ஜெயமோகனின் மனம் மயக்கும் நீலம்-4: பித்தின் உச்சநிலை

‘தன்னைக் கடந்துசெல்லும் தனிவழி கண்டவன் ஒருவனைக் காட்டுக’ என்று துர்வாசர் நெருப்பிடம் கேட்கும்போது நெருப்பு கம்சனைக் காட்டுவதிலிருந்து தனக்கிணையான ஒப்பாரும் மிக்காருமில்லாத ஆற்றலுடையவன் கம்சன் என்பதை நாம் அறிகிறோம். ஆயினும் வழிகண்டவன் விழியில்லாதவனாக அதில் செல்லாது வேறு பாதையில் போகிறான். அதை அவனுக்கு நினைவுறுத்தவே சிறுகுருவி அவனிடம், ”யார் நீ?” என்று கேட்கிறது. இருந்தும் அவன் தன்னைத் ‘தான்’ என உணரவும் அறியவும் தவறிவிடுகிறான். அப்படி அறிந்திருந்தால் அவன் இத்தனைக் குருதியை நகரமெங்கும் ஓடச் செய்திருக்கமாட்டான். 

பூதனை, திருணவிரதன் ஆகியோர் மூலம் கண்ணனைக் கொல்ல முயற்சிகள் நடக்கின்றன. பூதனை அரக்கியல்ல தன் மகவைப் பறிகொடுத்துப் பித்தியான மானிடப்பெண் எனவும், தன்பொருட்டு அவ்வாறான அவளுக்கு கண்ணன் சித்தியளிக்கிறான் என்றும் சித்தரித்திருப்பது அழகானது; ஏற்புடையது. அந்நிகழ்வுகளை நேரடியாகக் காட்சிப்படுத்தாமல் சொல்லாகவும் கனவாகவும் காட்டியிருப்பது ரசிக்கத்தக்கது. அதை கண்ணன், ராதை, யசோதை மூவர் வாயிலாகவும் காட்சிப்படுத்தும் சாத்தியக்கூறு இருப்பதை எண்ணிப் பார்க்கும்போது வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புராணங்களை அணுகமுடியும் என்பதே அதன் அழகும் சிறப்பும் என்பதை அறியமுடியும். வரலாற்றைவிடவும் புராணங்களே உயிர்த்துடிப்பானவை; நம்மை விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்பவை என்று ஓஷோ சொல்வது அதனால்தான்.

கண்ணன் விளையாடுகிறான். அலகிலா விளையாட்டுடையோன் விளையாடுவதில் வியப்பேது? பேசுகிறான், ஒடுகிறான், குழலிசைக்கிறான், மண்ணுண்ட வாய்திறந்து விண் முழுதும் காட்டி மாயம் செய்கிறான். அன்னையரும் ராதையும் வார்த்தைகளால் அளவிடமுடியா இன்பத்தில் திளைக்கிறார்கள். வாழும் ஒவ்வொரு கணந்தோறும் ராதை கண்ணன் அருகே இருக்கிறாள். அவள் கண்ணன் மீது கொண்டிருக்கும் பிரேமை கண்டு யசோதை வியக்கும்போது, “நான் எண்ணுவதே இல்லை. கண்ணனென்ற பேரில் கருத்திழந்து சொல்லிழந்து வெட்டவெளியில் விரிந்தழியும் ஒளி போலாகிறேன்” என்கிறாள். அவன் அருகில்லாத போதும், அவன் அவளையும், அவள் அவனையும் காண்பதில் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் தத்துவத்தைச் சொல்கிறார் ஜெயமோகன். வாசிக்கும் பக்கங்கள் தோறும் நமக்கும் அவ்வாறே தோன்ற எப்போதும் கண்ணன் நம்முடனே இருப்பதாக உணர்கிறோம்.

இரட்டை மரங்களை வீழ்த்தி யசோதை மனக்குறை தீர்க்கிறான். காளியன் எனும் பாம்பை அடக்கி மாயம் செய்கிறான். இந்திரனின் சினத்திலிருந்து கோவர்த்தன மலையைக் குடையாக்கி ஆயர்பாடியைக் காக்கிறான். அவன் செய்யும் லீலைகள் அனைத்தும் ஜெயமோகனின் கவித்துவமிக்க மொழியால் நம் உள்ளம் உடல் இரண்டையும் ஆக்கிரமித்து இணையற்ற இன்பத்தில் நம்மை ஆழ்த்துகிறது. அவன் செய்யும் தொல்லைகள் நாளும் புகார்களாய் அவன் இல்லம் வந்து சேரும்போது, தந்தைக்கும் தனயனுக்கும் இடைநிகழும் உரையாடல் அசைவின்மையிலிருந்து அசைவையும், பற்றிலிருந்து பற்றின்மையும் உணர்த்தி ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்தைச் சொல்கிறது.

திருமணம் ராதையைக் கண்ணனிடமிருந்த பிரிக்கிறது எனினும் எப்போதும் அவன் குழலிசை கேட்கும் இன்பத்தில் பித்து நிலை ஆட்கொண்டு ‘பிச்சி’ என அனைவராலும் ஏசப்படுகிறாள். அவள் மெல்லமெல்ல யோகநிலையின் உச்சத்திற்குச் செல்வதை அவள் நுகரும் முல்லை, அந்திமந்தாரை, அல்லி, மணிசிகை, பூவரசு, தாழம்பூ, பிரம்மகமலம், செண்பகம், சம்பங்கி, மனோரஞ்சிதம், பாரிஜாதம் ஆகிய மலர்களின் வாசனையைக் கொண்டு நமக்கு உணர்த்துகிறார் ஜெயமோகன். இப்பகுதிகளுக்கு அவர் சூட்டியிருக்கும் அணிபுனைதல், காத்திருத்தல், கருத்தழிதல், கடத்தல் முதலிய தலைப்புகளும் அந்த யோகநிலையின் படிப்படியான உச்சத்தைக் காட்டுகிறது. அவள் புலன்கள் கூர்பெற மணமும் ஓசையும் அவளை ஆக்ரமிக்கிறது. யான் எனது என மறந்து எங்கும் எத்திசையும எப்பொருளும் கண்ணனாக, எல்லாமும் அவனாக பித்தத்தின் உச்சநிலையில் சித்தம் தடுமாற மோகத்தின் பெருமயக்கம் அவளைக் காமத்திலிருந்து கடவுளுக்கு இட்டுச்செல்கிறது. ராஸலீலையின் அற்புத கணங்கள் இப்பக்கங்கள் முழுதும் நிரம்பி நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளில் நம்மை லயிக்கவைக்கிறது.

நீலம் வழக்கமாக எழுதப்பட்டிருந்தால் அதில் நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களை எண்ணிப் பார்க்கிறேன். அது நம் மனதைத் திறந்து காட்டியிருக்கும் ஆனால் இதுவோ நம் இதயத்தைத் திறக்கிறது. அது ஒரு வகை எனில் இது ஒரு வகை. சிந்திப்பதைவிட உணர்வதால் கிட்டும் இன்பம் பேரின்பமன்றோ? சிந்தனை எப்போதும் துன்பத்தைத் தருவதால் சிந்தனையிலிருந்து விடுபடும் போதே வாழ்க்கை கொண்டாட்டமாகிறது. நீலம் தரும் வாசிப்பனுபவத்தை வார்த்தைகளில் சொல்லவியலாது ஏனெனில் அதைச்சொல்ல நம்மிடம் வார்த்தைகள் ஏதும் எஞ்சியிருப்பதில்லை. நீலம் நம்மை நடக்கவைக்கிறது, சிலசமயம் ஒடவைக்கிறது, சில சமயம் தரையிலிருந்து எம்பி வானத்தில் மிதக்க வைக்கிறது. இலக்கியத்தின் வாயிலாக இறை உணர்வை சாத்தியமாக்கும் ஓர் அற்புத அனுபவம் நீலம்.

Related Posts Plugin for WordPress, Blogger...