ஜெயமோகனின் மனம் மயக்கும் நீலம்-2: மனமொழியும் கவிமொழியும்

அழகே உருவான ராதை துயில்கிறாள். அழகான பெண்கள் தூங்கும் காட்சி இன்னும் அழகானதன்றோ? ‘மண்ணிலினி ஒரு போதும் நிகழமுடியாத பேரழகி நீ’ எனும் சொற்றொடரால் அவள் அழகை நாம் உணரமுடிகிறது. அவள் ஒரு பிறப்பு அல்ல நிகழ்வு எனக்குறிப்பது அர்த்தம் நிரம்பியது; அலாதியானது. இனி இப்படியான ஒரு பேரழகி எப்போதோ? என்ற வினா அதில் தொக்கி நிற்கிறது. அவள் இன்னும் உறங்குவது கண்டு பொறுக்காத தென்றல், “இன்னுமும் துயிலுதியோ இளநங்காய்? இனியும் வேளை வருமென்று எண்ணினாயா? எத்தனை பிறவிப்படிகளில் ஏறி ஏறி இங்கு வந்துசேர்ந்திருக்கிறாயென அறிவாயா?” என்று ராதையை எழுப்புகிறான். அவள் அங்கம் முழுதும் தீண்டிய பொல்லாத அந்தக் கள்வன் அவளை மட்டுமா எழுப்பினான்? அவள் பெண்மையையும் அல்லவா எழச்செய்தான்? நாமே தென்றலாக ராதையை துயிலெழச் செய்துவிட்டதாக உணர்கிறோம்!

ஓர் உயிர் தன்னைத் ‘தான்’ என்றுணர்ந்த மறுநொடி பிறிதோர் உயிர் மீது விருப்புக்கொள்கிறது. எனவே அது, ‘ஏனுளேன்’ எனக்கேட்டு ‘இங்குளேன்’ என்றுணர்ந்து தன்னில் மாற்றம் கொள்கிறது. அவளுள் அப்படி மாற்றம் கொண்ட அந்தப் பெண்மையின் சிறப்பென்ன? அது ஆணைவிடச் சிறந்ததா இல்லை அவனைவிடவும் உயர்ந்ததா? ”சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும் அவன் ஆணுக்கு அளிக்கவில்லை. உண்ணப் படுவதற்கான உதடுகளையும் பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை. கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை” என்று சொல்லும்போது பெண்மையின் உயர்வை சிறப்பை ஆண்களும் உணர முடிகிறது.

உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது? செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது? விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்தாள் ராதை எனும்போது அந்த வரிகளின் சந்தநயம் நம் மனதைக் கவர்கிறது. ராதைக்கு கண்ணனைக் காணும் ஆவல். அவனைக் காண ஆயர்குடிக்கு விரைகிறாள். அவளுள் உற்சாகம்; இளமை தரும் உத்வேகம். மான் போல் துள்ளிக்குதித்து ஓடுகிறாள். அந்தக் காட்சியை மனக்கண்ணில் காணும்போது உள்ளம் துள்ளுகிறது; உடல் சிலிர்க்கிறது; மனம் உவகை கொள்கிறது.

ஆயர்குடியை அடைகிறாள் ராதை. ”சற்றுமுன் விழித்தெழுந்த ஊரெங்கும் கன்றுகள் முலைக்குத் தாவும் குரலும் அன்னைப்பசுக்கள் அருகழைக்கும் மறுகுரலும் கேட்டுக்கொண்டிருந்தன. கொதிக்கும் எண்ணையில் நீர் விழும் ஒலிபோல பால்கறக்கும் ஒலிகள் எழுந்தன. ஒலித்து ஒலித்து நிறைந்து நுரைத்து ஞானத்தின் அமைதிகொண்டன சிறுபாற்குடங்கள். உள்ளே சென்று பெருங்கலத்தில் ஒழிந்தபின் முக்தியின் வெறுமையை அள்ளிக்கொண்டன” என அதிகாலை ஒசையைக் காட்சிப்படுத்துகிறார் நாவலாசிரியர். அதிகாலை தரும் உற்சாகம் போலவே இந்த வரிகளும் நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. எல்லாம் முன்னரே கனவில் கண்டது போலவே அவள் யசோதையின் வீட்டை அடைகிறாள். கனவும் நனவும் நினைவும் இணைந்த நிகழ்வுகளே வாழ்க்கை என்பதால் எல்லாம் முன்னரே அறிந்தது போல மனமயக்கம் கொள்கிறாள் ராதை.

அங்கே அவள் கண்ணனைக் காண்கிறாள். அவனைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்று அவளுக்கு மட்டுமல்ல நமக்கும் தோன்றுகிறது. ஜெயமோகன் வரிகள் நிகழ்த்தும் அற்புதம் என அந்தக் குழந்தைக் கண்ணனின் வர்ணிப்பைச் சொல்லலாம். “அமுது எனச் சொல்லிக் குவிந்திருந்தது கொழுங்கன்னம். முலை என்று அமைந்திருந்தது செம்மணி வாய்மலர்க்குமிழ். அம் என கீழுதடு அழுந்த, மு என்று மேழுதடு வளைந்து மேலே குவிந்திருக்க அத்தனை குழந்தைவாயும் சொல்லும் அச்சொல்லிலா நீயும் வந்தமைந்திருக்கிறாய்?” ஜெயமோகன் வரிகளால் அழுந்திய கீழுதடும் குவிந்த மேலுதடும் கொண்ட அந்த முகம் கற்பனையில் நம் அருகே நெருங்கி வருவதாக உணர்கிறோம். அந்த முகத்தில் ‘இச்’சென ஒரு முத்தம் பதிக்கவேண்டுமென மனம் விழைகிறது!

”அய்யோ, நீயுமொரு குழந்தையேதானா?” எனக் கேட்கும்போது நம் உள்ளம் அனலிட்ட மெழுகாய் உருகுகிறது! அவனை வேறு என்னதான் சொல்வது? அவன் வெறும் குழந்தைதானா? ஐயோ! என்ன சொல்லி உன்னைச் சொல்ல? கம்பன் இல்லை கவிதை சொல்ல எனத் தோன்ற, அவனைக் கையில் எடுத்து மார்போடு அணைத்து, சின்னஞ்சிறு சிசுவின் வாசனையை நுகரும் இன்பம் கிட்டுகிறது!

”சுட்டுவிரலால் சற்றே தொட்டு வைத்ததுபோன்ற சிறு மூக்கு. பொன்னகையில் கொல்லன் ஊதிஊதியிட்ட இருசிறு துளைகள். மூச்சிலாடும் கழுத்தின் கதுப்பு. மூடிய இமைகளுக்குள் கனவிலாடும் விழிகள் நெளிந்தமையும் சிறு நடனம். நடக்கும் யானைகளை மூடிய நீலப்பட்டுக் கம்பளங்கள். கருங்குழல் நுரைச்சுருள்கள் விழுந்துகிடக்கும் நீலஎழில்நுதல். காற்றசைக்கும் குழல்பிசிறுகள் நெளிந்தாடி நெளிந்தாடி கொன்று படைத்து உண்டு உலகாண்டன” என்பதை வாசிக்கும் போது நாமும் இறந்து இறந்து பிறக்கிறோம். சொல்லில் அடங்காப் பெருங்கவிதையென கண்ணனின் அழகு மேலும் மேலும் கூடும் விந்தை வாசிப்பில் நிகழ்கிறது.

ஒரு படைப்பாளியின் மனவெளியில் எத்தனையோ தோன்றலாமெனினும் அவை அத்தனையையும் சொற்களாக்குவது எளிதல்ல. ஆயினும் வெண்முரசு வரிசையான நீலத்தில் அந்த விந்தை நிகழ்ந்திருக்கிறது. ஜெயமோகனின் சொல்லாட்சி நம்மை பிரமிக்கச் செய்ய, இன்னும் இன்னும் என மனம் விழைகிறது அறியஅறிய அறியாமை பெருகுவது போல. வார்த்தைகளும் வாக்கியங்களும் அவருக்கு ஏவல் செய்கின்றன அகத்தியரின் கமண்டலத்தில் அடங்கிய கங்கையைப் போல. கவித்துவ வார்த்தையாய் வெளிப்படும் நீர்த்துளிகள் வாக்கியங்களெனும் காட்டாற்று வெள்ளமென பொங்கிப் பிரவகிக்கிறது. கால்கள் நிலத்தினின்றும் மேலெழுந்து அந்தரத்தில் பறக்கும் உணர்வைத்தர, மொழியின் உச்சபட்ச சாத்தியமாக, மனமொழியை கவிமொழியில் தந்திட்ட அற்புதம் நீலம்.

Related Posts Plugin for WordPress, Blogger...