ஜெயமோகனின் மனம் மயக்கும் நீலம்-3: பெயரழிந்து நிற்றல்

கண்ணனால் தனக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறான் கம்சன். எனவே அவனிடம் ஐயம், தனிமை, விழிப்பு, குரூரம், அதிருப்தி ஆகியன ஒன்றாக சேர்ந்து ஆணவமாக உருக்கொண்டு அவனை தீய சிந்தனையில் தீய வழியில் நடத்துகிறது. “அது தொட்டவனை தான்கொண்டு செல்வது. பட்டகுடியை பாழ்நிலமாக்கிய பின்னரே விலகுவது“ எனும் வரிகளில் கம்சனின் அறியாமை வெளிப்படுத்தப்படுகிறது. அவன் தனது குலத்தை, குடியை அரியணையில் வைத்திருக்கவே அத்தனையும் செய்கிறான். ஆனால் அவன் செய்யும் அந்தச்செயல்களே அவன் குடியை நீர்மூலமாய் அழிக்கிறது!

அவன் இரக்கமின்றி தேவகியின் ஏழு குழந்தைகளைக் கொல்கிறான். முதன் முதலாய் கம்சன் கதையைக் கேட்டபோது எனக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்தன. குழந்தையைக் கொள்வதற்கு பதிலாக தேவகியை அவன் ஏன் கொல்லக்கூடாது? கம்சன் குழந்தைகளை கொல்லப்போகிறான் என்று தெரிந்தும் வசுதேவரும் தேவகியும் ஏன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்? கண்ணன் மட்டும் காப்பாற்றப்பட மற்ற குழந்தைகள்  ஏன் கைவிடப்பட்டனர்? போன்ற பல கேள்விகள் மனதில் தோன்றின. வளரவளர அக்கேள்விக்கான பதில்கள் வேண்டியிருக்கவில்லை. இப்போது நீலத்தை வாசிக்கையில் அக்கேள்விக்கான பதில்கள் இருப்பதைக் காண்கிறேன்.

எட்டாவது குழந்தை தப்பிவிட்டதை அறிந்து கம்சன் அஷ்டமிரோகிணியில் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்லச்சொல்கிறான். வசுதேவரிடம் அந்தக் குழந்தை எங்கே எனக்கேட்கும் போது, “உம் நெஞ்சில் அச்சமாகவும் உம் தம்பியர் படைக்கலங்களில் வஞ்சமாகவும் அங்கே நகருறையும் அன்னையர் கண்களில் கண்ணீராகவும் அவர் தந்தையர் நெஞ்சில் பழியாகவும் விளைபவன் அவனே” என்கிறார் வசுதேவர். கண்ணன் எங்கேயும் செல்லவில்லை மாறாக கம்சன் உள்ளத்திலே அச்சமாக உறைகிறான் என்று வசுதேவர் குறிப்பது கவனிக்கத்தக்கது. கம்சனே கண்ணன் உருவாகக் காரணமாகிறான். வஞ்சம், பகை, உறவு அன்பு ஏதோன்றையும் தன் உள்ளத்தில் கருக்கொண்டு உருக்கொண்டு பிறக்கச் செய்பவன் தனக்கான எதிராளியை தானேதான் உருவாக்கிக்கொள்கிறோம் என்பதை அறிவதில்லை.


கண்ணனின் பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்த விழாக்காட்சியும் பெண்களின் கூட்டமும் நம் உள்ளத்தை ரம்மியமாய் நிறைக்கிறது. அங்கே வரும் பெண்களின் பெயர் பட்டியல் மிக நீண்டது. ஆண்களும் பெண்களும் மட்டுமின்றி உலகத்து உயிர்கள் அனைத்தும் அதில் பங்கேற்கின்றன. எல்லோரும் அருகிருக்க ராதை இல்லாதிருப்பதை அறிந்து அவளை வரவழைக்க  அழுகிறான் மாயக் கண்ணன். "சிற்றெறும்பு கடித்ததோ? சிறுக்கியரின் நகம்தான் பட்டதோ? சிறுவயிறு வலித்ததோ? சீறும் விழிக்கோள் கொண்டதோ?" என அவன் அழுகையைக் கண்டு ஒவ்வொருவரும் தவிக்கிறார்கள். அவன் அழுகையை செவிமடுத்தது போல அங்கே வந்துசேர்கிறாள் ராதை. அப்போது அவளைப் பார்த்து மந்தன், “காணுமெதையும் காணாத கண்கள். காணாதவற்றை எல்லாம் கண்டறியும் கண்கள். அவள் கண்களறிபவை கண்களுக்குரியவை அல்ல” என்கிறான். எப்போதும் ராதை கண்ணனைப் பார்க்கிறாள் எனினும் அவள் கண்கள் கண்ணனை மட்டும் காண்பதில்லை. கண்ணனைக் காணாதபோதோ காணும் அனைத்திலும் கண்ணனையே காண்கிறாள். எனவே அவள் கண்கள் அறிபவை கண்களுக்குரியவை அல்ல கண்களுக்கும் அப்பால் அவள் ஆன்மாவுக்குரியவை என்றறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது!

மந்தன் மேலும் உணர்ச்சிப் பெருக்கால், “யாழ்தேரும் விரலுடன் பிறந்தமையால் நான் வாழ்த்தப்பட்டேன். சொல்தேரும் நாவு கொண்டிருப்பதனால் நான் முழுமை பெற்றேன். கண்ணே, என் சொல்லே, கருத்தே, நான் கற்ற கவியே, இக்கணத்தை இப்புவியின் அழியாக் காலத்தில் நிறுத்து!” என்று கூவுகிறான். நாம் முழுமையான இன்பத்தில் திலைத்து நிற்கும்போது இந்த உலகமும் ஒரு கணம் நின்றுவிடுகிறது. அது கலவியாக இருக்கலாம், காணும் அழகாக இருக்கலாம் அன்றி நாம் கற்கும் நூலாக இருக்கலாம். அப்படி அந்தக்கணத்துடன் உலகம் நின்றுவிட்டால் எத்துனை அற்புதமாக இருக்கும்? வரும்துன்பம் இனி வராமலே போகுமன்றோ?

மண்ணளந்து விண்ணளந்து மாவெளியளந்து தன்னளந்து தனித்தோன் கையளவு உடல்கொண்டு வந்தமைந்த சிறுதொட்டிலைச்சுற்றிச் சூழ்ந்து நின்று களிவெறியெழுந்து கூவினர் பெண்கள் எனும்போது நமக்குள்ளும் அந்தக் களிவெறி கூடுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் அணிசெய்து மகிழ்கிறார்கள். என்னதான் செய்தாலும் அவன் அழகு குறைவதில்லை பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்னரும் பூரணமே எஞ்சியிருப்பது போல. ராதை அவனுக்கு மயிற்பீலி சூடுகிறாள். காணும் அனைவரும் மயங்கி நிற்கிறார்கள். கண்ணா! மணிவண்ணா! மணிமுத்தே! பொன்னே! பொற்பதமே! என நம் மனம் அரற்றுகிறது. ”இன்பக் கதைகளெல்லாம் – உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ? அன்பு தருவதிலே – உனைநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ?” என்று கோகுலமே மகிழ்ந்து இன்புறுகிறது.

கண்ணன் வளர்கிறான். உலகைப் படைத்தவனே உலகைப் புதிதாய் கண்டு வியக்கும் விந்தையைக் காண்கிறோம்! ‘தா தா’ என்றும் ‘உம்’ என்றும் ‘மா’ என்றும் ‘பா’ என்றும் ‘..ண்ணன்’ என்றும் ‘போ போ’ என்றும் மழலை பேசி, ‘ராதை’ என்கிறான். ராதை உள்ளம் நெக்குருகி கல்லாய்ச் சமைந்து நிற்கிறாள். ஆராதிப்பவள் ஆராதிக்கப்படும் விந்தை அங்கே நிகழ்கிறது. ‘என்ன உறவு இது!’ என்று நாம் வியந்து நிற்கிறோம்.  கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் கண்ணனிடம் உள என்று ராதை உணரும் தருணம் அப்போது வாய்க்கிறது. ஒரு நாள் கண்ணனைக் காணாது ராதை அவனைத்தேடி காட்டிற்குச் செல்கிறாள். அங்கே அவன் அவளை ‘சியாமை!’ என அழைத்து அணைக்க, அவள் அவனை “நீ கனசியாமன்’ என்று சொல்லி அவனை முத்தமிடுகிறாள். ‘நான் நீ’ எனும் இருளழிந்து ‘நாம்’ எனும் ஒளி உருவாகி, இருவரும் பெயரழிந்து நிற்கும் நிலை அது.

கட்டுடைத்து கரையுடைத்து ஆர்ப்பரித்துச் செல்லும் நீலத்தில், இழுபடும் சிறு துரும்பென, அதன் போக்கில் பயணிக்கிறேன். கையில் இருக்கும் இனிப்பு தீர்ந்துவிடுமோ என அஞ்சும் சிறு குழந்தையாக சிறிதுசிறிதாக சுவைக்கிறேன்.

(தொடரும்...)
1. மனம் மயக்கும் நீலம்
2. மனமொழியும் கவிமொழியும்
4. பித்தின் உச்சநிலை

Related Posts Plugin for WordPress, Blogger...