April 7, 2015

சாரு நிவேதிதாவின் புதிய எக்ஸைல்-1: எல்லா உயிரும் ஓருயிரே!

வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
முதல் பதிப்பு: டிசம்பர் 2014
விலை ரூபாய்: 1000
பக்கங்கள்: 872
கட்டமைப்பு: கெட்டி அட்டை
வடிவம்: டெம்மி


சாரு நிவேதிதாவின் நாவல்கள், கட்டுரைகள், கதைகள் என எதையும் இதுவரை நான் வாசித்ததில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாங்கிய அவரின் ராஸலீலா இன்னும் புத்தக அலமாரியில் உறங்குகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி திருப்பூர் புத்தகத் திருவிழாவில் அவரது ஸீரோ டிகிரி, புதிய எக்ஸைல் என இரண்டு புத்தகங்களை வாங்கினேன். ஸீரோ டிகிரியை வாங்கக் காரணம் பலரும் அதைப் பற்றிப் பேசியிருப்பதால். புதிய எக்ஸைலை வாங்குவதற்கு அதன் தடிமன் முதற் காரணம். மற்றொரு காரணம் அதன் அச்சு, தாள் மற்றும் பைண்டிங். ஆங்கிலப் புத்தகங்கள் அனைத்தும் ‘லேசாக’ வரும்போது தமிழில் ஏன் அவ்வாறு வருவதில்லை என்ற என்னுடைய மனக்குறையை நீக்கும்படி இருந்ததால் வாங்கினேன். எல்லாவற்றையும் தாண்டி இவ்வளவு தூரம் மெனக்கெட்டு எழுதுவதென்றால் ஏதாவது இருக்கும்தானே, என்னதான் அது எனத் தெரிந்துகொள்வதற்காகவும் வாங்கினேன்.

புத்தகத்தைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு ஆட்டோஃபிக்ஸன் என்றால் என்னவென அந்த வார்த்தையை உருவாக்கிய Serge Doubrovsky சொன்னதைப் படித்தேன். (அங்கும் இங்கும் தேடி மெனக்கெடாமலிருக்க நாவல் ஆரம்பிக்கும் பக்கத்திற்கு முன்பே இது படிக்கக் கிடைக்கிறது). அவர் தன்னுடைய நாவலான Fils நாவலை 1977ல் வெளியிட்டு சொன்னது இது: "Autobiography? No, this is a privilege reserved for the important people of this world, at the end of their lives, in a refined style. Fiction, of events and facts strictly real; autofiction, if you will, to have entrusted the language of an adventure to the adventure of language, outside of the wisdom and the syntax of the novel, traditional or new. Interactions, threads of words, alliterations, assonances, dissonances, writing before or after literature, concrete, as we say, music." தலை முடியைப் பிய்த்துக்கொண்டு இதற்கான தமிழ் அர்த்தத்தை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டாம். (ஆட்டோவில் பயணித்துக்கொண்டே எழுதுவது ஆட்டோ ஃபிக்ஸன் என்ற அளவில் விளங்கிக்கொண்டால் போதுமானது). படிக்கத் தொடங்கியதும் நான் எடுத்த முடிவுகள் இரண்டு. ஒன்று அனாவசிய கற்பனையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிப்பது. இரண்டு முடிந்தவரை பொறுமையைக் கடைபிடித்து கடைசிவரை படித்து முடிப்பது.

காலையில் எழுந்ததும் நாம் செய்தித்தாளை வாசிப்பது போல, நம்வீட்டு பாட்டி தன் பழங்கதையைச் சொல்லச் சொல்ல நாம் அதைச் செவிமடுப்பது போல படித்துக்கொண்டே போனால் படிப்பது எளிதாக இருக்கும். கூடிய மட்டும் என்ன இது? எதற்காக இது? போன்ற கேள்விகளைத் தவிர்த்துவிட்டு வாசித்தால் வாசிப்பு இலகுவாகும். இவையெல்லாம் கூடினால் இயல்பாக வாசிக்கவும், மெல்ல மெல்ல புத்தகம் செல்லும் பாதையை அறிவதோடு அதில் பயணிக்கவும் முடியும். பாதி வழியில் பலர் தங்களது பயணத்தை முடித்துக்கொள்வார்கள் என்றபோதிலும், தொடர்வாசிப்பில் நம்மையும் அறியாமல் ஓர் ஈர்ப்பு வந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

கேசவன் என்ற யானை குருவாயூரப்பனை மட்டும் சுமந்ததையும், அது இறந்ததையும் சொல்லி, குலசேகர ஆழ்வாரின் பாடலுடன் நாவல் தொடங்குகிறது. அதன் பிறகு அடுக்கடுக்காக பூனைகள், மீன்கள், ஆடு மாடுகள், பட்டுப்பூச்சிகள், நாய்கள் மற்றும் கோழிகள் பற்றிய விபரங்கள் வருகிறது. அவற்றிலிருந்து எல்லா உயிர்களின் மீதும் அளவற்ற இரக்கமும் கருணையும் கொண்ட கதைசொல்லியின் உள்ளத்தை அறிகிறோம். நாவலின் கதையைச் சொல்வது உதயா என்ற எழுத்தாளன். அவன் யார்? அவன் எப்படிப்பட்டவன்? அவன் குண இயல்புகள் என்னென்ன? என்பதைப் பற்றியெல்லாம் அவன் சொல்லும் கதையினூடே நாம் தெரிந்துகொள்கிறோம். அவன் மனைவி, நண்பர்கள், காதலிகள் அனைவரையும் நாம் நாவலில் பயணிக்க பயணிக்க அறிகிறோம்.

நாய்களைப் பற்றி உதயா விரிவாகவே சொல்லிச் செல்கிறான். பாபா, பிளாக் மற்றும் ஒயிட்டி போன்ற நாய்களை வளர்த்த அனுபவத்தையும், பாபா இறந்தபோது தான் கண்ணீர்விட்டு அழுததையும் சொல்கிறான். நாய்கள் எதை எதை எப்படிச் சாப்பிடுகின்றன, அவற்றின் குணநலன்கள், நடத்தைகள் எப்படியானவை போன்ற எண்ணற்ற விசயங்கள் நாவலின் பக்கங்களில் இரைந்து கிடக்கிறது. வாசிப்பவர்களில் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு இந்த விசயங்கள் உதவக்கூடும். நாய்களை வெறுப்பவர்கள் இந்தப் பக்கங்களை தாராளமாக தாண்டிச் சென்றுவிடலாம். அதனால் பாதகம் ஒன்றும் விளைந்துவிடாது.

நாட்டில் நடந்த கொலைகள் பற்றிய பத்திரிக்கைச் செய்திகள் விபரமாகப் பேசப்பட்டு, கொலை எவ்வளவு சாதாரணமாக நடக்கிறது என்பதையும் கொலையாளி எவ்வளவு சுதந்திரமாக இந்த நாட்டில் நடமாடுகிறான் என்பதையும் நமக்குப் புரியவைக்கிறார் நாவலாசிரியர். கொலைக்கும் கொலையாளிக்கும் இருக்கும் அளவற்ற சுதந்திரம் பற்றிய உதயாவின் கவலை நம்மையும் பீடிக்கிறது. குடித்தனங்களுக்கிடையே நடக்கும் குப்பைத் தொட்டி பிரச்சினை உதயாவின் மனைவி பெருந்தேவியை கொலை செய்யுமளவிற்கு செல்வதை விலாவாரியாக நாவல் சொல்கிறது. அதிலிருந்து மனிதர்களின் அலட்சிய போக்கை, எனக்கென்ன என்ற விட்டேத்தியான மனோபாவத்தை, சக மனிதனை துச்சமாக மதிக்கும் மனிதர்களின் இயல்பை நாவல் வெளிப்படுத்துகிறது. இத்தனை களேபரங்களுக்கு இடையே உதயா அடிக்கடி மணாலி சென்று தனிமையை அனுபவிக்கும் காட்சிகளின் சித்தரிப்புகள் வருகின்றன. அவை கும்மிருட்டில் மின்னும் ஒளியென நாவலின் பக்கங்களில் வந்துபோகின்றன.

நாவலின் அத்தியாயங்கள் பலவிதமானவை. சில பல பக்கங்களும், சில ஒரு பக்கமும், வேறுசில நான்கைந்து வரிகள் கொண்ட பத்தியாகவும் நிற்பது உண்டு. மீன் வாங்குவது எப்படி? இட்லி சாப்பிடுவது எப்படி? போன்ற அத்தியாயங்களின் தலைப்புகள் சுவாரஸ்யமாக இல்லாவிடினும் வித்தியாசமானதாக இருக்கின்றன. தாயுமானவள் என்ற தலைப்பு உதயனுக்கும் பெருந்தேவிக்கும் இடையான அந்நியோந்நியத்தை, அன்பை வெளிப்படுத்துகிறது.

இதுவரையான நாவலின் பக்கங்களில், ஒரு மனிதனின் தினசரி நாட்குறிப்புகளில் வெளிப்படும் பல்வேறு செய்திகளைப் படிப்பதால் ஏற்படும் உணர்வுகளுக்கு நிகரான ஓர் அனுபவத்தை நாம் அடைகிறோம். இந்தப் புத்தத்தைப் படித்து முடித்ததும் அதைப் பற்றி ஏதாவது எழுத முடியுமா என்று சந்தேகம் எழுவதால் படிக்கப் படிக்க எழுதிவிடுவது எளிதாக இருக்கும் என்று தோன்றவே முதல் பதிவை ஆரம்பித்துவிட்டேன். 872 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் உள்ளே பல புத்தகங்கள் உள்ளன. எனவே முடிந்தவரை அவ்வப்போது எழுதிவிடுவது உசிதமாக இருக்குமென முடிவு செய்திருக்கிறேன்.

(தொடரும்...)

2. உதயாவின் புலம்பல்கள்
3. உதயாவின் வெளிநாட்டுப் பயணமும் உள்நாட்டு அனுபவமும்
4. நாகூரும் தில்லியும்
5. ஒரே விடியல்!


Related Posts Plugin for WordPress, Blogger...