேண்டும் என்றால் அவனை சிறையில் தள்ளுவார்கள்; அல்லது, நாடு கடத்துவார்கள். அதை அந்த அரசாங்கம்தான் செய்யும். மற்றபடி சமூகமும், புத்திஜீவிகளும், பத்திரிக்கைகளும் அவனுக்கு ஆதரவாகவே இருக்கும். அங்கே அவன் ஒரு எழுத்தாளன் என்ற முறையில்தான் சிறைக்குச் செல்வான். ஆனால் தமிழ்நாட்டில் அந்த எழுத்தாளனை ஒரு குழந்தையைக் கற்பழித்தான் என்று குற்றம் சாட்டி ஜெயிலில் போடுவார்கள். தினந்தோறும் கற்பழிப்புகளால் ஏராளமான பெண்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் குழந்தையைக் கற்பழித்தான் என்று ‘சாட்சியோடு’ சொன்னால் சமூகமே அவனைக் கல்லால் அடித்துக் கொன்று விடாதா? இந்த நாட்டில் அரசாங்கத்திடமிருந்தாவது பாதுகாப்பு கிடைக்கும்; சமூகத்திலிருந்து கிடைக்கவே கிடைக்காது. பத்திரிக்கையிலேயே குற்றம் சாட்டி, பத்திரிக்கையிலேயே விசாரணை செய்து, பத்திரிக்கையிலேயே தண்டனையும் கொடுத்து விடுவார்கள். எழுத்தாளனிடம் ஹலோ சொல்ல வந்த ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த செக்ஸ் ஸைக்கோ என்று நிரூபணம் கொடுப்பார்கள்.” 

அன்பே சிவம் படத்தில் ரயிலில் திருடும் ஒருவன் பிடிபடும்போது, ‘போலீஸைக் கூப்பிடு’ என்றுவிட்டு அவனே ‘போலீஸ்! போலீஸ்!’ என்று கத்துவது நினைவிற்கு வருகிறது. அண்மையில் பெருமாள் முருகனுக்கு நேர்ந்ததை நினைத்துப் பார்த்தால் உதயா சொல்வது எவ்வளவு உண்மை என்று தெரியும். ‘ஹாய்’ என்று தொடங்கி, நட்பாக மலர்ந்து, கடைசியில் ‘வர்றியா?’ என ஆபாசத்தில் முடிவதாகவே பெண்களுடன் மேற்கொள்ளும் சாட் இருப்பதால் தனது வாசகனும் நண்பனுமான கொக்கரக்கோ தரும் உரையாடல் வடிவத்தை அனைவரும் மேற்கொள்வது நலம் என்கிறான். நம்மில் புன்னகையை வரவழைக்கும் அந்த நக்கல் சாட் சுவாரஸ்யமானதும் ரசிக்கத்தக்கதுமாகும். அதிலிருந்து சில:

பெண்: ஹாய்
மிஸ்டர் அறச் சீற்றம்: ஹாய்

பெண்: எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்.
மிஸ்டர் அறச் சீற்றம்: நன்றி. என் மனைவி பெயர் மல்லிகா. அவள் செல் நம்பர் 98900 69699. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களின் வயது 13 – 9.

பெண்: நான் உங்களின் தீவிர விசிறி
மிஸ்டர் அறச் சீற்றம்: நன்றி. என் மனைவியும் என்னுடைய தீவிர விசிறி. என் மகளும் என்னுடைய தீவிர விசிறி.

பெண்: உங்கள் எழுத்து எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். உங்க புக்ஸ் எல்லாம் எங்கே கிடைக்கும்?
மிஸ்டர் அறச் சீற்றம்: நன்றி. புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

பெண்: நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க….
மிஸ்டர் அறச் சீற்றம்: நன்றி. என் மனைவியும் அழகாக இருப்பாள்.

பெண்: உங்க ஃபோன் நம்பர் ப்ளீஸ்…
மிஸ்டர் அறச் சீற்றம்: என் மனைவிக்கும் எனக்கும் ஒரே நம்பர்தான். உங்களுக்கு நம்பர் இருந்தால் தயவுசெய்து சாட்டில் தெரிவிக்க வேண்டாம். உங்களுக்கு 57 வயது ஆனபின் தெரிவித்தால் போதும்.

பெண்: என் பெயர் என்ன தெரியுமா?
மிஸ்டர் அறச் சீற்றம்: சேசே… நான் எல்லோரையும் விசிறி எண் 1, விசிறி எண் 2 என்றுதான் அழைப்பேன். உங்கள் விசிறி எண் 69.

பெண்: நாம் நேரில் சந்திக்கலாமா?
மிஸ்டர் அறச் சீற்றம்: உங்களுக்கு 60 வயசு ஆன பின் பார்க்கலாம்.

பெண்: நீங்கள் ஏதாவது கேளுங்கள்?
மிஸ்டர் அறச் சீற்றம்: உனக்கு நெட் கனெக்ஷன் எப்படிக் கிடைத்தது? இனிமேல் ப்ரௌசிங் செய்யாதே… கெட்டுப் போய்டுவே….
பெண்: ???

மிஸ்டர் அறச் சீற்றம்: அப்பா அம்மா கிட்ட நல்ல பேர் வாங்கணும். என்னா?
பெண்: ???

மிஸ்டர் அறச் சீற்றம்: அண்ணனை எதிர்த்துப் பேசக்கூடாது. சிக்னலை மதித்து நடக்க வேண்டும்…
பெண்: ???

இது போதாவென்று ஜிம்கா சாமியாரும், நடிகையும் கட்டிப் புரண்டதை பத்திரிக்கையில் எழுதப்போக உதயாவின் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்படுகிறது. சாமியார்கள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்துகொண்டு எவ்வளவு வல்லமை மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்தப் பகுதி சொல்கிறது. கோர்ட் கேஸ் என்று அல்லாடுகிறான். இதனிடையே தனக்கு வாய்த்த (வாய்க்காத) டிரைவர்கள் பற்றி ஒரு பெரும் புலம்பலைப் புலம்பித் தீர்க்கிறான். பிச்சாவாரம், பெங்களுர், எப்பநாடு என்று வாசகர்களுடன் நடக்கும் சந்திப்பும், அங்கு நடக்கும் குடியும் கூத்தும் பற்றி விலாவாரியாகப் பேசுகிறான். (இளநீர் புட்டிங் செய்வதற்குத் தேவைப்படும் பொருள்கள் மற்றம் அதன் செய்முறை விளக்கமும் அதில் அடங்கும்!). இத்தனைக்கும் இடையே அவன் அஞ்சலியோடு கொள்ளும் காதலும் சல்லாபமும் நிறைந்த அலுப்பும் சலிப்பும் மிக்க கதை ஓயாமல் வந்துகொண்டிருக்கிறது!

(தொடரும்...)
Related Posts Plugin for WordPress, Blogger...