சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை -சுரேந்திர வர்மா

சுரேந்திர வர்மா, இந்தி இலக்கியத்தில் முக்கியமான நாடக ஆசிரியர். அவர் எழுதிய சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை நாடகம் புகழ் பெற்ற ஒன்று. சந்ததி இல்லாத அரசனின் அரசவைப் பிரதிநிதிகள் (முதன் மந்திரி, ராஜகுரு, சேனாதிபதி) அரசுக்கு வாரிசு ஒன்றை உருவாக்கித்தர வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். அதற்காக அரசனின் மனைவியை மற்றோர் ஆடவனுடன் கலந்து கருத்தரிக்க ஏற்பாடு செய்கிறார்கள். விருப்பமான ஆடவனை, சுயம்வரம் போல் ஏற்பாடு செய்து, அரசி சீலவதியை தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள். சீலவதியும் பிரதோஷன் என்ற ஆடவன் ஒருவனை தேர்ந்தெடுத்து உறவு கொள்கிறாள். இதுதான் நாடகத்தின் கதை.

இந்நிகழ்ச்சி நடக்கும் முன்னரும், பின்னரும் அரசன் ஒக்காக், அரசி சீலவதி ஆகியோரின் மனவோட்டங்களையும், உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் ஆசிரியர் தேர்ந்த நுட்பத்துடனும், லாவகத்துடனும்  சித்தரித்திருக்கிறார். அரசன் ஒக்காக்கை திருமணம் செய்யும் முன்னரே சீலவதி பிரதோஷனை விரும்புகிறாள். அவனும் இவளை விரும்புகிறான். ஏனோ அவள் ஒக்காக்கை மணக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஒக்காக்கிற்கு இருக்கும் ஆண்மையற்ற தன்மை இத்திருமணத்தின் மூலம் சரியாகிவிடும் என்று அரசவை வைத்தியர் தீர்மானிக்கிறார். ஆனால் இம்முடிவினால் சீலவதிதான் பாதிக்கப்படுகிறாள்.

மந்திரிகளின் முடிவுக்கு சம்மதிக்க ஒக்காக் தயங்குகிறான். தான் ஆண்மை இல்லாதவன் என்பதை நாட்டுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த ஏற்பாடு அரசனுக்கு மிகுந்த வெறுப்பாக இருக்கிறது. மந்தரிகள் அவனைப் பலவாறு தேற்றுகிறார்கள். பாண்டவர்கள் ஐவரும் வேற்று ஆடவர்களுடன் கலந்ததால் உருவானவர்களே என்று கூறி அவனை சம்மதிக்க வைக்கிறார்கள். அரசனுக்கு தன் மனைவியை இந்த விசயத்தில் எப்படி எதிர்கொள்வது என்பதில் தயக்கமும், சங்கடமும் உள்ளது. சீலவதிக்கும் இதே சிக்கல் வருகிறது. அரசனின் தயக்கமும், சங்கடமும் இயலாமையின் கோபமாக சீலவதியின் மேல் பாய்கிறது. அவள் இதற்கு விரும்பியே சம்மதிக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றுகிறது. அவளோ தான் சூழ்நிலையின் கைதியாக இருப்பதாகச் சொல்கிறாள். இருந்தும் வேறு வழியின்றி இருவரும் அரசவை பிரதிநிதிகள் சொன்னதைச் செய்கிறார்கள்.

ஒக்காக், சீலவதி இருவரின் மன நிலையும் இந்நிகழ்வுக்குப்பின் முற்றிலும் மாறுதல் ஏற்பட்டு விடுகிறது. சீலவதி, தான் ஒக்காக்கின் பகடைக்காயாக பயன்பட்டுவிட்டதாக சீறுகிறாள். தான் தொடர்ந்து, தேர்ந்தெடுத்த பிரதோஷனுடனே உறவு கொள்ளப்போவதாகச் சொல்கிறாள். அவன் தனக்கு கருத்தடை மாத்திரை கொடுத்துவிட்டதாகச் சொல்கிறாள். ஒரு பெண் தாய்மைபேறு அடைவதில் முழுமையடைகிறாள் என்று மந்திரி சொல்வது வெறும் பொய் என்கிறாள். தான் மீண்டும் மீண்டும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தப்போவதாகச் சொல்கிறாள். சட்டபூர்வமான இந்த வழி மூடிவிட்டால், தேவையானபோது புதிய வழிகள் திறக்கும் என்று சீலவதி எச்சரிக்கிறாள்.

அரசாங்கத்தின் இரும்புக் கரங்களுக்கு ஆள்பவனும் ஒரு பொருட்டல்ல என்பதையும், உறவு என்ற போர்வையில் மனிதர்கள் தத்தம் சுயநலத்தையே பேணுகிறார்கள் என்பதையும் இந்நாடகம் சூசகமாக உணர்த்துகிறது.

1978-ல் க்ரியா வெளியீடாக வந்த இந்நாடகம், 2009-ல் இரண்டாம் பதிப்பாக வெளியாகி உள்ளது.

இந்நாடகம் தரும் வாசிப்பு அனுபவத்தை பின்வருமாறு பட்டியலிடலாம்:

1. ஒரு புதிய பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, நம் மனம் பிரச்சினையின் சாதக, பாதகங்களை சிந்தித்து கவலையும் பயமும் கொள்கிறது. ஆனால் பிரச்சினையை எதிர்கொண்ட பின்னர், அப்பிரச்சினையை எதிர்கொண்ட அனுபவத்தில் கிடைத்த பலன்களையும், தீமைகளையும் கணக்கில் கொண்டு மனம் தனக்கு சாதகமான முடிவை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

2. இன்று திருமண பந்தத்தில் மணமுறிவு என்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால் அதன் ஆதாரமான காரணங்களைக் குறித்து நாம் கவலை கொள்ளாமல், மேலோட்டமான காரணங்களையே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். அதேபோல் உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகள் குறித்தும் இத்தகைய முடிவுக்கே நாம் வருகிறோம். இரண்டுக்குமே ஆதாரமான சிக்கல் தாம்பத்திய உறவிலிருந்தே வருகிறது என்பதை கவனத்தில் கொண்டு இத்தகைய பிரச்சினைகளில் முடிவு எடுக்கவேண்டும்.

3.செயற்கை முறை கருத்தரித்தல் இன்று விஞ்ஞான பூர்வமாக சாத்தியமாகிவிட்டது. ஆனால் மூலமான காரணம் குழந்தைபேறு மட்டும்தானா இல்லை அதன் ஆதாரமான தாம்பத்தியமா என்பது பற்றியும் நாம் யோசிக்கவேண்டும்.

(மறு பிரசுரம். முதல் பதிவு 27.11.2012)

Related Posts Plugin for WordPress, Blogger...