April 8, 2015

சாரு நிவேதிதாவின் புதிய எக்ஸைல்-2: உதயாவின் புலம்பல்கள்

உதயாவிற்கு பொதுஜனம், வாசகன், சக எழுத்தாளர் ஆகியோர் மீது அளவற்ற கோபம். அவர்களின் புரிந்துகொள்ளாத் தன்மையின் மீதும், நடவடிக்கைகளின் மீதும்தான் இந்தக் கோபம். எனவே அவர்களை ஒரு பிடிபிடித்து விடுகிறான். எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்ட அவனுக்கு மனிதர்கள் மீது இவ்வளவு வஞ்சம் ஏனோ? ஆறறிவுள்ள உயிரினங்களைவிட ஐந்தறிவுள்ள உயிரனங்களோடு இயைந்திருப்பது அவனுக்கு இன்பமாக இருக்கிறது. எனவே மனிதர்களிடமிருந்து அவன் ஒதுங்கியே இருக்கிறான். இன்றைய பள்ளிகளில் குழந்தைகள் படும் பாடு அவனை இம்சிக்கவே அதைப் பற்றியும் புலம்பித் தீர்க்கிறான்.

தமிழ் இலக்கியம் மற்ற உலக இலக்கியங்களைப் போல அறியப்படாமல் இருப்பதும், முக்கிய எழுத்தாளர்கள் பலரை நாம் மறந்துவிட்டதையும் எண்ணி அவன் வருந்துகிறான். எனவே தமிழ் நாட்டில் எழுத்தாளனாக இருப்பது உதயனுக்கு பெரும் சிக்கலாக இருக்கிறது. தமிழில் எழுதுவது போல துரதிருஷ்டம் வேறெதுவும் இல்லை என்பது அவன் எண்ணம். மொத்தத்தில் இந்த நாட்டில் வாழ விரும்பவில்லை என்பதே அவன் புலம்பல்களின் சாராம்சம். மனிதர்களின் அறியாமை, புரியாமை, இயலாமை ஆகியவற்றின் மீதே அவன் புலம்பல்களும் வருத்தமும் நிரம்பியிருக்கின்றன.

அடுத்ததாக அவனுக்கு மிகவும் பிடிக்காதவர்கள் சாமியார்கள். இன்று சாமியார் என்ற வார்த்தை மறைந்து சத்குரு என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப் படுகிறது. குஷால்தாஸ் என்ற சத்குருவின் மீது அவன் கொண்டிருக்கும் அபிப்ராயங்கள் மூலமாக அனைத்துச் சத்குருக்களின் மீதும், அவர்களின் அமைப்பின் மீதும் அவன் கோபம் வெளிப்படுகிறது. இன்று நாட்டிலிருக்கும் எல்லா சத்குருக்களும் ஓஷோவின் கார்பன் பிரதிகளே என்று கருதுகிறான். இன்றைய ஆன்மிகத்திற்கும் ஃபாஸ்ட் ஃபுட்டிற்கும் அதிக வித்தியாசமில்லை என்பது அவன் கருத்து. ஆன்மிகம் முதல் இலக்கியம் வரை எல்லாமே நிறுவனமாகிவிட்டிருக்கும் அவலம் அவனை வாட்டுகிறது.

மலேசியா சிங்கப்பூர், சிலேயில் பாப்லோ நெரூதா வாழ்ந்த வீடு, கூபாவில் ஹெமிங்வே குடித்த பார், பெரூவில் மரியோ பர்க்ஸ் யோசா எழுதியிருக்கும் இடங்கள் என பலவற்றையும் பார்க்கும் ஆசை உதயாவிற்கு. அவன் அவற்றைச் சொல்லும் போது அந்த ஆசை நம்மையும் தொற்றிக்கொள்கிறது. தன்னுடைய ஆசைகள் நிறைவேறாமலே தான் இறந்துபோகக் கூடுமோ என அவன் மிகவும் கவலைப்படுகிறான். நாவலில் வரும் பக்கரிசாமியின் ஆவி சொல்வதை ஒரு சிறுகதையாக வாசிக்கலாம். கொலை, கொள்ளை போன்றவற்றில் சர்வாதிகாரியாகத் திகழும் அரசியல்வாதிகள் பற்றியும், பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்ட, கொலையுண்ட ஆவிகளின் புலம்பல்களும் இதில் வருகின்றன.

உதயாவின் புலம்பல்களில் சில வாசகர்களின் பார்வைக்கு:

1. ‘எக்ஸைல்’ என்ற இந்த நாவலை ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் படிக்கும் வாசகர்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் தமிழ் வாசகர்களுக்கு ‘இது என்ன தில்லுமுல்லு?’ என்று தோன்றும். ஆனால் வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் தில்லு முல்லுகளையே பார்த்துப் பழகிப் போன அவர்கள் ‘இதுவும் கடந்து போகும்’ என்றே எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். 

2. ஜாரின் ஆட்சியில் ரஷ்யாவில் கற்பனையே செய்து பார்க்க முடியாத வறுமை இருந்தது. ஆனால் அப்போதுதான் துர்கனேவ், தஸ்தயேவ்ஸ்கி, செக்காவ், டால்ஸ்டாய் என்று பல மேதைகள் தோன்றினார்கள். ஆனால் ரொட்டியும் வோட்காவும் மலிவாகக் கிடைத்த கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் இலக்கியம் காசநோய் கண்டு மாண்டுவிட்டது. இப்போதைய ரஷ்யா தமிழ்நாட்டை விட மோசம்.

3. மறதி என்ற விஷயத்தைத் தனது தேசிய குணமாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் ஒவ்வொரு எழுத்தாளனின் தடத்தையும் அழித்துக்கொண்டே செல்கிறது. இதில் கலைஞன், சராசரி, கோமளி, வெத்துவேட்டு, குப்பை, மாணிக்கம் என்று எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை.

(தொடரும்...)
Related Posts Plugin for WordPress, Blogger...