ஜெயமோகனின் வண்ணக்கடல்-3: மூன்று துருவங்கள்

“ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுத முடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுத முடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் ஐந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்” என்று தி.ஜானகிராமன் தான் மோகமுள் நாவலை எழுதியதைச் சொல்கிறார்.


எனவே, மாபெரும் எழுத்தாளர்கள் என்று சொல்லத்தக்கவர்கள் கூட எப்போதும் எழுத முடிவதில்லை. எழுதுவதற்கென ஒரு மனநிலை வேண்டும்; அப்போதே படைப்பு கூடும். தாளமும் சுருதியும் சேரும்போதுதான் நல்ல இசை பிறக்க முடியும். அப்படிச் சேராதபோது அபஸ்வரமே எழும். ஆனால் நாம் ஜெயமோகனை இந்தக் கணக்கில் சேர்க்க முடியாது. அவர் சதா எழுதியபடி இருக்கிறார். அவர் எழுத்து இயல்பாக நிகழந்துகொண்டே இருக்கிறது சுவாசம் போல. (அவரே கூட வெண்முரசின் பல பக்கங்களை எழுதி கிழித்துவிட்டதாகச் சொல்கிறார்). வண்ணக்கடலின் இந்திர விழாக் காட்சிகள், பீமன் சமயல் செய்யும் காட்சி, துரோணர் அர்ச்சுனனுக்கும் பிறருக்கும் தனுர்வேதம் கற்பிப்பது, குதிரைகள், யானைகள், பறவைகள், அம்புகள் பற்றி விரிவாகச் சொல்வது என அனைத்துமே பக்கங்கள் தோறும் பெரும் பிரவாகமாக பெருக்கெடுத்து, நாம் இதுவரையிலும் கற்பனையில் நினைத்துப் பார்க்காதவையாக, கனவிலும் காணாதவையாக, நம்மை வியப்பிலும் மலைப்பிலும் திக்குமுக்காடச் செய்கின்றன. அதுமட்டுமல்ல இவை அனைத்தையும் ஞானத்தோடு அவர் இணைத்துச் சொல்லியிருக்கும் விதம் ரசித்து ருசிக்கத்தக்கது; போற்றத்தக்கது. எல்லாவற்றிலும் அவரது கற்பனையின் வீச்சு முழுமையான ஆற்றலுடன் வெளிப்படுவதை எண்ணி, ‘எப்படி இப்படி எழுத முடிகிறது!’ என்று வியக்காமல் வெண்முரசின் எந்தப் பக்கத்தையும் வாசிக்க முடியாது.

அர்ச்சுனன் அஸ்வத்தாமன் இருவருக்குமிடையே ஏற்படும் பகை உணர்வு நாவலில் மிக அற்புதமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. குரு என்பதையும் தாண்டி, தனக்கான ஒரு தந்தையாகவே அர்ச்சுனன் துரோணரைக் காண்கிறான். அவன் ஆழ்மனதில் இருக்கும் தந்தை இல்லாத குறையை துரோணர் ஈடுசெய்கிறார். அஸ்வத்தாமன் துரோணரின் நெருக்கம் அதனாலேயே அர்ச்சுனனை வாட்டுகிறது. அதேசமயம் தந்தையை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அஸ்வத்தாமனுக்கு அர்ச்சுனன் மீது பகை உணர்வை வளர்க்கிறது. யார் துரோணரின் முதல் மாணாக்கன் எனும் வினாவினால் இருவருக்கிடையான இந்த பகை எழுகிறது என்பதைவிட அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் இந்த உறவின் காரணத்தாலேயே அதிகமும் எழுகிறது என்பதை வாசிப்பின் ஒரு தருணத்தில் நாம் சூட்சுமமாக உணர முடியும். இருவருக்கும் இடையான மோதலை உணர்ந்த துரோணர் அஸ்வத்தாமனை எந்தச் சூழ்நிலையிலும் அர்ச்சுனன் கொல்லக்கூடாது எனக் கேட்டுக்கொண்டு, அர்ச்சுனனையே தன்னுடைய முதல் மாணாக்கனாக அறிவிக்கிறார். அப்படி அறிவிக்கப்பட்ட பின்னர் சந்தோஷமடையாத அர்ச்சுனன் தனிமையில் கண்ணீர் வடிக்கிறான். வென்றவன் கண்ணீர்விட்டு அழுவது விசித்திரமாக இருக்கிறது. போராடும் வரையே வன்மம் பகை எல்லாமே, வென்ற பின்னர் வெறுமையே எஞ்சுகிறது. வென்றதைவிட இழந்துவிட்டது அதிகம் என்பதை உணரும் தருணம் வெற்றியினாலேயே வருகிறது. இதன் காரணமாகவே அர்ச்சுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையிலான உறவைச் சொல்லும் இந்தப் பகுதி அலாதியானது; அற்புதமானது.

சாதாரணமாகத் தொடங்கும் கர்ணனின் கதை, மெல்ல மெல்ல வேகம் பெற்று உச்சத்தைத் தொடுகிறது. விழாவில் ரதம் ஓட்டுவதும், மன்னனை சிம்மங்களிடமிருந்து காப்பதும், தன்னைக் கொல்ல முயலும்போது அதிலிருந்து தப்பிப்பதும் திரைக்காட்சிக்கு நிகரான பரபரப்பைக் கொண்டிருக்கிறது. அதிரதனுக்கும் ராதைக்கும் இடையே எப்போதும் இருக்கும் பூசல் அன்பின் வெளிப்பாடு என்பதையும், கர்ணன் பிறப்பை அவர்கள் மறைக்கச் செய்யும் முயற்சி என்பதையும் அறிகிறோம். கர்ணன் தான் யார் என்பதை அறிந்திருந்த போதும், மற்றவர்கள் அவனை சூதன் என்று ஏளனம் செய்யும்போது அதிரதனுக்காக அவற்றை பொருத்துக்கொள்வதும், ரதம் ஓட்டியதால் தனக்குக் கிடைத்த மோதிரத்தைத் தானமாக கொடுத்துவிடுவதும் கர்ணனின் குணத்தையும் இயல்பையும் பறைசாற்றுவதாக அமைகிறது. தான் வேறானவன் என்ற உணர்வு அவனை எப்போதும் அமைதியிழக்கச் செய்கிறது.

திருதிராஷ்டிரனும் கர்ணனும் சந்திக்கும் காட்சி நம் மனதை நெகிழ்விப்பது. அவர்கள் இருவரும் அணைத்துக் கொண்டு நெகிழும்போது நம்முள்ளே ஏதோ ஒன்று உடைகிறது. அவன் யார் என்பது நமக்குத் தெரியுமாதலால் நம் நெஞ்சம் விம்முகிறது. ஆனால் அவர்கள் இருவரும் இனம் புரியாத ஓர் உணர்வால் அறிந்தும் அறியாதவர்களாக நெகிழ்கிறார்கள். எங்கோ வானத்தில் இருக்கும் தெய்வமாக குந்தி கர்ணனைக் காக்கிறாள், அவனுக்கானதைச் செய்கிறாள் எனும் சித்தரிப்பு அபாரமானது. பீமன் கர்ணன் இருவரும் மோதுவது நம்மில் ஒருவகையான உணர்வை கிளரச்செய்கிறது என்றால் அர்ச்சுனனுக்கும் கர்ணனனுக்கும் இடையிலான மோதல் வேறோர் வகையான உணர்வை எழச்செய்கிறது. பீமன் கர்ணனைத் தாக்கும்போது நம் உள்ளத்தில் நம்மையறியாமல் சிறு புன்னகை எழுகிறது. அவர்கள் இருவரும் யார் என்பதை நாம் அறிந்திருப்பதால், கடவுளும் இந்த அறிதலினாலேயே நம்மைப் பார்த்து அவ்வப்போது புன்னகைப்பார் என உணர்வதால், நம்மில் புன்னகை எழுகிறது.

துரோணரைச் சந்தித்து வில்வித்தை கற்றுத்துரும்படி கர்ணன் கேட்கும்போது, இருவரும் ஒரே படகில் பயணிப்பவர்கள் என்பதை உணர்வதால் கர்ணன் மீது அவர் கொள்ளும் கோபமும், பரிவும், இயலாமையும் கலந்து வெளிப்படும் உணர்வு மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. துரோணர், அஸ்வத்தாமன், அர்ச்சுனன், கர்ணன் நால்வரும் சந்திக்கும் காட்சி அலாதியானது. கர்ணன் துரோணரை நெருங்குவது அர்ச்சுனனுக்கு பொறுக்க முடியாததாக இருப்பதால் அவனிடம் மோதுகிறான். இருவருக்கும் நடக்கும் சண்டையை தடுக்கும் பீமன், குலம் என்ன என்று கேட்டு கர்ணனை அவமதிக்கிறான். தனக்கு நிகழ்ந்தது கர்ணனுக்கும் நிகழ்கிறது என்பதை உணர்ந்து துரோணர் சொல்லற்றவராகிறார்.

கர்ணன் அஸ்தினபுரியில் காலடி வைத்தது முதல் அவன் பீமனால் அவமதிக்கப்படும் காட்சிகள் வரையான சித்தரிப்புகள் அனைத்தும் மாபெரும் திரையில் தீட்டிய வண்ண ஓவியமென அற்புதமாக ஜொலிக்கிறது. அந்த வண்ணங்களின் கலவையும், ஓவியத்தின் நிழல்களும், அண்மை சேய்மைக் காட்சிகளும், உருவங்களின் முகபாவங்களும் ஜெயமோகனால் மிகக் கவனமாகவும், தேர்ந்த இலாவகத்துடனும் தீட்டப்பட்டுள்ளது. பார்த்துப் பார்த்து ரசிக்கவேண்டிய ஓவியம் அது. அந்த ஓவியத்தில் அர்ச்சுனன், அஸ்வத்தாமன், கர்ணன் மூவரும் மூன்று துருவங்களாக நிற்கிறார்கள்.

(தொடரும்...)
1. தீராப் பகை
2. துரோணரின் அகப் போராட்டம்
4. மகாபாரத மனிதர்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...