வீடெங்கும் புத்தகங்கள்

புத்தகங்களுடன் உறவாடுவதும் உரையாடுவதும் அற்புதமான உணர்வு. அதை விவரிக்க வார்த்தைகள் போதுமானவை அல்ல. தினம் தினம் புத்தகங்களை எடுப்பதும், ஒழுங்காக அடுக்கிவைப்பதும், அவற்றில் படிந்துள்ள தூசுகளை அகற்றி அவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும், இசையைப்போல தோட்டவேலை போல அலாதியான மனநிறைவைத் தரக்கூடியது. அப்படி உறவாடுபவர்களை இந்த உலகம் பைத்தியக்காரர்கள் என்கிறது. ஏனெனில் அவர்களின் மொழியும், கனவும் மற்றவர்களிடமிருந்து முற்றும் அந்நியமானது. அதைப் புத்தகங்களை வெறும் காகிதங்களாகப் பார்ப்பவர்கள் உணரவோ அறியவோ முடியாது. அது ஒருவகையான பித்து நிலை. பக்கதன் கடவுளிடம் கொள்ளும் பித்து நிலையைப் போன்றது அது.

ஒருநாளும் தளர்வறியா மனதைத் தருபவை புத்தகங்கள் அன்றி பிறிதொன்றில்லை. நம் மகிழ்வை இரட்டிப்பாக்குவது மட்டுமல்ல புத்தகங்கள் வாசிப்பின் மூலம் கிட்டும் மனநிறைவே நம் துன்பங்களை பெரிதும் குறைக்கின்றன. தண்ணீரில் இழுக்கப்படும் பாரம் கனமற்றுப்போவதைப் போன்றே புத்தகங்களின் வாசிப்பு மனதின் பாரத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது என்பது அனுபவம் காட்டும் பாடம்.

ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் புத்தகங்கள் இருக்கவேண்டும் என்று கருதுபவன் நான். எனவே புத்தகங்கள் இல்லாத வீட்டை, அது எவ்வளவுதான் அழகாக இருப்பினும் அது ரசிக்கத்தக்க வீடல்ல. வீடெங்கும் புத்தகங்கள் நிரம்பியிருப்பதைப் போல மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை. புத்தகங்களைப் புரட்டாத நாள் எனக்கு நாளாக இருப்பதில்லை! எப்போதும் கையில் புத்தகங்களுடன் இருப்பது அபரிமிதமான தோழமை உணர்வை, தைரியத்தைத் தருகிறது. என்னை எப்போதும் எங்கேயும் புத்தகங்களுடன் பிறர் அடையாளப்படுத்துவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

புத்தகங்களைக் கையாள்வது ஒர் அருமையான கலை. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதை வெறும் காகித மூட்டையாகக் கருதி அதைச் சிதைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதன் உள்ளே கிறுக்குவதும், வாக்கியங்களை அடிக்கோடு இடுவதும், படித்த பக்கங்களை நினைவு கூற அதன் முனைகளை மடித்து வைப்பதும் இப்படி பல்வேறு விதமாக புத்தகத்தின் அழகையும் ஆன்மாவையும் சிதைப்பவர்களைக் காணும்போது மனம் பதைபதைக்கும். புத்தகங்களை ஒரு குழந்தையைப் போல கையாளத் தெரியவேண்டும். அதை முரட்டுத் தனமாகக் கையாள்வது அநாகரிகமானது; அசிங்கமானது. நான் எனது பெயரைக்கூட புத்தகங்களில் எழுதிவைத்ததில்லை!

புத்தகங்களைச் சேகரிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது நமது பெரும் சொத்து! இடுக்கை இழந்தவன் கைபோல புத்தகங்கள் பல சமயங்களில் கை கொடுக்கிறது; கீழே விழும் போது தூக்கி நிறுத்துகிறது! நான் எனது புத்தக அலமாரியில் இருக்கும் எல்லா புத்தகங்களையும் படித்துவிட்டதாகக் கூறமுடியாது. படிக்காதிருக்கும் புத்தகங்கள் பத்து விழுக்காடு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அவற்றை வாசித்ததும் மேலும் பல புதிய புத்தகங்கள் சேர்ந்திருக்கும். சில புத்தகத்தை வாங்கியவுடன் படித்துவிடுவதும் உண்டு. எப்பொது எந்தப் புத்தகத்தை வாசிப்பேன் என்பதை நான் அறுதியிட்டு முடிவு செய்ய முடியாது. தினமும் நான் அவற்றைப் பார்ப்பதும், அவைகள் என்னைப் பார்ப்பதுமான அனுபவம் காதலன் காதலிக்கு இடையிலான சுகமான ஒரு காதல் அனுபவம்! ஏதோ ஒரு தருணத்தில், ஒரு மின்வெட்டு போல குறிப்பிட்ட புத்தகத்தை வாசிப்பது நிகழ்கிறது. எனவே புத்தகம் என்னைத் தேர்கிறதா இல்லை நான் புத்தகங்களைத் தேர்வு செய்கிறேனா என்பது குழப்பமான ஒன்று! ஆக ஒரு புத்தகத்தை எப்போது வாசிப்பேன் என்பதை அந்தப் புத்தகங்கள்தான் முடிவுசெய்கின்றன!

எவ்வளவு முக்கியமான புத்தகமாக இருந்தாலும் அதன் அச்சும், அமைப்பும், தாளும் நன்றாக இல்லையெனில் நான் அந்தப் புத்தகத்தை வாங்குவதில்லை. நவீன அச்சு முறைகளைத் தாண்டி அதில் அதை வெளியிடுவோரின் ஆழ்மன இயக்கம் இயந்திருக்கிறது என்று கருதுகிறேன். அது அந்தப் புத்தகங்களைப் பார்த்த மாத்திரத்தில் தெரிந்துகொள்ள முடியும். எனவே புத்தகத்தை நேசிக்காதவர்கள் எப்போதும் பதிப்பாளர்களாகிவிட முடியாது. அதை வெறும் பண்டமாகப் பார்ப்பவர்கள் ஒருபோதும் புத்தகங்களைச் சிறப்பாக வெளியிட முடியாது.

புத்தகங்கள் பற்றியும் வாசிப்பைப் பற்றியும் திரும்பத் திரும்ப எவ்வளவு முறை பேசினாலும் எழுதினாலும் அலுப்பதில்லை. இன்று புத்தகங்களின் வடிவங்கள் மாறிவிட்டன. மின் புத்தகங்கள் பெருகிவரும் காலம் இது. புத்தகங்கள் வீட்டை நிறைப்பதும், அவற்றைப் பராமரிப்பதும், எடுத்துச்செல்வதும் பெரும் அசௌகரியமான ஒன்றாக உணரும் காலம் இது. எனவே புத்தகங்கள் தங்களின் பருவடிவை இழந்து அரூபமான வடிவத்தை பெற்று வளர்ந்து வருகின்றன. என்னதான் இருந்தாலும் புத்தகங்களைக் கைகளால் ஸ்பரிஸித்து, அதை வாஞ்சையோடு தடவிக்கொடுத்து, புத்தம் புதிய தாள்களின் வாசனையை நுகர்ந்து, பக்கங்களைப் புரட்டும் ஓசையை செவிமடுத்து, அது நமது மேசையிலும், புத்தக அலமாரியிலும் வீற்றிருக்கும் அழகைப் பார்த்து ரசித்து அனுபவிக்கும் இன்பத்துக்கு இந்த மின்புத்தகங்கள் ஈடாகாது என்பதுதான் உண்மை.

Related Posts Plugin for WordPress, Blogger...