ஜெயமோகனின் மனம் மயக்கும் நீலம்-1

வண்ணக்கடல் முடித்ததும் உடனடியாக நீலத்தை வாசிக்கமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தபோதிலும் எதற்கும் இருக்கட்டும் என்று நேற்றே (10.03.2015) புத்தக அலமாரியிலிருந்து நீலத்தை எடுத்து மேசையின் மீது வைத்திருந்தேன். இன்று அதிகாலையில் நீலத்தை வாசித்துவிடுவது என்று எழுந்தேன். மேசை மீதிருக்கும் நீலத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். புத்தகத்தை முன்னும் பின்னும் திருப்பியவனாக, உள்ளிருக்கும் படங்களைப் பார்வையிட்டேன். எனினும் வாசிப்பில் உடனடியாக இறங்க முடியவில்லை. மனம் நிலையற்று, அலைப்புண்டு சிதறி ஓடியது. கம்சனும், தேவகியும், வசுதேவரும், ராதையும், நினைவறையில் இருந்து வெளியேவர, அவர்களைத் தொடர்ந்து நீலவண்ண மேனியன் கண்ணன் புன்னகையுடன் வேய்ங்குழலை இசைத்தபடி வந்திட்டான். நான் கன்றுக்குட்டியாக மனம் துள்ள, மயக்கத்தோடு அவனை ஏறிட்டேன்.


மாயச் சகட முதைத்து மருதிறுத்து
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்துஅணி
வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற

எனும் நாலாயிர திவ்யப் பிரபந்த வரிகள் மன ஆழத்திலிருந்து மேலெழ, கூடவே மோகப் பெருமயக்கு என்ற சொற்றொடரும் நினைவில் அலைமோத, பாரதியின் வரிகளுக்கு மனம் தாவியது. குழலூதும் கண்ணன் மறைந்து பாஞ்சாலி வேண்டி நின்ற மாயக் கண்ணன் தோற்றம் மனதில் நிறைந்தது.

சக்கரம் ஏந்திநின்றாய்-கண்ணா
சார்ங்கம்என் றொருவில்லைக் கரத்துடையாய்
அஷரப் பொருளாவாய்-கண்ணா
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்
துக்கங்கள் அழித்திடுவாய்-கண்ணா
தொண்டர்கண் ணீர்களைத் துடைத்திடுவாய்
தக்கவர் தமைக்காப்பாய்-அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய்

கண்ணனை நினைக்கையிலே மனம் கொள்ளும் உவகை சொல்லில் அடங்குவதில்லை. வெண்ணெய் திருடும் குழந்தையாய், கன்னியர் உள்ளம் கவரும் கள்வனாய், எதிரிகளை முறியடிக்கும் தந்திரனாய், பகவத் கீதையை அருளியவனாய் அவனுக்கு எத்தனை எத்தனை முகங்கள்? கண்ணனை ஏற்காதோர் என்று எவரும் உண்டோ இப்பூவுலகில்? அனைவருக்கும் ஏற்புடையவனாய் ஏதேனும் ஓர் உருவத்தில் காட்சியளிக்கும் சாகசக்காரன் அவனன்றோ! பாரதி அவனை நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், சேவகனாய், தெய்வமாய் தரிசித்தது அதனாலன்றோ?

திடீரென தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை மறுவாசிப்பு செய்தால் கட்டுரைக்கு வைக்க நினைத்திருந்த தலைப்பு ஞாபகம் வந்தது. உடனே அது நீலத்துக்கு பொருத்தமாக இருக்குமென்று தோன்றவே, “மனம் மயக்கும் நீலம்” என்ற தலைப்பு தோன்றியது. மனம் கடலலையென புரண்டெழ, சிந்தனைகள் கட்டின்றி ஓடியது தறிகெட்ட புரவியைப் போல. படிக்காமலேயே நீலத்தைப் பற்றி எழுத முடியும் என்று தோன்ற, ஒருகணம் வியப்புற்று திடுக்கிட்டேன்!

(தொடரும்...)
2. மனமொழியும் கவிமொழியும்
3. பெயரழிந்து நிற்றல்
4. பித்தின் உச்சநிலை

Related Posts Plugin for WordPress, Blogger...