ஜெயமோகனின் வண்ணக்கடல்-4: மகாபாரத மனிதர்கள்


மகாபாரதத்தில் தனித்துத் தெரியும் ஏகலவ்யன் கதை வண்ணக்கடலில் பல நாடுகளின் அரசியல் சிக்கல்களுடன் நாவலுக்குப் பொருந்தியதாக, மிக அருமையாக ஜெயமோகனால் சித்தரிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் இருவகை. ஒன்று ஆசிரியர் மூலம் கற்றுக்கொள்பவர்கள் மற்றொன்று சுயமாகக் கற்றுத் தேர்பவர்கள். ஏகலவ்யன் குருவின்றி வில்வித்தையைக் கற்றுக்கொள்கிறான். இருந்தும் துரோணரை தன்னுடைய குருவாகச் சொல்லிக்கொள்கிறான். அதுவே அவனுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. அஸ்வத்தாமனைக் காக்கும் பொருட்டு ஏகலவ்யனின் கட்டைவிரலைக் காணிக்கையாகப் பெறுகிறார் துரோணர். ஏகலவ்யனுக்கு நிகழ்ந்தது சரியா? அறமா? என்ற கேள்வி எப்போதும் நமக்குள் எழுகிறது. பெரும் காவியங்களை வாசிக்கையில் இப்படியான பல கேள்விகள் எழுவது இயல்புதான். பல இடங்களில் பல சூழல்களில் நாம் நேர்மையை, நியாயத்தை அறத்தைத்தான் கைக்கொள்கிறோமா எனும் மாற்றுக் கேள்வியே அக்கேள்விக்கான பதிலாக அமையும்.

ஜெயமோகன் சித்தரிப்பில், துரியோதனன்-பீமன், அர்ச்சுனன்-கர்ணன் ஆகியோருக்கிடையான மோதலில், துரியோதனுக்கும் பீமனுக்கும் இடையே வன்மம் மட்டுமே இருப்பதையும் பொறாமை இல்லை என்பதையும், காண்கிறோம். ஆனால் அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்கும் இடையான மோதலில் அர்ச்சுனனிடம் பொறாமையும், கர்ணணிடம் தன்னை நிலைநாட்டும் ஆர்வம் மிகுந்திருப்பதையும் காண முடிகிறது. தருமனோ அந்த இரு ஜோடிகளிடையே சிக்கித் தவிக்கும் பாத்திரமாகிறான். துரியோதனனால் அங்க தேசத்து மன்னனாகும் கர்ணன், தேரோட்டியான அதிரதன் காலில் விழுந்து வணங்கும்போது தருமன் மனதில் ஓடும் ஓராயிரம் எண்ணங்களை நாம் அகத்தால் அறியமுடிகிறது. கர்ணன் மீதான தருமனின் மதிப்பு கூடுவதற்கான காரணத்தையும் உணர முடிகிறது.

ஒரு அரசன் ஜென் துறவி சாசூவை பார்க்கச் சென்றான். அரசன் வருவதைக் கண்டும் சாசூ எழுந்து அவனை வரவேற்கவில்லை. அரசன் அவரிடம், “எது உயர்ந்தது? அரசனா அல்லது தர்மமா?” என்று கேட்டான். சாசூ,“அரசர்களில் நானே உயர்ந்தவன். தர்மங்களிலும் நானே உயர்ந்தவன்” என்ற பதிலளித்தார். அந்த எதிர்பாராத பதிலால் அரசன் மிகவும் மகிழ்ந்தான்.

அடுத்த நாள் தளபதி சாசூவைப் பார்க்க வந்தபோது, அவர் எழுந்து நின்றதோடு, அரசனைவிட அதிக மரியாதையைக் காட்டி வரவேற்றார். தளபதி சென்றபிறகு சாசூவின் சீடர்,“ அரசனைவிடக் குறைவான தகுதியுடைய தளபதி வந்தபோது, அரசனுக்குக் காட்டாத மரியாதையை அவனுக்கு காட்டியது ஏன்” என்று கேட்டார். “உன்னால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. எப்போதும் அதிக மதிப்புள்ளவர் வரும்போது நான் இருக்கையிலிருந்து எழுவதில்லை. நடுநிலையான மதிப்புள்ளவர் வரும்போது நான் எழுகிறேன். குறைந்த மதிப்புள்ளவர் வரும்போது நான் வெளியே சென்று அவர்களை வரவேற்பேன்” என்றார்.

தருமனின் நெகிழ்வையும் கண்ணீரையும் மட்டுமல்ல, கர்ணனை நாம் விளங்கிக்கொள்ளவும் ஓஷோவின் இந்த ஜென் கதை மிகவும் உதவுகிறது.

கம்பராமாயணம் பிறர் நமக்குச் செய்யும் இன்னல்களை, நம்மீது தொடுக்கும் மோதல்களைச் சொல்கிறது என்றால் மகாபாரதம் உறவுகளுக்குள் எழும் மோதல்களை சிக்கல்களைச் சித்தரிக்கிறது. இந்த இதிகாசங்களை மனிதர்கள் காலங்காலமாக கேட்டும் படித்தும் வருகிறார்கள். ஆயினும் மனிதர்கள் மாறியிருக்கிறார்கள், அவற்றிலிருந்து படிப்பினை பெற்றிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அன்றைய மகாபாரத மனிதர்களே இன்றும் இருக்கிறார்கள்; வாழ்கிறார்கள்; என்றும் இருப்பார்கள். மகாபாரத பாத்திரங்கள் அனைத்தும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதே கோபம், பகை, வன்மம், பொறாமை, சூழ்ச்சி, குலப்பெருமை அல்லது சிறுமை அனைத்தும் அணுவளவும் மாறாது இன்றைய மனிதர்களிடமும் அப்படியேதான் இருக்கிறது; தொடர்ந்து வருகிறது.

குர்ச்சரண் தாஸ், தன்னுடைய ‘மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை’ எனும் நூலில் மனிதர்கள் நல்லவர்களாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதையே மகாபாரதம் காட்டுகிறது என்கிறார். எனவே மனிதர்களாகிய நாம் அவற்றைத் தொடர்ந்து கேட்டும் படித்தும் வருவது நல்லவனாக மாற முடியாது என்பதை உறுதி செய்யத்தான் போலும். மனிதர்களின் அகத்துக்கும் அகங்காரத்துக்குமிடையான போராட்டம் சதா நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அந்த முயற்சியில் பல மனிதர்கள் தங்களது அகங்காரத்தின் முன் தோற்றுப் போய் நிற்கிறார்கள். ஒரு சிலர் வெற்றி பெறலாம். அப்படி வெற்றி பெறும்போது அவர்களிடம் கோபம், பகை, வன்மம், பொறாமை, சூழ்ச்சி அனைத்தும் மறைந்துபோகிறது. ஆக, மகாபாரதம் இரு வெளி நபர்களுக்கிடையே நிகழும் போராட்டத்தை சித்தரிக்கிறது என்பதைவிட, அந்தப் போராட்டங்கள் நிகழக் காரணமான, ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்திலேயே நிகழ்த்தும் அகப்போராட்டத்தையே அதிகமும் சித்தரிக்கிறது எனலாம். அகம் சலனமற்றிருந்தால் வெளியில் போராட்டம் ஏது? பூசல் ஏது?

அந்த அகப்போராட்டத்தையே தன்னுடைய தூரிகையால் வண்ணம் சேர்த்து வண்ணக்கடலாகத் தோன்றச் செய்திருக்கிறார் ஜெயமோகன். மனித மனத்தின் ஆழம் போன்றே, இந்த வண்ணக்கடலின் ஆழமும், நீளமும் அசாதாரணமானது; எல்லையற்றது. அவற்றில் ஒவ்வொருவரும் தங்களின் சக்திக்கு ஏற்ப மூழ்கி முத்துக்களை எடுக்கலாம்; பிரமிப்பை, பரவசத்தை அடையலாம்.

(முற்றும்).
1. தீராப் பகை
2. துரோணரின் அகப் போராட்டம்
3. மூன்று துருவங்கள்


Related Posts Plugin for WordPress, Blogger...