ஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்

துரோணரின் கதையைப் படிக்கத் தொடங்கியதுமே துரோணச் சிறுவனிடம் நாம் பரிவும் வாஞ்சையும் கொண்டு, அவனை நம்மில் ஒருவனாக, நாமாகவே அடையாளம் காண்கிறோம். தந்தையால் கைவிடப்பட்டு நிராதரவாக நிற்கும், அங்கீகாரத்துக்காக ஏங்கும், புறக்கணிப்பிற்காக துயருறும்,  சிறுவன் துரோணரைக் காணும் போது நம் உள்ளம் பதைபதைக்கிறது. தாய் தந்தையரின் காமத்தில் பிறந்த ஓர் உயிர் நிர்க்கதியாக நிற்கும் நிலையை ஜெயமோகன் காட்சிப்படுத்தியிருக்கும் பாங்கு மிக அழகானது; நம் மனதில் ஆழப்பதிவது. நாவலின் இதுவரையான பக்கங்களில் இல்லாத ஒர் அழகுணர்ச்சியும் உயிரோட்டமும் துரோணரின் கதையை விவரிக்கும் இப்பகுதிகளில் வெளிப்படுகிறது. துரோணரின் ஒடிசலான உடல்வாகு, புறக்கணிப்பின் வலியைக் காட்டும் இறுக்கமான முகம், அதை வெல்லும் விதமாக உடல் மொழியால் தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் அலட்சிய பாவம், தர்ப்பையை ஆயுதமாகப் பயன்படுத்தும் இலாவகம், காணும் அனைத்தையும் புல்லாகவே காணும் மனோபாவம் என பல்வேறு அம்சங்கள் துரோணரை நாம் மறக்க முடியாத, நம்முடன் நெருங்கி உறவாடும் ஒரு கதா பாத்திரமாக ஆக்குகிறது.

தன் தந்தையால் அக்னிவேசரிடம் வில் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட துரோணர் அங்கிருக்கும் ஷத்ரிய மாணவர்களின் கேலிக்கும், ஏளனத்திற்கும் ஆளானாலும் தன்னுடைய திறமையால் அவர்களுக்கே பயிற்சியாளராக ஆகிறார். தன்னைப் போல நிர்க்கதியாக அங்கே வரும் பாஞ்சால இளவரசன் யக்ஞசேனனுக்கு, தன் குரு அக்னிவேசரின் விதிகளை மீறி, துரோணர் வில் பயிற்சி அளிக்கிறார். பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் அக்னிவேசர் மறைந்த பிறகு, பிராமணன் எனும் குலப்பெயரைப் பெரும்பொருட்டு முதலில் பரசுராமரையும் பிறகு சரத்வானையும் காண்கிறார். தனக்கான குலப்பெயரைக் கேட்டுக் கண்ணீா மல்க யாசிக்கும் துரோணருக்கும் சரத்வானுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள் அற்புதமாக அமைந்துள்ளன. அவைகள் நுட்பமாக வாசிக்கவேண்டியவை; வாழ்க்கையின் அடிப்படைகளை ஆராயும் பல்வேறு கேள்விகளை எழுப்புபவை. பரசுராமரைப் போலவே அவரும் துரோணருக்கு உதவ முடியாத நிலையைச் சொல்லி தன் மகள் கிருபியை மணமுடித்து அனுப்பி வைக்கிறார்.

கிருபியுடன் அங்கிருந்து துரோணர் பயணிக்கும் வழியில் வரும் வர்ணணைகளும், காட்சிகளின் சித்தரிப்பும், இருவருக்கிடையே ஏற்படும் நெருக்கமும் வாசிப்பில் நமக்கு அலாதியான இன்பத்தைத் தருகின்றன. மிகவும் அற்புதமான உணர்வை எழச் செய்யும் இப்பகுதிகள் வாசிப்பின் அர்த்தத்தை உணர்த்துகிறது. கிருபிக்கும் துரோணருக்கும் இடையே எழும் பேச்சுக்கள் நாம் ரசிக்கத்தக்கவை மட்டுமின்றி, நம் உதடுகளில் புன்னகையை விரியச்செய்வன. அவர்கள் இருவரும் ஒரு காட்டைக் கடந்து செல்லும் போது துரோணர், “இந்தக் காட்டில் உணவும் நீரும் இருக்கிறது. இங்கேயே தங்கிவிடுவோமே” எனும் போது, “காட்டில் வாழ்வதற்கு ஞானமோ வாலோ இருந்தாகவேண்டுமே” என்று சிரிக்கிறாள் கிருபி. அவளின் சிரிப்பு நம் காதுகளில் எதிரொலிக்கிறது! அதே வேளையில் மனிதர்களின் மீதும் அவர்களது கோணல் புத்தியின் மீதும் அவருக்குள்ள வெறுப்பு அந்த வார்த்தைகளில் பொதிந்து அவரது உள்ளக்கிடக்கையாக வெளிப்படுகிறது.

எப்போதும் சிரித்திருக்கும் கிருபியின் இயல்பும் அவள் அருகாமையும் துரோணரை மயக்குகிறது. ”முற்றிலும் நான் அறியாதவற்றால் ஆனவளாக இருக்கிறாய்” என்று சொல்லும் போது, “ஆமாம், ஆகவேதான் நான் பெண்” என்கிறாள் அவள். “நான் யார் உனக்கு? நீ அறியாதவற்றால் ஆனவனா?” என்று கேட்கும்போது, “இல்லை. நான் ஆகமுடியாதவற்றால் ஆனவர்” எனப் பதில் தருகிறாள். காவியச்சுவையும், இலக்கியச் சுவையும் நிரம்பிய இப்பகுதிகள் வாசிப்பின் இன்பத்தைப் பெருக்குகின்றன.

இருவரும் பிரமதம் எனும் சிற்றூரில் தங்கள் வாழ்க்கைத் தொடங்குகிறார்கள். அங்கே குடில் அமைத்து, அந்த ஊர் தலைவரின் ஒப்புதல் பேரில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார் துரோணர். அங்கேயே பத்தாண்டுகள் கழிந்த பிறகு அவர்களுக்கு அஸ்வத்தாமன் பிறக்கிறான். அவனுக்குப் பால் தருவதற்காக தனக்கொரு பசு வேண்டும் என்று ஊர்த் தலைவனிடம் கேட்கும் போது, அவர்கள் அவரது குலத்தைப் பற்றி ஏளனமாகப் பேசுகிறார்கள். செல்லுமிடந்தோறும் அவரைத் தொடரும் இந்த அவமானம் அவரை நிலைகுலையச் செய்கிறது. 

செய்வதறியாது திகைத்து நிற்கும் அவரிடம் கிருபி, “நீங்கள் பிராமணன் என்றால் சென்று தானம் வாங்குங்கள். ஷத்ரியன் என்றால் வில்லேந்திச்சென்று கவர்ந்து வாருங்கள். சூத்திரன்தான் என்றால் உழைத்து கூலி பெற்று வாருங்கள். இல்லை வெறும் மலை வேடன் என்றால் இரவில் சென்று திருடிக்கொண்டு வாருங்கள். மனிதன் என்றால் வெறும் கையுடன் இனி என் இல்லத்துக்கு வரவேண்டாம்” என்று கோபத்துடன் சொல்கிறாள். அவளில் வெளிப்படும் இந்த வார்த்தைகள் துரோணர் நிலையை நமக்குத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. அங்கிருந்து கண்ணீருடன் தான் வில்பயிற்சி அளித்த யக்ஞசேனின் பாஞ்சால நாட்டுக்குச் செல்கிறார் துரோணர். அவனிடம் பசு ஒன்றைப் பெறவே செல்லும் அவர், அவனது புறக்கணிப்பால், அவன் ஏற்கனவே சொன்னபடி, தனக்குப் பாதி நாட்டைத் தரவேண்டும் என்கிறார். யக்ஞசேனன் துரோணரின் குலத்தைக் காரணம் காட்டி அவரை அங்கிருந்து அவமானப்படுத்தி திருப்பியனுப்புகிறான்.

துரோணரின் கதை சொல்லப்படும் அரசப்பெருநகர் என்ற இப்பகுதி வண்ணக்கடலின் ஆகச்சிறந்தது எனலாம். துரோணரின் அகம் படும் பாட்டையும், அவரது வாழ்க்கையையும் செய்நேர்த்தியுடன், தேர்ந்த திரைக்காட்சியென நம் மனவெளியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன். துரோணரை இவ்வளவு நெருக்கமாக நாம் வேறெங்கும் அறிந்திருக்க முடியாதென்றே தோன்றுகிறது. வெம்மையான கோடைக் காலத்தில் மேகமூட்டத்துடன் வானம் சிறு தூறலாய்த் தூறும் போது மனதில் எழும் உற்சாகமான உணர்வாக இப்பகுதிகள் மீண்டும் மீண்டும் வாசித்து இன்புறத்தக்கவை.

(தொடரும்...)
1. தீராப் பகை
3. மூன்று துருவங்கள்
4. மகாபாரத மனிதர்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...