தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு

நமக்குப் பிடித்த, நம்மனதுக்கு மிகுந்த நெருக்கமான எழுத்தாளரின் கதைகள் ஒருசேரக் கிடைக்கும்போது ஏற்படுகின்ற மனமகிழ்ச்சி அபரிமிதமானது. அதுவும் தரமான தாளில் நேர்த்தியான அச்சில் கெட்டி அட்டையில் கிடைக்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இதுவரையிலும் தி.ஜானகிராமன் கதைகளுக்கு சிறந்ததொரு தொகுப்பு வெளிவரவில்லை என்றிருந்த ஆதங்கத்தை காலச்சுவடின் “தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு” என்ற புத்தகம் நிவர்த்தி செய்துள்ளது.

தி.ஜானகிராமனின் கதைகளுக்கும், நாவல்களுக்கும் இதுவரை நேர்த்தியான ஒரு வெளியீடு அமையவில்லை என்றே சொல்லவேண்டும். இப்போது வரும் எத்தனையோ புத்தகங்கள் அச்சிலும் அமைப்பிலும் தரமாக வெளிவரும்போது தமிழின் முதன்மையான படைப்பாளியான அவரது படைப்புகள் அவ்வாறு வெளியாகாதது ஒரு மனக்குறைவாகவே இருந்தது. காலச்சுவடு முன்பு வெளியிட்ட மோகமுள் அந்தக்குறையை சற்றே ஈடுசெய்ய, தற்போது சிறுகதைகள் முழுத்தொகுப்பு அந்த மனக்குறையை நீக்கியது எனலாம். அந்தக் குறை தனக்கிருந்ததாலேயே இத்தொகுப்பைக் கொண்டுவந்ததாக சுகுமாரனும் குறிப்பிடுகிறார்.

இதுவரை வெளியான தொகுப்புகளை அப்படியே எடுத்துக்கொண்டு புத்தகத்திற்குள் புத்தகம் எனும் அமைப்பில் இந்தக் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பது வெகுசிறப்பு. மொத்தம் 107 கதைகள் கொண்டு, 1128 பக்கங்களில் நம் கைகளில் தவழ்கிறது இத்தொகுப்பு. சுமக்க முடியாத பெரும் குழந்தையாக கனத்தாலும் அதன் அழகோ வசீகரமோ சற்றேனும் குறையவில்லை! ஒவ்வொரு கதையும் மனித மனத்தின் சுழிப்பை, கோணலை, அழகை எடுத்தியம்பி மனிதர்களைப் புரிந்துகொள்ள வைக்கிறது. மனிதர்களைப் புரிந்து கொள்ளும்போது நாம் நம்மைப் புரிந்தவர்களாகிறோம். கள்ளி, சத்தியமா, துணை, கடன் தீர்ந்தது, பரதேசி வந்தான், சிலிர்ப்பு, கோதாவரிக் குண்டு, பாயசம் போன்ற பல அற்புதமான கதைகள் நாம் மீண்டும் மீண்டும் வாசித்து இன்புறத்தக்கவை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றே இக்கதைகளை நான் குறிப்பிடுகிறேன். ஒரு பானை சோறுமே நாம் சுவைத்து உண்ணத்தக்கவை என்பதிலும் வயிற்றுக்கோளாறோ, அஜீரணமோ ஏற்படுத்தாதவை என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.

தி.ஜானகிராமனின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்லும்போது சுந்தர ராமசாமி, “சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி.ஜா. அபூர்வமான அழகுணர்ச்சி கொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். ஒழுக்கம் தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வுநிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்” என்கிறார். அவர் கதைகள் அனைத்திற்கும் இது நூற்றுக்கு நூறு பொருந்தும்.

“தி.ஜானகிராமனின் சிறுகதை ஆளுமை செவ்வியல்தன்மை கொண்டது. அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றான ‘பசி ஆறிற்று’ முதல் கடைசி ‘சுளிப்பு’ வரையிலும் இந்தத் தன்மையைக் காணலாம். வடமொழி இலக்கியங்களில் பெற்ற அறிமுகம், தமிழ் இலக்கியங்களிலிருந்து பயின்ற விரிவு, பிறமொழி இலக்கியங்களிலிருந்து அடைந்த செய்நேர்த்தி இவை கதைகளின் புற வடிவத்தையும் காலங்காலமாகப் போற்றப்பட்ட மானுட மதிப்பீடுகள் மீது கொண்ட நம்பிக்கை ஆழத்தையும் நிர்ணயித்திருக்கின்றன. இந்தக் கூறுகளால் ஆன படைப்பு மனம் இயல்பாகவே ஒரு பூரிதநிலையை எட்டியிருந்தது. அதில் மேலதிகமாக எதையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ அனுமதிக்காத முழுமையை அந்த மனம் கொண்டிருந்தது. காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக்கொள்வதுபோலக் காலத்தின் கசிவை அந்தப் படைப்பாற்றல் உள்ளிழுத்துக்கொண்டு தன்னை நிறந்தரப் புதுமையாகவும் வைத்துக்கொண்டிருந்தது. இன்று வாசிக்கும்போதும் தி.ஜானகிராமனின் கதைகள் புதுமை குன்றாதவையாகவும் வாசகனை ஈர்க்கும் வசீகரத்தை இழந்துவிடாதவையாகவும் இருப்பது இந்த குணத்தால்தான்” என்று முன்னுரையில் சுகுமாரன் குறிப்பிடுவது தி.ஜானகிராமன் கதைகளின் சாகாவரம் பெற்ற தன்மையினைச் சுட்டுகிறது.

இத்தொகுப்பின் கதைகள் நாம் வாசித்து இன்புறவேண்டியவை மட்டுமல்ல, புத்தக அலமாரியில் வைத்துப் போற்றவேண்டியவையும் கூட. இந்நூலின் விலை ரூபாய் 990 என்றாலும் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வாங்கியிருந்தால் கணிசமாக சேமித்திருக்க முடியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...